வேர்களைத் தேடி – 4 : கொங்கர் புளியங்குளம் ஒரு வரலாற்று பொக்கிஷம்

மதுரையிலிருந்து தேனி செல்லும் சாலையில், மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்திலிருந்து 6 கி.மீ. தொலைவில் இருக்கும் ஒரு சிற்றூர்தான் K. புளியங்குளம் என்றழைக்கப்படும் கொங்கர் புளியங்குளம். 

இங்கு 2200 வருடங்கள் பழைமையான ஐம்பதிற்கும் மேற்பட்ட கற்படுக்கைகளும், மூன்று தமிழிக் கல்வெட்டுக்களும் உள்ளன. அதன் வாசகங்கள் :

  1. குற கொடுபிதவன் உபசஅன் உபறுவன்
  2. குறு கொடல்கு ஈத்தவன் செற்அதன்ஓன்
  3. பாகன் ஊர் பேர தன்பிடன் இத்த வெபோன்

இவை இந்த கற்படுக்கைகளை செய்து கொடுத்தவர்களைப் பற்றி குறிப்பிடுகின்றன. இதில் சிறப்பு அம்சம், ஒவ்வொரு வாக்கியத்தின் இறுதியிலும் வரும் சில குறியீடுகள் (இதன் படங்கள் இணைக்கப்பட்டுள்ளன). இதே குறியீடுகள் சங்க கால நாணயங்கள் சிலவற்றிலும், கொடுமணலில் கிடைத்த பழங்கால பானை ஓடுகளிலும், சிந்துவெளியிலும்,இலங்கை ஆனைக் கோட்டை நாணயங்கள் சிலவற்றிலும், அழகன்குளத்தில் கிடைத்த  பகடைக் காய்களிலும் காணப்படுகின்றன. 

அனேகமாக இந்தக் குறியீடுகள், இந்தக் கற்படுக்கைகள் செய்து கொடுப்பதற்கு ஆன அந்தக் கால பண மதிப்பைக் குறிப்பதாக இருக்கலாம் என்று நம் தொல்லியல் துறை பதிவு செய்து வைத்துள்ளது. 

இதே இடத்தில் சில வெண்சாந்து பாறை ஓவியங்களும் இருக்கும் விஷயம் நம்மில் பலர் அறியாதது.

மதுரையைச் சுற்றி இருக்கும் அற்புதமான வரலாற்று இடங்களில் கொங்கர் புளியங்குளம் ரொம்பவே ஸ்பெஷல்.

இங்குள்ள பெருமாள் கோயில் மலைக்கு செல்லும் வழியில் உள்ள மாயாண்டி கோயிலின் உட்புறம் மிகவும் அழிந்த நிலையில் ஒரு செஞ்சாந்து ஓவியமும், உருவம் கண்டுபிடிக்க இயலாத ஒரு பாறைக் கீறலும் உள்ளன. இந்த வெண்சாந்து ஓவியம் கருஞ்சிவப்பு நிறத்தில் உள்ளது. இது கண்டிப்பாக 10,000 வருடப் பழைமையானதாக இருக்க வேண்டும் ( அதற்கும் அதிகமாக இருக்கவும் வாய்ப்புகள் உள்ளன). பாறைக் கீறலும் மிகப் பழமை வாய்ந்ததாக உள்ளது. 

இங்குள்ள பெருமாள் கோயில் மலையின் பாதி உயரத்தில் உள்ள தமிழிக் கல்வெட்டுகளுக்கு இடது புறம், நிறைய வெண்சாந்து ஓவியங்கள் உள்ளன. இதில் சிந்துவெளியில் உள்ளது போன்ற சில குறியீடுகளும், மற்ற இடங்களில் உள்ள வெண்சாந்து ஓவியங்கள் போலவே இங்கும் முக்கொம்பு ஓவியமும், தலையில் இரண்டு கொம்பு போன்ற ஒரு உருவமும், ஒரு பெண் பிரசிவிக்கும் ஓவியமும், “முடிவில்லாத” என்பதைக் குறிக்கும் கோலம் போன்ற ஒரு ஓவியமும்,சில வானவியல் குறியீடுகளும் இங்கு மிகப் பெரிய ஆய்வு நடத்த வேண்டிய அவசியத்தை நமக்கு உணர்த்துகின்றன. 

இந்த ஓவியம் இருக்கும் இடத்தில் இருந்து இடது புறம் ஒரு இருபதடி தூரத்தில் கி.பி. பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு தீர்த்தங்கரரின் புடைப்புச் சிற்பமும் உள்ளது. 

இவ்வளவு வரலாற்றுப் பொக்கிஷங்கள் குவிந்திருக்கும் இந்த இடத்திற்குச் செல்லும் வழி புதர்கள் நிறைந்து மிகவும் பரிதாபமாகக் காட்சியளிக்கின்றது. கொஞ்சம் சிரமப்பட்டுத்தான் இந்த மலைக்குச் செல்ல வேண்டியிருக்கிறது. 

நமது அரசாங்கம் உடனே தலையிட்டு இந்த வழியை ஒழுங்கு படுத்தி, இந்த ஓவியங்கள் பற்றி ஆராய்ச்சிகள் மெற்கொண்டால், அது நமது தமிழ்நாட்டின் தொன்மையை உலகறியச் செய்ய உதவும்.

வெ. பாலமுரளி