இலங்கை வரலாறு ரொம்பவே சென்சிட்டிவான விஷயம். காரணம் அது நம் ரத்தங்களின் ரத்தம் சம்பந்தப்பட்ட விஷயம்.
அது முடிந்து போன சோக வரலாறு என்று முற்றிலுமாக ஒதுக்கியும் விட முடியாது. ஏதாவது நடந்து நிலவரம் தலை கீழாக மாறி விடும் என்று முற்றிலுமாக நம்பிக்கையும் வைக்க முடியாது. மிகவும் வேதனையான ஒரு வரலாறு.
நான் 70 களின் இறுதியில் இருந்தே இலங்கைப் பிரச்சினையை மிகவும் உன்னிப்பாகக் கவனித்து வருகிறேன்.
அப்போதெல்லாம், தமிழகத்தின் அனைத்து ஊர்களிலும், இலங்கையில் நடந்து கொண்டிருந்த வன்முறைகளை, வெவ்வேறு இலங்கைப் போராளிக் குழுக்கள், புகைப்படக் கண்காட்சி நடத்தி , தமிழக மக்களிடம் எடுத்துச் சென்று கொண்டிருந்தார்கள். மக்களின் ஆதரவும், பொருளாதார உதவியும் முக்கியமான குறிக்கோளாக இருந்தன.
குட்டிமணி, தங்கதுரை, ஜெகன் கதைகளை உணர்ச்சி பொங்கக் கேட்டிருக்கிறேன். அவர்களைச் சித்திரவதைப் படுத்திக் கொன்ற விதம் அறிந்து நிறைய நாட்கள் அழுதிருக்கிறேன்.
இந்த மூவர்தான் “விடுதலைப் புலிகள்” என்னும் குழு தொடங்க அச்சாரமிட்டவர்கள்.அப்போது அதற்கு வேறு பெயர். பிரபாகரன் எல்லாம் அவர்களுக்கு பின்னால் வந்தவரே.
ஜூனியர் விகடன் பத்திரிக்கை ஆரம்பித்தவுடன், அவர்கள் ஆரம்பித்த முதல் தொடரோ இரண்டாவது தொடரோ, இலங்கைப் பிரச்சினையைப் பற்றித்தான். அதைப் படித்தவுடன், நாமும் ஏன் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் போய் சேரக் கூடாது என்று நிறைய நாள் தீவிரமாக யோசித்திருக்கிறேன்.
எழுபதுகளின் இறுதியிலும் எண்பதுகளின் தொடக்கத்திலும் போராளிக் குழுக்கள் கன்னா பின்னாவென்று சிதறியிருந்தார்கள். பிரபாகரன் தவிர்த்து, டெலோ செல்வம், சிறீ சபாரத்தினம், பத்மநாபன், உமா மகேஸ்வரன் என்று நிறைய பேரை நேரில் பார்த்திருக்கிறேன்.அவர்களில் ஒருவரிடம் ( யாரிடம் என்று ஞாபகமில்லை) , “ஏன் நீங்கள் எல்லோரும் தனித்தனியாக சண்டையிடுகிறீர்கள் ? சேர்ந்து போரிட்டால் சுலபமாக வெற்றியடையலாமே “ என்று கேட்டிருக்கிறேன். அவரும் , நான் சிறுவன் என்று உதாசீனப்படுத்தாமல், “ தம்பி, எங்கள் அனைவரின் கொள்கைகளும் வேறு வேறு. ஆனால், லட்சியமும் இலக்கும் ஒன்றுதான். எனவே நாங்கள் அனைவரும் ஒற்றுமையுடன் தனித்தனியாக சண்டையிடுகிறோம் ” என்று குழப்பமான ஒரு தத்துவத்தை விளக்கியது இன்னும் நன்றாக ஞாபகத்தில் உள்ளது. அவர் விளக்கியது கொஞ்சம் கூடப் புரியாவிட்டாலும் கூட, ஒரு போராளிகளின் தலைவர் என்னிடம் அவ்வளவு நேரம் பேசியதே எனக்கு மிகப் பெரிய சாதனையாகவும் பெருமையாகவும் இருந்தது. மறு நாள் பள்ளியில் நான் தான் ஹீரோ.
நான் அந்தச் சிறு வயதில் கேட்ட கேள்விக்கு இன்று வரை எனக்குச் சரியான பதில் கிடைக்கவேயில்லை என்பது ஒரு வேதனையான உண்மை.
