பெருமுக்கல் ஒரு பேரதிசயம் – பாகம் 2 

பெருமுக்கல் ஒரு பேரதிசயம் – பாகம் 2 

என்னுடைய முந்தைய கட்டுரையில் பெருமுக்கல் மலையின் மீதுள்ள சீதா குகையில் உள்ள பாறைக் கீறல்களைக் குறித்து மிகவும் சிலாகித்து எழுதியிருந்தேன். அந்தக் கட்டுரை குறித்து ஒரு சின்ன ரீகேப். 

பெருமுக்கல், திண்டிவனத்திலிருந்து 12 கிமீ தூரத்தில் இருக்கும் ஒரு சிறிய கிராமம். நற்றிணையில் பாடல் எண் 272 ஐ எழுதிய முக்கல் ஆசான் நல்வெள்ளையார் இங்குள்ள மலையில்தான் வானிலை ஆய்வு செய்து முக்தியடைந்திருக்க வேண்டும். 

அதை நிரூபிக்கும் விதமாக இந்த மலையின் மீதுள்ள சீதா குகையில் வானிலை தொடர்பான ஏராளமான பாறைக் கீறல்களும் ஒரு தமிழிக் கல்வெட்டும் உள்ளன.

இவர் பெயரில் “நல்வெள்ளையார்” என்றிருப்பதால், ஆசீவகம் சொல்லும் “பரம சுக்க” என்னும் களிவெண்மை (நல் வெள்ளை) நிலையை அல்லது ஐயனார் நிலையை அடைந்த மூவரில் ஒருவரான (மாங்குளம்) கணி நந்தாசிரியன் இயக்கனும் இந்த முக்கல் ஆசான் நல்வெள்ளையாரும் ஒருவரே என்று ஆணித்தரமாக எழுதியிருக்கிறார் மறைந்த பேராசிரியர் க.நெடுஞ்செழியன் அவர்கள் ( எனக்கு இதில் பெரிய உடன்பாடில்லை). 

இது குறித்து இன்னும் தேடுவதற்காக சமீபத்தில் மறுபடியும் நான் பெருமுக்கல் சென்றிருந்தேன். அதை எழுதவே இந்தக் கட்டுரை. 

இந்த முறையும் ஏராளமான அதிசயங்கள் எனக்குக் காத்துக் கொண்டிருந்தன.

இந்த முறை மலையின் மறுபக்கத்திலிருந்து மேலே சென்றேன். ஓரளவிற்கு படிகள் இருந்தாலும் எனக்கென்னவோ பாதை மிகவும் நீண்டதாகத் தெரிந்தது. 

மலையின் முக்கால் வாசி உயரத்தில் ஒரு அருமையான சுனை இருக்கிறது – ரொம்பப் பெரிய சைஸில்.  நமது தமிழ் அறிவர்கள் , பெரும்பாலும் தங்கள் தண்ணீர்த் தேவைகளுக்காக ஒரு நல்ல சுனை இருக்கும் இடத்திற்கு அருகில் உள்ள குகைகளிலேயே தங்கள் வாழ்விடத்தை அமைத்து வானியல் ஆய்வும், மருத்துவ உதவிகளும், கல்விச் சேவைகளும் செய்து வந்துள்ளனர். அதற்கு பெருமுக்கலும் ஒரு நல்ல உதாரணம். முக்கல் ஆசான் கை நனைத்த சுனையில் நானும் கை கழுவி, முகம் கழுவி, சிறிது நீர் பருகி விட்டு என் பயணத்தைத் தொடர்ந்தேன்.

இந்தச் சுனையிலிருந்து சற்று மேல் நோக்கி நடந்தால் குன்றின் உச்சிப் பகுதி வருகிறது. அங்கு அறிவர்களின் ( ஆசீவகர்களின்) டிப்பிக்கல் நிலாப்பாறை உள்ளது. முக்கல் ஆசான் நல்வெள்ளையார் அமர்ந்து, படுத்து அவதானித்த இடத்தில் இன்று கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது. அதனால்தானோ என்னவோ அந்த இடம் கொஞ்சம் சுத்தமாகவே இருக்கிறது. அந்த சமயத்தில் ஏற்படும் விபத்துகளைத் தடுக்க அந்தப் பாறையைச் சுற்றி இரும்புச் சட்டங்களால் வேலி அமைத்துள்ளனர்.

