“ஆசீவகத்தைத் தேடி” தொடரில் கொஞ்சம் பிசியாக இருக்கும் நேரத்தில், ஒரு நெருங்கிய நண்பருடன் ஏற்பட்ட கருத்து மோதலால், அவசரம் அவசரமாக இந்தக் கட்டுரையை எழுத வேண்டிய சூழ்நிலை.
சமணர் கழுவேற்றத்திற்கும் திருஞான சம்பந்தத்திற்கும் யாதொரு சம்பந்தமுமில்லை (அ) கழுவேற்றம் என்ற ஒன்றே நடக்கவில்லை என்பதுதான் அந்த விவாதம்.
எங்கிருந்து தொடங்கியது இந்த விவாதம் ?
புண்ணியவான், நமது மாநில ஆளுநர் “ஆர்.எஸ்.எஸ்” ரவி அவர்கள் சனாதன தர்மத்தை தூக்கிப் பிடித்து பேசியதால் வந்த எழவு இது.
கி.பி.ஏழாம் நூற்றாண்டில் கழுவேற்றிக் கொல்லப்பட்டது உண்மையிலேயே எண்ணாயிரம் சமணர்களா (ஆசீவகர்களா ) இல்லை எண்ணாயிரம் என்ற பெயர் கொண்ட ஒரு குழுவில் உள்ள சில நூறு பேரா இல்லை விழுப்புரத்திற்கு அருகில் உள்ள எண்ணயிரம் என்ற ஊரைச் சேர்ந்த சிலரா என்ற விவாதம் ரொம்ப வருஷங்களாக போய்க் கொண்டிருக்கிறது.
ஆனால், கழுவேற்றம் நிகழ்வு பற்றி இது வரை யாரும் சந்தேகம் எழுப்பியது போல் தெரியவில்லை ( என் நண்பரை விட்டு விடுங்கள்).
காரணம் பெரியபுராணம் கழுவேற்றம் பற்றி ரொம்பவே விரிவாக எடுத்துரைத்துள்ளது.
அதற்கு முன்னால், கடவுளுக்கு இணையாக நம்மில் சில பேர் மதிக்கும் திருஞானசம்பந்தர், சமணர்களைப் பற்றியும் பௌத்தர்களைப் பற்றியும் அவ்வளவு வன்மத்தையும், வெறுப்புணர்வையும், காழ்ப்புணர்ச்சியையும் கக்கி உள்ளார்.
நான் அனல்வாதம், புனல்வாதம் பிஸினஸூக்க்குள் எல்லாம் நுழைய விரும்பவில்லை. மதுரையில் உள்ள யானைமலையின் மீது சமணர்கள் மந்திரங்கள் ஏவி விட்டு அந்த மலையை உயிர்ப்பித்து அதன் மூலம் பாண்டிய மன்னனையும், மதுரையையும், சமணர்கள் அழிக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறி மன்னனை நம்ப வைத்தது பற்றியும் எழுதப் போவதில்லை. தான் தங்கியிருந்த விடுதிக்கு சமணர்கள் தீ வைத்ததாக சொல்லப்பட்ட கதையையும் எழுதப் போவதில்லை. காரணம் : நேரமின்மை.
தேவாரத்தில் உள்ள பாடல்களையும், பெரியபுராணத்தில் உள்ள பாடல்களை மட்டுமே நண்பர் ஆதாரமாக கேட்டிருந்ததால், அவறை மட்டுமே இங்கு வெளியிடுகிறேன். இவை அனைத்தும் இண்டர்நெட்டிலும் உலவுகின்றன. இவற்றை நானாக எழுதுவதற்கு எனக்குப் புலமையும் இல்லை, அவசியமும் இல்லை.
இவற்றைத் தொகுப்பதற்கு உதவிய என் கல்லூரித் தோழன் ரமேஷ் சுந்தரத்திற்கும், சமணர் கழுவேற்றம் என்ற புத்தகத்தை எழுதிய கோ. செங்குட்டுவன் அவர்களுக்கும், எனது ஆசீவக ஆசான் முனைவர் க.நெடுஞ்செழியன் அவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்:
கீழ்வரும் பாடல்கள் அனைத்தையும் இயற்றியது திருஞான சம்பந்தர் – தேவாரத்தில் வரும் முதல் மூன்று திருமுறைகள்:
தோடுடைய சிவன் எனத் தொடங்கும் தன் முதல் பதிகத்திலேயே
“…….புத்தரோடுபொறி யில்சமணும்புறங் கூறநெறி நில்லா
ஒத்தசொல்லஉல கம்பலிதேர்ந்தென துள்ளங்கவர் கள்வன்
மத்தயானைமறுகவ்வுரி போர்த்ததோர் மாயம்இது வென்னப்
பித்தர்போலும்பிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே. (10)” என்கிறார்.
