நான் வசித்த நாடுகள் தவிர, அதிகமான முறை நான் சென்ற நாடு ருவாண்டா. கிட்டத்தட்ட பத்து அல்லது பதினைந்து முறை சென்றிருப்பேன். அழகு என்றால் அப்படி ஒரு அழகான நாடு. அந்த நாட்டின் இன்னொரு பெயர் ” A Country of 1000 Hills” . ஆம். அந்த நாடு முழுவதும் மலைகளாகவே இருக்கும். ருவாண்டாவோடு ஒப்பிடுகையில் கென்யா கூட அவ்வளவு அழகு கிடையாது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
ருவாண்டாவின் தலை நகரம் கிகாலி. அந்த ஒரு ஊருக்குள்ளாகவே ஏராளமான மலைகள் இருக்கும் . ஒவ்வொரு ஏரியாவும் ஒரு மலையில் இருக்கும். பார்க்கவே ரொம்பவும் ரம்மியமாக இருக்கும். திருவான்மியூர் ஒரு மலையிலும் பக்கத்தில் உள்ள அடையாறு வேறொரு மலையிலும் இருந்தால் எப்படியிருக்கும். நினைத்துப் பாருங்கள். அதுதான் கிகாலி.
பாதுகாப்புப் பிரச்சினை என்பதே கிடையாது. இரவு 12 மணிக்குக் கூட கை நிறைய பணமும், கையில் கேனான் (?????) கேமராவும் எடுத்துக் கொண்டு ஜாலியாக வாக்கிங் போகலாம். ஒரு திருட்டுப் பயமும் கிடையாது. மக்கள் அனைவரும் மிகவும் நட்புடனும் பணிவுடனும் பழகுவார்கள்.
ஆப்பிரிக்காவின் சிங்கப்பூர் என்று சொல்லும் அளவுக்கு சுத்தம் என்றால் சுத்தம் அப்படி ஒரு சுத்தம். சிங்க்கப்பூரில் கூட லிட்டில் இந்தியா ஏரியாவில் ஏராளமான குப்பையையும், பாண் பராக்கின் எச்சங்களையும் காண முடியும். ருவாண்டாவில் சான்ஸே இல்லை. ஒரு முறை கிகாலியின் ஒரு முக்கியமான தெருவில் குப்பைக் கூளம் ஒன்று தென்பட , அந்த நகரின் மேயர் 15 நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டார் என்பது ஒரு ஆச்சரியமான பெட்டிச் செய்தி . அன்று நான் கிகாலியில்தான் இருந்தேன் ( ஆனால், அந்த மேயரைப் பற்றி அதிபரிடம் போட்டுக் கொடுத்தது நானல்ல).
ருவாண்டாவும், கென்யா போலவே, வருடம் 365 நாட்களும் குளு குளுவென்றிருக்கும்
பாலித்தீன் அங்கு தடை செய்யப்பட்ட ஒரு பொருள். நீங்கள் ஏர்போர்ட்டில் நுழையும்போதே உங்களிடம் இருக்கும் அனைத்து பாலிதீன் கவர்களையும் பிடுங்கிக் கொள்வார்கள். ஜாக்கிரதை.
அப்பேற்பட்ட அற்புதமான ஒரு நாட்டில், ஒரு மிகப் பெரிய இனக் கலவரம் நடந்தது என்பதையும், அதில் நடந்த கோரதாண்டவத்தில் கிட்டத்தட்ட 8 லட்சம் பேர் மிகவும் கொடூரமான முறையில் கொல்லப்பட்டார்கள் என்பதையும் நம்புவதும், ஜீரணிப்பதும் கொஞ்சம் கடினம்தான் ( உண்மையில் கொல்லப்பட்டது 8 லட்சத்திற்கும் அதிகம் என்று நிறையப் பேர் சொல்கிறார்கள்).
அந்த கோரதாண்டவத்திற்குப் பின்னணியில் பெல்ஜியம், ஃ பிரான்ஸ் மற்றும் ஐக்கிய நாட்டு சபை இருந்தது என்பது கொடுமையின் உச்சம்.
ரிவர்ஸ் கியரில் கொஞ்சூண்டு பின்னால் பயணிப்போம். சீட் பெல்ட் ப்ளீஸ் (கொஞ்சம் ஆபத்தான பயணம். அதனால்தான் சொன்னேன் ).
