2004 டிசம்பரில் வந்த சுனாமி (ஆழிப் பேரலை ) எண்ணற்ற ரணங்களை விட்டுச் சென்றாலும், ஓரிரண்டு நல்ல விஷயங்களையும் விட்டுச் சென்றது நம்மில் நிறையப் பேருக்குத் தெரியாது.
அதில் ஒன்றுதான் சாளுவன் குப்பத்தில் உள்ள முருகன் கோயில்.
சுனாமி வந்து சென்ற சில மாதங்களில், மகாபலிபுரத்திற்கு அருகில் உள்ள புலிக்குகைக்கு அருகில் ( ஒரு நூறு மீட்டர் தொலைவில்) மண்ணில் உள்ளே புதைந்திருந்த ஒரு பாறை விளிம்பு ஒன்று தென்பட, நமது தொல்லியல் துறை உடனே களத்தில் இறங்கி தோண்ட, அது ஒரு பெரிய பாறை என்பதை கண்டறிந்தது.
அந்தப் பாறையைச் சுத்தப்படுத்த அதில் சில கல்வெட்டுக்கள் தென்பட்டுள்ளன. அதைக் கண்டு துள்ளிக் குதித்த நமது ஆய்வாளர்கள் அதைப் படிக்க ஆரம்பித்தனர். ஒன்றன் பின் ஒன்றாக நிறைய கல்வெட்டுக்கள் கிடைக்கத் துவங்கின ( சில கல்வெட்டுக்களின் படங்கள் இங்கே இணைத்துள்ளேன்).
அதில் முக்கியமானவை ராஷ்டிரகூட மன்னன் மூன்றாம் கிருஷ்ணன் என்றழைக்கப்பட்ட கன்னரத்தேவரின் கல்வெட்டு,முதலாம் பராந்தகச் சோழன் மற்றும் முதலாம் குலோத்துங்க சோழனின் கல்வெட்டுகள். இவையனைத்தும் “திருவிழிச்சில்” (இன்றைய சாளுவன் குப்பத்தில்) உள்ள முருகன் கோயிலுக்கு வழங்கப்பட்ட தானங்களைப் பற்றி பேசுகின்றன.
இவை தவிர சாளுவன் குப்பத்தில் கண்டெடுக்கப்பட்ட முதலாம் இராசராசச்சோழனின் கல்வெட்டும், இரண்டாம் நந்திவர்ம பல்லவன், கம்ப வர்ம பல்லவன் மற்றும் சில பிற்காலப் பாண்டிய மன்னர்களின் கல்வெட்டுக்களும் “ திருவிழிச்சில்” உள்ள முருகன் கோவிலைப் பற்றி குறிப்பிட்டிருக்க, நமது தொல்லியல் அறிஞர்களுக்கு இரண்டு விஷயங்கள் புலனாகின.
ஒன்று இங்கே அகழ்வாராய்ந்தால் தோராயமாக கி.பி. எட்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட முருகன் கோயிலின் சிதிலங்கள் காணப்படலாம்.
இரண்டாவது கி.பி. 15ம் நூற்றாண்டில் இந்தப் பகுதியை ஆண்ட சாளுவ நரசிம்ம தேவராயன் காலத்தில் “சாளுவ குப்பம்” என்று மாற்றப்பட்ட இந்த ஊரின் ஆரம்ப காலப் பெயர் “ திருவிழிச்சில்”.
பிறகென்ன….ஆரவாரமாக அகழ்வாராய்ச்சி தொடங்கப்பட…..
பிங்கோ…..”கருங்கற்களாலான” கோயிலின் பெரும் கட்டுமானப் பகுதியும் கல்லால் செதுக்கப்பட்ட ஒரு வேலும் கிடைத்தன. அதன் கட்டுமான அமைப்பையும், இரண்டாம் நந்திவர்ம பல்லவனின் கல்வெட்டையும் சேர்த்துப் பார்க்கையில் இந்தக் கோயில் கி.பி. எட்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது உறுதியானது.
ஆனால், ஆச்சரியமாக சங்க காலத்தைச் சேர்ந்த சில மீன்களின் படிவங்களும், சங்க கால சம்பந்தப்பட்ட குரவைக் கூத்து விளையாட்டு தொடர்பான சில பொருட்களும் கிடைக்க இன்னும் கீழே தோண்ட ஆரம்பித்துள்ளனர்.
