தமிழியைத் தேடி – 8 : சித்தன்ன வாசல் 

சித்தன்ன வாசல் என்றதும் நம் அனைவரின் ஞாபகத்திற்கும் வருவது, 1000 ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தும் இன்றும் நிலைத்துள்ள  இங்குள்ள அற்புதமான வண்ண ஓவியங்கள்தான். 

இவை ஏழாம் நூற்றாண்டில் செய்விக்கப்பட்ட “அறிவர் கோயில்” என்றழைக்கப்படும் ஒரு குடைவரைக் கோயிலின் முகப்பில் உள்ளன. 

இந்த அறிவர் கோயில், (கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் ஆண்ட) ஶ்ரீ மாற ஶ்ரீவல்லபன் என்னும் பாண்டிய காலத்தில் மதுரையைச் சார்ந்த இளங்கௌதமன் என்னும் ஆசிரியரால் செப்பனிடப்பட்டது என்ற தகவல் தாங்கிய ஒரு கல்வெட்டின் மூலம் இது பாண்டியர்கள் காலத்தைய குடைவரைக் கோயிலாக இருக்கலாம் என்று கருத முடிகிறது. 

மற்றபடி இந்தக் குடைவரைக் கோயில் உண்மையிலேயே யார் காலத்தில் யார் செய்வித்தது என்பது இன்று வரை மர்மமாகவே உள்ளது. 

இங்குள்ள கல்வெட்டு செய்தி :

திருத்திய பெரும்புகழ் தேவதரிசனத்து

அருந்தவ முனிவனைப் பொருட்செல்வன்

அறன்கிளர் நிலைமை இளம்கௌதமன் எனும்

வளங்கெழு திருநகர் மதிரை ஆசிரியன்

அவனிபசேகர சீர்கெழு செங்கோல் சீரீவல்லபன்”

இதில் சமணர் என்ற நேரடிச் சொல் எதுவுமில்லை. “தேவதரிசனத்து அருந்தவ முனிவன்” என்பது ஒருவேளை சமணர்களைக் குறிப்பதாக இருக்கலாம். அழகர்மலை, சித்தர்மலை கல்வெட்டுக்கள் போலவே இங்கும் மதுரை “ மதிரை” என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. 

குடைவரைக் கோயிலின் உள்ளே மூன்று துறவிகளின் சிற்பங்களும், தலையில் ஐந்து தலை நாகத்துடன் கூடிய 23ம் தீர்த்தங்கரர் பார்சுவ நாதரின் சிற்பமும் இருக்கின்றன. 

இந்த மூன்று துறவிகளின் தலையிலும் தலைமுடி இருந்ததற்கான அடையாளங்கள் இருப்பதால், இவர்கள் மூவரும் ஆசீவகத்தின் முப்பெரும் தலைவர்களான மற்கலி கோசாலர், பூரண காயபர் மற்றும் கணி நந்தன் தான் என அடித்துச் சொல்கிறார் பேராசிரியர் க.நெடுஞ்செழியன் அவர்கள். ஜெயினத் துறவிகள் தலையை மழித்துக் கொள்ளும் வழக்கத்தினர்.

ஜெயினர்களைப் போலவே ஆசீவகர்களும் ஆதி நாதரையும், பார்சுவ நாதரையும் தங்கள் தீர்த்தங்கரர்களாக ஏற்றுக் கொண்டிருந்ததனால் பார்சுவ நாதரின் சிற்பமும் இங்கு இடம் பெற்றிருக்க வேண்டும் ( ஆசீவகத்தில் மொத்தமே மூன்றே மூன்று தீர்த்தங்கரர்கள்தான். ஆதி நாதர் முதலாம் தீர்த்தங்கரர். பார்சுவ நாதர் இரண்டாம் தீர்த்தங்கரர். மற்கலி கோசாலரே மூன்றாவதும் கடைசியுமான தீர்த்தங்கரர் )   

அதேபோல், இங்குள்ள ஓவியங்கள் சமணத் துறவிகள் வரைந்தது என்று சொல்லப்படுகிறது. 

