மாயன் நாகரிகம் ……


2012 என்னும் ஆங்கிலப் படம் வரும் வரை, நம்மில் பலருக்கும் மாயன்கள் பற்றியோ, அவர்களின் நாகரிகம் பற்றியோ, அவர்களுடைய அதீதமான அறிவியல் ஞானம் பற்றியோ, அவர்கள் எழுதி வைத்த காலண்டர்கள் பற்றியோ பரவலாகத் தெரிந்திருக்கவில்லை.

2012 டிசம்பர் 22 ம் தேதி உலகம் அழியப் போகிறது என்று மாயன்கள் எழுதி வைத்திருக்கிறார்கள், என்று ஆங்கிலப் படம் லௌட் ஸ்பீக்கர் வைத்துச் சொல்ல , இந்தியா, சீனா போன்ற மிகச் சில நாடுகள் தவிர்த்து உலகம் முழுவதும் ஒரு அதிர்வலை கிளம்பியது என்னவோ நிஜம். அதிலும் மேற்கத்திய நாடுகள் என்று சொல்லப் படும் வளர்ந்த நாடுகள் ரொம்பவே அதிர்ந்தன. ஆச்சரியம்.

உலகின் பழமையான நாகரிகங்களில் மாயன் நாகரிகமும் ஒன்று.

எகிப்து, சுமேரியன் நாகரிகங்கள் இருந்த போதே மாயன் நாகரிகமும் இருந்திருக்கிறது என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன. சக்கரம்தான் அறிவியல் வளர்ந்ததன் முதல் படி என்றாலும் கூட, மாயன்கள் ஏனோ சக்கரத்தை உபயோகப்படுத்தாமல் வெறும் ஆடு மாடுகளை வைத்தே விவசாயத்தை முறையாக செய்திருக்கிறார்கள். ஆம், விவசாயத்தை முதன் முதலில் முறையாக அறிமுகப்படுத்தியது மாயன்கள்தான்.

மாயன்களின் காலம் கிட்டத்தட்ட கி.மு. 6000 முதல் தொடங்குகிறது. அவர்கள் மத்திய அமெரிக்காவை மையமாக வைத்தே வாழ்ந்திருக்கிறார்கள். மெக்ஸிகோ, பனாமா, க்யூபா, கொண்டுராஸ், நிக்கரகுவா, குவாத்தமாலா, எல் சல்வாடோர், ஹைட்டீ மற்றும் கோஸ்ட்டா ரீகா நிலப்பகுதிகள்தான் அவர்கள் கோலோச்சிய பகுதிகள்.

அவர்கள் என்னதான் கி.மு. 6000 வாக்கில் இருந்திருக்கிறார்கள் என்றாலும் கூட , அவர்களுடைய அசாத்திய வளர்ச்சிகளும் நிறைய முன்னேற்றங்களும் கி.மு. 2000 முதல் கி.பி.900 வரைதான். இந்தக் கால கட்டத்தில் அவர்கள் சாதித்தது நம்முடைய (இன்றைய) கற்பனை சக்தியையும் மீறியது. எப்படி ??????

மாயன்கள் பற்றி நமக்குத் தெரிந்ததை விட தெரியாததே ஏராளம். அதில் சில தெரியாதவை :

1. கணிதவியலில் அவர்கள் பட்டையைக் கிளப்பி இருக்கிறார்கள். மிகவும் எளிதான முறைகளைப் பயன்படுத்தி , மில்லியன் , பில்லியன், ஸில்லியன் நம்பர்களையெல்லாம், சர்வ அலட்சியமாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள். எப்படி ? தெரியவில்லை. ( அவர்கள் பயன்படுத்திய கணித முறையைப் பற்றி கூகுளில் நிறைய ஆர்ட்டிகள்ஸ் உள்ளன. நேரம் கிடைத்தால், பார்க்கவும்)

2. வானவியல் பற்றி கன்னா பின்னாவென்று தெரிந்து வைத்திருக்கிறார்கள். அதில் ஏவுகணை , விமானம், ஓடுதளம் , பால்வீதி , சூர்ய குடும்பம் , விண்வெளி மனிதர்கள் எல்லாவற்றையும் மிகவும் தெளிவாகச் செதுக்கி வைத்திருக்கிறார்கள். எப்படி? தெரியவில்லை? ( இது பற்றி தெரிய வந்த அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற மேற்கத்திய நாடுகள் இதில் எதையும் ஜீரணிக்க முடியாமல், முடிந்த வரை இதில் எதுவும் மிகவும் பாப்புலாராகி விடாமல் பார்த்துக் கொண்டன. இதில், ஸ்பெயின் பண்ணியது கொடுமையிலும் கொடுமை. விபரம் பின்னால்)