நினைத்தது போலவே, சங்ககாலத்தைச் சேர்ந்த ஒரு செங்கல் கட்டுமானத்தின் அடிப்பகுதியும் கிடைத்தது.
கி.பி.ஆறு மற்றும் ஏழாம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட ஆகம/சிற்ப சாத்திரங்கள், சைவக் கோயில்கள் கிழக்கு அல்லது மேற்கு நோக்கியே இருக்க வேண்டுமென பரிந்துரைக்கின்றன.
ஆனால், இந்தக் கோயில் வடக்கு நோக்கி கட்டப்பட்டிருக்கின்றது. எனவே, இந்தக் கோயில் ஆகம சாத்திரங்கள் இயற்றப்படுவதற்கு முன்னரே கட்டப்பட்டிருக்க வேண்டும் என்பது உறுதியானது.
அது மட்டுமல்லாது, இங்குள்ள செங்கற்களின் அளவு மிகப் பெரிதாக பூம்புகார் மற்றும் மதுரை மீனாட்சிபுரம், மாங்குடி போன்ற இடங்களில் கண்டெடுக்கப்பட்டது போலவே இருக்க, இந்தக் கோயில் கண்டிப்பாக சங்க காலத்தில் கட்டப்பட்டது தெளிவானது.
சங்க காலம் என்பது கி.மு.மூன்றாம் நூற்றாண்டிலிருந்து கி.பி. மூன்றாம் நூற்றாண்டு வரை என்பது பொதுவான கருத்து. சிலர் அந்தக் கூற்றை மறுத்து, கி.மு.ஐந்தாம் நூற்றாண்டிலிருந்து கி.பி.ஐந்தாம் நூற்றாண்டு வரை என்கின்றனர்.
எது எப்படியோ, இது தோராயமாக கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது உறுதி.
கிட்டத்தட்ட கி.மு.இரண்டாம் நூற்றாண்டு வாக்கில் வந்த சுனாமி இந்தக் கோயிலை அழித்திருக்க வேண்டும்.
அந்த சுனாமி விட்டுச் சென்ற ஏதோவொரு தடயத்தைப் பின்பற்றி பல்லவர்கள் காலத்தில் அதே இடத்தில் இந்தக் கோயில் மறுபடியும் எழுப்பப்பட்டிருக்க வேண்டுமென தொல்லியல் அறிஞர்கள் கருதுகின்றனர்.
அது தவிர….ஆரம்ப காலக் கோயிலின் கருவறை ஆறடிக்கு ஆறடி என்று சதுர வடிவில் ஒரு குழி போல உள்ளது. அங்கு எந்தவொரு கதவோ, ஜன்னலோ, கழிவு நீர் செல்ல குழாய்களோ இல்லை ( இப்போதும் அதை கீழே உள்ள ஒரு படத்தில் பார்க்கலாம்). எனவே இங்கு எந்தவோரு தெய்வச் சிலையையும் வைத்து வழிபட்டிருக்க வாய்ப்புகள் குறைவு. எனவே அந்தச் சமயத்தில் இது இயற்கை வழிபாட்டுத் தலமாக இருந்திருக்கலாம் என்பது சிலரின் கருத்து.
இப்போதுதான் முருகனுக்கு முறையாக ஒரு கோயில் கட்டுகிறோமே, பழைய தடங்கள் எதற்கு என்று அதன் எச்சங்கள் பின்னாளில் அகற்றப்பட்டிருக்கக் கூடும். பல்லவர்கள் முருகனுக்கு கோயில் கட்டியதும் ஆச்சரியம். அவர்கள் பாண்டியர்கள் போலல்லாமல், சிவனுக்கும், வினாயகருக்கும், நடராஜருக்கும்தான் அதிக முக்கியத்துவம் கொடுத்ததாக வரலாறு சொல்கிறது. அவர்கள் முருகனுக்குக் கோயில் எழுப்பியுள்ளதால், அவர்கள் இந்த இடத்தை முதலில் கண்ட போது முருகன் கோயில் இருந்ததற்கான எச்சங்கள் கிடைத்திருக்கவும் வாய்ப்புகள் உள்ளன. அதன் காரணமாகவே அவர்களும், அந்தப் பழைய கட்டுமானத்தின் மீது முருகனுக்கே ஆலயம் கட்டியிருக்கலாம் ( இது என்னுடைய அனுமானம்).
