புத்தனைத் தேடி ……..
நாம் பள்ளியில் படிக்கும் போது, வருடா வருடம் இரண்டு கேள்விகள் திரும்பத் திரும்ப வரும். நாமும் படிக்காமலேயே போய் சுளையாக 3, 3 மார்க்குகள் வாங்கி வந்து விடுவோம்.
ஒன்று அசோகர் மரம் நட்டு, குளம் வெட்டியது. இரண்டாவது, யுவான் சுவாங்கின் பயணக் குறிப்பு.
ஆம், அசோகர், யுவான் சுவாங் இருவருமே நம் வாழ்க்கையை 3 மார்க் கேள்விகளாகவே கடந்து விட்டனர். நாமும் அதற்கு மேல் அவர்களைப் பற்றி கற்றுக் கொள்ள நினைக்கவில்லை. நம்முடைய பாடத் திட்ட முறையும் நம்மைக் கற்றுக் கொள்ள விடவில்லை. பாடத்தில் இல்லாத ஒன்றைக் கேட்டால், “ அதிகப் பிரசங்கி . உட்காருடா” என்று சொல்லும் ஆசிரியர்களே அப்போது அதிகம் (இப்போது எப்படி என்று தெரியவில்லை) .
யுவான் சுன்வாங்கின் சரியான உச்சரிப்பு “ ஷுவான் த்ஸாங்” என்பதேயாகும் . நான் ஒரு முறை சைனா போயிருந்த போது “ யுவான் சுவாங்” பற்றி விசாரிக்க, யாருக்குமே ஒன்றும் தெரியவில்லை. அப்போதுதான் தெரிந்தது, நாம்தான் அவர் பெயரைத் தவறாக உச்சரித்துக் கொண்டிருக்கிறோம் என்று.
குழப்பத்தைத் தவிர்க்க, நாம் “யுவான் சுவாங்” என்றே அழைப்போம்.
இன்று Flight, GPS, Bullet Train, Ultra Modern Bus, Highly Sophisticated Cars என்று சகல வசதிகளும் வந்து விட்டன ( இருந்தாலும், தீவிரவாதிகளின் புண்ணியத்தில் நாம் அவ்வளவு எளிதாக பயணித்து விட முடிவதில்லை என்பது வேறு விஷயம்).
ஆனால், ஏறத்தாழ 1385 ஆண்டுகளுக்கு முன்னால், இவை எதுவுமே இல்லாமல் கிட்டத்தட்ட 20 ,000 ஆயிரம் மைல்களை நடந்தும், கோவேரிக் கழுதைகள், குதிரைகள் மற்றும் ஒட்டகங்கள் மூலமாகப் பயணித்திருக்கிறார் என்பதை நினைத்துப் பார்த்தாலே உடம்பு சில்லிடுகிறது.
அவர் இந்தியா வந்து சென்றதற்காக செலவிட்டது 17 ஆண்டுகள் என்பது இன்னொரு பிரமிப்பான விஷயம். இது அவருடைய வாழ்நாளில் மூன்றில் ஒரு பகுதி.
யுவான் சுவாங் தன்னுடைய 12 ஆவது வயதிலேயே புத்தத் துறவியாகி விடடார். பாலி மொழியிலும், சமஸ்கிருத மொழியிலும் இருந்த பௌத்த மத ஏடுகளை மொழி பெயர்ப்பதே அவர் போன்ற துறவிகளுக்கு வேலை. இதற்காகவே அவர் சமஸ்கிருத மொழியும் கற்றுக் கொண்டார். இதற்காக அவர் செலவிட்டது 4 வருடங்கள். செம டெடிகேஷன்.
கி.பி. 629 இல் ஒரு நாள் தூங்கிக் கொண்டிருக்கும்போது, அவருக்கு ஒரு கனவு, புத்தர் ஞானம் பெற்ற போதி மரத்திற்கு அருகில் தானும் உடகார்ந்து தியானம் செய்வது போல். அப்போதே முடிவு செய்து விட்டார் தான் இந்தியா போக வேண்டும் என்று.
தான் நினைத்தது போல் அது ஒன்றும் அவ்வளவு ஈஸியான டாஸ்க்காக இருக்கவில்லை. முதலில் அவருடைய மடாதிபதியிடமிருந்து அவருக்கு அனுமதி கிடைக்கவில்லை. கெஞ்சிக் கூத்தாடி அவரைச் சம்மதிக்க வைத்த பிறகு அவருடைய மன்னனிடமிருந்து ரெட் சிக்னல் வந்தது. அப்போது சீனாவிற்கும் ஒரு துருக்கிய மன்னனுக்கும் போர் நடந்து கொண்டிருந்தது. அப்போதெல்லாம் சீனா மங்கோலியா, துருக்கி என்று நிறைய நாடுகளிடமிருந்து, சும்மா டைம் பாஸுக்காகவெல்லாம் அடி வாங்கிக் கொண்டிருந்தது.
