‘பிறன் மனை நோக்கா’ என்று வள்ளுவர் சொல்லியிருக்கிறார்.

ஆனால், அதைப்பற்றியெல்லாம் கவலையே படாமல், நம்மில் எல்லோருமே ஒரு நாளைக்கு 100 முறையாவது கூச்சமே படாமல் அடுத்தவன் மனைவியின் பெயரை ஆசையுடன் உச்சரித்துக் கொண்டேயிருக்கிறோம். 

ஹலோ…நான் சொல்வது என்னன்னு புரியுதா ?

அதாங்க…..’ஹலோ’.

ஹலோ என்பது டெலிஃபோனைக் கண்டு பிடித்த கிரஹாம் பெல்லின் மனைவியின் ஆசைப் பெயர் . 

பெல், தான் செய்யும் அனைத்து விஷயங்களையும் தன் மனைவியிடம் சொல்லி விடும் ஒரு அப்பாவி ( என்னைய மாதிரி கோஷ்டி போலிருக்கு ).

அதேமாதிரி, தான் டெலிஃபோனைக் கண்டுபிடித்தவுடனேயே தன்னுடைய உள்துறை அமைச்சருக்கு ஃபோன் பண்ணி விட்டார்.

” ஹலோ…நான் கண்டு பிடித்த பிடித்த டெலிஃபோன் வேலை செய்ய ஆரம்பித்து விட்டது. நான் பேசுவது கேட்கிறதா ?” என்றார் ஆர்வத்துடன்.

” கேக்குது …கேக்குது. அத விட்டுட்டு, வரும்போது 1/2 கிலோ கத்திரிக்காயும், 1/4 கிலோ வெண்டைக்காயும் வாங்கிட்டு வாங்க. வெண்டைக்காயை நுனியை உடைச்சு பார்த்து வாங்கணும் தெரியும்ல. ஒரு மண்ணும் தெரியாது” என்று சொல்லி விட்டு ஃபோனை பட்டென்று வைத்து விட்டார். 

பெல் உதவியாளருக்கு வெண்டைக்காய் சமாச்சாரம் பற்றி சரியாகக் கேட்கவில்லை என்று தெரிகிறது . ஆனால், அவர் ஹலோ என்று ஆரம்பித்து பேசியது நன்றாகக் கேட்டது. அப்படித்தான் இந்த ‘ஹலோ’ சமாச்சாரம் ஆரம்பித்தது. 

நான் இந்தக் கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும்போது, என்னுடைய ‘ஹலோ’ விடமிருந்து ஃபோன், ” அங்கே என்ன சத்தம்” என்று. 

“ஒண்ணுமில்லம்மா. சும்மா ஃபிரெண்டுகிட்ட பேசிக்கிட்டு இருந்தேன் …..” 

“அதானே பார்த்தேன்” …டொக். 

ஹலோ…ஹலோ….

வெ.பாலமுரளி 

பின் குறிப்பு: மேற்சொன்ன எல்லா விஷயமுமே மக்கள் ரொம்ப நாளாக நம்பிக் கொண்டிருக்கும் ஒரு கட்டுக் கதை. பெல்லின் மனைவி பெயர் Mabel Gardiner Hubbard. ஹலோ எல்லாம் கிடையாது. அதே போல், அவர் முதலில் பேசியது, அடுத்த அறையில் இருக்கும் தன் உதவியாளருக்கு ஃபோன் பண்ணி ” Come here. I want to see you” என்பதுதான். 

அதே போல் அவர், எடுத்தவுடன் மக்கள் Ahoy என்றுதான் ஆரம்பிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறார். அந்த வார்த்தை அந்தக் காலத்தில் கப்பல்களில் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கப் பயன்படுத்தியிருக்கிறார்கள். Hallo என்றாலும் அதே meaning தான். Stop & Pay attention.