வேர்களைத் தேடி – 11

காளையார்கோவிலில் அறிவர்கள்….

முதலில் பெருங்கற்காலப் பண்பாடு பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். 

ஏறத்தாழ 8000 வருடங்களுக்கு முன்னர் வட ஆப்பிரிக்காவில் ஆரம்பித்து மத்தியதரைக்கடல் பகுதி,வளைகுடாப்பகுதி, ஐரோப்பா என்று உலகின் சில பகுதிகளில் ஒரு வித்தியாசமான பண்பாடு பரவியது. 

தங்களுக்கு வேண்டியவர்களை மற்றும் ஊரில் உள்ள பெருந்தலைக் கட்டுக்களை இறந்தவுடன் புதைத்து, அவர்கள் நினைவாக அந்த இடத்தைச் சுற்றி பெரிய பெரிய கற்களை நட்டு வைப்பதுதான் அந்தப் பண்பாடு. இதிலும் அந்தஸ்தை வைத்து ( அது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை), தங்களிடம் இருக்கும் பண வசதியைப் பொறுத்து வெவ்வேறு  வகைகளில் அந்த கற்களின் அமைப்பை ஏற்படுத்தினர். 

குத்துக்கல், கல்வட்டம், கற்குவியல், கல்திட்டை, கல்பதுக்கை என்று இன்னும் சில. 

அந்த பண்பாட்டு மக்கள் தேர்ந்தெடுத்த இடங்கள் பெரும்பாலும் மேடான பகுதியாகவே இருந்துள்ளன. தாழ்வான இடத்தைத் தேர்வு செய்தால், தண்ணீர் அந்த நினைவுச் சின்னங்களை மூழ்கடித்து விடக் கூடும் என்பது ஒரு முக்கியமான காரணமாக இருந்திருக்க வேண்டும். 

அந்த காலகட்டத்தில் கடல் பயணங்களை மேற்கொள்ளவும், விவசாயத்தில்  ஒரு ஒழுங்கு முறையைக் கொண்டு வரவும்,இயற்கையின் விளையாட்டை அறிந்து கொள்ள வேண்டிய அவசியம் அவனுக்கு வந்து விட்டது. அதன் காரணமாக அவன் ஆரம்பித்த விஷயமே “ வானியல் ஆய்வு”. 

அந்த ஆய்வுக்கு மேடான பகுதிகள் தேவைப்பட்டன. அதற்கு முன்னரே அவன் பங்காளிகள் நீத்தார் நினைவுச் சின்னம் அமைப்பதற்காக கஷ்டப்பட்டு தேடி சில மேடான பகுதிகளைத் தேர்வு செய்து கற்களை அடுக்கி விட்டதால் Why to reinvent the wheel என்று யோசித்து  தங்கள் வானிலை ஆய்வுக்கும் அதே இடங்களைப் பயன்படுத்தத் தொடங்கி விட்டான் ( அப்போதே மனிதன் தன்னுடைய குசும்பு வேலையைத் தொடங்கி விட்டான் போலிருக்கு. “கருப்பன் மகா குசும்புக்காரன்”) . 

இது போன்ற பெருங்கற்காலச் சின்னங்களில் வானிலை ஆய்வு மையம் அல்லது வானிலை கண்காணிப்பு மையம் உலகில் நிறைய இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 

இந்த பெருங்கற்காலப் பண்பாடு இந்தியாவிற்கு வந்தது – ஏறத்தாழ 4000 அல்லது 5000 ஆண்டுகளுக்கு முன்னால்.

அப்படிப்பட்ட ஒரு இடத்தைத்தான் காளையார்கோவிலில் ரமேஷ் என்ற ஒரு நண்பர் கண்டுபிடித்து ஆவணப்படுத்தியுள்ளார். தொல்லியல் ஆர்வலரான இவர் ஒரு புகைப்படக் கலைஞரும் கூட. 

இந்த இடத்தைக் கண்டுபிடித்த நாளிலிருந்து இவர் வீட்டிற்கு செல்லும் நேரம் குறைந்து விட்டது என்று நினைக்கிறேன். எப்போதும் ரமேஷை இந்த இடத்தில் நீங்கள் சந்திக்கலாம்.  

