ஆசீவகம் என்ற பெயரை எடுத்தாலே சிலர் “பத்ரி” போய் விடுகிறார்கள். சாரி….பதறிப் போய் விடுகிறார்கள். வைதீக மதம் என்னும் பிராமணிய மதம் தமிழ்நாட்டிற்குள் நுழைவதற்கு முன்னரே தமிழருக்கென்று ஒரு மெய்யியல் இருந்திருக்கும் விஷயம் வெளியில் வந்து விடுமோ என்ற பதட்டம் அவர்களிடம் தெரிகிறது. அவர்களுடைய அந்தப் பதட்டம்தான் என்னைப் போன்ற நிறையப் பேர் ஆசீவகத்தைப் பற்றி அறிந்து கொள்ள உரமாக இருந்தது என்பதையும் வெளிப்படையாக ஒத்துக் கொள்ள வேண்டும். “அந்தத் தமிழர்களுக்கும்” என் மனமார்ந்த நன்றிகள்.
பேராசிரியர் நெடுஞ்செழியன், குணா, விஜயலட்சுமி, ஏ.எல்.பாசம், பருவா, ஆதி.சங்கரன், சோ. ந.கந்தசாமி என்று நிறையப் பேரின் எழுத்துக்களைப் படித்த பிறகும், தமிழிக் கல்வெட்டுக்கள், ஐயனார் கோயில்கள் என்று நிறைய கள ஆய்வுகள் செய்த பிறகும், ஆசீவகம் பற்றி நான் புரிந்து கொண்டவற்றையும், நான் நம்புவற்றையும் எழுதுவதுதான் இந்தக் கட்டுரையின் நோக்கம். இதில் சரி, தவறு என்ற விவாதத்திற்கு வேலை இல்லை. அதனால் இங்கு பெரிய விவாதம் எல்லாம் செய்து தங்கள் பொன்னான நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். I agree with you என்றோ I don’t agree with you என்றோ சிம்பிளாக ஏதாவது சொல்லி விட்டு நகர்ந்து விடுங்கள். இல்லையா, ஒரு நக்கலாக சிரிக்கும் பொம்மையை குத்தி விட்டு நகர்ந்தாலும் சரிதான். நீங்கள் யாரென்று புரிந்து கொள்கிறேன்.
பாய்ண்ட் பாய்ண்டாக எழுதினால் எல்லோருக்கும் எளிதாக புரியும் என்று நினைக்கிறேன்.
- தமிழ் நாட்டில் ஆசீவகம் என்பது அதை ஒரு நிறுவனமாக மாற்றிய மற்கலி கோசாலருக்கு ரொம்பக் காலம் முன்பே ஒரு பண்பாடாக, ஒரு சித்தாந்தமாக நம்மிடம் இருந்துள்ளது.
- அதன் தொடக்கம் நீத்தார் நினைவுச் சின்னங்களிலிருந்தும், வெண்சாந்து ஓவியங்களிலிருந்தும், நடுகல் கலாச்சாரத்திலிருந்தும் ஆரம்பிக்கிறது.
- ஆசீவகம் சொல்லும் “ ஆசீவகத் துறவிகள் பெரிய கலன்களிலிருந்து தவம் செய்து உயிர் நீத்தனர்” என்ற குறிப்பை நிரூபிக்கும் விதமாக பெரிய சைஸ் முதுமக்கள் தாழிகள் தமிழகத்தில் கிடைத்திருப்பது ஒரு சான்று. அதில் பெரும்பாலானவை பெருங்கற்படைக் காலத்தைச் சேர்ந்தவை.
- அதைத் தொடர்ந்து நம்மிடம் இருந்த “ அறிவர் மரபு”. இந்த அறிவர்கள் (வானியல் ஆராய்ச்சி மூலம் அல்லது சோதிடம் மூலம்) முக்காலங்களையும் உணர்ந்தவர்கள் என்பதை தொல்காப்பியரின் கீழே உள்ள பாடல் உணர்த்துகிறது.