ருவாண்டாவில் மொத்தம் மூன்றே மூன்று பழங்குடியினர்தான். ஹூட்டுஸ் – 85%. டுட்ஸி – 14%. கிட்டத்தட்ட 1% – ட்வா என்னும் ஒரு பிக்மி இனத்தவர்கள். இதில் டுட்ஸிக்கும் ஹூட்டுஸூக்கும் தான் பிரச்சினை.
முதல் உலகப் போருக்கு முன்பு வரை ருவாண்டா இருந்தது ஜெர்மானிய கிழக்கு ஆப்பிரிக்காவில். முதல் உலகப் போருக்கு பிறகு , சில ஐரோப்பிய நாடுகள் நிறைய அப்பாவி நாடுகளை பங்கு போட்டுக் கொண்டன ( யார் அப்பன் வீட்டு சொத்தை யார் பங்கு போட்டுக் கொள்வது என்றெல்லாம் கேட்கக் கூடாது . ரொம்பத் தப்பு ). அந்த வரிசையில் பெல்ஜியம் ருவாண்டாவை லபக்கிக் கொண்டது.
அவர்கள் எதிர்பார்த்ததை விட ருவாண்டா ரொம்பவே சுகமாக இருந்தது. தேயிலைத் தோட்டங்கள், காப்பித் தோட்டங்கள், சொகுசான தட்ப வெப்ப நிலை என பெல்ஜியர்கள் ஜாலியாக செட்டில் ஆகி விட்டார்கள். 1950 – களில், மக்கள் லேசாக பிரச்சினை பண்ன ஆரம்பித்தார்கள்.
இந்தியாவை விட்டு பிரிட்டிஷார் கிளம்பும்போது, இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் எப்படி பிரச்சினையை மூட்டி விட்டு நாட்டை சீரழித்து விட்டு கிளம்பினார்களோ, அதே ‘நல்லெண்ணம்’ பெல்ஜியர்களுக்கும் தோன்றியது (அது சம்பந்தமாக மௌண்ட் பேட்டன் ஏதும் கன்சல்டன்ஸி கொடுத்தானா என்பது பற்றி தகவல்கள் ஏதும் இல்லை ). அதன் ஆரம்பமாக பெல்ஜியர்கள் , வெளிப்படையாகவே அங்கிருந்த சிறுபான்மையினரான டுட்ஸீகளை ஆதரிக்க ஆரம்பித்தனர். அவர்கள் எதிர்பார்த்தது போலவே, ஹுட்டூஸ்கள் வெகுண்டெழுந்து, டுட்ஸீக்கள் அடித்து விரட்ட அவர்கள் அண்டை நாடுகளான உகாண்டாவிற்கும் , காங்கோவிற்கும் அகதிகளாக தப்பி ஓடினர். இது நடந்தது 1959 – இல்.
பெல்ஜியர்களுக்கு ஒரே சந்தோஷம்- ஏனென்றால், இது இத்தோடு நின்று விடாது என்பது அவர்களுக்குத் தெரியும். வேண்டா வெறுப்பாக 1962 – சுதந்திரம் கொடுத்து விட்டு தூர நின்று வேடிக்கை பார்க்க ஆரம்பித்தார்கள் . அடுத்து வந்த சில ஆண்டுகள் ருவாண்டா ரொம்பவே தள்ளாடியது. 1973 – இல் மேஜர் ஜெனரல் ஹப்யரிமானா என்பவர் அதிபர் பதவி ஏற்று கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் தத்தக்காபித்தக்கா என்று ஒட்டி விட்டார்.
இவர் ஓரளவுக்கு நல்ல மனிதர். எல்லோரும் சமம் என்று நினைக்கக் கூடியவர். 1993- இல், உகாண்டாவிற்கு அகதிகளாக ஓடிய டுட்ஸீக்கள் திரும்ப வந்து கெரில்லா யுத்தம் நடத்த ஆரம்பித்தார்கள். உடனே சமாதானத்திற்கு இறங்கி வந்த அதிபர் ஹபியாரிமானா, டான்சானியா நாட்டில் உள்ள அரூஷா என்னும் ஊரில் வைத்து ஒரு ஒப்பந்தம் செய்தார். அதன் படி, ஹுட்டூஸூம் , டுட்ஸீக்களும் இணைந்தே ஒரு அரசாங்கத்தை அமைத்து ஆள வேண்டியது. ருவாண்டாவின் மீது அக்கறை செலுத்திய சில நாடுகள் நிம்மதிப் பெருமூச்சு விட்டன – நடக்கப் போகும் விபரீதம் புரியாமல்.