அவரின் கண்ணில் மண்ணைத் தூவி விட்டு இவர் ஜம்மென்று கிளம்பி விட்டார். புத்தன் பிறந்த இந்தியாவை எப்படியாவது பார்த்து விட வேண்டுமென்ற வெறி.எல்லையில் மடக்கப்பட்டார். அவரை அருகில் உள்ள மடத்தில் சேர்த்து விட ஆணையிட்ட படைத் தளபதியிடம், தன்னை அனுமதிக்காவிட்டால் தான் அங்கேயே பட்டினி கிடந்தது தற்கொலை செய்து கொல்லப் போவதாக மிரட்டினார். “உள்ள பிரச்சினை போதாதென்று, இது வேறயா?” என்று சளித்துக் கொண்ட தளபதி, ” போயா. போய்த் தொலை ” என்று அனுமதி கொடுக்க , ” அது…” என்று பெருமிதத்துடன் கிளம்பி விட்டார் நம்ம தலைவர்.
தெளிவான வரை படங்கள் என்றும் எதுவும் இல்லாததால் , ஒரு குத்து மதிப்பாக தெற்குத் திசையை இலக்காக வைத்து கிளம்பி விட்டார்.
அப்போதெல்லாம் மழைக் காலங்களில் ஒரு ஆற்றைக் கடக்க மாதக் கணகில் காத்திருக்க வேண்டும். வெள்ளம் கரை புரண்டு ஓடியது. காத்திருந்தார். அவ்வப்போது உடல் வேறு படுத்தியது . பொறுத்துக் கொண்டார் ( வேறு வழி ?). பற்றாக் குறைக்கு கள்வர்கள் வேறு, அவரிடமிருந்த பணம் , உணவு எல்லாவற்றையும் பறித்துக் கொண்டு பரிதவிக்க விட்டார்கள்.
அதையும் சமாளித்தார். நிறைய நேரங்களில், பசிக்கும் போது உணவு கைவசம் இருப்பதில்லை. புத்தன் பிறந்த இடத்தைத் தரிசிக்க இது கூட கஷ்டப் படாவிட்டால் எப்படி என்று பொறுத்துக் கொண்டார்.
அவரால் சமாளிக்க முடியாத பிரச்சினை ஒன்றும் வந்தது. அதுதான் கோபி பாலைவனம். உள்ளே நுழைந்து விட்ட அவருக்கு , வெளியில் வர முடியவில்லை. கோபி பாலைவனம் அவரை மாதக் கணக்கில் தனக்குள் சுற்ற வைத்தது. ஒரு சமயத்தில் கைவசம் தண்ணீர், உணவு இரண்டுமே தீர்ந்து போயிருந்தது. எந்த நேரம் வேண்டுமானாலும் தான் மயங்கி விழுந்து விடக் கூடும் என்ற நிலை. மயங்குவதற்கு முன்னால் தன்னை குதிரையோடு கட்டி வைத்துக் கொண்டார். கண்ணில் பூச்சி சுற்ற, ஒரு ராகு காலத்தில் மயங்கியும் விட்டார்.
விழித்து எழும்போது இரண்டு நாட்களாகி விட்டிருந்தன. தன் குதிரை சமர்த்தாக அங்கிருந்த ஒரு பாலைவனச் சோலையில் ஒரு தண்ணீர் ஊற்றுக்கு அருகில் தன் எஜமானனை சேஃபா பார்க் பண்ணியிருந்தது. சுற்றி ஈச்ச மரங்கள் வேறு. புத்தரின் கருணையை என்னவென்று சொல்வது என்று யுவான் சுவாங் பூரித்துப் போய் விட்டார். வேண்டுமளவு ஓய்வெடுத்து விட்டு, மறுபடியும் பயணம்.
பாலைவனத்தை விட்டு ஒரு வழியாக வெளியில் வர, ஒரு நாடும் எதிர்பட்டது. அந்த நாட்டு மன்ன்னைப் போய் சந்திக்க அவனுக்கு நம்ம யுவானை ரொம்பப் பிடித்துப் போய் விட்டது . தன் அருகிலேயே கொஞ்ச நாள் வைத்து அழகு பார்த்து விட்டு மனசே இல்லாமல், அவருடைய பயணத்தைத் தொடர அனுமதித்தான்.
இதுபோல இன்னும் ஏராளமான இன்னல்களைச் சந்தித்த பின்னர், ஒருவழியாக இந்தியா வந்து சேர்ந்தார். பயங்கர சந்தோஷம். காஷ்மீரம், பாடலிபுத்திரம் , அயோத்தி, வைசாலி, கனோஜ் போன்ற முக்கிய நகரங்களுக்குச் சென்று பௌத்தம் பற்றி ஆராய்ச்சி செய்தார்.