“ கழிவினும் வரவினும், நிகழ்வினும் வழிகொள
நல்லவை யுரைத்தலும் மல்லவை கடிதலுந்
வெவிலிக்குரிய வாகுமென்ப
சொல்லிய கிளவி யறிவர்க்கு முரிய “
- இந்த அறிவர்கள் வானியல் ஆராய்ச்சியுடன், மருத்துவத்தையும் நன்கு கற்றுத் தேர்ந்து, அதன் மூலம் மக்களுக்கு நிறைய சேவைகள் செய்திருக்கிறார்கள்.
- இதை நிரூபிக்கும் விதமாக, தமிழிக் கல்வெட்டுக்கள் இருக்கும் அனைத்துக் குகைகளிலும் நிலாப் பாறை என்னும் இடம் இருப்பதைக் காண முடிகிறது. இரவு நேரங்களில் அதில் படுத்துக் கொண்டு வானத்தை உற்று நோக்கி நட்சத்திரங்கள் மற்றும் கோள்களின் நகர்வை ஆய்வு செய்திருப்பதை உணர முடிகிறது.
- தமிழிக் கல்வெட்டுக்கள் இருக்கும் அனைத்து இடங்களிலும் மருந்து அரைக்கும் குழிகள் உள்ளன.
- நிறைய இடங்களில் வானியல் தொடர்பான மற்றும் நட்சத்திர உடுக்கணங்கள் தொடர்பான வெண்சாந்து ஓவியங்களைக் காண முடிகிறது ( 3000 முதல் 4000 வருடங்கள் பழைமையானவை).
- ஜெயினர்களின் நூலான “உத்திரயாயத்தின சூத்திர”த்தில் வானியல் ஆராய்ச்சி, மருத்துவம் , சோதிடம் போன்றவற்றை யாரும் கற்றுக் கொள்ளக் கூடாது என்று கடுமையாக எச்சரிக்கிறது. எனவே, தமிழிக் கல்வெட்டுக்கள் இருக்கும் இடம் அனைத்தும் ஆசீவகர்களுக்கு மட்டுமே உரித்தானது என்பது உள்ளங்கை நெல்லிக் கனி போல தெளிவு.
- சந்திரகுப்தனுடன் வந்ததாகக் கூறப்படும் பத்திரபாகு வந்த இடத்திலோ, அல்லது அவருடைய சீடரான வைசாகர் வந்த பெரு வழிப் பாதைகளிலோ இது போன்ற குகைகளில் கல்வெட்டுக்களோ, மருந்து அரைக்கும் குழிகளோ, வானியல் தொடர்பான வெண் சாந்து ஓவியங்களையோ காண முடியாது என்பது ஒரு கூடுதல் தகவல்.
- இது போன்று வானியல் ஆய்வு மூலம் தட்ப வெப்ப மாற்றங்களை அறிந்து அதை விவசாயிகளுக்கு முன் கூட்டியே எச்சரித்து அவர்களுக்கு உதவுவது, சோதிடம் மூலம் அந்தந்த கிராம மக்களுக்கு ( தொல்காப்பியர் குறிப்பிடுவது போல) நல்லது கெட்டது சொல்வது, மருத்துவம் தெரிந்ததால், கிராம மக்களுக்கு மருத்துவ உதவி செய்து உயிர் காப்பது போன்ற மகத்தான சேவைகளைச் செய்ததால், அந்தந்த ஊர்களில் இருந்த அறிவர்களை, பெருமதிப்புக்குரிய என்னும் அர்த்தத்தில் “ஐயன்” என்று அழைத்து வந்திருக்கின்றனர். அந்த அறிவர் இறந்து போன பிறகு, அவரை “ ஐயனார்” என்று வழிபட்டிருந்திருக்கின்றனர். இந்த இடத்தில், இறந்தவர்களை வழிபடும் மூதாதையர் வழிபாடு, குல தெய்வ வழிபாடு, நடுகல் வழிபாடு போன்றவை கால காலமாக தமிழர்களின் கலாச்சாரத்தில் இருந்திருப்பதை மறந்து விடக் கூடாது.