3. எகிப்தில் பிரமிடுகள் கட்டப்பட்ட அதே நேரத்தில் மாயன்களும் ஏராளமான பிரமிடுகள் கட்டினார்கள். எகிப்தியர்கள் , இறந்தவர்கள் நல்லபடியாக (?????!!!!!!) மேலுலகத்தில் போய் வசிக்க வேண்டும் என்பதற்காக பிரமிடுகள் கட்டி அதில் இறந்தவர்களின் உடலைப் பதப்படுத்தி , அதனுடன் ரொட்டி, தேன் போன்ற உணவுப் பொருட்களை வைத்து ஃபினிஷ் பண்ணினார்கள். கூடவே சில வேலையாட்களையும் சேர்த்து அனுப்பி வைத்தார்கள் ( பின்னே…மேலே போன பிறகு, வீடு கூட்டி , துணிமணிகள் துவைத்து , சமையல் செய்வது எப்படியாம் ) . ஆனால், மாயன்கள் நம்ம இந்தியர்கள் ஸ்டைலில் கடவுள்களுக்காக பிரமிடுகள் கட்டினார்கள். நம்ம இந்துக்கள் கட்டிய கோவில்களே பிரமிடு ஸ்டைல்தான் என்று அமெரிக்கர் ஒருவர் கிளப்பி விட , அந்த எப்பிஸோடு வேற கொஞ்ச நாள் பர பரப்பாக ஓடிக்கொண்டிருந்தது ஒரு தனிக் கதை. மாயன்களுக்கும் நம்ம தமிழர்களுக்கும் நிறைய ஒற்றுமைகள் இருந்தன. எப்படி ? தெரியவில்லை. ( நம் தமிழர்கள் நாகரீகம் அவர்கள் அளவுக்கு பழமையானதாக இருந்ததற்கான எந்த ஒரு வரலாற்றுச் சான்றுகளும் நம்மிடம் இல்லை என்பது ஒரு கசப்பான உண்மை. அதிகபட்சம் கி.மு. 6 ம் நூற்றாண்டுதான் நம்முடைய மிகவும் பழமையான வரலாறு).

4. உலகின் முதல் நாட்காட்டியை உருவாக்கியது மாயன்கள்தான். ஒரு ஐந்தாறு பற்சக்கரங்களை ஒன்றிணைத்து அவையனைத்தும் ஒன்றையொன்று சார்ந்து சுற்றுமாறு டிசைன் பண்ணி, அவையனைத்தும் சுற்றி முடிக்கும்போது 365 நாட்கள் முடியுமாறு செய்தது, இன்று வரை யாருக்கும் புரியாமல் எல்லோரும் தலை முடியைப் பிய்த்துக் கொள்ளும் ஒரு குழப்பம். அவர்களால் எப்படி சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாடியே அப்படிக் கண்டு பிடிக்க முடிந்தது ? தெரியவில்லை.

5. அதுமட்டுமல்ல. அவர்கள் கண்டு பிடித்தது மூன்று வகையான நாட்காட்டிகள். ஷோல்ட்டூன், ஷோலப் & ஷோல் கிஜ். இதில் இரண்டாவதும், மூன்றாவதும் 365 நாட்கள் மற்றும் 260 நாட்களை ஒரு வருடமாக எடுத்துக் கொண்டு கண்டுபிடித்தவை. ஷோல்ட்டூன் மட்டும் நீண்ட காலக் கணக்கை அடிப்படையாகக் கொண்டது. இதுதான் 2012 இல் உலகம் அழியப் போகிறது என்னும் குழப்பத்தைக் கொண்டு வந்தது. இதுவும் சிற்சில பற்சக்கரங்களை ஒண்றிணைத்து செய்யப் பட்ட நாட்காட்டி. இவையெல்லாம் 2012 டிசம்பர் மாதம் 22 ம் தேதி ஒரு சைக்கிள் சுற்றி முடிந்தது. Y2K பிரச்சினையை அமெரிக்கா பூதாகரமாகிப் பார்த்தது போல், இந்த மாயன் காலண்டரையும் இந்த உலகம் பூதாகரமாகிப் பார்த்தது.

