ஆம். நீங்கள் ஊகிப்பது சரி. இன்று பூம்புகாரின் நிலை மிகவும் பரிதாபமாகரமாக உள்ளது.
நான் பொதுவாக, இது போன்ற சரித்திரம் வாய்ந்த இடங்களுக்கு செல்வதற்கு முன்னால், ரொம்பவே Excite ஆகி விடுவேன். முதல் நாள் பெரும்பாலும் தூக்கம் வராது. அது போலத்தான் பூம்புகார் செல்வதென்று முடிவெடுத்தவுடனேயே, பர பரப்பு தொற்றிக் கொண்டது.
பூம்புகார் பற்றி நிறைய விபரங்கள் சேகரித்து விட்டுக் கிளம்பினோம்.
ஊருக்குள் நுழைவதற்கு முன்னால், ஒரு தொல்லியல் துறை சம்பந்தப்பட்ட பலகை ஒன்று, “பல்லவர்கள் சம்பந்தப்பட்ட ஆராய்ச்சி நடக்கும் இந்த இடத்தில் நுழைந்தால் அபராதம்” என்று சுற்றுலாப் பயணிகளை மிரட்டிக் கொண்டிருக்கிறது…மற்றபடி வேறு எந்தவொரு தகவல்களும் இல்லை.
சற்றே ஏமாற்றுடத்துடன் ஊருக்குள் நுழைந்தால், அதை விட மிகப் பெரிய ஏமாற்றமும், அதிர்ச்சியும் மாலையுடன் எனக்காகக் காத்துக் கொண்டிருந்தன.
ஊரெங்கும் நடக்கவே முடியாத அளவிற்கு அநியாயத்திற்குக் குப்பைக் கூளங்கள்.
ஊரின் நுழைவாயிலில் முதலில் வருவது ஒரு கட்டணக் கழிப்பறை. 5 ரூபாய் வசூலிக்கும் அதன் நிர்வாகம், மகாக் கன்றாவியாக அதை வைத்திருக்கிறார்கள். பெண்கள் குளிப்பதற்கும், உடை மற்றுவதற்கும் எந்தவொரு தடுப்புகளும் காணோம். கட்டணம் வசூலிப்பவர், வசதியாக ஒரு சேரைப் போட்டுக் கொண்டு பெண்கள் பகுதியையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தது, இதுதான் கண்ணகியின் ஊரா என்ற சந்தேகத்தை எழுப்பியது. அசிங்கமான மனிதர்கள் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறார்கள்.
அதைத் தாண்டி பீச்சை நோக்கிச் செல்லச் செல்ல எல்லா வகை அசிங்கங்களையும் காண முடிகிறது. கட்டணக் கழிப்பறையே மிகக் கேவலமாக இருக்கும்போது, நாம் மக்களை எப்படிக் குற்றம் சொல்ல முடியும். அந்தச் சுற்றுலா இடம் முழுவதுமே ஏதோ Corporation Garbage Yard போல உள்ளது.
மொத்தம் 30 பேர் வேலை செய்ய வேண்டிய இடத்தில் , எங்கள் இரண்டே இரண்டு பேரை மட்டும் போட்டு வைத்திருக்கிறது சார் நம் அரசாங்கம், என்று அழாக் குறையாக அங்கலாய்த்தார் டிக்கெட் கௌண்டரில் இருப்பவர். இன்னொருவர் அங்கிருந்த கலைக் கூடத்தின் காவலாளி. எதுக்கு சார் டிக்கெட் எல்லாம் வாங்குறீங்க என்று நேரடியாகவே அவர் ஒரு புறம் கலெக்ட் பண்ணிக் கொண்டிருக்கிறார்.
கலைஞர் காலத்தில் ( 1970 களில்) , வள்ளுவர் கோட்டம் மாதிரி மிகவும் அற்புதமான கலைக் கூடம் ஒன்று அவரால் இங்கு அமைக்கப் பட்டிருக்கிறது. உள்ளே, சிலப்பதிகாரத்தின் ஒவ்வொரு அதிகாரத்திற்கும் நிறைய சிலைகள் செய்து அதை சுவரில் மிகவும் அழகாகப் பதித்திருக்கிறார்கள். ஒவ்வொரு சிலையும் அற்புதமான வடிவமைப்பு அது இன்று எந்தவொரு பராமரிப்பும் இன்றி மிகவும் பரிதாபமாக பழைய நினைவுகளில் மூழ்கிப் போய் நிற்கின்றன. சலவைக் கற்களால் செய்யப் பட்ட அந்தக் கலைக் கூடம் துடைப்பத்தைப் பார்த்து ரொம்ப மாதங்கள் ஆகி விட்டன போலிருக்கிறது.