- பின்னாளில் ஒவ்வொரு ஊரிலும் இருந்து, இறந்த அறிவரை அவரவர் சிறப்புக்கேற்ப ஏரி காத்த ஐயனார், அடைக்கலம் காத்த ஐயனார், ஆகாச ஐயனார், மருந்து ஐயனார், செகுட்டு ஐயனார் என்று அழைக்கும் வழக்கம் வந்திருக்க வேண்டும்.
- இதைப் பின்பற்றித்தான் பிராமணர்களில் ஒரு பிரிவினர் “பெருமதிப்புக்குரியவர்” என்னும் அர்த்தத்தத்தில் தங்களை “ ஐயர்” என்று அழைத்துக் கொண்டனர் ( “ஐயன்” என்பது அவமரியாதைச் சொல்லாகக் கருதியிருக்கலாம்). தென் மாநிலங்கள் தவிர இந்த “ஐயனார்” வழிபாடு இல்லாத மற்ற மாநிலங்களில் பிராமணர்களுக்கு “ ஐயர்” என்னும் குடும்பப் பெயர் இருப்பதைப் போல் தெரியவில்லை (I might be wrong).
- தனிப்பட்ட முறையில் “ கழி வெண்பிறப்பு” அடைந்த மூவர் மட்டுமே ஐயனார் என்ற கருத்தில் எனக்கு உடன்பாடில்லை.
- இந்த அறிவர்களில் ஒருவர்தான் “ எண்ணியத்தை” (சாங்கியம்) எழுதிய தொல் கபிலர் என்பது என் கருத்து.
- அப்போதே சாங்கியம், உலகாய்தம், அணுவியல் பூதக் கொள்கை, வானியல், மருத்துவம் போன்ற அனைத்து சித்தாந்தங்களும் தமிழ்நாட்டில் தோன்றி விட்டன.
- கி.மு. ஆறாம் நூற்றாண்டில்தான் மற்கலி கோசாலர் வருகிறார்.
- அவர்தான் ஆசீவகம் என்று, ஊழியல் கோட்பாடு என்ற தன்னுடைய கருத்தையும், (தமிழ் நாட்டில் முன்பே) இருந்த மற்ற தத்துவங்களையும் ஒன்றிணைத்து ஆசீவகம் என்ற பெயரில் ஒரு முறையான அறிவுசார் “பள்ளி”யைத் தொடங்குகிறார்.
- ஜெயினம், புத்தம் போலவே அவரும் வைதீக சடங்குகளையும், வைதீகர்கள் செய்யும் ஏமாற்று வேலைகளையும் கடுமையாக எதிர்திருக்கிறார்
- எல்லோரும் நினைப்பது போல் அவர் பொத்தாம் பொதுவாக எல்லா இறை நம்பிக்கைகளையும் சாடியிருப்பது போல் எனக்குத் தெரியவில்லை. இந்திரன், அக்னி, ருத்ரன், வாயு போன்ற கடவுள் பெயரில் வேள்வி, யாகம் செய்து ஏமாற்றுவதை மட்டுமே விமர்சித்துள்ளார். அவர் காலகட்டத்திலேயே கிராம தெய்வ வழிபாடு, குல வழிபாடு , ஐயனார் வழிபாடு, இயற்கை வழிபாடு எல்லாம் தோன்றி விட்டன. ஆனால், அவர் அதைப் பற்றி எதையும் சொன்னதாகத் தெரியவில்லை . குறைந்த பட்சம் அவர் அப்படி சொன்னதாக ஜெயின, புத்த நூல்கள் தெரிவிக்கவில்லை.
- மற்கலி காலத்தில் ஆசீவகம் ஒரு மதமாகத் தோன்றியிருக்கவில்லை.
- அவர் இறந்து ஓரிரு நூற்றாண்டுகளுக்குப் பின்னரே, ஜெயினம் வளர்ந்ததைப் பார்த்து ஆசீவகமும் ஒரு மதமாக மாற்றமடைந்திருக்க வேண்டும்.
