நான் சிறுவனாக இருக்கும்போது ஒரு நாட்டு வாழைப் பழத்தின் விலை 10 காசு. ரஸ்தாலி என்றால் 20 காசு. அது போன்ற, நாலணா பெறாத ஒரு வாழைப்பழத்துக்காக ஒரு யுத்தம் நடை பெற்றது, இன்னும் நடை பெற்றுக் கொண்டிருக்கிறது என்றால் நம்புவது கொஞ்சம் கஷ்டம்தான்.
யுத்தம் பற்றி ஆரம்பிப்பதற்கு முன்னால், வாழைப்பழம் பற்றி சில சுவையான தகவல்கள்….
1. வாழைப்பழம் முதன் முதலில் பயிரடப்பட்டது பப்புவா நியூ கினியாவில்தான். கிட்டத்தட்ட கி.மு. 5000 என்று தெரிகிறது.
2. பின்னர் ஆப்பிரிக்கா, இந்தியா , (மொகலாயர்கள் மூலம் ) மத்திய ஆசிய நாடுகள், வட மற்றும் தென் அமெரிக்க நாடுகள் என்று செம டிராவல்.
3. உலகிலேயே வாழைப்பழம் அதிகம் சாப்பிடும் மக்கள் அமெரிக்கர்கள். பின்னர் ஜெர்மனியர்கள். பின்னர் பிரிட்டிஷ் மற்றும் ஃபிரெஞ்ச் மக்கள்.
4. ஆனால், தனி நபர் உபயோகத்தில், யுகாண்டாவே முண்ணனியில் இருக்கிறது ( யெஸ்…நம்ம இடி அமீன் புகழ் யுகாண்டாதான் ). சராசரியாக ஒரு யுகாண்டன் ஒரு நாளைக்கு 10 வாழைக்காய் (அ) வாழைப்பழம் சாப்பிடுகிறான் (ள்). கென்யாவின் அண்டை நாடான யுகாண்டாவில் விருப்ப உணவே வாழைக்காய்தான். அதை வேக வைத்து ” மட்டோக்கே ” என்று ஒரு உணவு பண்ணுவார்கள் ( அதை நான் என் வேலைக்காரிக்கு நம்ம ஸ்டைலில் சொல்லிக் கொடுத்திருக்கிறேன். கடுகு, உ.பருப்பு, வெங்காயம், கொஞ்சூண்டு மஞ்சப் பொடி எல்லாம் போட்டு , வேக வைத்து மசித்த வா. காயை சேர்த்துக் கிளறி, அதில் சிக்கன் குழம்பை ஊற்றி சாப்பிட்டால், (சனிக்கிழமை ) மதியம், கூட ஒரு மணி நேரம் சுகமாக தூக்கம் வரும் . அவ்வளவு டேஸ்ட்).
5. வாழைப்பழம் ஒரு நஞ்சு முறிப்பான். அதனால் தான் , வாழையிலையில் சாப்பிடும் பழக்கம் வந்தது.
6. வாழைப்பழத்தில் கிட்டத்தட்ட 1000 வகைகள் உள்ளன. இதுவே உலகின் முதல் பழம் என்கிறது ஒரு இணைய தளம் ( நாரதர் கொடுத்த மாம்பழத்தை அந்த இணையதளம் ஏனோ கணக்கில் கொள்ளவில்லை என்றே தெரிகிறது ) .
7. ராஜ ராஜ சோழன் காலத்தில் ஒரு காசுக்கு 1200 வாழைப்பழங்கள் கிடைத்திருக்கின்றன. கோயிலுக்கு நெய்வேத்தியம் செய்ய ஒரு நாளைக்கு 150 பழங்கள் என்று கணக்கிட்டு 360 காசுகள் வைப்பு நிதியில் வைத்தான் ராஜ ராஜன் என்கிறார் தஞ்சைக் கல்வெட்டுக்கள் பற்றி ஆராய்ச்சி செய்த குடவாயில் பாலசுப்பிரமணியம்.
சரி….விஷயத்துக்கு வா ராசான்றீங்களா ?
வருவோம்ல…..
வாழைப்பழம் எல்லா நாடுகளிலும் ஈஸியாக விளைந்து விடாது கொஞ்சம் சூடான மற்றும் சீரான வெப்ப நிலை தேவை. அதனால், ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவைப் பார்த்து ” சாரி” என்று சொல்லி விட்டது வா.பழம்.