இந்த இடத்தைக் கண்டுபிடித்தவுடன், இங்குள்ள கற்களின் வித்தியாசமான அமைப்புகளை வைத்து இது ஏதோ வானவியல் ஆய்வு மையம் என்று உணர்ந்து, நண்பர் பாலா பாரதியை உதவிக்கு அழைக்க , அவர் உடனே அந்த இடத்திற்குச் சென்று அதை உறுதிப்படுத்தியிருக்கிறார். 

அதற்குப் பிறகு நண்பர் பாலா பாரதியுடன் சேர்ந்து நானும் இரண்டு முறை சென்று அந்த இடத்தை பார்வையிட்டு புகைப்படங்களும் வீடியோக்களும் எடுத்து வந்தேன். 

இனி அந்த இடத்தைப் பற்றிய என் புரிதலை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இதில் தவறுகள் இருந்தால் பாலா பாரதி சார் மன்னிக்கவும் ( இதைப் படித்து முடித்தவுடன் பாலா பாரதி சாரின் மைண்ட் வாய்ஸ் “ விடிய விடிய கதை கேட்டு சீதைக்கு ராமன் சின்ன அங்கிள் என்றானாம்” ). 

சரி…விஷயத்திற்கு வருவோம்….( என்ன்ன….இன்னும் விஷயத்திற்கு வரலையா ? வெளங்குச்சு ). 

நாம் நினைப்பது போல் சூரியன் தினமும் சரியாக கிழக்குத் திசையில் உதிப்பதில்லை ( “ என்ன்னய்ய்ய்யா சொல்ற ?” சாலமன் பாப்பையா வாய்ஸில் படிக்கவும்). 

ஆம். வருடத்தில் இரண்டே இரண்டு நாட்கள் மட்டும்தான் சூரியன் சரியாக கிழக்குத் திசையில் உதிக்கும். நாம் “பூமத்திய ரேகையில் இருந்து கண்காணித்தால்” மார்ச் 21 மற்றும் செப்டம்பர் 21 இல் மட்டும்தான் சூரியன் மிகச் சரியாக கிழக்குத் திசையில் உதிக்கும். 

அப்ப மற்ற நாட்களில் ????

மார்ச் 21 முதல் ஜூன் 21 வரை கிழக்கில் இருந்து ஒவ்வொரு நாளும் நகர்ந்து வட திசையை நோக்கி பயணிக்கும் ( அதாவது சூரியன் அப்படி நகர்வதில்லை. பூமிதான் நகர்கிறது. நாம முள்ளின் மீது காலை வைத்து விட்டு முள்ளு குத்திருச்சுன்னு சொல்லுவோம்ல. அது மாதிரி). பிறகு ஜூன் 21 முதல் செப்டம்பர் 21 வரை வடக்கிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து கிழக்கு நோக்கி பயணித்து செப் 21 அன்று மிகச் சரியாக கிழக்கு திசையில் உதிக்கும். இந்த 6 மாத காலத்திற்கு வட செலவு என்று பெயர். 

செப் 22 இல் சூரியன் தெற்கு நோக்கி 3 மாதங்கள் பயணித்து டிசம்பர் 21 அன்று ஒரு புள்ளியில் நின்று விட்டு மறு நாள் முதல் மறுபடியும் கிழக்கு நோக்கி பயணித்து மார்ச் 21 இல் மிகச் சரியாக நேர் கிழக்கு திசையில் உதிக்கிறது. செப் 21 முதல் மார்ச் 21 வரையிலான இந்தக் காலம் தென் செலவு என்றழைக்கப்படுகிறது. 

( இருக்குற செலவெல்லாம் பத்தாதுன்னு இவன் வேற புதுசா வட செலவு, தென் செலவுன்னு ஏழரையைக் கூட்டுகிறான் என்கிறீர்களா ?)

வானிலை மாற்றங்களை அறிய இந்த வட செலவு மற்றும் தென் செலவு பயணங்கள் பற்றி ஆய்வதும், தொடர்ந்து கண்காணிப்பதும் மிகவும் இன்றியமையாதது. 

