மகாபாரதம் ஒரு பார்வை – பார்ட் 1


விதுரன் நீதியிலிருந்து, கௌடில்யரின் அர்த்த சாஸ்திரம்,மனு நீதி , என்று இன்றைய அரசியல் சாஸ்திரங்கள் வரை ஆட்சியில் இருப்பவன் இறந்து விட்டால் அவனுடைய மூத்த மகனுக்கே ராஜ்ஜியம் (கட்சி) சொந்தம் என்கின்றன. 

மூத்தவனுக்கு கண்ணு தெரியவில்லை, அதனால் அடுத்தவனுக்கு ராஜ்ஜியத்தைக் கொடுத்தார்கள். அது வரை சரி. 

அவன் செய்த பாவமோ அவன் தாய் செய்த தவறோ , அவனுக்கு ரத்த சோகை. உடலெல்லாம் வெளுத்து, கை காலெல்லாம் நடுங்கிக் கொண்டிருக்கும். போதாத நேரம், அற்ப ஆயுசில் போயும் சேர்ந்து விட்டான். 

அடுத்து, முறைப்படி எல்லாவற்றிலும் சிறந்து விளங்கிய மூன்றாமவனுக்குத் தான் பட்டம் சூட்டியிருக்க வேண்டும். ஆனால், அவன் பிறப்பைக் காரணம் காட்டி திரும்பவும் மூத்தவனுக்கே பட்டம் சூட்டினார்கள் .

இந்த இடத்தில் நீங்கள் ஒரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும். பீஷ்மர் மற்றும் கிருஷ்ணனைத் தவிர கிட்டத்தட்ட மற்ற எல்லோருடைய பிறப்புமே ஒரு மாதிரி கோக்கு மாக்காகத்தான் இருந்திருக்கிறது. அது கூட ஏதோ பெரிய இடத்து சமாச்சாரம் என்று விடலாம்.ஆனால், எல்லோருமே மற்றவர்களை அவர்களின் பிறப்பை வைத்தே கேவலப்படுத்திப் பேசுகிறார்கள். அதுதான் சரியில்லை. 

மிஸ்டர் திருதுவும், துரியோதனனும் விதுரனைப் பழிக்கிறார்கள். அர்ஜூனன் கோஷ்டி கர்ணனைப் பழிக்கிறார்கள். இதுபோல் இன்னும் நிறைய. ஆனால், விதுரனும், கர்ணனும் ரொம்ப அப்பாவி போலிருக்கிறது. யாருமே, “உன்னோட பொறப்பு மட்டும் ரொம்ப ஒழுங்காக்கும்?” என்று கேட்ட மாதிரித் தெரியவில்லை. 

சரி …விஷயத்துக்கு வருவோம்.

அஞ்சா நெஞ்சன் அண்ணனுக்கு, அவனுக்கு வர வேண்டிய ராஜ்ஜியமும் வந்து சேர்ந்தது. அவனுக்குப் பிறகு அவன் பிள்ளை துரியோதனனுக்குத் தானேங்க ராஜ்ஜியப் பொறுப்பு வர வேண்டும். அதுதானங்க முறை ?

இதில் தர்மராசன் குய்யோ முறையோ என்று கத்த, (பின்னாளில்) கடவுளாக சித்தரிக்கப்பட்ட கிருஷ்ணனும் சப்போர்ட். இது எந்த ஊர் நியாமுங்கோ ?

இந்த இடத்தில் ” எங்கிருந்தோ வந்தான், இடை ஜாதி நான் என்றான்” என்ற கிருஷ்ணனைப் பற்றிப் பார்ப்போம். “ஒரிஜினல் மகாபாரதத்தில்” கிருஷ்ணனை கடவுள் என்று யாரும் குறிப்பிடவில்லை (இப்போ உள்ள மகாபரதம், நிறைய இடைச் செருகல்கள் நிறைந்த Modified Version தான் ). எல்லாம் அறிந்த , சித்து வேலைகள் பல தெரிந்த, நிறைய ஞானமுள்ள, (அவன் நாட்டு) மக்களுக்கு நன்மைகள் பல செய்த ஒரு மன்னனாகவே சித்தரிக்கப்பட்டிருக்கிறான். மகாபாரதம் நடந்ததாகக் கருதப்பட்ட நாளில் இருந்து கிட்டத்தட்ட 1200 வருடங்களுக்கு இந்த எப்பிசோடுதான் ஓடிக் கொண்டிருந்திருக்கிறது .