அதாவது, “புண்ணியம் இன்மையால் புத்தர்களும் அறிவற்ற சமணர்களும் சைவத்தைப் புறங்கூறச் சான்றோர் வகுத்த நெறியில் நில்லாது, தமக்கு ஏற்புடையவாகத் தோன்றிய பிழைபட்ட கருத்துக்களைச் சொல்லித்திரிய, உலகனைத்தும் சென்று பலி தேர்ந்து எனது உள்ளத்தைக் கவர்ந்த கள்வன், மதயானையை மருளுமாறு செய்து அதன் தோலை உரித்துப் போர்த்தது ஒரு மாயமான செயல் என்னுமாறு செய்து, பித்தனாய் விளங்கும் பிரமபுரம் மேவிய பெருமானாகிய இவன் அல்லனோ!” என்கிறார்.
இதில் வரும் யானைத் தோலை சிவன் போர்த்தியது “ ஆசீவகர்களை கொன்றதன் அடையாளம் என்கிறார், க.நெடுஞ்செழியன். யானை ஆசீவகத்தின் சின்னம்.
தன்னுடைய மூன்றாம் திருமுறையில் 047-3 ம் பாடல் – ஆலவாயில் பாடியது.
மண்ண கத்திலும்
வானிலும் எங்குமாந்
திண்ண கத்திரு
ஆலவா யாயருள்
பெண்ண கத்தெழிற்
சாக்கியப் பேயமண்
தெண்ணர் கற்பழிக்
கத்திரு வுள்ளமே
இப் பூவிலகத்திலும், விண்ணுலகத்திலும் மற்றும் எல்லா இடங்களிலும் உறுதியாய் விளங்கும் ஆலவாயில் வீற்றிருக்கின்ற இறைவனே! பௌத்தர்களும் சமணர்களும் வாதம் புரியும் தன்மையில் அவர்தம் கல்வியைத் தகுதியற்றதாக அழிதல் செய்வதற்குத் திருவுள்ளம் யாது! உரைத்தருள்வாயாக.
இதில் வரும் “கற்பழிக்கத்திரு வுள்ளமே” வெவ்வேறு வகையில் எடுத்துக் கொள்ளலாம். அர்த்தம் எதுவாயினும் இதில் தொணிக்கும் வெறுப்பை உணரலாம்.
அது மட்டுமல்ல இந்த 47ம் பகுதியில் உள்ள 11 பாடல்களுமே அமணர்களைக் கடுமையாகச் சாடுகிறது. நாம் படங்களில் பார்க்கும் சாதுவான ஞானப்பால் குடித்த திருஞானசம்பந்தன் என்ற சிறுவனுக்கும், உண்மையான திருஞான சம்பந்தனுக்கும் சம்பந்தமேயில்லை ( இவர் எழுதிய அத்துனை பாடல்களும் விளக்கத்துடன் இண்டர்நெட்டில் உள்ளன).
அவர் சென்ற ஸ்தலங்களில் பாடிய பாடல்களில் பெரும்பான்மையானவை, சமணர், அமணரோடு செய்யப்போகும் வாதத்தைப் பற்றியும், அதில் தான் வெற்றியடைய வேண்டிய சூட்சுமத்தை அருளுமாறு வேண்டியுமே உள்ளன. அதை வைத்துப் பார்க்கையில் அந்த “அனல் வாதம், புனல் வாதமே “ PREPLANNED DRAMA தான் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.
அத்துடன், பௌத்தர்களையும், அமணர்களையும், சமணர்களையும் சாக்கியர்கள் என்ற வார்த்தையை உபயோகப்படுத்தியும், தீயவர்கள், குண்டர்கள், கொடியவர்கள், மூடர்கள், தீய செயல் பல செய்பவர்கள் என்றும், முட்டாள்தனமான (யோக முறை) தவங்களையும் மேற்கொள்பவர்கள் என்றும் சகட்டு மேனிக்கு ஏசுகிறார்.
ஆனால், அவர் எழுதிய மூன்று திருமுறைகளில் எதிலுமே அந்தத் தீய அல்லது கொடுஞ்செயல்கள் என்னென்ன என்று விவரிக்கவோ, அல்லது குறிப்பை விடவோ மறந்து விட்டார் ( இருந்தால்தானே எழுதுவதற்கு).