- அப்போதுதான் ஆதி சங்கரன் சொல்வது போல திருநிலை, சுழற்குறி, ஐந்து முக்கோணம் போன்ற ஏழு அழியாச் சின்னங்கள் இணைந்திருக்க வேண்டும் ( இது பற்றி உறுதியாக ஏதும் சொல்ல இயலவில்லை).
- தமிழ்நாட்டில் முன்னோர் வழிபாடு, ஐயனார் வழிபாடு, வானியல் சாத்திரம், சோதிடம், அணுக் கொள்கை, ஊழியல் கோட்பாடு, தீதும் நன்றும் பிறர் தர வாரா, முயற்சி தம் மெய்வருத்தக் கூலி தரும் போன்ற அறிவியல் மற்று நிதர்சன தத்துவங்கள் படித்த பெருமக்களிடம் மட்டுமல்லாது சாதாரண பொது மக்களிடமும் பரவலாக இருந்த போதும், “ஆசீவகம்” என்ற மதம் ஜெயினம் போலவோ, பௌத்தம் போலவோ ஒரு பெரிய மதமாகப் பரவியிருக்கவில்லை.
- ஆசீவகத்தை ஒரு மதமாகப் பரப்ப சரியான ஒரு மதத் தலைவர் தமிழகத்தில் இல்லாததும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம். மணிமேகலை சொல்லும் அறப்பெயர் சாத்தன் பற்றி இன்னும் முறையான ஆய்வுகள் தேவை.
- தமிழகத்தில் ஆசீவகத்திற்கு பெரும் ஆதரவு அளித்தது நகரத்தார் போன்ற சில வணிகக் குழுக்களே
- பிள்ளையார் கூட வணிகர்கள்தான், ஆசீவகம் அழியும் நிலையில் உருவாக்கிய தெய்வமாக இருப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன.
- ஐயா நெடுஞ்செழியன் சொல்வது போல மற்கலி கோசாலர் தமிழராக இருப்பதற்கு வாய்ப்புகள் குறைவே. அதை நிருபிக்க இன்னும் நிறைய சான்றுகளும், தரவுகளும் தேவை.
- அவர் சொல்வது போல ஆசீவகம் இன்றுள்ள திருவெள்ளறையில் வைத்துத்தான் தோன்றியது என்பதையும் நிரூபிக்கும் சான்றுகள் ஒன்றுமில்லை.
- நண்பர்கள் ஹாருண் பாஷா மற்றும் தென்காசி சுப்பிரமணியன் சொல்வது போல , தமிழகத்தில் ஆசீவகத்தை ஒரு மதமாகத் தேடாமல் ஒரு சித்தாந்தமாக, ஒரு கலாச்சாரமாக, ஒரு பண்பாடாகத் தேடினால், செல்லும் இடமெல்லாம் கொட்டிக் கிடப்பதை இன்றும் நம்மால் காண முடிகிறது.
என் முடிவுரை : ஆசீவகத்தின் சித்தாந்தங்கள்தான் தமிழர்களின் முதல் மெய்யியல் – ஆசீவகம் என்ற பெயர் தோன்றுவதற்கு முன்பிருந்தே. இனி வரும் காலங்களில் கிடைக்கப் போகும் தரவுகளைப் பொறுத்து என்னுடைய இந்தக் கருத்து மாறலாம்.
வெ.பாலமுரளி.
நன்றிகள் :
- மறைந்த பேராசிரியர் நெடுஞ்செழியன்
- குணா
- மறைந்த முனைவர் தொ.ப.
- முனைவர் விஜலட்சுமி
- ஏ.எல்.பாசம்
- முனைவர் சோ. ந. கந்தசாமி
- நண்பர்கள் ராஜகுரு, திருச்சி பாலா பாரதி, தென்காசி சுப்பிரமணியன் மற்றும் ஹாருண் பாஷா












