தமிழியைத் தேடி – 11 அதியமானுடன் ஒரு நாள்…..

1987 – இல் திரு செல்வராஜ் என்னும் தொல்லியல் துறை ஆராய்ச்சி மாணவர் ஒருவர் இந்தக் கல்வெட்டைக் கண்டுபிடிக்கும்போது, இது வரலாற்றின் மிகப்பெரிய மர்ம முடிச்சு ஒன்றை அவிழ்க்கப் போகிறது என்பதை அவர் கொஞ்சம் கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார். யாருமே நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள்.

ரொம்ப மொட்டையாக ஆரம்பித்து விட்டேனோ ? 

சரி…விளக்கமாகவே சொல்கிறேன்.

கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த மௌரியச் சக்கரவர்த்தி அசோகர் தன்னுடைய சாதனைகளையும், ஆணைகளையும் 36 கல்வெட்டுக்களாக கிரேக்கம், பிராகிருதம், அமெரிக், பிராமி என்று பல்வேறு மொழிகளில் செதுக்கி வைத்தார்.

அதில் இரண்டாவது பாறைக் கல்வெட்டில்தான் நம்மைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.

.”….ஏவமபி ப்ர சந்தேஸீ யதா சோடா, பாடா ஸதியபுதோ கேதளபுதோ ஆ தம்ப..”

என்று தன்னுடைய அண்டை தேசத்து மாமன்னர்களாக சில மன்னர்களைக் குறிப்பிட்டுள்ளார்.

இதில் சோழ, பாண்டிய, சேர மன்னர்கள் என்பது புரிந்தது. “ ஸதிய புதோ” என்று பிராகிருத மொழியில் குறிப்பிடப்படும் சத்திய புத்திரர்கள் என்பது யார் என்பது மட்டும் யாருக்கும் புரியவில்லை. 

அந்தச் சூழ்நிலையில்தான் விழுப்புரம் மாவட்டத்தில் திருக்கோவிலூருக்கு அருகில் உள்ள “சம்பை” என்ற ஜம்பையில் நம்ம செல்வராஜ் அந்தக் கல்வெட்டைக் கண்டுபிடித்தார்.

“ ஸதியபுதோ அதியந் நெடுமாந் அஞ்சி ஈத்த பாளி” என்பதுதான் அந்தக் கல்வெட்டு வாசகம்.

அர்த்தம் : “சதியபுதோ அதாவது, சத்தியபுத்திரன் அதியன் நெடுமான் அஞ்சி செய்துகொடுத்த பாளி (கற்படுக்கைகள்).

இதில் உள்ள “ஸதியபுதோ” என்ற வார்த்தையைப் பார்த்ததும் நம் தமிழ்நாடு தொல்லியல் துறை துள்ளிக் குதித்தது. 

ஆகா….அசோகச் சக்கரவர்த்தி குறிப்பிட்ட அந்த நாலாவது அண்டை நாட்டு பேரரசன் “ஸதியபுதோ” வும் நம்ம ஊர் அதியமான்தான் என்பதறிந்து நம் தமிழக …சாரி…தமிழ்நாட்டு மக்களுக்கு பயங்கர மகிழ்ச்சி.

இது பற்றி விரிவாக அனைத்து ஆங்கில செய்தித்தாள்களிலும் செய்தி வெளியானது.

“இதை நேரில் வந்து பார்க்காமலேயே” நமது மத்திய தொல்லியல் துறை ( ASI ) இது போலிக் கல்வெட்டு என்று அறிக்கை வெளியிட்டது.

பின்ன…..அசோகர் தனது அண்டை நாட்டுப் பேரரசர்கள் என்று சேர, சோழ , பாண்டிய என்று மூன்று தமிழ்நாட்டு மன்னர்களைக் குறிப்பிட்டதையே ஜீரணிக்க முடியாத வடக்கான்ஸூக்கு , நாலாவதும் ஒரு தமிழ் மன்னன்தான் என்பதை எப்படிப் பொறுத்துக் கொள்ள முடியும். அவர்கள் செம காண்டாகி விட்டது போல் தெரிகிறது.

நமது தமிழ்நாட்டு தொல்லியல் துறையும் விடவில்லை என்று தெரிகிறது. உடனே ஒரு ஃபீல்ட் என்கொயரிக்கு உத்தரவிட்டு அதில் கலந்து கொள்ள மத்திய தொல்லியல் துறையையும் கேட்டுக் கொண்டது. 

உள்ளூர் கிராம அதிகாரி, தாசில்தார், டி.ஆர்.ஓ., சப் கலெக்டர், உள்ளூர் பெரிய மனிதர்கள், செல்வராஜூக்கு முதலில் தகவல் சொன்ன மாடு மேய்க்கும் சிறுவன் மற்றும் நமது மாநில தொல்லியல் துறை சார்பாக சில அதிகாரிகள் என்று பெரிய குழுவே கூடி விசாரிக்க இந்தக் கல்வெட்டு காலகாலமாக இருந்திருக்கும் விஷயம் உறுதி செய்யப்பட்டது. 