ஆனால், ஓவியத்தில் காணப்படும் துறவிகள் தலையில் சிகையுடனும், இடுப்பில் கோவணம் போன்ற ஒரு ஆடையுடனும் கையில் தாமரை மலர் ஏந்தி இருப்பதைக் காண முடியும். முடி, இடுப்பில் ஆடை மற்றும் கையில் தாமரை என்று இந்த மூன்று அடையாளங்களுமே ஆசீவகர்களுக்குத்தான் பொருந்துகிறதே தவிர சமணர்கள் என்னும் ஜெயினர்களுக்கல்ல.

ஜெயினர்கள் தலை முடியும் வைத்துக் கொள்வதில்லை, இடுப்பில் ஆடையும் அணிவதில்லை.

அத்துடன் இந்த ஓவியங்களில் இரண்டு நடன மங்கையர்களும் இடம் பெற்றுள்ளனர். அவர்களின பின்புற பாகங்கள் தெளிவாகவும், மிகவும் நளினத்துடனும் வரையப்பட்டுள்ளன. பெண்களைப் பற்றி நன்கு அறிந்த ஒருவனால் மட்டுமே  இது வரையப்பட்டிருக்க வேண்டும். ஜெயினத் துறவிகள் இதை எப்படி இவ்வளவு அழகாக வரைந்திருக்க முடியும் என்பதும் கேள்விக்குறியே.

ஆசீவகர்கள் இந்த விஷயத்தில் கொஞ்சம் “ஸ்ட்ராங்” தான் போலிருக்கு ( “அந்த” விஷயத்தில் “வீக்” என்று சொல்வது இலக்கணப் பிழையாகும். ஹி…ஹி…ஹி..) 

எனவே, ஐயா நெடுஞ்செழியன் அவர்களின் கருத்தை முற்றிலுமாக புறந்தள்ளுவது சரியல்ல என்பது  என் கருத்து. 

அது மட்டுமல்ல… அறிவர் கோயிலில் வரும்  “ அறிவர்” என்ற சொல் முக்காலத்தையும் உணர்ந்து,  நல்லவை, கெட்டவைகளை மக்களுக்கு எடுத்துச் சொன்ன  ஆசீவக / தமிழ்ச் சித்தர்களைக் குறிக்கும் சொல்.    

தொல்காப்பியர் கூட : 

கழிவினும் வரவினு நிகழ்வினும் வழிகொள

நல்லவை யுரைத்தலும் மல்லவை கடிதலுந்

செவிலிக்குரிய வாகுமென்ப

சொல்லிய கிளவி யறிவர்க்கு முரிய

  • தொல். பொருள்.கற்பியல். 153, 154

முக்காலமும் தெரிந்து கொள்ளுதல், வானிலை ஆராய்ச்சி போன்றவை ஆசீவகர்களுக்கு மட்டுமே உரித்தான சிறப்புகள். 

இவற்றை வைத்துப் பார்க்கையில் , மேற்சொன்ன “அறிவர் குகைக் கோயிலும்”, ஓவியங்களும், உண்மையிலேயே நமது தொல்லியல் துறை சொல்லும் சமணர்கள் என்ற ஜெயினர்கள்தானா என்பதை மறு ஆய்வு செய்வது மிகவும் முக்கியம் என்பது புரிகிறது. 

1000 வருடங்களுக்கு முன்பே இந்தக் குகை ஓவியங்கள் ஃப்ரெஸ்கோ செஸ்கொ என்னும் ஒரு உக்தியைப் பயன்படுத்தி, ஓவியங்கள் இருக்கும் தளத்தை சுண்ணாம்புத் தண்ணீரில் ஈரப்படுத்தி , அந்த ஈரத் தன்மையிலேயே வரைந்திருப்பதாகச் சொல்லுகிறார்கள். அற்புதமாக உள்ளன. இது சம்பந்தமாக இண்டர்நெட்டில் நிறைய கட்டுரைகள் உள்ளன. நேரம் கிடைக்கும் போது படியுங்கள். மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது.

இந்த அறிவர் கோயில் இருக்கும் மலையையும் சேர்த்து அந்த வளாகம் முழுவதையும் இரும்புக் கம்பியால் க்ரில் போட்டு அமர்க்களமாக பாதுகாத்து வருகிறது நமது தொல்லியல் துறை. அது மட்டுமல்ல. மலையின் மேல் இருக்கும் குகையை இன்னும் உறுதியான க்ரில் போட்டு , அந்தக் குகைக்கு பலமான இரும்புக் கதவு ஒன்றும் போட்டு அதனை துப்பாக்கியுடன் ஒரு காவலரும் பாதுகாத்து வருகிறார்.