இந்த ஒப்பந்தம் ஹுட்டூஸ்களுக்கு மிகுந்த வெறுப்பையும் கோபத்தையும் உண்டாக்கியது. நல்ல வாய்ப்புக்காக காத்திருக்க ஆரம்பித்தார்கள்.
அந்த நல்ல நாளும் ….சாரி …அந்த கெட்ட நாளும் வந்தது. ஏப்ரல் 6, 1994. அண்டை நாடான புருண்டியின் அதிபரும் , ருவாண்டாவின் அதிபர் ஹப்யரிமானவும் விமானத்தில் செல்ல , அந்த விமானம் கிகாலியை விட்டு கிளம்பிய சில வினாடிகளுக்குள் அடையாளம் தெரியாத ஒரு சிலரால் சுட்டு வீழ்த்தப் பட்டது . அந்த விமானத்தில் பயணம் செய்த அனைவரும் அதே இடத்தில் கொல்லப் பட்டார்கள். இன்று வரை அதை செய்தது யாரென்றே தெரியவில்லை.
ஆனால், டுட்ஸீக்கல் க்ரூப்தான் அதை செய்தது என்று குற்றம் சுமத்தி, ருவாண்டா ராணுவம் நாட்டை தங்கள் கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வந்து, டுட்ஸீக்களை வேட்டையாட ஆரம்பித்து. இது நடந்தது ஏப்ரல் 7, 1994. அதன் ஆரம்பமாக, டுட்ஸீக்களுக்கு ஆதரவா பேசிய அனைத்து ஹூட்டுக்களும் கொல்லப் பட்டனர் – பிரதம மந்திரி உட்பட.
அதன் தொடர்ச்சியாக, அங்கிருந்த ரேடியோக்கள் ஹூட்டுக்கள் அனைவரையும் அவர்கள் பார்க்கும் அனைத்து டுட்ஸீக்களையும் வெட்டிக் கொல்லுமாறு பணிவுடன் கேட்டுக் கொண்டது. நம்ம மதன் சொன்னது போல மனிதனுக்குள் இருந்த மிருகம் கூட்டாக விழித்துக் கொண்டது. ருத்ர தாண்டவம் ஆரம்பித்து. எல்லோர் கைகளிலும் அருவாட்கள்.
கையில் அகப்படும் டுட்ஸீக்கல் அனைவரையும் சர மாரியாக வெட்ட ஆரம்பித்தனர். மொத்த நாடே ரத்த வெள்ளத்தில் மிதந்தது. பிணங்களை அகற்றக் கூட அங்கே யாருக்கும் நேரமில்லை.
இது போன்ற பெரிய இன அழிவுகள் நடக்கும் போது, முதலில் பாதிக்கப் படுவது பெண்கள் இனமே. கொலைகளோடு வன்புணர்ச்சியும் சர்வசாதரணமாக நடந்து. யாருக்கும் தாங்கள் செய்வது எவ்வளவு காட்டுமிராண்டித்தனம் என்றோ, பெரிய பாவ காரியம் என்றோ தோணவில்லை. அவர்களுக்கு எடுத்துச் சொல்லவும் யாருமில்லை.
இறந்தவர்களின் சொத்துக்கள் அபகரிக்கப் பட்டன. ஆனால், அதை வைத்து என்ன செய்வது என்று அந்த காட்டுமிராண்டிக் கூட்டத்துக்குப் புரியவில்லை. எல்லோர் கைகளிலும் 4 Wheel டிரைவ் கார்கள் சர்வசாதரணமாக களம் வர ஆரம்பித்தன. ஆனால், அவர்களுக்கு அதில் பெட்ரோல் போடும் அளவுக்கு வசதி இல்லாதலால், நிறைய கார்கள் அனாதையாக அங்கங்கே விடப் பட்டன.
இந்த கோரதாண்டவம் 100 நாட்களுக்கு நடந்தன. பிணங்களைத் திண்ண வல்லூறுகளும், கழுத்தைப் புலிகளும் கூட அங்கு வர பயந்தன.
எங்கும் மரண ஓலங்கள். வெற்றிக் களிப்பாட்டங்கள். இவ்வளவு நடந்தும் வெளி நாட்டவர் யாருமே வரவில்லையா என்று ஒரு கேள்வி கேட்கத் தோணும். நியாயமான கேள்வி.