இந்த இடத்திலிருந்து சில அடி தூரத்தில்தான் “ முக்தியாலீஸ்வரர்” என்னும் அருமையான சிவன் கோவில் உள்ளது. கற்றளி. 

சித்தர்கள் ஜீவ சமாதி அடையும் இடத்தில் சிவன் ஆலயம் எழுப்புவது பழைய மரபு போலிருக்கிறது. எல்லாம் வல்ல சித்தர் ( மதுரை மீனாட்சி அம்மன் கோவில்), பதஞ்சலி சித்தர் ( பிரம்மபுரீஸ்வரர் ஆலயம், திருப்பட்டூர்), புலிக்கால் சித்தர் ( காசி விஸ்வநாதர் கோவில் திருப்பட்டூர் ) என்று நிறைய உதாரணங்கள் இருக்கின்றன. அந்த வரிசையில் முக்கல் ஆசான் என்ற அறிவர் ( சித்தர்) இங்கு ஜீவ சமாதி (முக்தி) அடைந்திருக்க வாய்ப்புகள் உள்ளன. எனவேதான் , இந்தக் கோவிலுக்கு “முக்தியாலீஸ்வரர்” ஆலயம் என்று பெயர் வைத்துள்ளனர் ( நன்றி: க.நெடுஞ்செழியன்). இங்குள்ள சிவனுக்கு “பெருமுக்கல் உடையார்” என்ற பெயரும் உள்ளது.

இது ஆரம்பத்தில் செங்கற்கல் கட்டுமானத்தில் இருந்து கி.பி. 12ம் நூற்றாண்டில் விக்கிரம சோழன் என்னும் சோழ மன்னன் காலத்தில் கற்றளியாக மாற்றப்பட்டுள்ளது. இந்தக் கோயிலுக்கு சோழ, பாண்டிய, சம்புவரைய, விஜய நகர மன்னர்கள் கொடை அளித்த செய்திகள் தாங்கிய 60க்கும் மேற்பட்ட கல்வெட்டுக்கள் உள்ளன.

கோயிலுக்கு இரண்டு வாசல்கள் உள்ளன. ஒன்று சீதா குகையை நோக்கியும், மற்றொன்று மலையின் மறுபுறம் உள்ள நிலாப்பாறை மற்றும் சுனையை நோக்கியும் உள்ளன. 

இந்த மலையில் ஒரு காலத்தில் ஒரு கோட்டைச் சுவர் இருந்த தடயங்களும் ஆங்காங்கே உள்ளன. அங்குள்ள சிற்பங்கள் அந்த இடத்திலேயே செய்யப்பட்டதற்கான எச்சங்களாக சேதமடைந்த சிற்பங்கள் நிறைய அங்கு சிதறிக் கிடப்பதை இன்றும் காண முடிகிறது.

இங்குள்ள சீதா குகை என்னும் முக்கல் ஆசான் வாழ்ந்த குகையில் கன்னா பின்னாவென்று இருக்கும் வானிலை தொடர்பான பாறைக் கீறல்கள்,  என்னை ஏன் இன்னும்  யாரும் பெரிய அளவில் ஆய்வு செய்யாமல் இருக்கிறார்கள் என்று குழப்பத்துடன் காட்சியளிக்கின்றன. அங்கு மிகவும் தெளிவாக ஒரு தமிழிக் கல்வெட்டு ஒரு குறியீடுடன் செதுக்கப்பட்டுள்ளது. மற்ற இடங்களில் இருக்கும் தமிழிக் கல்வெட்டு எழுத்தமைதிக்கும் இங்கிருக்கும் “ (குறியீடு)….ராசர்” என்ற கல்வெட்டுக்கும் கொஞ்சம் கூட வித்தியாசம் இல்லை.