மற்ற தமிழி சைட்டுகள் அனைத்தும் கேட்பாரற்றும் , மிகவும் அலங்கோலமான நிலையிலும் இருக்கையில் இந்த இடத்திற்கு மட்டும் ஏன் இவ்வளவு சிறப்பு என்று உங்களுக்குக் கேட்கத் தோன்றுகிறதா ?

இந்த மலையில் உள்ள தமிழிக்  கல்வெட்டில் என்ன எழுதியிருக்கிறது, அதை நமது தொல்லியல் துறை எப்படி வாசித்திருக்கிறது என்பது தெரிந்தால் மேலே உள்ள கேள்விக்கு பதில் தெரிந்து விடும். 

மலை மேல் உள்ள குகைக்குச்  செல்ல 300 முறையான படிகள் உள்ளன. மழைக்காலத்தில் மட்டும் கொஞ்சம் ஜாக்கிரதையாக ஏற வேண்டும். நன்றாக வழுக்கும்

குகைக்குச் செல்லுமிடத்தில் ஏழு பெரிய பெரிய பாறைகள் நீள நீளமாக உள்ளன. அவற்றைத் தாண்டித்தான் குகைக்குச்  செல்ல முடியும். அதனால்தான் இந்த இடத்திற்கு ஏழடிப் பாட்டம் என்று பெயர் வந்திருக்க வேண்டும் ஒரு சாராரும், தமிழிக் கல்வெட்டு இருக்கும் குகையின் நேர்கீழே , மலையின் பின்புறத்தில் இன்னொரு குகை உள்ளது, அதன் தொடக்கக் காலப் பெயர்தான் ஏழடிப் பாட்டம் என்று ஒரு சாராரும் சொல்கின்றனர். அந்தக் குகையினுள்தான் ஆசீவகத்தைத் தோற்றுவித்த மற்கலி கோசாலரின் சமாதி இருக்கலாம் என்கிறார் ஐயா நெடுஞ்செழியன் அவர்கள். ஆனால், இதற்கு ஆதாரம் ஏதுமில்லை. 

சரி…மேலே உள்ள குகைக்குப் போவோம். 

குகையினுள்ளே 16 கற்படுக்கைகளும், (தொல்லியல் துறையின் கூற்றின் படி) கி.மு.முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு தமிழிக் கல்வெட்டும்,கி.பி.ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த இரண்டு தமிழ்க் கல்வெட்டுக்களும், மிகவும் திருத்தமாகச் செதுக்கப்பட்ட ஒரு சங்கின் கோட்டோவியமும்,குகையின் முகப்பில் செங்காவியில் வரையபட்ட ஒரு தாமரையின் குகை ஓவியமும் உள்ளன. இவை அனைத்தின் படங்களையும் இங்கே இணைத்துள்ளேன்.

தமிழிக் கல்வெட்டின் வாசகம் :

எஉமிநாடு குமுழ்ஊர் பிறந்த காவுடி ஈ

தென்குசிறுபோசில் இளயர் செய்த அதிட் அனம்

இதற்கு நமது தொல்லியல் துறை சொல்லும் அர்த்தம்:

எருமை நாட்டைச் சேர்ந்த குமுழூரில் பிறந்த காவுடி என்பவருக்கு தெற்கு சிறுபோசிலைச் சேர்ந்த இளயர் என்பவர் செய்து கொடுத்த இருப்பிடம்.  

இந்தக் கல்வெட்டை மொத்தம் எட்டு தொல்லியல் அறிஞர்கள் வாசித்து முறையாக பதிவு செய்திருக்கின்றனர்.