அந்தக் கலைக் கூடத்தின் நுழைவாயிலில் இளங்கோவடிகளின் 10 அடி சிலை ஒன்று மிகவும் கம்பீரமாக, காக்காய்களின் எச்சத்தை முழுவதும் வாங்கிக் கொண்டு எதையும் தாங்கும் இதயமாக நின்று கொண்டிருக்கிறது ( இந்தச் சிலைகளைப் பராமரிப்பதற்காக நியமிக்கப் பட்டவர்தானாம் அந்த டிக்கெட் கௌண்டரில் இருப்பவர். ஆள் பற்றாக் குறை காரணமாக அவரை அங்கு மாற்றி 6 மாதங்களாகி விட்டதாம் . அது சரி…சிலை எப்படி போனால் நமக்கென்ன ?)
மிகவும் கனத்த இதயத்துடன், அதற்கு அருகில் இருக்கும் , மத்திய அரசின் கட்டுப் பாடில் இருக்கும் அருங்காட்சியகம் சென்றோம். 1000 , 1500 வருடப் பழமையான அரிய பொருட்கள் ஏராளம் வைத்திருக்கின்றனர். அவற்றில் நிறைய பொருட்களில், அது என்ன, அதன் வரலாறு என்ன என்பதையெல்லாம், யாரோ ஒரு நல்ல மனுஷன், ஒரு பேப்பரில் ஸ்கெட்ச் பேனாவில் கையால் எழுதி வைத்திருக்கிறார். அது காலப் போக்கில் அழிந்து , அது என்னவென்றே தெரியாமல் இருக்கிறது. அதையெல்லாம் எனக்கு புகைப்படம் எடுக்கக் கூட மனசு வரவில்லை. அங்கிருக்கும் ஒரு சூப்பர்வைசரை அணுகி , “ஏங்க இப்படிப் போட்டு வெச்சிருக்கீங்க” , என்று என் ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்தேன். வாட்சப்பில் பிஸியாக இருந்த அந்த அதிகாரி, “ சார், நான் வெறும் மூன்று மாதத்திற்கு டெபுடேஷனில் வந்துள்ளேன். இது பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது. இதைப் பராமரிப்பது தஞ்ச்சைப் பல்கலைக் கழகம். நீங்கள் சொன்னதை நான் அவர்களுக்குச் சொல்கிறேன் “ என்றார் மிகவும் பணிவாக.
முதுமக்கள் தாழி, கடலில் கண்டெடுத்த அந்தக் கால நங்கூரம், பழைய பானை ஓடுகள் என்று நிறையப் பொருட்கள் சுற்றுலாப் பயணிகளை பெரிதாக ஈர்க்கும் பெரிய தகவல்கள் ஏதுமின்றி காட்சியளித்துக் கொண்டிருக்கின்றன.
மக்கள் யாரும் வருவதில்லையா சார் என்றேன். இந்த மாதத்தில் நீங்கள் தான் சார் மூன்றாவது ஆள் என்றார் ( 28 டிசம்பர் அன்று ). வருத்தமும், கவலையுமாக அங்கிருந்து நகன்றோம்…
கடலை நெருங்க நெருங்க, அலை அலையாகக் குப்பைகளும் டிஸ்போசபிள் காப்பி டம்ளர்களும் நடை பாதையை நிறைத்திருக்கின்றன. ஆனால், மக்கள் யாரும் அதை ஒரு பொருட்டாகவே கருதவில்லை. சர்வ சாதாரணமாகத் தாண்டிப் போகிறார்கள்.
கடலை ஒட்டி கலைஞர் ஒரு சிலப்பதிகார மண்டபத்தை ஒரு கிரானைட்டில் செய்து வைத்திக்கிறார். அவருமே, இதைத் திறந்து வைத்ததற்குப் பிறகு ஒரு முறை கூட வந்திருக்க மாட்டார் என்று நினைக்கிறேன்.