ஆனால், மிக மிக ஆச்சரியமாக நமது இந்தியத் தொல்லியல் துறை இந்தக் கல்வெட்டை கி.பி.ஏழாம் நூற்றாண்டு வட்டெழுத்து என்று ஆவணப்படுத்தியுள்ளது ( கேடு கெட்ட அரசியல்). என்னுடைய தனிப்பட்ட கருத்தில் இதன் காலம் கி.மு. 4 அல்லது கி.மு. 3ம் நூற்றாண்டு.  

இங்கு வாழ்ந்து “வானிலை ஆய்வு” செய்த காரணத்தால் ஐயன் முக்கல் ஆசான் முக்தி அடைந்த பின் அவரை ஐயனாராக ஆக்கி “ ஆகாச ஐயனார்” என்று வழிபட்ட மரபின் தொடர்ச்சியாக மலையின் கீழே ஊரின் எல்லையில் ஒரு ஐயனார் கோவில் உள்ளது.

மிகவும் வித்தியாசமாக இங்குள்ள ஐயனாரின் ஒரு கையில் அரிவாளும் மற்றொரு கையில் போரின் போது பயன்படுத்தும் கேடயமும் உள்ளன. இதை வைத்துத்தான் முக்கல் ஆசான் நல்வெள்ளையாரும் பூதப்பாண்டியனின் படையில் தளபதியாக இருந்த அவருடைய நண்பர் கணி நந்தாசிரிய இயக்கனும் ஒருவரே என்கிறார் க.நெடுஞ்செழியன் அவர்கள். வாய்ப்பு இருக்கிறது. ஆனால், இந்த சான்று ஒன்று மட்டும் போதுமா என்று தெரியவில்லை. இந்த ஐயனாரின் இருபுறமும் பூரணை, புஷ்கலை பெண்தெய்வங்கள். நான் முன்பு ஒருமுறை எழுதியதுபோல இங்குள்ள மக்களில் ஓரிருவர் தவிர வேறு யாருக்கும் இவரின் “ ஆகாச ஐயனார்” என்ற முழுப்பெயர் தெரியவில்லை. பொதுவாக “ஐயனாரப்பன்” என்றே அழைக்கின்றனர்.

இங்கிருந்து ஒரு 10 கி.மீ தொலைவில் திண்டிவனத்தின் எல்லையில் “மஞ்சினீஸ்வரன் ஐயனாரப்பன்” திருக்கோயில் ஒன்றுள்ளது. அங்குள்ள ஐயனாரும் பெருமுக்கலில் உள்ளது போலவே ஒரு கையில் அரிவாளும், இன்னொரு கையில் கேடயமுமாக இரு பெண் தெய்வங்களுடன் வீற்றிருக்கிறார். 

பெருமுக்கலிலிருந்து செஞ்சி செல்லும் சாலையில் அத்தியூர் என்னும் ஊரில் இன்னொரு ஆகாச ஐயனார் கோவில் உள்ளது. அது ஒரு சிறிய குன்றின் கீழே வெட்ட வெளியில் உள்ளது. 

முக்கல் ஆசான்தான் அங்கும் சென்று , அங்குள்ள நிலாப்பாறையில் இருந்து வானிலை ஆய்வு ஏதோ செய்திருக்க வேண்டும். அந்த நிலாப்பாறையில் இன்று எங்குமே கால் வைக்க முடியாத அளவிற்கு பொதுக் கழிப்பறையாக ஆக்கி வைத்துள்ளனர் உள்ளூர் மக்கள். வேதனையின் உச்சம். அந்தப் பாறையிலிருந்து ஒரு பத்தடி தூரத்தில் முக்கல் ஆசான் என்னை விட வேதனையுடன் வீற்றிருக்கிறார். 

நான் அங்கு எடுத்த படங்கள் அனைத்தையும் இங்கு பதிவிடுகிறேன். தவறாமல் பார்க்கவும். 

எனக்கு இன்னொரு முறை இங்கு செல்ல வேண்டும். விரைவில் சென்று விட்டு “ பெருமுக்கல் ஒரு பேரதிசயம் -3” இல் உங்களை சந்திக்கிறேன்.

வெ.பாலமுரளி