தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டின் போது எல்லோரும் உபயோகித்த வார்த்தை காட்டு மிராண்டித்தனம். இந்த காட்டு மிராண்டித்தனம் ஏதோ இன்றோ நேற்றோ உருவானதில்லை. கிட்டத்தட்ட மனித இனம் உருவான நாளில் இருந்து, கிட்டத்தட்ட 3 லட்சம் ஆண்டுகளாக நாம் காட்டு மிராண்டிகளாகத்தான் இருந்து வந்திருக்கிறோம். இன்னும் இருந்து கொண்டிருக்கிறோம்.
அதுவும் கூட்டம் சேரும்போது நாம் நம் வசமிழக்கிறோம். ஒரு போலிஸ்காரர் துப்பாகியை எடுத்துக் கொடுக்க, இன்னொருவர் அதை வாங்கி அந்த வேனில் ஏற, அதை ஒரு பெரிய போலிஸ் பட்டாளமே வேடிக்கை பார்த்தது. யாரும் யாரையும் தடுத்தது போலத் தெரியவில்லை.
அதேபோல்தான் கலவர நேரங்களில், வாகனங்களைக் கொளுத்துவது, சில சமயம் உள்ளுக்குள் இருக்கும் மனிதர்களையும் வைத்தே கொளுத்துவது, போகிற வருகிற வாகனங்களின் மீது கற்களை எறிவது , பந்த் என்கிற பெயரில் வெறியாட்டம் ஆடுவது – எல்லாம்.
இதைத்தான், ரவிந்திரநாத் தாகூர் “ Man is Kind. But Men are cruel” என்றார்.
டைம் மெஷினில் கொஞ்சம் பின்னோக்கி போகலாம்.
ஒரு 450 கோடி (4500 மில்லியன் ) வருடங்களுக்கு முன்னர் இந்த பூமி கிடையாது.
நம்முடைய அண்ட வெளியில் ஒரே தூசும் , வாயுக்களும் மட்டும்தான். அவையெல்லாம் ஒன்று சேர்ந்து ஒரு மிகப் பெரிய நெருப்புக் கோளமாக உருமாறி , அழுத்தம் தாளாமல் ஒரு நாள் வெடித்து (Big Bang) அதிலிருந்து சிதறிய ஒரு தக்கனூண்டு கோளமே நமது பூமி. இந்த Big Bang நடப்பதற்கு பலகோடி வருடங்கள் ஆகியிருக்கின்றன.
அப்போது அமெரிக்கா, இந்தியா, ஆப்பிரிக்கா, ஆஸ்ட்ரேலியா எல்லாம் ஒன்று சேர்ந்து ஒற்றுமையாக இருந்திருக்கின்றன. பின்னால், ஒவ்வொன்றாக விலக ஆரம்பித்திருக்கின்றன – ரொம்ப ஸ்லோ மோஷனில். அப்படி ஸ்லோ மோஷனில் இந்தியா விலகிப் போய் ஆசியாவைப் போய் முட்டியது. அப்படி முட்டிய போது, ஒரு படத்தில் ஹாஸ்டல் வார்டனாக வரும் நம்ம வடிவேலுவை மாணவர்கள் வரிசையாக வந்து தலையில் நங்கு நங்கு என்று கொட்ட, டமாலென்று தலை புடைத்துப் போய் ஒரு குன்று முளைக்குமே, அதுபோல் முளைத்ததுதான் நம்ம இமயமலை. ஆம்…அதுவரை அது கடலுக்குள்தான் இருந்தது. பல கோடி வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த கடல் வாழ் உயிரினங்கள் நிறைய இமய மலையில் படிவங்களாக பின்னர் கண்டெடுக்கப்பட்டு இந்தத் தியரி உறுதி செய்யப் பட்டது.
அதே போல் பூமி உருவானவுடனேயே, மனிதர்கள் தோன்றி விடவில்லை. சில கோடி வருடங்களுக்கு நமது பூமியில் எந்த ஜீவ ராசிகளும் உருவாகவில்லை.
திடீரென்று ஒரு நாள் பலமான மின்னல் ஒன்று வெட்ட அது கடல் நீரில் பாய்ந்து, ஏதோ ஒரு ரியாக்ஷன் நடந்து பாக்டீரியா ஒன்று தோன்றியது. அந்த அதிசயம் எப்படி நடந்தது என்று இன்னும் கண்டுபிடிக்கவில்லையென்றாலும் கூட அப்படித் தோன்றிய பாக்டீரியாதான் நம்முடைய எள்ளுத் தாத்தா (அ) எள்ளுப் பாட்டி என்பது உறுதி செய்யப் பட்டு விட்டது.
