திண்டிவனத்திலிருந்து மரக்காணம் செல்லும் வழியில் ஒரு 10 கி.மீ.தூரத்தில் இருக்கும் ஒரு சிற்றூர்தான் பெருமுக்கல்.
நற்றிணை என்னும் சங்க இலக்கியத்தில் பாடல் எண் 272 ஐ எழுதியுள்ள சங்க காலப் புலவர் “முக்கல் ஆசான் நல்வெள்ளையார்” இந்த ஊரில் பிறந்து இந்த ஊரில்தான் அடக்கமானவர் என்பது பொதுவான நம்பிக்கை.
இவர் பெயரிலுள்ள “நல்வெள்ளையார்” என்பது ஆசீவகத்தில் சொல்லப்படும் “ கழிவெண்மை” அடைந்தவர் என்று பொருள்படும்.
அதுமட்டுமல்லாது இவர் பெயரிலுள்ள ஆசான் என்னும் சொல், மாங்குளம் கல்வெட்டு சொல்லும் “கணி நந்த அஸிரிய்இ குவன்” என்ற கணி நந்தாசிரிய இயக்கனைக் குறிக்கும். எனவே, முக்கல் ஆசான் நல்வெள்ளையார் என்ற சங்க காலப் புலவரும், நம்ம கணி நந்தனும் ஒரே நபர்தான் என்கிறார் சமீபத்தில் மறைந்த பேராசிரியர் நெடுஞ்செழியன் அவர்கள்.
அது மட்டுமல்ல. இந்த ஊரில் உள்ள ஒரு மலையின் (குன்றின்) மேல் முக்தயாஜலேஸ்வரர் திருக்கோயில் என்று ஒன்று உள்ளது. அது முக்தி அடைந்த ஒருவருக்காக எழுப்பப்பட்ட கோயில் மாதிரி இருக்கிறது (இறந்தவர்களுக்கு எழுப்பப்படும் பள்ளிப்படை ஸ்டைல்) . இதை வைத்துப் பார்க்கையில் இந்தக் குன்றில்தான் முக்கல் ஆசான் நல்வெள்ளையார் என்னும் கணி நந்தாசிரியன் அடக்கமாயிருக்க வேண்டும் என்கிறார் நெடுஞ்செழியன் அவர்கள்.
அதை ஊர்ஜிதப்படுத்தும் விதத்தில் அருகில் உள்ள ஒரு அய்யனார் கோயிலுக்கு “ஆகாச அய்யனார்” என்ற பெயர் இருப்பதையும் சுட்டிக் காட்டுகிறார் அவர். இந்த இடத்தில் கணி நந்தன் வானியல் ஆய்வு செய்தவர் என்பதை நாம் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.
நெடுஞ்செழியன் அவர்கள் தரும் இந்த ஆதாரங்கள் அனைவராலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையில் இல்லை என்றாலும் கூட, முற்றிலுமாக புறந்தள்ளி விட முடியாது என்பதையும் நாம் ஒத்துக் கொள்ள வேண்டும். வரலாற்று ஆய்வு என்பது வெறும் கல்வெட்டுக்கள், அகழாராய்வு, நாணயவியல் என்பதையும் தாண்டி, இன்று இருக்கும் சில பழக்க வழக்கங்களையும், பண்பாட்டின் எச்சங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்பதும் மறுக்க முடியாத உண்மை.
அந்த வகையில் இன்று பெருமுக்கலில் உள்ள இந்தக் குன்றின் மீதுள்ள ஒரு சிவாலயமும், அங்குள்ள ஒரு குகையில் உள்ள விசித்திரமான சில பாறைக் கீறல்களும் மிகச் சிறந்த வரலாற்று ஆவணங்களே.
குன்றின் மீது ஏறுவதற்கு வசதியாக படிகளை செதுக்கி வைத்துள்ளது நமது தொல்லியல் துறை. ஆனால், மழைக் காலங்களில் இதில் ஏறுவதைத் தவிர்க்க வேண்டும். படிகள் மிகவும் எளிதாக வழுக்கி விடும்போல் இருக்கின்றன.
