இயற்கைக்கு எதிராக மனிதன் தொடுக்கும் ஒவ்வொரு போரின் இறுதியிலும் இயற்கையே வென்று வந்திருக்கிறது. அதை மனிதன் ஏனோ நம்ப மறுத்து, திரும்பத் திரும்ப போரிட்டுக் கொண்டேயிருக்கிறான்.
சி.எஸ்.லூயிஸ்
இந்த பூமி உருவாகி இன்றுடன் 460 கோடி வருடங்களாகின்றன. இந்த 460 கோடி வருடங்களில், நம் பூமி ஐந்து முறை மிகப் பெரிய அழிவுகளைச் சந்தித்திருக்கிறது.
முதல் அழிவு இன்றிலிருந்து ஏறத்தாழ 44 கோடி ஆண்டுகளுக்கு முன்னால். அப்போது நிலத்தில் வாழும் உயிரினங்கள் ஏதும் உருவாகியிருக்கவில்லை. கடல் வாழ் உயிரினங்கள் மட்டும்தான். ஏதோ ஒரு காரணத்தால் ஒரு தூசு மண்டலம் ஒன்று உருவாகி சூரியனை மறைக்க , உறைய வைக்கும் குளிர் ஏராளமான ஐஸ் பாறைகளை உருவாக்க, I need some company என்று அருகில் உள்ள கடல்களையும் சேர்ந்து உறைய வைக்க மொத்த பூமிக் கோளமே சில்லிட்டது. இதில் கிட்டத்தட்ட 85% கடல் வாழ் உயிரினங்கள் தங்கள் உயிரை விட்டன.
இரண்டாவது அழிவு 37 கோடி வருடங்களுக்கு முன்னர் நடந்தது. அதுவும், ஐந்து லட்சம் வருட இடைவெளியில் இரண்டு முறை நடந்தது. இதுவரை கண்டு பிடிக்க முடியாத ஒரு காரணத்தல், பூமியில் வெப்ப நிலை எக்குத்தப்பாக எகிற உருகிய பனி அடுக்குகள் அனைத்தும் கன்னா பின்னாவென்று உருக , அவை அனைத்தும் கடல் நீரோடு கலக்க , கடலின் உப்புத் தன்மை விகிதம் சரிய, அதற்குப் பழகாத உயிரினங்கள் செத்துக் குவிந்தன.
மூன்றாவது அழிவுதான் உள்ளதிலேயே மிகப் பெரிய அழிவு. கிட்டத்தட்ட 25 கோடி வருடங்களுக்கு முன்னால், பூமியில் தனித்தனி நிலப்பரப்புகளாக இருந்த எல்லாக் கண்டங்களும் ஒன்றாக இணைந்து ‘பாஞ்சியா’ என்னும் சூப்பர் கண்டம் ஒன்று உருவெடுத்தது . இதனால் கடலின் அகலம் விரிவாக, தண்ணீர் மட்டம் டேஞ்சரஸ் லெவலுக்கும் கீழே குறைய வழக்கம்போல் ஏராளமான கடல் வாழ் உயிரினங்கள் செத்து மடிந்தன. அதற்கு அடுத்த 8 கோடி ஆண்டுகள் பூமியின் வரலாற்றின் கொடுமையான ஆண்டுகள்.
கடலுக்கு அடியில் இருந்த ஏராளமான எரிமலைகள் சீறின. உள்ளிருந்து நிலக்கரி குழம்புகள் கொட்ட, காற்றின் ஆக்ஸிஜன் அளவு குறைந்தன. பத்தாக்குறைக்கு , அமில மழை வேறு கொட்டோ கொட்டென்றுகொட்ட, கிட்டத்தட்ட பூமியில் வாழ்ந்த அனைத்து ஊர்வன மற்றும் பாலூட்டிகளின் சகாப்தம் முடிவுக்கு வந்தன. இந்தப் பாலூட்டிகள் விட்டுச் சென்ற சந்ததியினர்தான் டைனோசர்கள்.
நான்காவது அழிவு 21 கோடி வருடங்களுக்கு முன்னர் நடந்ததாகத் தெரிகிறது. ஆனால் என்ன நடந்தது என்று யாருக்கும் சரியாகத் தெரியவில்லை. இப்போதும் செம அழிவு. இந்த முறை இயற்கை, 75% உயிரினங்களை ஸ்வாஹா பண்ணியது .
ஐந்தாவது அழிவு, கிட்டத்தட்ட ஆறரைக் கோடி வருடங்களுக்கு முன்னால் நடந்தது. விண்வெளியிலிருந்து ராட்சச பாறைக்கல் ஒன்று பூமியை மோத மிகப் பிரமாண்டமான பள்ளம் ஒன்று வெடித்தது. எங்கெங்கு காணினும் சக்தியடா என்பது போல எங்கெங்கு காணினும் தூசியடா. சூரியனாருக்கு அனுமதி மறுக்கப் பட்டது. விளைவு , கடுங்குளிர். நம்ம ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் டைனோசரிலிருந்து ஏராளமான உயிர்கள் எதற்காக சாகிறோமென்றே தெரியாமல் மூச்சுத் திணறி செத்து வீழ்ந்தன.
இயற்கைக்கு அத்தோடு திருப்தியில்லை. மேற்கிந்தியத் தீவுகளை ஒட்டியிருந்த ஏராளமான எரிமலைகள் ஒன்றுக்குப் பின் ஒன்றாக அடுத்தடுத்து வெடிக்க, சுனாமி தன் வேலையைக் காண்பித்தது. சிறு சிறு உயிரினங்கள் முதல் ராட்சத உயிரிங்கள் வரைப் பூண்டோடு உயிரிழந்தன.
இவை மட்டுமல்லாமல், டைம் பாஸூக்காக லட்சக்கணக்கில் பூகம்பங்கள். ஒவ்வொரு முறை பூகம்பம் நடக்கும் போது, பூமியின் வரைபடம் மாறியது. பற்றாக்குறைக்கு எரிமலைகளும், சுனாமிகளும் பூமியின் அமைப்பைத் தலைகீழாக்கின. இது போன்ற பாறை அமைப்புகளெல்லாம் அப்படித்தான் உருவாகின. அது சரி…அது எப்படி, இவ்வளவு அழகாக ஒன்றின் மேல் ஒன்றாக….அது இயற்கைக்கு மட்டுமே தெரிந்த இயற்கையின் விளையாட்டு.
அதெல்லாம் இருக்கட்டும்….மிகவும் விரைவில், நம்முடைய பூமி தன்னுடைய மிகப் பெரிய அழிவான ஆறாவது அழிவைச் சந்திக்கப் போகிறதே, உங்களுக்குத் தெரியுமா? இந்த முறை அழிவு, கடந்த 5 முறையைக் காட்டிலும் மிகவும் கேவலமான முறையில் இருக்கப் போகிறது என்பது அறிவியல் ஆராய்ச்சியாளர்களின் கணிப்பு. அந்த அழிவிற்கான வேலையை மனித குலம் தொடங்கி 50 வருடங்களுக்கு மேலாகிறது.
வெ.பாலமுரளி
பி.கு:கட்டுரையின் ஆதாரம் :டாக்டர் பி.இராமன் எழுதிய அச்ச ரேகை தீர்வு ரேகை, மதனின் கேள்வி பதில்கள் மற்றும் சுஜாதாவின் சில பல ஆராய்ச்சிக் கட்டுரைகள்