அதற்குப் பிறகு கடற்பாசி, பின்னர் தவளைபோலும் இல்லாமல் மீன் போலும் இல்லாமல் நீரிலும் தரையிலும் வாழும் ஒரு உயிரினம், ராட்சச சைஸில் நிறைய பறவையினம், டைனோசர்ஸ் என்று படிப்படியாக நிறைய உயிரினங்கள் உருவாகி சில கோடி ஆண்டுகள் உயிர் வாழ்ந்து எதேனும் ஒரு இயற்கை சீற்றத்தால் கூண்டோடு மாண்டு போயின.
அந்தா இந்தா என்று நம்முடைய க்ளோஸ் எள்ளுத் தாத்தா மிஸ்டர் குரங்காரின் ஜீன் உருவாக 440 கோடி வருடங்கள் ஆகின. சரியாகச் சொல்லப் போனால் ஒரு 8 ½ கோடி வருடங்களுக்கு முன்னால்தான் குரங்கின் ஜீனின் மூலம் ஒரு விலங்கில் தோன்றியது. (இந்த டார்வின் தியரியே தவறு என்று சைடில் வேறு ஒரு ட்ரைலர் போய்க் கொண்டிருக்கிறது. நாம் அதற்குள் செல்ல வேண்டாம் )
ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தில், அந்த முன்னோரிடமிருந்து இரண்டு இனம் பிரிந்தது ஒன்று குரங்கு ( Apes என்னும் பரிணாம வளர்ச்சி அடைவதற்கு முன்னால் இருந்த ஒரு பங்காளி). இன்னொன்று குரங்கு மாதிரி இருந்த மனித இனம்….இது நடந்து 60 லட்சம் வருடத்திற்கு மேலாகிறது ( சரியான காலத்தைப் பற்றி வெவ்வேறு கருத்துக்கள் உள்ளன).
ஆனால், முழுதாக பரிணாம வளர்ச்சியை எட்டிய மனிதன் (ஆக்சுவலாக மனுஷி ) தோன்றி 3 லட்சம் ஆண்டுகள்தான் ஆகின்றன. அந்தப் பெண் சென்ற காலடியை கென்யா – எத்தியோப்பியா பார்டரில் உள்ள லேக் துர்க்கானா என்ற பகுதியில் கண்டு பிடித்டிருக்கிறார்கள். அந்தப் பெண் மலைச் சரிவில் இருந்து நடந்து ஏரியை ஒட்டி நடந்திருக்கிறாள். ஒரு இடத்தில் போய் சிந்தனை வயப்பட்டு நின்றிருப்பது போல் தெரிகிறது ( ஒரு வேளை அப்போதே அவளுக்கு, இந்த நாட்டில் (??) பாலா என்னும் ஒரு உன்னத (???) புகைப் படக் கலைஞன் வந்து பட்டையைக் கிளப்பப் போகிறான் என்பது தெரிந்து , அவனை நாம் சந்திப்போமோ மாட்டோமோ என்று கவலை தோய்ந்த சிந்தனையில் இருந்திருக்கலாம் என்று ஒரு சில ஆய்வாளர்கள் கூறுகிறார்கள் ( ஹி…ஹி…ஹி…).
Jokes apart….ஆதி மனிதர்கள் தோன்றிய இடம் (கென்யா இருக்கும்) கிழக்கு ஆப்பிரிக்காவில்தான் என்பது உறுதியாகக் கண்டுபிடிக்கப்பட்டு விட்டது. இது சம்பந்தமான நிறைய ஆவணங்களையும், கண்டுபிடிப்புகளையும் நைரோபி நேஷனல் மியூஸியத்தில் இன்றும் காணலாம்.
மனித இனங்களிலும் நிறைய இனம் இருந்து அவற்றில் பல அழிந்தன. சில பரிணாம வளர்ச்சி அடைந்து இரண்டு வகையாக பிரிந்தன. நாம் அவற்றிற்கு வைத்த பெயர்கள். நியாண்டர்தால் & ஹோமோ செப்பியன்.
இதில் நியாண்டர்தால் நமக்கு மூத்த சகோதரர்கள். நம்மை விடக் கொஞ்சம் புத்திசாலிகளும் கூட. அப்போதெல்லாம், மின்னல் வந்து பட்டுப் போன மரங்களில் பாய்ந்து தீயை உண்டு பண்ணியிருக்க வேண்டும். முதலில் அதைப் பார்த்து பயந்து ஓடியவர்கள், பின்னாளில் அதன் அருகில் வந்து குளிர் காய்ந்திருக்கிறார்கள். பின்னர் அவர்கள்தான் சிக்கி முக்கிக் கற்களைக் கொண்டு தாமே நெருப்பை உண்டு பண்ண முயற்சித்து வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். அந்த சயிண்டிஸ்ட் (என்னைப் போல்) ரொம்ப தன்னடக்கமான பேர்வழி போலிருக்கு ( ஹி..ஹி…ஹி). எனவே, தன்னுடைய பெயரை எங்கும் பதிவு செய்யவில்லை.