அந்தக் கட்டடம் அவ்வளவு டேமேஜ் ஆகி இப்பவோ அப்பவோ என்று நின்று கொண்டிருக்கிறது. அந்த மண்டபத்தில் “ரமேஷ் லவ்ஸ் அகல்யா” போன்ற காதல் வார்த்தைகள் நிறைந்த காதல் கல்வெட்டுக்கள் நிறைய.
அந்த மண்டபத்தின் முன்னே, பளிங்கினால் செய்யப்பட்ட தண்ணீர் தொட்டி ஒன்றை வடிவமைத்திருக்கிறார்கள். அது ஒரு குப்பைத் தொட்டி போலவே காட்சியளிக்கிறது. அதில் சில படங்களை இங்கு வெளியிடுகிறேன்.
இந்தக் கன்றாவிகளைப் பார்க்க விரும்பாதலாலோ என்னவோ, அங்கிருக்கும் கண்ணகி சிலை கடலைப் பார்த்த வண்ணம் இருக்கிறது.
ஆனால், சமீபத்தில் வந்த சுனாமியினால், கடல் உள்வாங்கி மறுபடியும் கரைக்கு திரும்ப வந்ததில், கரைக்கு மிகவும் அருகில் ஒரு பெரிய பள்ளம் தோன்றி, அதில் நிரந்தரமாக ஒரு சுழல் உருவாகிவிட்டது.
இதில் மாட்டிக் கொண்டு ஒவ்வொரு வருடமும் 5 முதல் 10 மக்கள் இறந்து விடுகிறார்கள் என்று வருத்தத்துடன் இந்த ஊர் வியாபரிகள் கூறுகின்றனர். ஆனால், அந்த எச்சரிக்கையைத் தாங்கும் போர்டுகள் எதுவும் இல்லை. அங்கு குளிக்க இறங்கும் இளைஞர், இளைஞிகளை அந்த வியாபரிகள் அன்புடன் பேசித் தடுத்து நிறுத்த முயல்கிறார்கள்.
அதைக் கேட்காமல், கண்ணகியைச் சாட்சியாக வைத்து, சென்ற டிசம்பர் (2018) மாதம் கூட 4 இளைஞர்கள் இறந்து விட்டார்களாம்.
பாவம், கண்ணகிக்குத்தான் இப்போது எந்தப் பக்கம் திரும்பி நிற்பது என்று குழப்பம் ?
இதற்கெல்லாம் யாரைக் குற்றம் சொல்வது ?
இது போன்ற சுற்றுலா தலங்களை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற அடிப்படை கூடத் தெரியாமல் இருக்கும் மக்களைப் பற்றியா , இல்லை இவ்வளவு பெரிய வரலாற்று பிண்ணனி இருக்கும் ஒரு அற்புதமான ஊரில் ஒரு குப்பைத் தொட்டி கூட வைக்காமல் ஏனோ தானோ என்றிருக்கும், மாநில அரசாங்கத்தையா , தொல்லியல் துறையை தன் வசம் வைத்திருக்கும் மத்திய அரசாங்கம் எந்த விதக் காரணத்திலும் தமிழர் வரலாறு வெளியில் வந்து விடக் கூடாது என்று கங்கணம் கட்டிக் கொண்டிருப்பதையா ?
நான் இதை எழுதுவதற்குக் காரணம், பெரிய அளவில் விதை விதைத்து ஒரு புரட்சி ஏற்படுத்த வேண்டும் என்ற புண்ணாக்கு நோக்கம் எல்லாம் கிடையாது.
இந்த அவலத்தைப் பற்றித் தெரிந்த பின்னர், யாராவது தங்களுக்குத் தெரிந்த அதிகாரி, உறவினர், நண்பர் என்று யார் மூலமாவது இந்தப் பிரச்சினைக்கு ஒரு தீர்வு பெற்றுத் தந்து விட மாட்டார்களா என்ற ஒரு நப்பாசையால் மட்டுமே இதை எழுதுகிறேன்…
எனவே, என்னை விமர்சிப்பதை தவிர்த்து விட்டு உங்களால் ஏதாவது உதவ முடியுமா என்று பாருங்கள்.
அவ்வாறு உதவ முடிந்தால், தமிழ் மண்ணின் சார்பில், கோடி நன்றிகள்.
வெ.பாலமுரளி