மதுரை ஒத்தக்கடையிலிருந்து “திருமோகூர்” ரோட்டில் 15 கிமீ தூரம் பயணித்தால் வரும் ஒரு சிற்றூர்தான் திருவாதவூர்.
சனீஸ்வர பகவான் ஒருமுறை யாரோ ஒரு சிவனடியாரைப் பிடிக்க, அந்த சிவனடியார் கோபத்தில் சனீஸ்வரனைப் பார்த்து “ உனக்கு வாதம் வரக்கடவது. பிடி சாபத்தை” என்று சாபம் போட்டு விட்டார் ( பின்னே….யாருகிட்ட ). சனீஸ்வரனுக்கு உடனே வாத நோய் பிடித்து விட்டது.
மிஸ்டர் சனி உடனே சிவ பெருமானிடம் சென்று முறையிட, அவர் இந்த ஊர் லொகேஷனை ஷேர் பண்ணி, அங்கு சென்று தவமிருந்தால் உன் வாத நோய் சரியாகும் என்று சொல்ல, மிஸ்டர் சனி இங்கு வந்து சிவனை வழிபட்டு தன் வாத நோயிலிருந்து மீண்டதால், இந்த ஊருக்கு “ திருவாதவூர்” என்ற பெயர் வந்தது என்று ஒரு புராணக் கதை சொல்லப்படுகிறது.
இங்குள்ள திருமறைநாதர் சிவன் கோயில் 12ம் நூற்றாண்டில் பிற்காலப் பாண்டியர்களால் கட்டப்பட்டது. மிகவும் அற்புதமான ஒரு கோயில் (இங்குள்ள சுதாகர் என்னும் ஒரு அர்ச்சகர் மிகவும் தெனாவெட்டாக எல்லோரையும் பார்த்து வா, போ என்று குரைப்பார். நாம் மெயின் சனியை கும்பிட்டு விட்டு, இந்த சனியை கண்டு கொள்ளாமல் வந்து விட்டால் நலம்).
“திருவாசகத்துக்கு உருகாதோர் ஒரு வாசகத்துக்கும் உருகார்” என்று ஒரு பழமொழி உண்டு. அந்தத் திருவாசகத்தை இயற்றிய மாணிக்கவாசகர் பிறந்தது இந்த திருவாதவூரில்தான். இவரின் இயற்பெயரும் “ திருவாதவூரான்” தான். பின்னர் திருவாதவூரடிகளாகி அதன் பின்னர் மாணிக்கவாசகராகி விட்டார்.
ஊரில் அவருக்கு தனியாக ஒரு கோயில் இருக்கிறது. இவர் 9ம் நூற்றாண்டில் வரகுண பாண்டியனின் ராஜ சபையில் அமைச்சராக பணி புரிந்தவர்.
மன்னன் இவரிடம் கொஞ்சம் பணம் கொடுத்து சோழ நாட்டிற்கு ( ??) சென்று குதிரை வாங்கி வரச் சொல்லியிருக்கிறார். ஆனால், இவர் ஏதோ ஒரு நினைப்பில் அறந்தாங்கிக்கு அருகில் உள்ள ஆவுடையார்கோயிலுக்குச் சென்று மன்னன் கொடுத்த பணத்தில் அங்கே சிவனுக்கு அதி அற்புதமான ஒரு கோயிலை கட்டி விட்டார்.
அந்த கோயிலின் சிற்ப வேலைப்பாடுகள் இன்றும் அதிசயத்தின் எல்லை.
மன்னன் அவரை அழைத்து அவருக்கு தண்டனை கொடுத்ததாகவும் , சிவன் வந்து மாணிக்கவாசகனைக் காப்பாற்றியதாகவும் அந்தக் கதை செல்லும்.
மாணிக்கவாசகன் சொல்லச் சொல்ல இறைவனே வந்து அதை எழுதிக் கொடுத்துவிட்டு , மாணிக்கவாசகன் சொல்ல அம்பலவாணன் எழுதியது என்று கையொப்பம் இட்டு விட்டு மறைந்து விட்டதாக சொல்லப்படுகிறது.
திருவாசகம், திருக்கோவை என்ற இரண்டு மாபெரும் படைப்புகளைப் படைத்த மாணிக்கவாசகர் வாழ்ந்ததென்னவோ வெறும் 32 ஆண்டுகளே.
இப்படி வரலாற்று சிறப்பு மிக்க திருவாதாவூரில் 2200 வருடங்கள் பழைமையான இரண்டு தமிழிக் கல்வெட்டுக்களும், செந்நிறத்தில் வரையப்பட்ட, தியானம் தொடர்பான ஏராளமான வட்ட வடிவ குறியீடுகளும் உள்ளன.
கல்வெட்டுக்கள் இருக்கும் உவாமலை அல்லது பஞ்ச பாண்டவர் மலை இப்போது கல் குவாரிகளால் சூழப்பட்டு சீரழிந்த நிலையில் உள்ளது. அந்த இடத்திற்கு செல்லும் வழிகளும் இப்போது பாழடைந்து மோசமான நிலையில் உள்ளன.
அந்த இடத்திற்கு எப்படி செல்வது என்று உள்ளூர் மக்களைக் கேட்டாலே, வழி சொல்வதற்குள் திணறி விடுகிறார்கள்.
மதுரையிலிருந்து செல்லும்போது, திருவாதவூருக்குள் நுழையும் முன் சாலை இரண்டாகப் பிரியும்.
