மதி கெட்டான் சோலை…..

மதி கெட்டான் சோலை…..

கொடைக்கானலிலிருந்து 20 கிமீ தூரத்தில் பேரிஜம் ஏரி செல்லும் வழியில் உள்ளது இந்த “மதி கெட்டான் சோலை”. மொத்த பரப்பளவு : 115 ஹெக்டேர்.

உள்ளே நுழைபவர் யாரும் உயிருடன் திரும்புவதில்லை. அப்படியே திரும்பினாலும், ஒரு மாதிரி மூளை குழம்பி பைத்தியம் பிடித்த நிலையில்தான் திரும்புவார்கள் என்பது பொதுவான நம்பிக்கை.

அதற்கான காரணங்களாக அவர்கள் சொல்வது அங்கு ஒரு வகை பூக்கள் உள்ளன. அதை நுகர்ந்தாலோ, அல்லது அதை காலில் மிதித்தாலோ பித்தம் பிடித்து அந்த சோலைக்குள்ளேயே சுற்றிக் கொண்டிருப்பர். வெளியே வருவது கடினம். 

அந்தக் கூற்றை நிரூபிப்பது போல, நமது அரசாங்கமும், “ இது அபாயகரமான காடு. இதுவரை இந்த வனத்துக்குள் நுழைந்து 12 பேர் உயிரை இழந்துள்ளனர். இதன் உள்ளே நுழைவது தடை செய்யப்பட்டுள்ளது” என்று ஒரு பதாகையை முன்னர் வைத்திருந்ததாக வனத்துறை அதிகாரி ஒருவர் கூறினார். 

இப்போது வனத்துறையே ஒரு மினி பஸ்ஸில் ஒரு நாளைக்கு இரண்டு முறை பேரிஜம் ஏரிக்கு சுற்றுலாவாசிகளை அழைத்துச் செல்கின்றனர். அப்போது “மதி கெட்டான் சோலையை” ஒரு வ்யூ பாயிண்டில் வைத்து காண்பித்து விட்டு பேரிஜம் ஏரிப்பகுதிக்கு சென்று விடுகின்றனர்.

மேலே சொன்ன “புத்தி பேதலிக்கும்” கதை உண்மையல்ல. வெறும் புரளிதான் என்கின்றனர் தாவரவியல் விஞ்ஞானிகள். அப்புறம் எப்படி இந்தக் கதை பரவியது என்று தேடினால் மிகவும் சுவாரசியமான ஒரு தகவல் கிடைக்கிறது.

பழைய சித்த மருத்துவத்தில் வசியம் செய்ய  “ சொக்குத்தூள்” என்னும் ஒரு மருந்தைத் தயாரித்துள்ளனர். அதைத் தயாரிக்க “திகைப் பூண்டு (அ) மதிகெட்டான் பூண்டு (அ) அஞ்சனைகைப் பூண்டு” என்னும் ஒரு வகைப் பூ உபயோகப்படுவதாகவும் அது “ மதி கெட்டான் சோலை” களில் (ஆம்…இந்த மதி கெட்டான் சோலை கேரளா போன்ற இன்னும் சில இடங்களில் உண்டு) இருப்பதாக ஒரு குறிப்பை யாரோ கண்டுபித்ததாகவும், அது முதலே இந்தக் கதை பரப்பப் பட்டதாகவும் சொல்லப்படுகிறது. 

சரி…இந்த “மதி கெட்டானும்” “சோலை” யும் எப்படி இணைந்தன என்று பார்க்கலாம். 

“சோலைக் காடுகள்” என்றால் ஒரு வகைக் குட்டை மரங்களும், அதையடுத்த  ஒருவகைப் புல்வெளிகளும் இணைந்த பகுதி என்று அர்த்தம். கூகுளில் Shola Forest என்று தேடிப் பாருங்கள் நிறைய தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. 

அப்படிப்பட்ட குட்டை மரங்கள் ஒன்றையொட்டி வளர்ந்து ஒரு அடர்ந்த வனம் உருவாகும்போது, அதனுள்ளே சூரிய ஒளி நுழைவது முற்றிலுமாக தடைப்படுகிறது அல்லது பெரிய அளவில் குறைந்து கருங்கும்மென்று ஒரு இருட்டான வனப்பகுதியாக மாறி விடுகிறது. அமேசான் காடுகளில் சில பகுதிகளில் இது போன்ற இருட்டான காடுகள் இன்றும் உண்டு. 

அந்த இருட்டான பகுதிக்குள் நுழைந்தால் திசை அறிவதில் குழப்பம் ஏற்பட்டு, Panic ஆகி பயத்தால், பைத்தியம் பிடிக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். அதுதான் இந்த “ மதி கெட்டான் சோலை” யின் காரணப் பெயர். 

இது ஒரு புறம் இருக்க, என்னுடைய நெருங்கிய நண்பர் ஒருவர் ( பெயர் வேண்டாமே), சில வருடங்களுக்கு முன், உள்ளூர் மலை வாசி மக்களின் உதவியுடன் உள்ளே நுழைந்து வெளியில் வந்திருக்கிறார். என்னுடன் பழகுவதனால் வேண்டுமானால் அவருக்கு மதி கெட்டுப் போக வாய்ப்பிருக்கிறது. ஆனால், அந்த வனத்துக்குள் சென்றதனால் அவருக்கு ஒன்றும் ஆகவில்லை. 

இன்னும் அந்தப் பகுதியில் வசிக்கும் மலை வாசி மக்கள் அந்த சோலைக்குள் நுழைந்துதான் சென்று வருவதாகத் தெரிகிறது. 

வெ.பாலமுரளி