இதில் வருத்தமான ஒரு செய்தி, இந்தக் கூட்டத்திற்கு, நல்ல கால அவகாசம் கொடுத்தும் மத்திய தொல்லியல் துறையிலிருந்து யாரும் கலந்து கொள்ளவில்லை என்று தெரிகிறது. தமிழர்களின் பழைமை வெளி வருவதில் அவ்வளவு வெறுப்பு.

சரி…மேட்டருக்கு வருவோம். 

பொதுவாக எழுத்துகளின் வடிவமைப்பின் வளர்ச்சியை வைத்தே கல்வெட்டுக்களின் காலத்தை நிர்ணயம் செய்கிறது நமது தொல்லியல் துறை.

அந்த வகையில், இந்தக் கல்வெட்டில் மெய்யெழுத்துகளுக்குப் புள்ளியிடப்படவில்லை ( அதியந, நெடுமாந, அஞசி, ஈதத). அதே சமயம், நெடிலைக் குறிக்கும் எழுத்தின் மேலே உள்ள கோடுகள் தெளிவாக உள்ளன ( நெடு”மா”ந, “பா” ளி ).  இவற்றை வைத்துப் பார்க்கையில் இந்தக் கல்வெட்டு தமிழியின் இரண்டாம் கட்ட வளர்ச்சி என்று சொல்லப்படுகிறது.

அதாவது இந்தக் கல்வெட்டின் காலம் கி.மு. மூன்று அல்லது கி.மு. இரண்டாம் நூற்றாண்டு.

புகளூர் கல்வெட்டு சொல்லும் கோஆதன் செல்லிரும் பொறையும்  நம்ம அதியன் நெடுமான் அஞ்சியின் மகன் பொகுட்டெழினியும் போரிட்டதை சில சங்க இலக்கியங்கள் சொல்லுகின்றன. ஆனால், புகளூர் கல்வெட்டுக்களின் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு என்று சொல்லப்படுகிறது. அதனால், புகளூர் கல்வெட்டுக்களின் காலத்தையும் மறு ஆய்வு செய்வது மிகவும் அவசியமாகிறது.

இங்கே மிகவும் முக்கியமான ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும்.

இதுவரை, பாரி , காரி ஓரி, அதியமான் போன்ற தமிழ் ஏழு வள்ளல்களைப் பற்றிய முழு விபரமும் நமக்குக் கிடைக்கவில்லை. சங்க இலக்கியங்களில் கிடைக்கும் சில பாடல்களை வைத்து அவர்கள் ஏழு பேரையும் குறுநில மன்னர்கள் என்றே நாம் அழைத்து வருகிறோம். அந்தக் கூற்றை மாற்றிக் கொள்ள வேண்டிய நேரம் வந்து விட்டது என்று நினைக்கிறேன்.

அசோகன் தனது அண்டை நாடுகளாக சேர, சோழ, பாண்டியர்களுக்கு இணையாக ஒரு குறுநில மன்னனை தனது கல்வெட்டில் பொறிப்பானா என்ற லாஜிக்கான ஒரு கேள்வி எழுகிறது. 

அதேபோல், பாரியைப் பற்றி நமக்குக் கிடைத்திருக்கும் பாடல்களிலிருந்து, மூவேந்தர்களின் சதிச் செயலாலேயே பாரி கொல்லப்பட்டது நமக்குத் தெரிய வருகிறது. 

சேர, சோழ, பாண்டியன் என்று ஒன்றிணைந்த மூன்று பேரரசுகளுக்கு ஒரு குறுநில மன்னனால் டஃப் ஃபைட் கொடுத்திருக்க முடியுமா என்பதையும் யோசிக்க வேண்டியிருக்கிறது. 

எனக்கென்னவோ இந்த ஏழு வள்ளல்களையும் வரலாறும், நமது வரலாற்று ஆசிரியர்களும் வஞ்சித்து விட்டதாகவே தோன்றுகிறது. 

என் கருத்து தவறாகவும் இருக்கலாம்.

வெ.பாலமுரளி

பி.கு: வழக்கம்போல் இங்கேயும் சில மருந்து அரைக்கும் குழிகளும், சில நிலாப்பாறைகளும், பின்னால் உள்ள பாறைகளில் மேலும் சில கற்படுக்கைகளும் உள்ளன. வெண் சாந்து ஓவியங்களும் இருக்க வாய்ப்புண்டு. மறுபடியும் அங்கு சென்று பாறை ஓவியங்களைத் தேட எண்ணியுள்ளேன்.

நன்றிகள் : 

தமிழ் பிராமி கல்வெட்டுக்கள், தமிழ் நாட்டு தொல்லியல் துறை.

என் கல்லூரி நண்பர்கள் வெற்றி மற்றும் குமார்.