குன்றின் பாதித் தூரத்தில் 12ம் நூற்றாண்டைச் சேர்ந்த முதலாம் குலோத்துங்கனின் ஒரு கல்வெட்டு, பாறை மீது செதுக்கப்பட்டுள்ளது. மேலேயுள்ள கோயிலிலும் கி.பி.11ம் நூற்றாண்டு முதல் கி.பி.14 ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஏராளமான கல்வெட்டுகள் இந்தக் குன்றின் முக்கியத்துவத்தை இன்றும் பறை சாற்றிக் கொண்டிருக்கின்றன.
நானும் பாலா பாரதி சாரும் இந்தக் குன்றின் மீது ஏறுகையில் மணி மாலை நாலைத் தாண்டியிருந்தது. அன்று மேக மூட்டமான நாள் வேறு.
அத்துடன், மலையின் மேலுள்ள கோயிலைத் தாண்டி தொல்லியல் துறை போட்டு வைத்துள்ள ஒரு இரும்புப் படிக்கட்டின் வழியே கீழே இறங்கி அந்தச் சிறிய குகைக்குள் நுழைந்து விட்டோம்.
சரியான இருட்டு. இரண்டு பேரும் கை பேசியில் உள்ள டார்ச் வெளிச்சத்தை வைத்துப் பார்த்தால், என் கண்களையே நம்ப முடியவில்லை. அவ்வளவு பாறைக் கீறல்கள். ஏகப்பட்ட குறியீடுகள், தமிழி போல் தெரிந்த சில பல எழுத்துக்கள், வானவியல் பற்றி சில கீறல்கள், ஒரு பாம்பு படம் எடுப்பது போல் ஒரு கீறல், சில கப் மார்க்ஸ், இன்று நாம் விண்வெளி மனிதனைக் குறிப்பது போல் உள்ள சில சித்திரங்கள், நிறைய வெண்சாந்து இடங்களில் உள்ளது போல் முக்கொம்பு, சூலாயுதம், இருபுற முத்தலைக் கோல், நங்கூரம், சில சிந்து வெளிக் குறியீடுகள் என்று தலை சுற்ற வைக்கும் அதிசயங்கள்.
அதில் என்னை ரொம்பவே கவர்ந்தது “ …ரசர்” மற்றும் “ ந…த” என்ற இரண்டு தமிழிக் கல்வெட்டுக்களும் விண்வெளி (கீறல்) ஓவியங்களும், சிந்து வெளிக் குறியீடுகளும்தான்.
அதிலும் அந்த “ …ரசர்” என்ற வார்த்தையில் “ர” வுக்கு முன்னால் உள்ள சிந்துவெளி எழுத்தை, உயர்திரு பூரண சந்திர ஜீவா அவர்கள் “ அ” என்று வாசித்தது நினைவிற்கு வந்து சார் இது கண்டிப்பாக “ அரசர்” என்ற வார்த்தை என்றேன் பாலா பாரதி சாரிடம். அவரும் மிகுந்த ஆர்வத்துடன் “நான் டார்ச் வெளிச்சம் காண்பிக்கிறேன். தெளிவாக படங்களை எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் வீட்டில் போய் பார்த்துக் கொள்வோம்” என்றார். இதற்குள் வெளியில் நன்றாக இருட்டிக் கொண்டிருக்க அடித்துப் பிடித்து என்னால் முயன்ற வரை அனைத்தையும் படங்களாகவும் வீடியோவாகவும் பதிவு செய்து கொண்டு திரும்பினோம்.
வீட்டிற்கு வந்து நான் எடுத்த படங்களை ப்ராசஸ் பண்ணி அந்தப் படங்களை சில மூத்த தொல்லியல் அறிஞர்களுக்கு அனுப்பி வைத்தேன். அடுத்த மூன்று நாட்களில் ஒரு மூத்த தொல்லியல் அறிஞர் (பெயர் வேண்டாமே…) ஒரு அரசு ஆவணத்தை எனக்கு அனுப்பி வைத்தார். அதில் பெருமுக்கல் கல்வெட்டுக்களை நமது தொல்லியல் துறை கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு என பதிவு செய்திருப்பதை அறிந்து பக்கென்று போய் விட்டது. அது மட்டுமல்ல அந்தக் கல்வெட்டுக்களை வட்டெழுத்துக்கள் என்றும் பதிவு செய்துள்ளது. நான் “அரசர்” என்று படித்ததை “ இராசர்” என்றும் பதிவு செய்து வைத்துள்ளது.