அந்த இடத்தில் இடது பக்கம் திரும்பினால் திருவாதவூர் ஊருக்குள் போய் விடலாம். நேரே செல்லும் சாலை பூவந்தி என்னும் ஊருக்கு செல்கிறது. அந்தச் சாலையில் இரண்டு அல்லது மூன்று கிலோமீட்டர் சென்றால் உங்கள் இடது புறத்தில் ஒரு சனீஸ்வரர் ஆலயம் வரும். அதைத் தாண்டி ஒரு நூறு அல்லது இரு நூறு அடி தூரத்தில் உங்கள் வலது கைப் பக்கம் ஒரு ஒற்றையடிப் பாதை திரும்பும். அதில் திரும்பி ஒரு கருவேலக் காட்டுக்குள் நுழைந்து, வளைந்து வளைந்து பயணித்தால் ஒரு இரண்டு கிலோமீட்டர் தூரத்தில், ஒரு உடைந்து போன பழைய ஜேசிபி வாகனம் நிற்கும். அதுதான் லேண்ட் மார்க். அதன் வலது புறம் இருக்கும் குன்றுதான் உவாமலை.
குன்றின் அடி வரை உங்கள் வாகனத்தைக் கொண்டு செல்லலாம்.
கல்வெட்டு இருக்கும் இடம் வரை படிக்கட்டுகள் போட்டு வைத்திருக்கிறது நமது தொல்லியல் துறை. உயரமில்லை. ஓரிரு நிமிடத்தில் ஏறி விடலாம்.
குகையினுள் ஒரு 10 கற்படுக்கைகள் இருக்கும்.
டிப்பிக்கல் தமிழி சைட். ஆங்காங்கே ஆடுபுலி ஆட்டம், தாயம் போன்ற கட்டம் கட்டமாக உள்ள ஏதோ ஒரு விளையாட்டு, மருந்து அரைக்கும் குழிகள் , நீர் வடிகால், நீர் வடி விளிம்பு என்று மற்ற இடங்களில் பார்க்கும் அனைத்து அம்சங்களும் உள்ளன.
குகையின் வாசலில் உள்ள ஒரு பாறையின் ஓரிரு படுக்கைகள். டிப்பிக்கல் நிலாப்பாறை. அதில் படுத்துக் கொண்டு வானத்தைப் பார்த்தால் வானத்தின் முழுப்பரிமாணம் தெரிகிறது.
குகையின் முகப்பில் உள்ள நீர்வடிம்பிற்கு மேல் ஒன்றும், கீழ் ஒன்றுமாக இரண்டு தமிழிக் கல்வெட்டுகள்.
முதல் கல்வெட்டு :
“பாங்காட அர்இதன் கொட்டுபிதோன்”
கல்வெட்டின் அர்த்தம் :
பாங்காடு அல்லது பனங்காடு என்ற ஊரைச் சேர்ந்த அரிதன் என்பவன் செய்து கொடுத்த கற்படுக்கைகள்.
திருவாதவூருக்கு அருகில் “பனங்காடி” என்னும் ஊர் இன்றும் இருப்பது கவனிக்கத்தக்கது.
இரண்டாம் கல்வெட்டு :
“உபசன் பர்அசு உறை கொட்டுபிதோன்”
கல்வெட்டின் அர்த்தம் :
பரசு என்னும் சமயத் தலைவர் அல்லது ஆசிரியர் இந்த உறைவிடத்தை செய்து கொடுத்தார்.
இந்த இரண்டு கல்வெட்டின் காலமும் கி.மு.இரண்டாம் நூற்றாண்டு என்கிறது நமது தொல்லியல் துறை.
அசோகரின் கல்வெட்டுக்களை வைத்து மட்டுமே நம் தமிழியின் காலத்தை கணக்கிட்டதால், இவற்றின் உண்மையான காலம் ஓரிரு நூற்றாண்டுகள் முன்னும் கூட இருக்க வாய்ப்புகள் உள்ளன.
குகையின் முகப்பிலும், குகைக்குள்ளேயும் வட்டத்துக்குள் வட்டமாக ஏராளமான வட்டங்களும், சில வட்டங்களுக்குள் வட்ட வடிவில் சில புள்ளிகளும் செஞ்சாந்து நிறத்தில், பாறை ஓவியம் போல வரைந்து வைத்துள்ளனர் இங்கு வாழ்ந்த தமிழ்ச் சித்தர்கள் அல்லது ஆசீவகச் சித்தர்கள்.
அனேகமாக இங்கு பெரிய அளவில் ஒரு தியான வகுப்பு நடந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது. இதன் சரியான காலம் இன்னும் வரையறுக்கப்படவில்லையென்றாலும் கூட, இங்கு வாழ்ந்த தமிழ்ச் சித்தர்களே இதை வரைந்திருக்க வாய்ப்புகள் அதிகம்.
பின்னால் (கி.பி.10ம் நூற்றாண்டில்) வந்த ஜெயின முனிவர் மிஸ்டர் அச்சணந்தியின் கண்களிலிருந்து திருவாதவூர் தப்பித்து விட்டது என்று நினைக்கிறேன். இங்கே தீர்த்தங்கரர்களின் புடைப்புச் சிற்பம் எதையும் காணவில்லை ( அப்ப்ப்ப்ப்பாடா ).
வெ.பாலமுரளி