இரண்டாம் உலகப் போர் முடிந்து எல்லா நாடுகளும் ஓரளவு செட்டில் ஆனவுடன், பிரிட்டன் தன் காலனியில் இருந்த கரீபிய நாடுகளான ஜமைக்கா, டொமினியன் ரிபப்ளிக் ஆகிய நாடுகளைத் தேர்ந்தெடுத்து வாழையைப் பயிரிட்டுத் தங்கள் தேவைக்கு வழி வகுத்துக் கொண்டது.
ஃபிரான்ஸ் ஐவரிகோஸ்ட், கேமரூன் போன்ற ஆப்பிரிக்க நாடுகளில் தங்கள் வாழைப்பழ சாம்ராஜ்யத்தைத் தொடங்கியது.
இந்த ரேஸில் அமெரிக்காதான் முந்திக் கொண்டது. 1800 – களின் இறுதிகளிலேயே , United Fruit Company என்னும் பெயரில் பனாமா, ஈக்வாடர், ஹோண்டுராஸ், குவாதமாலா, கொலம்பியா, பெரு, நிகரகுவா போன்ற லத்தீன் அமெரிக்கன் நாடுகளை வளைத்துப் போட்டது. கரும்புக்காகவும், வாழைப்பழத்துக்காகவும் அவர்கள் வளைத்த நிலங்களுக்குக் கணக்கே இல்லை. லட்சக்கணக்கான ஹெக்டேர்கள். பெரும்பாலான நிலங்களுக்கு அவர்கள் கொடுத்த விலை ஏக்கருக்கு 1 முதல் 5 டாலர்கள் மட்டுமே ( மெக்டொனல்ட்ஸில் ஒரு பிக் மேக் மீல் & ஒரு காப்பிக்கு அமெரிக்கர்கள் செலவழிக்கும் தொகை ).
அது மட்டுமல்லாமல், அதில் வேலை செய்த தொழிலாளிகளை அடிமைகளை விடக் கேவலமாக நடத்தியது அந்த நிறுவனம். ஒரு நாளைக்கு 14 மணி நேரம் வேலை செய்யும்படி அந்த நிறுவனம் ( அமெரிக்காவின் ஆணைப்படி ) கொடுமைப்படுத்தியது.
சம்பளமோ , அவர்களின் சாப்பாட்டுக்குக் கூடக் காணவில்லை. எதிர்த்துக் குரல் கொடுப்பவர்கள் எல்லோரும் போராளிகள் / தீவிரவாதிகள்/ கம்யூனிஸ்ட்கள் என்று குற்றம் சாட்டப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார்கள். அப்படி இறந்தவர்களின் எண்ணிக்கையை மிகவும் சாமர்த்தியமாக மறைத்து விட்டார்கள். சரித்திரம் பெரும்பாலான சமயங்களில் வலியவர்களாலேயே எழுதப் படுகிறது.
இறந்தவர்கள் கண்டிப்பாக ஒரு லட்சத்திற்கும் மேல் என்கிறார் ஒரு லத்தீன் அமெரிக்க வரலாற்று ஆசிரியர்.
எந்த ஒரு நாட்டில் ஆட்சியாளர்கள், அமெரிக்கர்களின் வழிக்கு வரவில்லையோ, அந்த ஆட்சியாளர்களையே நயவஞ்சகமாக மாற்றினர். ஒப்புக்காக ஒரு அதிபரை சீட்டில் உட்கார வைத்து விட்டு அவர்களே ஆட்சியை திரைக்குப் பின்னால் இருந்து நடத்தினர். அதிலிருந்துதான், அந்த மாதிரி நாடுகளுக்கு “வாழைப்பழக் குடியரசு” ( Banana Republic ) என்னும் சொல் பிரயோகம் வந்தது.
இந்தக் கூத்துக்கு நடுவில் வணங்கா முடியாக கியூபா இருந்ததும், ஃ பிடல் காஸ்ட்ரோவும் , சே குவாராவும், நெஞ்சை நிமிர்த்தி அமெரிக்காவுடன் சண்டை போட்டதும் வீரமிகு மரபுக் கவிதை – நம்ம கலிங்கத்துப் பரணி மாதிரி. அது பற்றி விரிவாக ஒரு கட்டுரை, விரைவில்.