2012 டிசம்பர் மாதம் 22 ம் தேதிக்கு மறு நாள் நம்ம ஜெயலலிதாவும் கருணாநிதியும் வழக்கம்போல் அடித்துக் கொண்டார்கள். எங்கள் பி.ஜே.பி மட்டும் ஆட்சிக்கு வந்தால், ஓவர் நைட்டில் இந்தியாவை உடனே வல்லரசாக்கி விடுவோம் என்று மோடி ஜி சூளூரைத்தார். நாங்கள் செய்த (2G) சாதனைகளுக்கு, அடுத்து வரும் எலெக்‌ஷனிலும் நாங்களே ஆட்சியைப் பிடிப்போம் என்று ராகுல் காந்தி காமெடி செய்தார். வழக்கம்போல் மன்மோகன் சிங் மௌனம் காத்தார். முரளி வழக்கம்போல், மசை மாரா போவதா இல்லை இந்தியா போவதா என்று குழம்பி கடைசியில் உள்துறை அமைச்சரின் முடிவின் பேரில் இந்தியா சென்றான். மொத்தத்தில், எல்லாமே வழக்கம் போல் நடந்தது.

அப்படியென்றால் எங்கே தவறு நடந்தது ? எங்கேயும் தவறு நடக்கவில்லை. அது தவறான புரிதல் மட்டுமே. அது பற்றி , 2012 க்கு சில வருடங்களுக்கு முன்னாடியே நம்ம மதன் தன்னுடைய ஹாய் மதன் பகுதியில் அட்டகாசமான ஒரு கட்டுரை எழுதி விட்டார். சமீபத்தில் நம் உலகம் அழிய வாய்ப்பேயில்லை. அவை மனிதர்களின் அஜாக்கிரதையால் மெல்ல மெல்லத் தான் அழியுமே தவிர , ஒட்டு மொத்தமாக நாம் நினைப்பது போல் அழியாது என்று தன்னுடைய ஸ்டைலில் விளக்கியிருந்தார். அதற்கு இன்னும் குறைந்தது 10, 000 வருடங்களாவது என்றும் சொல்லி தன் வாசகர்கள் வயிற்றில் பாலை வார்த்திருந்தார்.

அது சரி ராசா…அப்படின்ன்னா அந்த காலண்டர் சமாச்சாரம் ?????? ரொம்ப சிம்பிள். அந்த கால கட்டத்தில் அந்த பற்சக்கரங்களை ஒரு குறிபிட்ட அளவிற்கு மேல் செய்வதில் சில சிக்கல்கள் இருந்திருக்க வேண்டும். ஸோ வாட் ???? இரண்டாவது சைக்கிள் மூன்றாவது சைக்கிள் என்று போகட்டுமே என்று விட்டிருக்க வேண்டும். மற்றபடி அதில் தவறு இருந்திக்க வாய்ப்பில்லை. காரணம், அவர்கள் மூளை அந்த மாதிரி.
சமீபத்தில் வாழ்ந்த நம்ம கலீலியோ காலம் வரைக்கும் கூட பூமியைச் சுற்றியே இந்த அகிலம் இயங்குகிறது என்றே நம்பி வந்துள்ள போது 1000 ஆண்டுகளுக்கு முன்னாலேயே, சூரியனைச் சுற்றி 9 கோள்கள் சுற்றுவது போல் சுவற்றில் செதுக்கி வைத்திருக்கிறார்கள். ஆச்சர்யம்.

தங்கள் கண்டுபிடிப்புககளையெல்லாம், பதப்படுத்திய மான் தோலில் சித்திர எழுத்துக்களாக வரைந்து வைத்து விட்டுப் போனது அதிசயத்திலும் அதிசயம்.

அப்பேற்பட்ட அறிவான ஒரு இனம் கி.பி. 900 முதல் கி.பி. 1100 வரை கொத்து கொத்தாக மாயமாக மறைந்தது எப்படி என்பது இன்று வரை வரலாறு ஒளித்து வைத்திருக்கும் மிகப் பெரிய புதிர். யாராலும் இதுதான் நடந்திருக்க வேண்டும் அல்லது இப்படித்தான் நடந்திருக்க வேண்டும் என்று அறுதியிட்டுச் சொல்ல முடியவைல்லை. ஆனால் ஏதோ விபரீதமாக நடந்திருக்க வேண்டும் என்பது மட்டும் புரிகிறது.