இந்த எட்டு பேரில் , ஆறு பேர் இந்தக் கல்வெட்டின் முதல் வார்த்தையை “எஉமி நாடு” என்று வாசித்திருக்க உயர்திரு ஐராவதம் மகாதேவனும்,உயர்திரு நாகசாமி அவர்களும் இதை “ எருமிநாடு” என்று வாசித்திருக்கின்றனர். அதற்கு அவர்கள் சொல்லும் விளக்கம்: சமஸ்கிருதத்தில் “மகிஷ மண்டலம்” என்றால் கன்னட நாட்டைக் குறிக்குமாம். எனவே அதன் தமிழாக்கம் “எருமை நாடு”. அதாவது கன்னட நாட்டிலிருந்துதான் இந்தத் துறவிகள் வந்திருக்கின்றனர். “ எருமை நாடு” என்றுதான் சொல்ல வந்திருக்க வேண்டும். தவறுதலாக “எஉமி நாடு” என்று வெட்டி வைத்துள்ளனர் என்பது ஐராவதமும், நாகசாமியும் தந்த விளக்கம்.

இந்த இடத்தில் இன்னொரு விஷயத்தையும் குறிப்பிட்டாக வேண்டும். கல்வெட்டு ஆராய்ச்சியாளர் உயர்திரு. கரு. ராஜேந்திரன் அவர்கள், இன்றைய புதுக்கோட்டை மாவட்டத்தில், சித்தன்னவாசலிலிருந்து ஒரு 10 கிமீ தூரத்தில் எருக்குமணிப் பட்டி என்று ஒரு ஊர் உள்ளது. அது ஒருவேளை அந்தக் காலத்தில் எருமை நாடு என்ற பகுதியாய் இருந்திருக்கலாம் என்கிறார். இந்தக் கல்வெட்டு பற்றி விரிவான ஒரு ஆய்வும் தேவை என்கிறார் கரு.ராஜேந்திரன் அவர்கள். யோசிக்க வேண்டிய விடயம். 

அது சரி…அது என்ன “ சிறுபோசில்” ?????? இந்த ஊரின் அன்றைய பெயர் “ தெற்கு சிறுவாயில் “ என்று இருந்ததாம். இதில் உள்ள வாயில் என்ற வார்த்தையை “ ஹொசிலு” என்று கன்னடப்படுத்தி பிறகு அதை தமிழுக்கு மறுபடியும் இம்போர்ட் செய்யும்போது “போசில்” ஆகி விட்டதாம். வாயில் என்னும் தமிழ் வார்த்தையை முதலில் எக்ஸ்போர்ட் செய்து விட்டு, மறுபடியும் இம்போர்ட் செய்தால் மறுபடியும் “வாயில்” என்றுதானே வரும் என்றெல்லாம் கேட்கப்டாது. 

அத்துடன் “ காவுடி” என்ற சொல் கன்னடத்தில் “ கௌடி” என்று ஒரு பெண் துறவியின் பெயராம். 

மொத்தத்தில், ஐராவதம் மற்றும் நாகசாமி இருவரின் கருத்துப் படி, “ தமிழிக் கல்வெட்டுக்கள் இருக்கும் கற்படுக்கைகள் அனைத்தும் தமிழ் நாட்டிற்கு ‘கன்னடத்திலிருந்து வந்த சமண ( ஜெயின)த் துறவிகள் அளித்த கொடையே. அதற்கு மிகச் சிறந்த சான்று சித்தன்ன வாசல் கல்வெட்டு”. 

இப்போது புரிகிறதா இந்த இடத்திற்கு மட்டும் ஏன் இவ்வ்வ்வ்வ்வளவு பாதுகாப்பு என்று. எந்தக் காரணம் கொண்டும் இந்தக் கல்வெட்டு சேதமடைந்து விடக் கூடாது என்று நமது தொல்லியல் துறை மிகவும் கவனமாக இருப்பது புரிகிறது. 

நமது சொந்தத் தாய்மொழியின் முதல் எழுத்துருவமான தமிழியில் ஒரு கல்வெட்டு கூட பொறிக்க அறிவற்ற ஒரு இனம் எப்படி சங்க கால இலக்கியம் என்று 36 பொக்கிஷங்களை உலகிற்கு தந்திருக்க முடியும் என்றெல்லாம் அதிகப்பிரசங்கித்தனமாக கேள்வி கேட்கக் கூடாது. இப்பவே சொல்லிட்டன்.

இந்தத் தமிழி கல்வெட்டு இருக்கும் இடத்தில் கிபி.ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த இரண்டு கல்வெட்டுக்கள் உள்ளன. 

அதில் ஒன்றில் “ திட்டைச் சாணன்” என்ற பெயரும், இரண்டாவதில் முதற்பகுதி சிறிது அழிந்து “ ….னூர் கடவுளன் திருநீலன்” என்ற பெயரும் உள்ளன.