United Fruit Company தொழிலாளர்களின் ரத்தத்தில் ( பிஸினஸில்) சக்கைப் போடு போட, வாழைப்பழத்தை ஐரோப்பாவுக்கும் ஏற்றுமதி செய்யத் தொடங்கினார்கள். முதலில் தங்களின் பழங்களை வித்தியாசப் படுத்திக் காட்ட அவற்றில் ஸ்டிக்கர் ஒட்டி அனுப்ப ஆரம்பித்தார்கள். அனைத்துப் பழங்களிலும் ஸ்டிக்கர் ஓட்டும் கலாச்சாரம் அப்படி வந்ததுதான். (ஆனால், வெள்ள நிவாரணப் பொருட்களில் ஸ்டிக்கர் ஓட்டும் பழக்கம் அவர்கள் கொண்டு வந்ததல்ல ).
இம்போர்ட்டட் பொருட்களுக்கு நம்ம ஊரில் மவுசு அதிகம் என்பதால் நம்ம ஊரில் விளையும் பழங்களுக்கும் ஸ்டிக்கர் ஒட்டி அதை இம்போர்ட்டட் பழங்கள் என்று விற்பது ஒரு தனி சோகக் கதை.
சரி விஷயத்துக்கு வருவோம்….
அமெரிக்கர்கள் கொஞ்சமும் எதிர்பார்க்காத ஐரோப்பியர்களிடம் இருந்து பயங்கர எதிர்ப்பு – லத்தீன் அமெரிக்காவில் இருந்து வரும் வாழைப்பழங்களுக்கு ( அவர்கள் ஆப்பிரிக்காவில் இருந்து வரவழைக்கும் பழங்களுக்கு மவுசு குறைந்து விடும் என்று பயந்ததால் ). எனவே எக்குத்தப்பாக சுங்க வரியை விதிக்க, ஒரு பெரிய பனிப்போர் தொடங்கியது. இந்த பனிப்போர் என்னவோ ஒரு வருடம் இரண்டு வருடம் என்று நடக்கவில்லை. கிட்டத்தட்ட 25 வருடங்கள்….
அமெரிக்காவும் விடாமல், நம்ம சரத்குமார், விஜய்குமார், அஞ்சாநெஞ்சன் தவிர்த்து உலகில் உள்ள அனைத்து பஞ்சாயத்துத் தலைவர்களையும் அணுகினர் .
கடைசி கடைசியாக அவர்கள் ஆக்கிரமிப்பில் உள்ள WTO மற்றும் IMF கொடுத்த பிரஷரினால் , சில வருடங்களுக்கு முன்னால் நாங்கள் படிப்படியாக வரியைக் குறைக்கிறோம் என்று EU ஒத்துக் கொண்டது ( படிப்படியாகக் குறைக்கிறோம் என்றதும் உங்களுக்கு வேறு ஏதேனும் ஞாபகத்திற்கு வந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல ).
அமெரிக்கா அதற்கு ஒத்துக் கொள்ளாமல் இன்னும் அடம் பிடித்துக் கொண்டிருப்பது வேறு விஷயம். இதற்கிடையில், மேற்கூறிய நாடுகளில் உள்ள கூலித் தொழிலாளிகள் இன்னும் அதே அடிப்படை சம்பளத்திற்காகத்தான் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அதில் பெரும்பாலானோர் வறுமையின் கோரப் பிடியில் செத்துக் கொண்டிருக்கிறார்கள்.
என்னதான் வாழைப் பழத்தை தின்றால் நன்றாக ஜீரணிக்கும் என்றாலும் கூட, அந்த விவசாயிகளின் போராட்டம் மட்டும் ஜீரணிப்பது கஷ்டமாகத்தான் இருக்கிறது.
அந்த விவசாயிகளின் போராட்டத்திற்கு கொஞ்சமும் சளைக்காதது நம்ம ஊர் விவசாயிகளின் போராட்டம்.
அது இன்னொரு கட்டுரையில்
வெ. பாலமுரளி
பி.கு. ருவாண்டாவில் ஒரு ருத்ரதாண்டவம் போலவே , இந்தக் கட்டுரைக்குப் பின்னாலும் நிறைய மரணங்களும், வலிகளும் உள்ளன. எனவே, நம்ம கவுண்டமணி, செந்தில் ஜோக்கை கமெண்ட்டில் பதிவு செய்வதைத் தவிர்க்கவும் – ப்ளீஸ் .
இந்தக் கட்டுரைக்கு ஆதாரம் – எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய உணவு யுத்தம், விக்கிப் பீடியா மற்றும் சில இணைய தளங்கள்.