வேர்களைத் தேடி – 6 

ஆலம்பாடி அற்புதங்கள்….

நான் அடிக்கடி சொல்வது போல, ஒவ்வொரு பாறை ஓவிய இடமும் ஒவ்வொரு வரலாற்று பொக்கிஷமாகும்.

இங்கு வாழ்ந்த தொல்மாந்தர்கள் ஏதோ ஒரு காரணத்துக்காக தங்கள் எண்ண ஓட்டங்களை பதிவு செய்தவையே இந்தப் பாறை ஓவியங்கள். 

அது தங்கள் குழுவுக்குள்ளேயே தொடர்பு கொள்ள இருந்திருக்கலாம். அல்லது பின்னால் வரும் அடுத்த குழுவினருக்கு தரப்படும் டிப்ஸாக இருக்கலாம். இப்படி வரைந்தால் தங்களுடைய அடுத்த வேட்டை சிறப்பாக நடக்கும் என்ற நம்பிக்கையாக இருக்கலாம். அதீத சக்தி, அடுத்த ஜென்மம் போன்றவற்றோடு தொடர்புடையதாக இருக்கலாம். தங்கள் சமூகம் இப்படி இருந்தது என்று பின்னால் வரும் சந்ததியினருக்கு விட்டுப் போன வரலாற்று ஆவணமாக இருக்கலாம். பின்னாளில் குறியீடுகள் வந்த பிறகு தாங்கள் சொல்ல வந்ததை தொடர் வாக்கியமாக எழுதிய குறிப்புகளாக இருக்கலாம். அதாவது கல்வெட்டுக்களின் முந்தைய நிலை. வானிலை, மருத்துவம் போன்ற அறிவியல் சார்ந்த சோதனைகளாக இருக்கலாம். இது எதுவாகவும் இல்லாமல் வேறு காரணமாகக் கூட இருந்திருக்கலாம். ஆனால், எது எப்படியிருந்தாலும், அவர்களை, அவர்களுடைய அறிவு நிலையை குறைத்து மட்டும் மதிப்பிட்டு விடக் கூடாது என்பதே நான் கற்றுக் கொண்ட பாடம். 

அந்தப் பாடத்தை சுத்தியல் வைத்து பொட்டில் அடித்தாற்போல் சொல்லிக் கொடுத்த இரண்டாவது இடம் ஆலம்பாடி ( முதல் இடம்: உசிலம்பட்டிக்கு அருகில் உள்ள புலிப் பொடவு). 

ஆலம்பாடி என்னும் கிராமம் விழுப்புரத்திலிருந்து 27 கி.மீ. தூரத்தில் திருக்கோவிலூர் செல்லும் வழியில் உள்ளது. 

இங்கு இரண்டு பாறைகளுக்கிடையில் செஞ்சாந்து நிறத்தில் பூச்சிகள், பிராணிகள், வீட்டு விலங்குகளின் அனாட்டமி பற்றிய ஒரு பெரிய வகுப்பே நடந்திருப்பது போல் தெரிகிறது.

பல்லி, பாம்பு, உடும்பு, மாடு, ஆடு, மான் போன்ற பிராணிகளை அங்கு வைத்தே உடற்கூறு பகுப்பாய்வு ( Dissection study ) பண்ணும் பயாலஜி லேபரட்டரி போல் அந்த இடம் இருந்திருக்க வேண்டும்.

அவற்றின் உடல் பாகங்களை அங்குள்ள பாறையில் வரைந்து மாணவர்களுக்கு சொல்லிக் கொடுத்தது போல் தெரிகிறது.

அந்தப் பாறையின் கீழே 50 மாணவர்கள் வரை உட்காரும் வசதியும் இருக்கிறது. அதை வைத்தே இங்கு ஒரு “அறிவர் பள்ளி “  நடந்திருக்க வேண்டும் என்று சொல்கிறேன் ( என்னைக் கூட்டிச் சென்ற பாலபாரதி சாரும் இதே கருத்தைத்தான் கூறினார்). 

இது எங்களது Guess தான். உண்மை வேறாகவும் இருக்கலாம். 

அங்கு எடுத்த படங்களை இங்கு பதிவிடுகிறேன். நீங்களும் எங்கள் கருத்துடன் ஒத்துக் கொள்வீர்கள். 

இந்த ஓவியங்கள் செஞ்சாந்து நிறத்தில், மெலிதாகவும் இல்லாமல், பெரிய பட்டையாகவும் இல்லாமல், மீடியம் சைஸில் இருக்கின்றன.

கண்டிப்பாக காலத்தால் பழமையானவை என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது ( குறைந்தபட்சம் 3000 அல்லது 4000 வருடங்கள் பழைமையானவையாக இருக்கலாம். பெருங்கற்காலம்). 

இதே இடத்தில் பின்னாளில் வரைந்த சில வெண்சாந்து குறியீடுகளும் உள்ளன. வழக்கம்போல், என்னை என்ன என்று கண்டு பிடி பார்க்கலாம் என சவால் விடுகிறது.

பாறைஓவியம் உள்ள இடங்கள் எல்லாவற்றிலும் தேனீக்கள், பாம்பு, ரத்த அட்டை என்று ஏதேனும் சில சவால்கள் நம்மை எதிர்கொள்ளும்.

இங்கு இரண்டு சவால்கள்.

ஒன்று எசக்கு பிசக்கான வழுக்குப் பாறை. 

இரண்டு Black Beetle எனப்படும் கதண்டு வண்டு. இதை வண்டு என்று சொன்னாலும் இது ஒரு குளவி இனம்தான். ஆனால், இதன் கொடுக்கு குளவிக்கு உள்ளது போல் அவ்வளவு எளிதில் உடையாது. 

கடுமையான விஷமுடையது. கதண்டு கடித்து இறந்தவர் பலர். 

இங்குள்ள பாறையின் அடிப்புறத்தில் ஒரு பெரிய கதண்டு கூடு ஒன்று உள்ளது. சத்தம் போடாமல் இந்த இடத்திற்கு சென்று வருவது நல்லது. அவை கலைந்தால் நம் உயிர் நம் வசமிருக்காது. ஜாக்கிரதை நண்பர்களே. 

வேர்களைத் தேடும் எங்களது பயணம் தொடரும்.

வெ. பாலமுரளி 

நன்றிகள் : இந்த இடத்தைப் பற்றி எனக்கு விளக்கிச் சொல்லி என்னை இங்கு அழைத்துச் சென்ற எனது பாறை ஓவிய ஆசான் பாலாபாரதி அவர்கள்.