ஒரு சமயம், அவர்களுடைய பிராணிகளில் ஏதோ ஒன்று நெருப்பில் விழுந்து விட அதைக் காப்பாற்ற முடியாமல், அதை உண்ண எத்தனிக்கையில் அதன் சுவை பிடித்துப் போக, அதில் இருந்து இறைச்சிகளை சுட்டுச் சாப்பிட ஆரம்பித்திருக்கிறார்கள். ஆம், அவர்கள்தான் Barbeque Concept ஐ முதல் முதலில் கண்டு பிடித்தது .
மற்றவர்களின் நிர்வாணத்தைப் பார்த்து முதன் முதலில் “ ஷேம் ஷேம் பப்பி ஷேம் “ என்று சொன்னது நியாண்டர்தால் மக்கள்தான். ஆம், அவர்கள்தான் விலங்குகளின் தோலை ஆடையாக உடுத்த ஆரம்பித்தது.
ஓரிரு லட்சம் ஆண்டுகள் நியாண்டர்தாலும், ஹோமோசெப்பியர்களான நாமும் ஒரே காலகட்டத்தில்தான் வாழ்ந்திருக்கிறோம். கலப்பு கூட நடந்திருக்க வாய்ப்புண்டு என்கிறார்கள். ஆனால், ஹோமோசெப்பியன் ஜீனில் நியாண்டர்தால் ஜீனைக் கண்டு பிடிக்க முடியவில்லை.
ஒரு குறிப்பிட்ட காலத்தில், கிட்டத்தட்ட 30,000 ஆண்டுகளுக்கு முன்னால் நியாண்டர்தால் இனம் முற்றிலுமாக அழிந்து விட்டிருக்கிறது. அதன் உண்மையான காரணம் இன்று வரை கண்டு பிடிக்க முடியாவிட்டாலும் கூட, நம்மை விட புத்திசாலியான நியாண்டர்தால் இனத்தை நம்முடைய ஹோமோ செப்பிய சகோதரர்கள்தான் கூட்டாக படுகொலை செய்திருக்கக் கூடும் என்பது ஆராய்ச்சியாளர்களின் பரவலான கருத்து…
அவ்வளவு புத்திசாலி மக்கள் ஏன் மாட்டிக் கொண்டார்கள் என்பது வரலாறு மறைத்து வைத்திருக்கும் நிறைய புதிர்களில் ஒன்று. ஒரு வேளை அவர்கள் (என்னைப் போல்) ரொம்ப அப்பாவிகளாக இருந்திருக்கலாம். ஆராய்ச்சிகள் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஒரு வேளை காலம் அந்த முடிச்சை வரும் காலத்தில் அவிர்க்கலாம். யார் கண்டது…
அப்போதெல்லாம், மக்கள் ஒரே இடத்தில்தான் இருந்திருக்கிறார்கள். வேறு இடங்களுக்கு நகர்ந்தது போல் தெரியவில்லை. பயமாக இருந்திருக்கலாம். அல்லது தேவையில்லை என்றிருந்திருக்கலாம்.
இந்த காலகட்டத்தில் தங்களுக்கு எதிரிகள் என்று நினைத்துப் பயந்த அனைத்தையும் அழித்திருக்கிறார்கள். இதில் பாவம் நிறைய விலங்குகள்தான் மாட்டிக் கொண்டன. அப்படி அழிந்த நிறைய விலங்கினங்களில் ஒன்று மம்மோத் என்னும் ஜெயண்ட் சைஸ் யானைகள். அதில் ஒரு பெரிய கூட்டத்தை சுற்றி வளைத்து ஒரே இடத்தில் வைத்துக் கொன்றிருக்கிறார்கள். இன்றைய ஸ்காட்லாந்தில் நூற்றுக் கணக்கான மம்மோத் எலும்புக் கூடுகளைக் கண்டு பிடித்து அதிர்ந்திருக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
இது சும்மா சாம்பிள்தான் , இன்னும் வரும் நாட்களில் என்னென்ன கொடூரம் பண்ணப் போகிறோம் என்ற மனிதர்கள் ஒரே இடத்தில் இருந்து போரடித்துப் போனதாலோ என்னவோ, தாங்கள் இருக்கும் இடத்தில் இருந்து நகர ஆரம்பித்தார்கள்.
புதுப்புது நாகரிகங்களுடன் புதுப்புது அநாகரிகங்களும் வளர ஆரம்பித்தன..
தொடரும்….
வெ.பாலமுரளி
இந்தக் கட்டுரைக்கு உதவியவைகள் : ராகுல சாகிருத்யாயனின் வோல்கா முதல் கங்கை வரை, என் குரு நாதர் மதனின் கி.மு. கி.பி., மற்றும் மனிதனுக்குள் மிருகம், சௌ பா வின் வாவ் 2000, டாக்டர் பி.இராமனின் அட்ச ரேகை தீர்வு ரேகை, சுஜாதாவின் ஏன் எதற்கு எப்படி …. மற்றும் பெயர் தெரியாத சிலர் எழுதிய சில கட்டுரைகள்…
அனைவருக்கும் நன்றிகள்….