இவை இரண்டும் ஏழாம் நூற்றாண்டில் இங்கு வந்து தவம் செய்த இரண்டு தமிழ் அறிவர்களின் ( தமிழ்ச் சித்தர்களின்) பெயர்களாக இருக்கக் கூடும். தொல்லியல் துறையிடம் கேட்டால் இவர்களும் கன்னடத்தில் இருந்து வந்த சமணத் துறவிகளின் “கொடை” தான் என்று கூறலாம்.  

கன்னட மொழி என்பது ரொம்ப  பின்னாளில் வந்த ஒரு மொழி என்பது நிறைய அறிஞர்களின் கருத்து. அதை எப்படி கி.மு.முதலாம் நூற்றாண்டில் மிகவும் சிறப்புடன் இருந்த தமிழியுடன் ஒப்பிட முடியும் ? இதிலிருந்தே மேற்சொன்ன அறிஞர்களின் உள்நோக்கம் புரிகிறது.

நமது தொல்லியல் துறை கி.மு. முதலாம் நூற்றாண்டு என்று சொன்னால், அது கி.மு. மூன்றாம் அல்லது கி.மு. நான்காம் நூற்றாண்டாக இருந்திருக்கக் கூட வாய்ப்புகள் அதிகம். அப்போது கன்னட மொழி எப்படி சுடர் விட்டு ஒளிர்ந்தது என்று யாரும் விளக்கவில்லை ( இதைச் சொல்வதற்காக நான் கன்னட மொழிக்கு எதிரி என்று தயவு செய்து யாரும் எண்ணி விட வேண்டும். பழைமைக்காக மட்டுமே இங்கு நான் கன்னட மொழியை ஒப்பிடுகிறேன்). 

இந்த குகையின் முகப்பில் பெரிய சைஸில் ஒரு தாமரை ஓவியம் மிக மிக நேர்த்தியாக வட்ட வடிவில் செஞ்சாந்து நிறத்தில் வரையப்பட்டுள்ளது. இதுவும் இங்கு வாழ்ந்த ஆசீவக அல்லது தமிழ்த் துறவிகள் 2000 வருடங்களுக்கு முன்னர் வரைந்ததாகவே இருக்க வேண்டும். நான் முன்பே சொன்னது போல அந்தக் காலத் துறவிகள் தாமரையைப் போற்றி தங்கள் சின்னமாக வைத்துள்ளனர். என்ன காரணம் என்று தெரியவில்லை ( நோ பாலிட்டிக்ஸ் ப்ளீஸ் ).

சித்தன்ன வாசல் வளாகத்தை விட்டு மெயின் ரோட்டிற்கு வந்தால், நுழைவாயிலுக்கு அருகிலேயே, தொல்லியல் துறையின் வசமுள்ள, சில நீத்தார் நினைவு ( வட்டக் கல், நெடுங்கல்)ச் சின்னங்களைக் காண முடிகிறது. இதிலிருந்து இந்த இடம் நெடுங்காலமாக மக்கள் பயன்பாட்டு இடமாகவும்,ஏதோ ஒரு வகையில் மிகவும் முக்கியமான ஒரு இடமாகவும் இருந்திருப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. 

மற்றுமொரு “ MUST SEE PLACE “.

வெ.பாலமுரளி

நெஞ்சார்ந்த நன்றிகள்:

தமிழ் நாடு சொல்லியல் துறை ( தமிழ்-பிராமி கல்வெட்டுக்கள்)

ஐயா பேராசிரியர் நெடுஞ்செழியன் அவர்கள் ( ஆசீவகமும் அய்யனார் வரலாறும்)

ஐயா கரு.ராஜேந்திரன் அவர்கள் 

உயர்திரு சாந்தலிங்கம் மற்றும் உயர்திரு ராஜகோபால் அவர்கள் (7ம் நூற்றாண்டின் தமிழ் கல்வெட்டு வாசிப்பில் உதவியவர்கள்) 

நண்பர்கள் உயர்திரு ராஜகுரு, உயர்திரு கண்ணன் மற்றும் உயர்திரு. ஹாருன் பாஷா

ஓவியங்களின் படங்கள் உதவி : கூகுள்