காரணம் என்னவென்று ஆராய்ந்தால், அதற்கு விடை பகவதி சூத்திரம், பாலசமண்ண சூத்திரம், லலித விஸ்தாரம், சமவயங்க சுத்த போன்ற பௌத்த, ஜெயின நூல்களில் கிடைக்கிறது.
பௌத்தம், ஜெயினம் மற்றும் ஆசீவகம், வைதீக மதத்தையும், அதில் உள்ள சடங்கு முறைகளையும், வைதீகர்களையும் விலாவரியாக விமர்சிக்கிறது. வைதீக சடங்குகள் அனைத்தையும் ஏமாற்று வேலை என்று ஊர் ஊராகச் சென்று பரப்புரை செய்திருக்கிறார்கள். ஒரு சமூகத்தினருக்கு எதிராக கன்னா பின்னாவென்று வேலை செய்திருக்கின்றனர்.
கௌதம புத்தர் ஞானம் பெற்ற பின்னர் செய்த முதல் பிரசங்கமே “ அஸ்வமேத யாகத்தை” எதிர்த்துத்தான். குதிரையை வைத்து மகாராணியை புணர வைப்பது எவ்வளவு கீழ்த்தரமானது என்று வெளிப்படையாக விமர்சித்திருக்கிறார். ஏதோ ஒரு வேதத்தில் வரும் அந்த பாடல்களையும், அதன் தமிழ் அர்த்தத்தையும் நமது அரசு வெப்சைட்டில் இன்றும் பார்க்கலாம். அதைத் தனியே பதிவிடுகிறேன்.
அதையே ஆசீவகர்களும், ஜெயினர்களும் செய்திருக்கிறார்கள்.
கோபம் வரத்தானே செய்யும் ???
அடுத்து…பெரிய புராணம்….
கழுவேற்றத்தை வெளிப்படையாக முதன் முதலில் வெளியில் சொன்னது சேக்கிழார்ஜி தான்.
பெரிய புராணத்தில் இரண்டாம் காண்டத்தில் திருஞானசம்பந்தர் புராணம் இடம் பெற்றுள்ளது. இதில்தான் கழுவேற்றம் பற்றி விலாவாரியாக எழுதப்பட்டுள்ளது.
இதில் உள்ள அனைத்துப் பாடல்களையும் எழுதி விளக்க வேண்டுமென்றால், நானும் ஒரு பெரியபுராணம் – விளக்கவுரை எழுதினால்தான் சாத்தியம்.
எனவே , சில பாடல்கள் மட்டும் எழுதுகிறேன்.
அனல்வாதம், புனல்வாதம் “Pre planned” Rules & Regulations பற்றி ஞானசம்பந்தர் விளக்கி அதில் தோற்பவர் கழுவேற வேண்டுமென நிபந்தனை வைக்கிறார்.
சூதில் நம்பிக்கை வைக்காமல், விஞ்ஞானத்தில் நம்பிக்கை வைத்த ஆசீவகர்கள் அந்த நிபந்தனையை ஏற்றுக் கொள்கின்றனர்.
இரண்டாம் காண்டம். பாடல்: 798
“…அங்கு அது கேட்டு நின்ற அமணரும் அவர்மேல் சென்று
பொங்கிய வெகுளி கூரப் பொறாமை காரணமே
ஆகத்தங்கள் வாய் சோர்ந்து தாமே தனிவாதில் அழிந்தோம்
ஆகில்வெங்கழு ஏற்றுவான் இவ் வேந்தனே” என்றனர்.
சுருக்கமாக “ We have accepted the challenge” என்றனர்.
முதலில் அனல் வாதம். சமணர் இட்ட ஓலையை தீயில் இட அது எரிந்து விடுகிறது. ஞானசம்பந்தர் இட்ட ஓலையோ எரியாமல் இருக்க, ஞான சம்பந்தர் Won the first Match என்று Announce பண்ணுகிறார்கள்.
அடுத்து, புனல் வாதம் தொடங்கிற்று. “ அஸ்தி நாஸ்தி” என்ற வடமொழி வசனத்தை எழுதிய ஆசீவகர்கள் எழுதிய ஏடு தண்ணீரில் அடித்துச் செல்லப் படுகிறது.
ஞானசம்பந்தர் “ வாழ்க அந்தணர்” என்று தொடங்கும் பதிகத்தை ஏட்டில் எழுதி நீரில் விட அது எதிர் நீச்சல் போட்டு கரை ஏறியது.
ஞான சம்பந்தர் Won the second match also என்று டிக்ளேர் செய்கிறார்கள்.