கிட்டத்தட்ட கி.மு. மூன்றாம் நூற்றாண்டில், இவ்வளவு விஷயங்கள் தெரிந்த ஒருவன் கடவுளின் அவதாரமாகத்தான் இருக்க வேண்டும் என்று ஒருவன் புரளி கிளப்ப கிருஷ்ணன் கடவுளாக அவதாரம் எடுத்தார். மதன் இது பற்றி மிகவும் விரிவாக எழுதியிருக்கிறார் (கல்வெட்டுக்களில், அன்னையே, பராசக்தியே, எங்கள் இதய தெய்வமே என்றெல்லாம் மிகைப்படுத்தி எழுதுவதில் இது போன்ற சிக்கல்கள் உண்டு. ஒரு 1000 வருடங்கள் கழித்து இந்த பூமியில் ஏதேனும் ஒரு பெரிய அழிவு நடந்தால் இது போன்ற கல்வெட்டுக்கள் மட்டும் ஜம்மென்று இருக்கும். அதற்குப் பிறகு வரும் சந்ததியினர் மம்மிக்கும் , சின்ன மம்மிக்கும் கோயில் கட்டுவார்கள். திராவிடக் கட்சியினர் சரித்திரம் மாற்றி எழுதப் படும். ஜாக்கிரதை. ) 

கிருஷ்ணனும், அர்ஜூனனும் சேர்ந்து அருகில் உள்ள ஒரு காட்டையே நெருப்பு வைத்து அழிக்கிறார்கள் – ஜஸ்ட் டைம் பாஸுக்காக . அதில் இருந்த விலங்குகள், பறவைகள், வேடுவர்கள் என அனைவரும் நெருப்பில் வெந்து கருகுகிறார்கள். அதை இவர்கள் இருவரும் மனம் விட்டு ரசிக்கிறார்கள் என்கிறார் வியாசர் பெருமான். 

அந்த காட்டிலிருந்து தப்பித்த ஒருவன்தான் மாயன். அவன் கட்டிடக் கலையில் வல்லுநன். என் ஒட்டு மொத்த இனத்தையும் காரணமேயில்லாமல் அழித்த அந்த குரு வம்சத்தை அழிக்கிறேன் என்று சபதம் போட்டு கட்டப்பட்டதுதான் இந்திரப்ரஸ்த மாய மாளிகை. அதில்தான் துரியோதனன் வழுக்கி விழுந்ததைப் பார்த்து திரௌபதி சப்தம் போட்டு சிரித்து பிரைச்சினைக்கு ஓம் என்று பிள்ளையார் சுழி போட்டது.

கிருஷ்ணனின் மகன் பெயர் சாம்பா. தந்தையை விடப் பேரழகன். அதனாலேயே கிருஷ்ணனுக்கு, மகன் பெயரில் ஒரு சின்ன பொறாமையும், பயமும் இருந்திருக்கிறது. ஒரு முறை , கிருஷ்ணன் தன் பெண் தோழியர்களுடன் உடலில் ஆடையேதுமில்லாமல் தண்ணீரில் நீந்தி விளையாடிக் கொண்டிருந்திருக்கிறான். 

தெரிந்தோ தெரியாமலோ அங்கே சாம்பன் வந்து விட, கிருஷ்ணனின் பெண் தோழியரில் ஒருவர் , ” வாவ்…வாட் எ ஹேண்ட்ஸம் கய்” என்று காமெண்ட் அடிக்க, கிருஷ்ணனுக்கு சுள்ளென்று கோபம் ஏற, அவனை தொழு நோய் பிடிக்க வேண்டும் என்று சாபமிட்டார் என்கிறார் வியாசர்.