பின்னாளில் இந்திராகாந்தியும், எம்.ஜி.ஆரும் வெளிப்படையாகவே இலங்கைப் பிரச்சினைக்கு ஆதரவு கொடுத்தது மிகவும் சந்தோஷமாக இருந்தது. அதிலும், எம் ஜி ஆர், புதுக் கோட்டைக்கு அருகில், ஓரத்த நாடு என்று நினைக்கிறேன், ஒரு கிராமத்தையே விடுதலைப் புலிகளுக்கு பயிற்சி அளிக்க வழங்கினார்.
அப்போதெல்லாம், நானும் என் சின்ன அண்ணன் மகேஷூம், வீட்டை விட்டு ஓடிப் போய் அந்தப் பயிற்சி முகாமில் சேர்ந்து விடுவோமா என்று தீவிரமாக யோசித்திருக்கிறோம்.
அவ்வாறு வெளிப்படையாக ஆதரவு கொடுத்த எம் ஜி ஆரை சங்கடப்படுத்தும் விதத்தில் பிரபாகரனும் , உமா மகேஸ்வரனும் சென்னை பாண்டி பஜாரில் ஒரு பகல் நேரத்தில் ஒருவரை ஒருவர் சுட்டுக் கொண்டார்கள். தமிழகமே தலையில் அடித்துக் கொண்டது. சோ போன்றவர்கள், தீவிரமான விடுதலைப் புலிகளின் எதிர்ப்பாளர்கள் ஆனது இந்த சம்பவத்திற்குப் பிறகுதான் என்று நினைக்கிறேன்.
அடுத்து, பத்மநாபனின் சென்னை வீட்டில் வைத்து அவரை சல்லடையாக்கியது பிரபாகரனின் குழு.
அடுத்து மாத்தையனின் மரணம். அது துரோகத்திற்குக் கிடைத்த தீர்ப்பு என்று சொல்லப் பட்டதே தவிர, உண்மையில் என்ன நடந்தது என்று கடைசி வரை வெளியில் வரவே இல்லை.
கிட்டு நடுக்கடலில் வைத்து இந்தியக் கடற்படையால் கொல்லப் பட்டார். இந்தச் செய்தி பரவலாகப் பரப்பப்பட்டது. ஆனால், இந்த நாடகத்தைத் திறம்பட நடத்தியதே விடுதலைப் புலிகள்தான் என்ற செய்தி விரைவில் வெளிவந்தது.
கிட்டத்தட்ட அதே ஈகோ க்ளாஷினால்தான் தமிழ்ச்செல்வனும், பிரபாகரனுக்கு மட்டுமே அறிந்திருந்த ஒரு பங்கரில் வைத்து இலங்கைப் படையினரால் (?????????) கொல்லப்பட்டார்.
இது போன்ற நிறைய எதிர்மறையான சம்பவங்கள், விடுதலைப் புலிகளுக்கு தமிழகத்தில் ஆதரவு குறைய காரணமாக இருந்ததை அவர்கள் கடைசி வரை உணரவேயில்லை.
இந்திராகாந்தி இறந்து ராஜீவ் காந்தி பிரதமர் ஆனதும் நிலைமை தலைகீழானது. அவர்களின்
போதாத நேரம், எம் ஜி ஆரும் மரணித்தார். ராஜீவ் காந்தியும், இலங்கைப் பிரச்சினையின் தீவிரத்தைக் கொஞ்சம் கூடப் புரிந்து கொள்ளாமல், அப்போது வெளித்துறைச் செயலாளராக இருந்த நாரயணனின் அட்வைஸைக் கேட்டு நிறைய தவறுகள் செய்தார்.
ஒருதலைப் பட்சமாக இருந்த ஜெயவர்த்தன வின் ஒப்பந்தத்தில் பிரபாகரனை கட்டாயப்படுத்திக் கையெழுத்திட வைத்தது அவசியமில்லாத ஒன்றாக இருந்தது. அதுவும், பிரபாகரனை இந்தியாவிற்கு வரவழைத்து டெல்லி அசோகா ஹோட்டலில் ஹவுஸ் அரெஸ்ட் போல வைத்து, அவரை அச்சுறுத்தி கையெழுத்திட வைத்ததை அவர் கொஞ்சமும் ரசிக்கவில்லை என்று அப்போது இந்திய உயர் மட்டத்தில் இருந்த அதிகாரிகளே ஒத்துக் கொண்டார்கள்.
