புதுக்கோட்டை – திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள நார்த்தாமலையில் மொத்தம் ஒன்பது குன்றுகள் உள்ளன. மேல மலை, கோட்டை மலை, கடம்பர் மலை, பறையன் மலை, உவச்சன் மலை, ஆளுருட்டி மலை, பொம்மை மலை, மண் மலை, மற்றும் பொன்மலை என்பன அவற்றின் பெயர்கள்.
இந்த ஒன்பது குன்றுகளிலேயும் வரலாறு கொட்டிக்கிடந்தாலும், இதில் உள்ள மேலமலை மட்டும் ரொம்பவே ஸ்பெஷல்.
இதில்தான் சாத்தன்பூதி என்னும் முத்தரையரால் கட்டப்பட்ட்டு பின்னாளில் விஜாயலய சோழனால் திருப்பணி செய்யப்பட்ட விஜயாலய சோழீஸ்வரம் என்னும் சிவ ஆலயம், அதை ஒட்டி இரண்டு குடைவரைக் கோயில்கள், அதில் ஒன்றில் சைவத்திற்கும், வைணவத்திற்கும் நடந்த பூசல்கள், சைவத்திற்கும், ஆசீவகத்திற்கும் நடந்த சண்டைகள் அனைத்தையும் இலை மறைவு காய் மறைவாக சிற்பங்களில் செதுக்கி வைத்துள்ளனர்.
இந்த மலையில் இன்னொரு சிறப்பு, விஜயாலய சோழீஸ்வரம் ஆலயத்திற்கும் செல்லும் வழியில குன்றில் ஒரு பெரிய பள்ளம் உள்ளது. அதை உள்ளூர் மக்கள் சுனை என்றாலும் கூட, அது ஒன்னும் இயற்கை சுனை கிடையாது. மழை வந்தால் மட்டுமே அந்தப் பள்ளம் நிறைந்து ஒரு பெரிய குளம் போல் தெரிகிறது.
அந்தப் பள்ளத்தின் அடிப்பகுதியில் ஒரு சிறிய குடைவரைக் கோயில் உள்ளது. அதில் உள்ள சிவ லிங்கம், அதன் தாய்ப்பாறையிலேயே செதுக்கியிருப்பது சிறப்பு.
நான், கடந்த சிவராத்திரிக்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர் போயிருந்த போது, அந்தப் பள்ளம் முழுவதும் தண்ணீர் நிரம்பியிருந்ததை சில புகைப்படங்கள் எடுத்து விட்டு வந்தேன்.
சிவராத்திரிக்காக அந்த ஊர் மக்கள் வனத்துறை மற்றும் தொல்லியல் துறை அதிகாரிகளிடம் சிறப்பு அனுமதி பெற்று, அங்குள்ள நீரை வெளியேற்றி பூஜை செய்து வழி பட்டிருக்கிறார்கள். அப்போது திரும்ப அங்கு என்னால் செல்ல இயலவில்லை.
சரி…இனி அடுத்து மழை வரும்போதுதானே மறுபடியும் நிறையும் என்று அசட்டையாக இருக்கும்போது நண்பர் திருச்சி பார்த்தியிடமிருந்து ஒரு பதிவு. சிவராத்திரி கழிந்து ஒரு மழை பெய்ததாகவும், அதில் லிங்கத்தின் அடியிலிருக்கும் ஆலிங்கனம்நீரில் மூழ்கி விட்டதாகவும், இன்னொரு மழை பெய்தால், லிங்கமும் மூழ்கிவிடும் என்றும் பதிவிட்டிருந்தார்.
உடனே அடித்துப் பிடித்துப் போய் விட்டேன்.
மிகவும் அற்புதமாக இருந்தது அந்தச் சிறிய குடைவரைக் கோயில்.
முடிந்தால் அனைவரும் ஒருமுறை பார்க்க வேண்டிய இடம்.
வெ.பாலமுரளி.