பின்னால்,கோபம் தணிந்து, சூரியனைப் பிரத்யேகமாக வணங்கி தவம் செய்ய உன் தொழு நோய் நீங்கும் என்று சாப விமோசனமும் வழங்கியிருக்கிறார். அப்படி சாம்பன் போய் வணங்கி தவம் செய்த இடம்தான் ஒடிசாவில் உள்ள கோனார்க் ஆலயம். 

இதுபோன்ற நிறைய சம்பவங்கள், கிருஷ்ணனை ஒரு சாதாரண மனிதனாகவும், மன்னனாகவும் சித்தரித்திருக்கின்றன . கிருஷ்ணனை கடவுளாக ஏற்றுக் கொண்ட நிறைய வரலாற்று ஆசிரியர்கள் இது போன்ற சம்பவங்களை வசதியாக மறைத்து விட்டனர். அது வரலாற்றுக்குச் செய்த, செய்து கொண்டிருக்கும் பச்சைத் துரோகம். 

சரி …தர்மன் மேட்டருக்கு வருவோம். 

ஆரம்பத்திலிருந்தே நிறைய ஆசைகளையும், பொறாமைகளையும் கொண்ட ஒரு கேரக்டர். தர்மன் என்பது அவனுக்கு வைக்கப்பட்ட பெயர். அவன் தன் தர்ம சிந்தனைகளால் சம்பாதித்த பெயர் அன்று.
மாறுகண் கொண்டவனுக்கு கமலக் கண்ணன் என்று பெயர் வைப்பதில்லையா, அதுபோலதான் தர்மனுக்கும் அந்தப் பெயர்.

சின்ன வயதில் இருந்தே அவனுக்கு கௌரவர்களைப் பிடிப்பதில்லை. ஆட்சியில் அவர்களுக்கே முதல் உரிமை என்பதால் வந்த பொறாமை.

தன் தம்பி அர்ஜுனனைக் கண்டால் கூட அவ்வளவாகப் பிடிப்பதில்லை- அவன் பெரும் அழகனாகவும் மாபெரும் வீரனாகவும் இருக்கிறான் என்பதால். 

திரௌபதியின் சுயம்வரத்தில் தர்மன் தோற்றுப் போகிறான். இருந்தாலும் திரௌபதியின் அழகு அவனைக் கட்டிப் போட்டு விடுகிறது. எனவேதான் அவன் தன் தாயிடம் சென்று திரௌபதியை தனக்கே கட்டி வைக்குமாறு கெஞ்சுகிறான். மற்ற சகோதரர்களிடமிருந்தும் அதே ரெக்வஸ்ட் வர, ஒரு பெண்ணால் தன் மைந்தர்களிடம் சண்டை வந்து விடக் கூடாதென்று கருதி ” ஐவரும் பகிர்ந்து புசியுங்கள்” என்றாள் குந்திதேவி ( அர்ஜுனனுக்கு எப்படி இருந்திருக்கும் ).

தர்மனுக்கு சின்ன வயதில் இருந்தே சூதாட்டம் மிகவும் பிடித்த விளையாட்டு. அந்த கால கட்டத்திலேயே அது தீய பழக்கம் என்று கருதப்பட்டிருக்கிறது. அதனால் விளைந்த அபத்தங்கள் எல்லோரும் அறிந்ததே. 

அது மட்டுமல்லாமல், தான் நாடாள வேண்டுமென்ற ஆசையினால் கிட்டத்தட்ட எல்லாரையுமே பகடைக்காயாக உபயோகித்தான். அபிமன்யு இறந்தபோதும் கூட தான் பெரிதும் கலங்காமல், அடுத்த வேலைகளைக் கவனிப்போம் என்று சொல்ல, அர்ஜுனன் வெகுண்டெழுந்து தன் அண்ணனையே வெட்டப் போன சம்பவமும் நடந்தது. 

