குடுமியான்மலை குறிப்புகள்
தமிழகத்தில் வரலாற்று எச்சங்கள் ஏராளமாக இருக்கும் விஷயம் நான் இந்தியா வருவதற்கு முன்னரே எனக்குத் தெரியும்.
ஆனால், அவை ஒவ்வொரு இடத்திலும் குவியல் குவியலாகக் கொட்டிக் கிடக்கும் விஷயம் நான் கொஞ்சம் கூட எதிர்பாராதது. நான் மசை மாராவில் சந்திக்கும் அதே “ கண்ணா லட்டு திங்க ஆசையா? “ இங்கே ஒவ்வொரு இடத்திலும்.
திருப்பரங்குன்றம், அழகர்மலை போல வரலாற்றுப் புதையல் கொட்டிக்கிடக்கும் இன்னொரு இடம் “ குடுமியான் மலை”.
குடுமியான் மலை, புதுக்கோட்டையிலிருந்து 18 கி.மீ. தூரத்தில் கொடும்பாளூர் செல்லும் சாலையில் உள்ள ஒரு சிறிய கிராமம்.
குடுமியான் மலையின் பழைய பெயர் திருநாலக் குன்றம் என்று தெரிகிறது. அதை நிரூபிக்கும் வகையில் இந்த மலையில் கி.மு.மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு தமிழிக் கல்வெட்டு “நாழள் கொற்றந்தய் பளிய்” அதாவது நாழள் என்னும் ஊரைச் சேர்ந்த கொற்றந்தய் (என்னும் பெண்) செய்து கொடுத்த பாளி என்ற தகவலைச் சுமந்து படுத்துக் கிடக்கிறது. ஆம். இந்தக் கல்வெட்டு ஒரு கற்படுக்கையில் தலை வைக்கும் இடத்தில்தான் செதுக்கப்பட்டுள்ளது.
வேள்விக் குடி செப்பேட்டில் வரும், சங்க காலப் பாண்டிய மன்னனான பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியின் ஆட்சியின் கீழ் இந்த ஊர் இருந்ததாகவும், அவன் இந்த ஊரில் வைத்து நிறைய யாகங்கள் செய்ததால்தான் அவனுக்கு “குடுமிக் கோமான்” என்ற பெயர் வந்ததாகவும் சொல்லப்படுகிறது.
, பிற்கால பாண்டியர் காலத்து கி.பி. 8 அல்லது 9 ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு குடைவரைக் கோயில் ஒன்றும் அதே இடத்தில் பல்லவ கிரந்த எழுத்தில் ஒரு இசைக் கல்வெட்டும் உள்ளது. அதில் உள்ள விரிவான ஸ்வரங்களை வைத்துப் பார்க்கையில் அந்தக் காலத்தில் இங்கு ஒரு இசைப் பள்ளியே நடத்தப்பட்டிருக்க வேண்டும் போல் தெரிகிறது. அனேகமாக இதுவே நம் நாட்டின் முதல் Open Musical School ஆக இருந்திருக்க வேண்டும். அரச்சலூர் (தமிழிக்) கல்வெட்டு உள்ள இடமும் ஒரு பள்ளியாக இருந்திருக்கும் பட்சத்தில் “ குடுமியான் மலை” இரண்டாவது பள்ளி. ஆனால் இங்குள்ள கிரந்த கல்வெட்டு மிகவும் விரிவாகவே உள்ளது. அருமையிலும் அருமை.
அதற்கு பிறகு 50 அல்லது 100 ஆண்டுகள் கழித்து இந்த இடத்தில் சிகாநாத சுவாமி என்ற ஒரு சிவன் கோயில் கட்டப்பட்டு , பிறகு 13 ம் நூற்றாண்டில் (மதுரையை மீட்ட) முதலாம் மாறவர்ம சுந்தரபாண்டியன் காலத்தில் இந்தக் கோயில் மறு சீரமைக்கப்பட்டு, நிறைய அமர்க்களமான சிலைகளும் நிறுவப்பட்டிருக்கின்றன.
இந்தக் கோயில் மறு சீரமைப்பு பணிகளுக்கு உமையாள்வி நாச்சி என்னும் தாசிப்பெண் 73,000 தங்க நாணயங்கள் கொடுத்தாள் என்னும் செய்தி ஒரு கல்வெட்டில் உள்ளது என்பது ஒரு உபரித் தகவல்.
இங்குள்ள ஒவ்வொரு சிலையின் நுட்ப வேலைப்பாடுகளும் அறந்தாங்கிக்கு அருகில் உள்ள ஆவுடையார் கோயில் சிற்ப வேலைப்பாடுகளுக்கு ஈடாக இருக்கின்றன. அந்தக் கால சிற்பக் கலையின் உச்சபட்ச அற்புதம் இந்த இரண்டு கோயில்களும்.
சிலைகளில் உள்ள முகபாவங்கள், காலணியின் டிசைன், நகக் கண்களில் தெரியும் நேர்த்தி, தாடியில் உள்ள முடிகளின் துல்லியம் என்று இங்குள்ள ஒவ்வொரு சிலையும் கண்டு குளிர வேண்டிய ஒரு அதிசயம்.