பிறகு, நாளந்தா சென்ற அவர் பிரமிப்பிலும் அதிர்ச்சியிலும் அப்படியே உறைந்து விட்டார். அப்போதே 1500 ஆசிரியர்களால் 10,000 மாணவர்களுக்குக் கல்வி புகட்டப் பட்டது. மிகவும் தேர்ந்த பாடத் திட்டங்கள் ( கிட்டத்தட்ட 18 பாடப் பிரிவுகள்), ஒழுங்கு படுத்தப்பட்ட தேர்வு முறைகள் என்று நாளந்தாவைப் பற்றி வியக்கிறார் (ஆனால் அப்போது ‘நீட்’ தேர்வு இருந்ததா என்பது குறிப்பு எழுத மறந்து விட்டார் ). ஆக மொத்தத்தில், தான் பட்ட கஷ்டங்கள் வீண் போகவில்லை என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
பின்னர், புத்தர் பிறந்த லும்பினி, அவர் மெய் ஞானம் பெற்ற புத்த கயா என்று அனைத்து பௌத்த ஸ்தலங்கலுக்கும் சென்று விரிவாகக் குறிப்புகள் எழுதினார்.
தமிழகத்திற்கும் வருகை தந்தார். காஞ்சிபுரத்தில் இருந்த பல்கலைக் கழகத்தில் சிறப்புரை ஆற்றி அதைப் பற்றியும், அப்போது தமிழகத்தில் இருந்த வாழ்க்கை முறைகள் பற்றியும் கூட விரிவான குறிப்புகள் பதிவு செய்திருக்கிறார். அப்போது இங்கு நரசிம்மவர்ம பல்லவனின் ஆட்சி. அவனையும் சந்தித்திருக்கிறார்.
அங்கிருந்து இலங்கைக்கும் சென்று ஒரு சில ஆராய்ச்சிகள் செய்திருக்கிறார். எல்லாம் முடிந்து சீனாவுக்குத் திரும்பும்போது 17 வருடங்கள் முடிந்திருந்தன. அவருடைய ரிட்டர்ன் ஜர்னி இன்னும் மோசமாக இருந்திருக்கிறது. அது பற்றி எழுத இன்னுமொரு கட்டுரை வேண்டும், அந்த அளவிற்கு இன்னல்கள்.
இந்தியாவிலிருந்து ஏராளமான பௌத்த மத சூத்திரங்கள், தர்க்க சாஸ்திரத்தின் 192 தொகுதிகள் என்று 20 குதிரைகளில் கல்விச் செல்வங்களை எடுத்துச் சென்றிருக்கிறார் ( எல்லாம் முறையாக அனுமதிக்கப்பட்ட பிரதிகளே. அவர் எதையும் “சுட்டு” விட்டுப் போகவில்லை).
சீனா சென்று மற்ற பௌத்த மதத் துறவிகளுடன் இணைந்து தான் கொண்டு சென்ற அனைத்து நூல்களையும் மொழி பெயர்த்திருக்கிறார்.
664 ம் ஆண்டு மார்ச் 10 ம் தேதி இரவு தூங்கச் சென்றவர் எழுந்திருக்கவில்லை.
நாடுகளைப் பிடிப்பதற்காகவும் , மதங்களைப் பரப்புதற்காகவும் தேசம் தேசமாக அலைந்த யாத்ரீகர்களுக்கு மத்தியில், அறிவை வார்த்துக் கொள்வதற்காக அலைந்த யுவான் சுவாங், சரித்திரத்தில் என்றென்றும் ஒரு தனி நட்சத்திரமாக ஜொலிப்பார்.
அவர் மாதிரி தானும் ஊர் சுற்றுகிறேன் பேர்வழி என்று சைனாவுக்கு ( ஃபிளைட்டில் சொகுசாக பிசினஸ் கிளாசில்) போய் இறங்கி நிமோனியாவால் பாதிக்கப்பட்டு கிட்டத்தட்ட 1 மாதம் ஆஸ்பத்திரியில் இருந்து செத்துப் பிழைத்த ஒரு பிரகஸ்பதியை எனக்குத் தெரியும்.
வெ.பாலமுரளி
இந்தக் கட்டுரை எழுத ஆதாரங்கள் :
எஸ் ராமகிருஷ்ணனின் ‘மறைக்கப்பட்ட இந்தியா’
பொன் . சின்னத்தம்பி முருகேசன் எழுதிய ‘யுவான் சுவாங் இந்திய பயணம்’
அசோகன் முத்துசாமி எழுதிய ‘போதியின் நிழலில்’
விக்கிப் பீடியா