ஆனால், அவன் என்னவோ தர்மத்துக்கே தலைவன் என்பது போலவும் உத்தமபுத்திரன் என்பது போலவும் பின்னால் வந்த வரலாற்று ஆசிரியர்கள் திரித்து விட்டார்கள். அதுவும் மிகப் பெரிய வரலாற்றுப் பிழை. அவன் தர்மத்திற்கு மாறாக தடம் புரண்ட கதைகள் நிறையவே உண்டு மகாபாரதத்தில்.

சரி…திரௌபதி விஷயத்திற்கு வருவோம். 

மாளிகை பளபளவென்று இருந்ததால் படிக்கும், சம தளத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் ஒருவன் தடுமாறி விழுந்து விட்டான். இது ஒண்ணும் பெரிய கேலிக்கூத்தான விஷயமன்று. ஓடிப் போய் கை கொடுத்து உதவியிருக்கலாம். இல்லையா, கண்டும் காணாமலும் போயிருக்கலாம். அதனை விடுத்து, அவனைப் பார்த்து கெக்கலி போட்டு சிரித்தது தவறு. அதை விட மாபெரும் தவறு, அவனைப் பார்த்து ” அப்பனைப் போலவே இவனுக்கும் கண்ணு தெரியவில்லை போலிருக்கு ” என்று குத்தலாகவும் நக்கலாகவும் வார்த்தையை விட்டது. 

அடுத்து மன்னனாக முடி சூட்டிக் கொள்ளப் போகும் யாருக்குமே சுள்ளென்று ஏறும். அவனுக்கும் ஏறியது. விளைவு …எத்தனை எத்தனை உயிர்கள்….

தன் கணவன் சூதாடுகிறான் என்பது தெரிந்தும் கண்டு கொள்ளாமல் விட்டது தவறு. அதிலும், அவன் தன்னையே பலிகடாவாக்கி விளையாடுகிறான் என்பதை அறிந்த பின்னரும், ரிசல்ட்டுக்காக காத்திருந்தது இமாலயத் தவறு. அப்படிப் பட்ட கணவனை ஒன்றும் செய்யாமல், பந்தயத்தில் வென்றவனுக்கு உடைமையாகி விட்ட அவள், துரியோதனனைப் பார்த்து தொடை பிளந்து ரத்தம் குடிப்பேன் என்று சூளுரைத்தது சரியா என்று தெரியவில்லை. 

அதற்காக துரியோதனனும், துச்சாதனனும் செய்தது சரி என்று சொல்லவில்லை. அவர்கள் செய்தது ஈனச் செயல். அதிலும், மாத விடாய் கொண்ட ஒரு பெண்ணை சபை நடுவில் வைத்து அப்படிச் செய்தது கேவலமான செயல்தான். அதை, அவன் அந்த அளவிற்குக் காயப் பட்டிருக்கிறான் என்றும் எடுத்துக் கொள்ளலாம். 

அதற்காக நான் துரியோதனனை ஹீரோவாக ஆக்கவில்லை. ஆனால், தர்மன்தான் நிஜ வில்லன் என்பது என் கருத்து. 

பீஷ்மர், விதுரன் போன்ற நிறைய நியாயவான்கள் இருந்த சபை நிறைய நேரங்களில் மௌனம் சாதித்தது ஏன் என்பது புரியாத புதிர். 

தர்மனும், கிருஷ்ணனும் நினைத்திருந்தால் பாரதப் போரைத் தவிர்த்திருந்திருக்கலாம். 

அதெல்லாம் சரி…..மகாபாரதம் நிஜமாகவே நடந்ததா இல்லை அது, மிகப் பிரமாண்டமான அளவில் மிகைப் படுத்தப்பட்ட ஒரு இதிகாசம் மட்டுமேயா ? 

நான் அதையும் தேடி ஒரு முறை கன்னா பின்னாவென்று அலைந்தேன் – ஒரு மிகப் பெரிய இனக் கலவரத்துக்கிடையில். 

அது அடுத்த பாகத்தில்…

வெ.பாலமுரளி