இந்தக் குடைவரைக் கோயிலுக்கு நேர் மேலே, குன்றின் ஒரு பகுதியில் 64 நாயன்மார்களின் புடைப்புச் சிற்பங்களும், அவற்றின் நடுவே ஒரு காளை மாட்டில் வீற்றிருக்கும் சிவனுடன் கூடிய உமையாளின் சிற்பமும் மிகவும் நேர்த்தியாக செதுக்கப்பட்டுள்ளன.
இந்தக் கோயிலிருக்கும் இடத்திற்கும், தமிழிக் கல்வெட்டு இருக்கும் இடத்திற்கும் நடுவில், நாம் மிகவும் எளிதாக ஏறக்கூடிய பாறைச் சரிவில்தான், அந்த அதிசயமான ஓவியங்கள் உள்ளன.
தமிழிக் கல்வெட்டிற்கு சற்றே அருகில் கருப்பு நிறத்தில் நெட்டு வசத்தில் மிகவும் உயரமான பூ வேலைப்பாடுகளுடன் கூடிய ஒரு ஓவியம் உள்ளது.
குன்றின் அடுத்த பகுதியில் இதே போன்ற ஓவியங்கள் குறுக்கு வசத்தில் நிறைய இடங்களில் வரையப்பட்டுள்ளன.
அவை என்னதான் கருப்பு நிறத்தில் வரையப்பட்டிருந்தாலும் அவற்றின் நேர்த்தியை வைத்துப் பார்க்கையில் அவை மிகவும் பழைமையானதாகத் தோன்றவில்லை.
இது என்னவாயிருக்கும் என்று பேசிக் கொண்டிருக்கையில், இவை Calligraphy என்று சொல்லப்படும் ஒரு வகை சித்திர எழுத்துக்களாக இருக்க வேண்டும் என்கிறார் எனது நண்பரும் , பாறை ஓவியங்களை ஆராய்ந்து வருபவருமான திரு. பாலா பாரதி.
ஆனால், அது எந்த மொழி என்று கண்டுபிடிக்க இயலவில்லை.
இதுபோன்ற பழங்கால சித்திர எழுத்து ஓவியம், தமிழகத்தில், ஏன் இந்தியாவிலேயே வேறெங்கும் இருப்பது போல் தெரியவில்லை.
இருந்தும் இந்த ஓவியங்கள் ஏனோ நம் தொல்லியல் துறையையும், ஆய்வாளர்களையும் ரொம்பவும் ஒன்றும் ஈர்த்தது போல் தெரியவில்லை. இது பற்றிய விவாதங்கள் கூட பெரிய அளவில் நடந்தது போல் தெரியவில்லை. ஒருவேளை, நான் கென்யாவில் இருக்கும்போது இது பரவலாக பேசப்பட்டு, அது எனக்குத் தெரியாதலால் நான்தான் ( காந்தி செத்துட்டாரா என்று) ரொம்ப உணர்ச்சி வசப்படுகின்றேனோ என்றும் தெரியவில்லை.
இவை தவிர சில செஞ்சாந்து ஓவியங்களும் இங்கே மிகவும் அழிந்த நிலையில் உள்ளன. அவை என்னவென்றும் கண்டு பிடிக்க இயலவில்லை.
இதே இடத்தில் ஒரு பிள்ளையாரின் சிற்பமும் உள்ளது. இது , அச்சு அசலாக கோயிலின் உள்ளே இசைக் கல்வெட்டிற்கு அருகே இருக்கும் பிள்ளையார் சிற்பம் போலவே உள்ளது. ஒருவேளை, இங்குதான் முதலில் இசைப்பள்ளி நடத்துவதற்கு இடத்தைத் தேர்வு செய்தார்களோ என்னவோ. ஆனால் பாறை சரிவில் மாணவர்கள் பாதுகாப்பாக உடகார முடியாது என்று நினைத்து பள்ளியை குடைவரைக் கோயிலுக்கு ஒட்டிய சம தளத்தில் அமைத்திருக்க வேண்டும்.
வெளியில் உள்ள பிள்ளையார் சிற்பத்திற்கு அருகில் ஒரு மனிதன் தன் இரு கைகளையும் தூக்கி வழிபடுவது போல் பாறையில் ஒரு கோட்டுருவம் செதுக்கப்பட்டுள்ளது.
அதில் தென்படும் பூணூலை வைத்து அது கி.பி. ஏழு அல்லது எட்டாம் நூற்றாண்டில் செதுக்கியது போல் தோன்றுகிறது.
இந்த குடுமியான் மலையைத் தவிர்த்து, கொடும்பாளூர், சித்தன்ன வாசல், திருமயம், நார்த்தாமலை, ஏராளமான நீத்தார் நினைவுச் சின்னங்கள் , மலையடிப்பட்டியில் உள்ள அதி அற்புதமான குடைவரைக் கோயில், சில இரும்பு உருக்கு ஆலைகள் என்று தொல்லியல் இடங்கள் புதுக்கோட்டையைச் சுற்றி ஏராளமாக உள்ளன.
அப்புறம் என்ன….உடனே கிளம்பி வாங்க மக்கா….
வெ.பாலமுரளி
நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எனக்கு…. :
நண்பர்கள் திரு.பாலா பாரதி, திருச்சி பார்த்தி மற்றும் நாராயண மூர்த்தி.