சரி….அதுக்கும் காளையார்கோவிலுக்கும் என்ன ராசா சம்பந்தம் என்கிறீர்களா ? கொஞ்சம் பொறுங்க. சொல்லுவோம்ல…….. 

காளையார்கோவிலிருந்து பரமக்குடி செல்லும் சாலையில் ஒரு ஐந்து கிமீ தூரம் பயணித்தால் திறந்தவெளி சிறைச்சாலைக்கு எதிரில் ஒரு மிகப்பெரிய பெருங்கற்கால புதைவிடம் உள்ளது. 

ஏறத்தாழ 100 கல் வட்டங்கள் இருக்கலாம். அதில் ஒரிடத்தில், “எங்கள் வழி தனி வழி” என்று அங்கிருக்கும் கல்வட்டங்களுடன் தொடர்பில்லாமல் சிறிதும் பெரிதுமாக சில கற்கள் காணப்படுகின்றன. அனைத்தும் செம்பூரான் கற்கள்

அதில் ஒன்று உருளை வடிவத்தில் நம் கண்ணைக் கவரும் வகையில் உள்ளது. இந்த இடத்தில் நின்று கொண்டு பார்த்தால் வட செலவின் பாதை, தென் செலவின் பாதை என்று ஒவ்வொரு புதிராக விடுபடுகிறது. ஆம். சூரிய நகர்வை (அதாவது பூமியின் நகர்வை) பிராக்டிக்கலாக கண்ணால் பார்த்து மிகத் துல்லியமாக ஒவ்வொரு முக்கியமான புள்ளிகளிலும் ஒவ்வொரு பாறைக் கற்களை நட்டு வைத்துள்ளனர். இந்தக் கற்கள் அவர்களுக்கு வானிலை மாற்றங்களை எளிதாக அறிய உதவியிருக்க வேண்டும். நிறைய ஆண்டுகள் தொடர்ச்சியாக கண்காணித்த பிறகே இந்த கற்களை அவர்கள் நட்டிருக்க முடியும். அதேபோல் இந்த வேலையை தனிப்பட்ட ஓரிரண்டு நபர்களால் செய்து முடித்திருக்க இயலாது. ஒரு மிகப்பெரிய அறிவர்கள் குழுவால்தான் சாத்தியப்பட்டிருக்கும். 

இந்த அதிசயத்தைக் கண்டுபிடித்த நண்பர் ரமேஷ் தினமும் அந்த இடத்திற்கு சென்று சூரிய உதயத்தைக் கண்டு , அந்தப் புள்ளியை கணிணியில் கொடுத்து ஒரு அழகான வரைபடமே தயாரித்து விட்டார். பார்த்தால், அந்த உருளை வடிவ கல், ஒரு மிகப்பெரிய விட்டத்தின் மிகச் சரியான மையப் புள்ளியில் அமைந்துள்ளது. அந்த வட்டத்தில் ஒரு மிக அழகான வரிசையில் ஏராளமான கற்கள் நடப்பட்டிருக்கின்றன.

அவை சூரிய நகர்வை மட்டுமன்றி சந்திர நகர்வையும் கண்காணிக்க பயன்பட்டிருக்கின்றன. அது மட்டுமல்லாது,நட்சத்திரங்களையும், நட்சத்திர உடுக்கணங்களையும் கண்காணிக்க வெவ்வேறு வடிவங்களில் செதுக்கப்பட்ட பாறைகளையும் இங்கு காண முடிகிறது. 

அவை என்னென்ன என்பதை அறிய நிறைய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

சமீபத்தில் நண்பர் ரமேஷின் கடுமையான முயற்சியால் நம் தமிழ்நாடு தொல்லியல் துறையிலிருந்தும் அதிகாரிகள் வந்து இந்த இடத்தை பார்வையிட்டு சென்றிருக்கின்றனர். 

விரைவில் இங்கு விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்று நம்புவோமாக.

வெ.பாலமுரளி

பி.கு: இந்த பண்பாட்டின் தொடர்ச்சிதான் பின்னாளில் தமிழிக் கல்வெட்டுக்கள் இருக்கும் அறிவர்களின் நிலாப்பாறை கான்செப்ட் என்பது ஒரு கொசுறுத் தகவல்.