இங்குள்ள பெரிய பாறையைச் சுற்றியே பிரகாரம் அமைக்கப்பட்டுள்ளது. அதில் சில கல்வெட்டுக்கள் பொறிக்கப்பட்டிருப்பதால், அதை எதற்கு பிரகாரத்தின் நடுவில் விட்டு வைத்தார்கள் என்பதும் புரியாத ஒரு புதிர். அதை ஒரு யானைச் சிற்பமாக செதுக்கத் தொடங்கி ஏதோவொரு காரணத்தினால் அதை வெறும் பாறையாகவே விட்டு விட்டார்கள் என்பது சிலரின் கருத்து.
எது எப்படியோ, இன்றும் இந்த இடத்திற்குச் சென்றால் சங்ககாலத்தில் உள்ள செங்கற்கல் கட்டுமானத்தையும், அதற்கு மேல் கட்டப்பட்ட கருங்கல் கட்டுமானத்தையும், பிரகாரத்தின் நடுவில் இந்தப் பெரிய பாறையயும் காண முடியும்.
இரண்டாம் நரசிம்மவர்ம பல்லவனின் கல்வெட்டும் இந்தக் கோயிலைப் பற்றி சொல்வதனால், இதன் இரண்டாவது கருங்கல் கட்டுமானம் காஞ்சிபுரம் கைலாச நாதர் கோயில் கட்டப்பட்ட காலத்திலேயே கட்டப்பட்டிருக்க வாய்ப்புகள் உள்ளன.
கி.பி. 15ம் நூற்றண்டின் இறுதி அல்லது அல்லது கி.பி. 16ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஏற்பட்ட மற்றொரு இயற்கைச் சீற்றத்தினால் இரண்டாவது முறையாக இந்தக் கோயில் அழிக்கப்பட்டுள்ளது.
இதில் மிகவும் ஆச்சரியமான ஒரு விஷயம் என்னவென்றால், முதன் முதலில் சங்க காலத்தில் ஏற்பட்ட ஒரு சுனாமியால்தான் இந்தக் கோயில் அழிவடைந்துள்ளது.
அதே சுனாமி 2004 இந்தக் கோயிலைத் திரும்ப வெளிக் கொண்டு வந்து விட்டது.
கமல் இதன் தாக்கத்தில்தான் தசாவதாரம் படத்தை எடுத்திருப்பாரோ ?
வெ.பாலமுரளி
தகவல்கள் உதவி : தமிழ் விக்கிப் பீடியா
பி.கு: மகேந்திரவர்மன் செதுக்கிய புலிக் குகையையும், அங்குள்ள ஒரு சிவனின் குடைவரைக் கோயிலையும் முறையாகப் பாதுகாக்கும் நமது அரசாங்கம், இந்த முருகன் கோயிலைச் சுற்றி ஒரே ஒரு வேலியையும், பூட்டில்லாத ஒரு கதவையும் மட்டும் போட்டு விட்டு, அம்போ என விட்டு விட்டது மனதை என்னவோ செய்கிறது. இதைப் போன்ற 2000 வருடங்களுக்கும் பழைமையான ஒரு கட்டுமானம் ஐரோப்பிவிலோ, அமெரிக்காவிலோ கிடைத்திருந்தால் இதை வேறு லெவலுக்கு எடுத்துச் சென்றிருப்பார்கள்.
இதை மட்டும் முருகப் பெருமான் பார்க்க நேர்ந்தால், அஞ்சலி படத்தில் வரும் ஒரு பாப்பா சொல்வது போல முருகனும் “ நாம வேற எங்கேயாவது போய்ப் பிறந்திருக்கலாம்” என நொந்து போயிருப்பான்.
வேல் யாத்திரை சென்ற நம்ம பிஜேபி முருகன் கூட இந்த முருகனைக் கண்டு கொள்ளவில்லை என்பது வேதனை.