அதன் படத்தை இங்கு இணைத்துள்ளேன். வட்டெழுத்திற்கும் இதற்கும் கொஞ்சம் கூட சம்பந்தமில்லை என்பதை வட்டெழுத்து வாசிக்கத் தெரிந்த நண்பர்கள் உறுதி செய்வார்கள்.
அப்படியென்றால் இதன் உண்மையான காலம்தான் என்ன ?
இதுவரை நமக்குக் கிடைத்த கல்வெட்டுக்களிலேயே காலத்தாம் மிகவும் பழைமையானது புலிமான்கோம்பை நடுகல் கல்வெட்டுத்தான். இது கி.மு. நான்காம் நூற்றாண்டு என்று சொல்லப்படுகிறது. இது வேறு எந்தக் குறியீடுகளும் இல்லாமல் சுத்தத் தமிழியில் உள்ள ஒரு கல்வெட்டு.
ஆனால், பெருமுக்கல் கல்வெட்டில் முதல் எழுத்து சிந்துவெளி குறியீடு போல உள்ளது.
அப்படியென்றால் சுத்தத் தமிழியில் எழுதத் தொடங்குவதற்கு சில காலத்திற்கு முன் சிந்துவெளிக் குறியீடுகளும் கலந்து எழுதும் முறை இங்கு இருந்திருக்க வேண்டும். அதாவது புலிமான் கோம்பை காலத்திற்கு இருநூறு அல்லது முந்நூறு ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்க வேண்டும் இந்த பெருமுக்கல் கல்வெட்டு. அப்படிப் பார்த்தால் இதன் காலம் கி.மு. ஆறாம் நூற்றாண்டாக ( Transition Period ) இருக்க வாய்ப்புள்ளது. அந்த காலகட்டத்தில்தான் புத்தர், மகாவீரர், மற்கலி கோசாலர் மற்றும் கணி நந்தன் வாழ்ந்தனர். இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் நமக்குச் சொல்லப்பட்ட சங்க இலக்கியங்களின் காலமும் திருத்தி எழுதப்பட வேண்டும்.
ஒரே ஒரு கல்வெட்டை மட்டும் வைத்து தமிழ்நாட்டில் சிந்துவெளிக் குறியீடுகள் பயன்படுத்தப்பட்டன என்று எப்படிச் சொல்ல முடியும் என்று உங்களுக்கு ஒரு கேள்வி எழலாம்.
வெறும் ஒரு வருடத்திற்கு முன்பு தேட ஆரம்பித்த நானே நிறைய பாறை ஓவியங்களில் சிந்து வெளிக் குறியீடுகளைப் பார்த்திருக்கிறேன் என்றால் இன்னும் எத்தனை எத்தனை இடங்களில் அவை இருக்க வாய்ப்புண்டு என்பதை யோசித்துப் பாருங்கள்.
அதிலும் கீழ்வாலை என்னும் இடத்தில் சில சிந்துவெளிக் குறியீடுகளைப் பயன்படுத்தி ஒரு முழு வாக்கியத்தையே செஞ்சாந்து பாறை ஓவியத்தில் தீட்டி வைத்திருக்கிறார்கள். செஞ்சாந்து என்பதால் அதன் காலம் ரொம்ப ரொம்ப பழசு. அதன் முழுமையான அர்த்தம்கூட இன்னும் கண்டறியப்படவில்லை. கீழ்வாலை பற்றி தனியே ஒரு கட்டுரை எழுதுகிறேன்.
நான் இந்தக் கட்டுரையை எழுதுவதன் முக்கிய நோக்கமே, பெருமுக்கல் பாறைக் கீறல்களை எல்லோரிடமும் எடுத்துச் செல்வதும், அதை மறு ஆய்வு செய்ய வேண்டிய அவசியத்தை அனைவருக்கும் புரிய வைப்பதும் மட்டுமே.
வெ.பாலமுரளி

