பாடல் எண்: 853
மன்னவர் மாறன் கண்டு மந்திரியாரை நோக்கித்
துன்னிய வாதில் ஒட்டித் தோற்றஇச் சமணர் தங்கள்
முன்னமே பிள்ளையார்பால் அநுசி தம் முற்றச்செய்தார்
கொல் னுனைக் கழுவில் ஏற முறைசெய்க
போச்சா ???? போச்சா ????
அப்போது கூட, போனால் போகட்டும் என ஞானசம்பந்தர் பெரிய மனது பண்ணி மன்னித்து விடவில்லையாம்.
நான் இருந்த மடத்தையா தீயிட்டீர்கள் , சாவுங்கடா என்றாராம்.
பாடல் எண்: 854
புகலியில் வந்த ஞானப் புங்கவர் அதனைக் கேட்டும்
இகல்இலர் எனினும் சைவர் இருந்துவாழ் மடத்தில் தீங்கு
தகவு இலாச் சமணர் செய்த தன்மையால் சாலும் என்றே
மிகைஇலா வேந்தன் செய்கை விலக்கிடாது இருந்தவேலை
என்கிறார் சேக்கிழார்.
இதில் ஒரு கூத்து என்னவென்றால், அவர் இருந்த மடத்தை தீ வைத்தது மன்னன் நின்றசீர் நெடுமாறன் என்ற கூன்பாண்டியன். அந்த கோபத்தினால்தான் அவனுக்கு வெப்பு நோயை வரச் செய்கிறார் ஞானசம்பந்தர். பின்னர் சாந்தமாகி அவரே, மன்னன் உடலில் திருநீறு பூசி அந்த வெப்பு நோயைப் போக்கி அதையும் பாடுகிறார். ஆனால், அந்த Fire Accident ஐ வைத்துத்தான் சமணர் கழுவேற்றத்தை நியாயப் படுத்தவும் செய்கிறார் சேக்கிழார்.
திரும்பவும் சொல்கிறேன் “ நாம் படங்களில் பார்க்கும் சாதுவான ஞானப்பால் குடித்த திருஞானசம்பந்தன் என்ற சிறுவனுக்கும், உண்மையான திருஞான சம்பந்தனுக்கும் சம்பந்தமேயில்லை “.
இது ஞானசம்பந்தர் இயற்றிய கழுவேற்றம் படலம்.
அப்பர் என்று போற்றப்படும் திருநாவுக்கரசரும் சாதாரணமான ஆளில்லை.
அவருக்கு வயிற்று வலி (சூலை நோய்) வரும்போது சைவமும் கை விட்டு விட, சமணமும் கை விட்டு விட, ஆசீவகர்களே கை கொடுத்து தங்கள் பாளியில் வைத்து வைத்தியம் செய்து குணப்படுத்தினர் என்கிறார் அப்பர் பெருமான்.
ஆனால், அவரே பின்னாளில் யானைகளை வைத்து 1000 ஆசீவகர்களை தலை இடறச் செய்தார் என்ற செய்தியும் பெரிய புராணத்தில் வருகிறது (முன்பே சொன்ன நேரமின்மை காரணமாக அந்தப் பாடல்களை இங்கு பதியவில்லை. நேரம் கிடைத்தால் பின்னர் எழுதுகிறேன்).
ஆன்மீகத்தைத் தோண்டத் தொடங்கினால், லிங்கம் மட்டுமல்ல, பௌத்தர்களின் உடல்களும், ஜெயினர்களின் உடல்களும், ஆசீவகர்களின் உடல்களும் சேர்ந்தே வரும். தோண்டுவோமா ?
நாம் இன்று வழிபடும் பழம்பெரும் கோவில்களில் பெரும்பாலானவை பௌத்த, ஆசீவக, ஜெயின மதங்களைச் சார்ந்தவைதான்.
திருப்பரங்குன்றம், அழகர் கோயில், நார்த்தாமலை, காஞ்சி கைலாச நாதர் போன்றவை சில உதாரணங்களே.
எனவே சும்மா சும்மா கஜினி முகமதுவையும், ஔரங்கசீப்பையும் பழித்துக் கொண்டிருக்காமல், நம்ம புள்ள குட்டிகளைப் படிக்க வைக்கலாம். பொழப்பு, தழப்பைப் பார்க்கலாம்.
வெ.பாலமுரளி
பி.கு: மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள கழுவேற்றப் படங்களை இங்கு பதிவிடுகிறேன். சித்திரைத் திருவிழாவில், ஒரு நாள் கழுவேற்றம் பற்றியது. இன்றும் நாம் பார்க்கலாம். எனவே இனிமேல் இதுபற்றி சந்தேகம் எழுப்ப வேண்டாமே……