அந்தப் பேரழிவில் இருந்து தப்பித்தவர்கள் மிகக் குறைவானவர்களே. அவர்களும் மிக விரைவிலேயே ஒரு மிகப் பெரிய கலாச்சாரச் சீரழிவைச் சந்தித்தார்கள். இந்த முறை ஆபத்து ஸ்பெயினில் இருந்து 16 ம் நூற்றாண்டில் டியாகோ டி லாண்டா என்னும் கிறிஸ்துவ பாதிரியார் மூலம் வந்தது. தென் அமெரிக்கா வந்து சேர்ந்த அவர் , மாயன்களையும் அவர்களின் எளிமையும் பார்த்து அந்த இனத்தை மத மாற்றம் செய்யும் முயற்சியில் இறங்கினார்.

அவர்களும், ஒப்புக்காக மதம் மாறினாலும், ஒவ்வொரு இரவிலும் தங்கள் கோவிலுக்குச் சென்று, தங்கள் தெய்வங்களை வழிபட்டனர். இது அறிந்த டியாகோ , ஸ்பானிய ராணுவத்தின் உதவியுடன், மாயன்கள் மான் தோலில் எழுதி வைத்த அனைத்து புத்தகங்களையும் தீ வைத்து கொளுத்தி விட்டார். அராஜகம். அதில் அவர்களிடம் கொஞ்ச நஞ்சம் மிச்சமிருந்த கண்டுபிடிப்புக்களும் தீயில் கருகி விட்டன. அந்த அப்பாவிகளும் அவ்வளவு பெரிய ராணுவத்தை எதிர்த்து குரல் கொடுக்க திராணியில்லாமல் மௌனமாகிவிட்டார்கள்.

அந்த அராஜகச் செயலுக்கு அவர்கள் சொன்ன காரணங்கள்.

1. மாயன்கள் காட்டுமிராண்டிகள். அவர்கள் ஒவ்வொரு போருக்கு முன்னாலும் நரபலி கொடுக்கிறார்கள்( இந்த வழக்கம் நம் தமிழகத்திலும் நெடுங்காலமாக இருந்து வந்திருக்கிறது). பிரிட்டிஷார், ஸ்பானியர்கள், ஃபிரெஞ்சு அரசாங்கம், பொர்த்துக்கீசியர்கள் எல்லோரும் அகிம்சை முறையிலா இந்தியா போன்ற நாடுகளை அடிமையாக்கி வைத்திருந்தார்கள் என்றெல்லாம் நீங்கள் கேட்கக் கூடாது. சரியா?

2. அவர்கள் சைத்தானை வழிபடுகிறார்கள். இது என்னவோ உண்மைதான். ஆனால், இன்றளவுக்கும் உலகில் நிறையப் பேர் Devil Worship செய்கிறார்கள். அவர்களுக்கு Masonics என்ற முறையான ஒரு அமைப்பே உள்ளது. உலகின் பெரும் புள்ளிகள் நிறையப் பேர் அதன் உறுப்பினர்கள். கூகுளில் தேடிப் பாருங்கள். கொத்து கொ த்தாகத் தகவல்கள் வருகின்றன.

என்னதான் ஸ்பானியர்கள் சப்பைக் கட்டு கட்டினாலும், அவர்கள் , குறிப்பாக டியாகோ ஆடிய ஆட்டம் கொஞ்சம் டூ மச் தான் என்று உலகம் பின்னால் ஒத்துக் கொண்டது.

இந்தக் களேபரத்தில் ஒரு நாலே நாலு புத்தகங்கள் மட்டும் தப்பி விட்டன. அவை ஸ்பெயின், ஜெர்மனி, ஃபிரான்ஸ் மற்றும் மெக்ஸிகோ நாட்டு ம்யூஸியங்களில் உள்ளன.

நான் 2018 இல் மாயன்களைத் தேடி சிஷேன் இட்ஸா , மச்சு பிச்சு எல்லாம் சுத்தலாம் என்று இருக்கிறேன்.

யாரெல்லாம் என்னுடன் வருகிறீர்கள்?

வெ.பாலமுரளி

பி.கு: இந்தக் கட்டுரை எழுத , தங்கை பானு ரேகா அனுப்பிய ராஜ் சிவா என்பவர் எழுதிய சில கட்டுரைகளும், மதனின் சில கேள்வி பதில்களும், கூகுள் ஆண்டவரும் உதவியாக இருந்தன. அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்..