அதற்குப் பிறகு ஐ பி கே எஃப் இலங்கை சென்று அமைதியை நிலை நாட்டுகிறோம் பேர்வழி என்று போட்ட ஆட்டங்கள் அனைவரையும் முகம் சுழிக்க வைத்தன. இருந்தாலும், ஆண்டன் பாலசிங்கம் போன்ற முதிர்ச்சியான ஆலோசகர்கள் இருந்தும், அமைதியான முறையில் இந்திய அரசாங்கத்திடம் பேச்சு வார்த்தை நடத்தி , இந்தியாவின் உதவியைப் பெறுவதற்குப் பதிலாக, ராஜிவ் காந்தியைப் பழி வாங்குகிறேன் பேர்வழி என்று அவரைக் கொன்றார்கள் – அதுவும் நமது தமிழக மண்ணில் வைத்து. தமிழகத்தில் இருந்து கிடைத்து வந்த கொஞ்ச நஞ்ச ஆதரவும் முற்றிலுமாக விலகியது.
பிரபாகரன் ஏனோ அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அதற்கான மன்னிப்பைக் கூட அவர் கோரவில்லை. கிட்டத்தட்ட 10 வருடங்கள் கழித்து ஒரு பத்திரிக்கையாளர் கூட்டத்தைக் கூட்டி, “ ராஜிவ் காந்தி இறந்தது ஒரு துன்பியல் சம்பவம்” என்றார். தமிழகத்தில் இருந்து ஆதரவு விலகியது மட்டுமல்லாது , விடுதலைப் புலிகளின் மீது ஒரு தீராத வெறுப்பும் வந்து விட்டது.
ஆண்டன் பாலசிங்கம் கூட , லண்டனில், உடல் நலம் சரியில்லாமல் இருக்கும்போது, “ ராஜிவின் மரணம் நானே எதிர்பாராத ஒன்று. பிரபாகரனும் , பொட்டு அம்மானும் மட்டுமே அந்த முடிவை எடுத்தார்கள். அந்த நிகழ்வை வெற்றிகரமாக நடத்தி முடித்த சிவராசனுக்கே, விடுதலைப் புலிகள் அளித்த “ கடைசி விருந்தில்” தான், தான் கொல்லப் போவது ராஜிவ் காந்தியை என்பது தெரியும்” என்று தன்னுடைய நெருங்கிய நண்பர்களிடம் சொல்லி வருந்தியிருக்கிறார் என்று ஒரு செய்தி நம் பத்திரிக்கைகளில் வந்தது. எது எப்படியோ , விடுதலைப் புலிகள் தமிழர்களின் நெஞ்சத்தை விட்டு விலகிக் கொண்டேயிருந்தார்கள்.
விடுதலைப் புலிகள் அவ்வப்போது , தாங்கள் கொல்லப் போகும் நபர்களின் பெயர்களைப் பட்டியலிட்டு “ ஹிட் லிஸ்ட்” என்று ஒரு லிஸ்ட் தயாரிப்பார்கள் என்று ஒரு பேச்சு இருந்தது.
திடீரென்று அந்த லிஸ்ட்டில், கலைஞர், ஜெயலலிதா, சோ போன்றோர்கள் இருக்கிறார்கள் என்று ஒரு செய்தி வலம் வர ஆரம்பித்தது. அது உண்மையா , பொய்யா என்று கூடத் தெரியவில்லை. ஆனால், அதை விடுதலைப் புலிகள் தரப்பில் இருந்து அதிகார பூர்வமாக மறுக்கவில்லை.
உடனே கலைஞர் “ விடுதலைப் புலிகளுடன் சேர்ந்து கொண்டு, வை கோ என்னைக் கொல்லத் திட்டமிடுகிறார்” என்று ஒரு குண்டைப் போட்டார்.
சோ வின் விடுதலைப் புலிகள் எதிர்ப்பும் பன்மடங்கு பெருகியது அப்போதுதான்.
ஜெயலலிதா விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஏராளமான வார்த்தைகளை உதிர்த்தார்.
ஆக மொத்தம் தி மு க , அ தி மு க என்று இருந்த கொஞ்ச நஞ்ச ஆதரவும் முற்றிலுமாக விலகியது.
சோ தன்னுடைய ஒவ்வொரு துக்ளக் இதழிலும் விடுதலைப் புலிகள் என்பது ஒரு தீவிரவாத இயக்கம் என்று கடுமையாக விளாசினார்.