அந்த நாட்டில் எண்ணெய் வளம் போன்று பெரிதாக ஒன்றும் இல்லாதலால், அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகள் கண்டு கொள்ளவேயில்லை. ” ஆப்பிரிக்காவில் ஒரு நாடான ருவாண்டாவில் இனக் கலவரம் . 50,000 ( ???) பேர் மரணம்” என்று நம் நாட்டில் கூட 8 -வது பக்கத்தில் ஒரு செய்தி வந்தது. அதை, ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரனின் திருமணச் செய்தி மறைத்து விட்டது என்று ஞாபகம்.
இந்தக் கொடூரமான சம்பவத்தில் இன்னும் கொடூரமான ஒரு விஷயம் என்னவென்றால், இது போல ஒரு மிகப் பெரிய கலவரம் நடக்கப் போவது பெல்ஜியத்திற்கும் ஃபிரான்ஸிற்கும் முன்னரே தெரியும்.
ஃபிரான்சு, கொலை கும்பலான ஹுட்டூஸ்களுக்கு ஆதரவாக அவர்களுக்கு செக்யூரிட்டி கொடுத்த அவலமும் நடந்தது. ஃ பிரான்ஸ் கொடுத்த ப்ரஷரின் காரணமாக, இந்தக் கலவரம் ஆரம்பிக்கும் முன்னரே, ஐக்கியநாட்டு சபை ருவாண்டாவில் நிறுத்தி வைத்திருந்த தன்னுடைய பாதுகாப்புப் படையை திரும்பப் பெற்றுக் கொண்டது.
அந்த உத்தரவில் கையெழுத்திட்டது , அப்போது ஆப்பிரிக்காவிற்கு இன்சார்ஜ் ஆக இருந்த கோஃபி அன்னான். அந்த சமயத்தில் தன் கைகள் கட்டப்பட்டிருந்தன என்று பின்னாளில் ஸ்டேட்மெண்ட் கொடுத்தார். யார் அவர் கைகளைக் கட்டியது என்று இன்றுவரை குறிப்பிடவில்லை.
அந்த 100 நாட்களில் அவர்களுக்கு யாரிடமிருந்தும் எந்த உதவியும் கிடைக்கவில்லை . ஓரளவிற்கு கலவரம் முடியும் நேரத்தில் ஐ. நா. சபை ஒரு 5000 பேரை ஒப்புக்கு அனுப்பி வைத்தது. அதற்குள் கேம் ஓவர்.
இதற்குள் , சிறுபான்மையினரான டுட்ஸீக்கள் க்ரூப், கலவரத்தை தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்து பிரச்சினைக்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்தது. அதன் தலைவரான (தற்சமய அதிபர் ) பால் ககாமே புண்ணியத்தில் ஒரு இடைக் கால அரசு அமைந்தது. அதில் , ஹூட்டு இனத்தைச் சேர்ந்த பாஸ்ட்டர் பிஸிமுங்கு என்பவர் அதிபராகவும், டுட்ஸி இனத்தைச் சேர்ந்த பால் ககாமே துணை அதிபராகவும் பதவியேற்று ருவாண்டாவில் அமைதியைக் கொண்டு வந்தனர்.
பிறகு 2000 – இல் நடந்த எலெக்ஷனில் பால் ககாமே அதிபராகி , இன்று வரை அந்த நாற்காலியை விட்டு இறங்க மாட்டேன் என்று அடம் பிடிப்பது ஒரு கிளைக் கதை.
ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 7 – இல் தொடங்கி , நூறு நாட்களுக்கு அந்த நாடே மௌன அஞ்சலி செலுத்துகிறது. அந்த நூறு நாட்களும் அரசு விடுமுறை இல்லை என்றாலும், யாரும் பெரிதாக ஒரு வேலையும் பார்ப்பதில்லை. எல்லோரும் ஒரு இறுகிய முகத்துடனேயே வளைய வருகிறார்கள். அது ஒரு அசாதாரணமான அமைதியாக இருக்கும்.
அது பற்றிக் கேட்ட போது அங்குள்ள ஒரு தமிழ் நண்பர், இது உள்ளூரக் குமுறிக் கொண்டிருக்கும் எரிமலையின் அமைதி. இது எப்போது வெடித்துச் சிதறும் என்பது அவர்களுக்கும், இறைவனுக்கும் மட்டும்தான் தெரியும் என்றார்.
வழக்கம்போல், கால தேவன் எல்லாவற்றையும் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறான்.
வெ. பாலமுரளி.
பி.கு: இது பற்றி வந்த ” ஹோட்டல் ருவாண்டா ” படம் பாருங்கள். இந்த இனப் பேரழிவின் உண்மையான முகம் தெரியும்.