மிகவும் ஆச்சரியமாக, பிரபாகரன் இது எதையுமே சட்டை செய்யவில்லை. இந்தியாவின் உதவி இல்லாமலேயே ஜெயித்து விடலாம் என்று நினைத்தாரோ என்னவோ தெரியவில்லை.
பின்னாளில் வை கோவும், பழ நெடுமாறனும் இலங்கைப் பிரச்சினையை முன் வைத்து நடத்திய எந்தவொரு அரசியலும் மக்களிடம் எடுபடவேயில்லை.
இவ்வளவு நடந்திருந்தும், இலங்கைத் தமிழர்களின் நெஞ்சில், இந்தியா மீதும், இந்தியாவின் உளவுத் துறையான “ ரா” மீதும், நம் இந்திய மக்கள் மீதும் ஆரம்பத்திலிருந்தே ஒரு வெறுப்பு இருந்து கொண்டேயிருந்தது .
அது எனக்குத் தெரிய வந்தது, நாங்கள் கனடா குடியேறிய பிறகுதான். நாங்கள் வசித்த ஏரியாவில் ஏராளமான, இலங்கைத் தமிழர்களும் வசித்து வந்தனர். அதில் பலர் எனக்கு ( உதட்டளவிற்கு) நண்பர்கள். ஒவ்வொரு முறையும் அவர்களுடன் பேசும்போதும் , அவர்களது பேச்சில் அப்ப்ப்ப்படி ஒரு குரோதம் கொப்புளிக்கும். எனக்கு பயங்கர வருத்தமாக இருக்கும்.
ஒரு பேச்சுக்காகவேனும், ராஜிவ் காந்தியைக் கொன்றது தவறுதான் என்று ஒத்துக் கொள்ள மாட்டார்கள். அதிலும் ‘நன்னிலன்’ என்னும் இலங்கை நண்பர் ஒருவரின் குழந்தைக்குப் பிறந்த நாள் விழா என்று அழைத்திருந்தார்கள். அதில் தேவையில்லாமல் , அவர்கள் இந்தியாவைப் பற்றி சீண்ட, எனக்கோ குப்பென்று ஏறி விட்டது. அதில் ஒருவர் “ தமிழர்களுக்குத்தான் ராஜிவைப் பிடிக்காதே. அவரைக் கொன்றதில் உங்களுக்கென்ன பிரச்சினை” என்று சொல்லி உசுப்பேத்தி விட்டு விட்டார். செம ரகளையாகி விட்டது.
அவர் என்னுடைய சக இந்தியர். அவர் நல்ல அரசியல் வாதியா இல்லையா என்பது எங்கள் உள் நாட்டு விஷயம். அவரைக் கொன்றது மிகப் பெரிய தவறு. அதிலும் அவரை எங்கள் தமிழக மண்ணில் வைத்துக் கொன்றது, மன்னிக்கவே முடியாத இமாலயத் தவறு , என்று கத்தித் தீர்த்து விட்டு, சாப்பிடாமல் வெளியேறி விட்டேன்.
இந்தியா தமது நாட்டின் நலனை மனதில் கொண்டு இலங்கையில் சில பல காரியங்கள் பண்ணியிருக்கலாம். அதிலும் குறிப்பாக அமெரிக்கா, சைனா மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகள் இலங்கையில் காலூன்றி விடக் கூடாது என்று நினைத்ததென்னவோ உண்மை. அதற்காக, தங்கள் தோல்விக்கு இந்தியா மட்டுமே காரணம் என்று நினைப்பது முட்டாள்தனம் மட்டுமல்ல நன்றி மறக்கும் செயல்.
அப்படியென்றால்….அவர்கள் தோற்றதற்கு உண்மையான காரணம்தான் என்ன ?
நிறைய…
அவர்கள் ஒத்துக் கொண்டாலும் ஒத்துக் கொள்ளாவிட்டாலும், உண்மை உண்மைதான்.
அடுத்தடுத்து எழுதுகிறேன்….
வெ.பாலமுரளி
ஆதாரங்கள் :
என்பதுகளின் தொடக்கத்தில் நான் நிறைய போராளிகளை சந்தித்து , அவர்களிடம் நேரிடையில் உரையாடியது.
துக்ளக், நக்கீரன், ஜூனியர் விகடன் போன்ற பத்திரிக்கைகளில் வந்த கட்டுரைகள்.
பிரபாகரன் – வாழ்வும் மரணமும் – பா.ராகவன்
ராஜிவ் கொலை வழக்கு – எழுதியவர் பெயர் மறந்து விட்டது
வன்னி யுத்தம் – அப்பு