நான் கிருஷ்ண தேவராயன்……

எனக்குப் பிடித்த சரித்திர நாயகர்களில் ரொம்ப ரொம்பப் பிடித்தது மூன்று பேர்.

கிருஷ்ணதேவராயன், ராஜ ராஜ சோழன் & அக்பர் .

அதற்கு முக்கியக் காரணம் இந்த மூவருடைய விசாலமான அரசியல் தொலை நோக்குப் பார்வை. ராஜ ராஜனையும் , அக்பரையும் பற்றி மிகவும் விரிவாக பின்னர் பேசலாம். இன்று கிருஷ்ண தேவராயன்.

கிருஷ்ண தேவராயர் விஜய நகரப்பேரரசரின் புகழ்பெற்ற சக்கரவர்த்தி.
அவரைப் பற்றி பேசுவதற்கு முன்னால், விஜய நகரம் எப்படி வந்தது என்று பார்க்கலாம்.

வட இந்தியாவைக் கைப்பற்றி ஆட்சி புரிந்த முஸ்லிம் மன்னர்கள் தென்னிந்தியாவிற்கும் வந்து விடக் கூடாது என்பதற்காக சில பல குறு நில மன்னர்கள் சேர்ந்து துங்கபத்ரா ஆற்றங்கரையில் தொடங்கப்பட்டதே விஜயநகரம். 

கி.பி.1336 இல் வெற்றி நகரம் என்னும் அர்த்தத்தில் விஜயநகரத்தை முன்னின்று தொடங்கியவர்கள் ஹரிஹரன், புக்கர் என்னும் இரண்டு சகோதரர்கள். அவர்களே கர்னாடகம் என்பதை பிரபலப் படுத்தியவர்கள். கர் என்றால் கருப்பு , நாடு என்றால் பெரிய நகரம். அது கருப்பு வண்டல் நாடு என்பதால் கர்நாடகா என்று அழைக்கப்பட்டது என்று ஒரு சாரார் கூறுகின்றனர். கர்நாடக இசையும் அதிலிருந்து வந்ததுதான் என்கிறார் எஸ் ரமகிருஷ்ணன் . விஜயநகரம் இருந்த இடம் , இன்று ஹம்பே ( ஹம்பி ) என்று அழைக்கப்டுகிறது.

1509 – இல் ஆட்சிக்கு வந்த கிருஷ்ணதேவராயர் வந்த சில மாதங்களிலேயே ரொம்பநாள் வம்பு பண்ணிக் கொண்டிருந்த பாமினி சுல்தான்கள் , கோல்கொண்டா சுல்தான், பீஜப்பூர் சுல்தான் போன்ற சில மன்னர்களை வென்று என் வழி தனி வழி என்று நிரூபித்து விஜயநகரத்திற்கு அமைதியை உடனே கொண்டு வந்தார். அதுமட்டுமல்லாமல், தென்னிந்தியாவில் நாம் அனைவரும் ஒன்று, நமக்குள் எந்த சண்டையும் வரக் கூடாதென்று அனைத்து தென்னிந்திய மன்னர்களுக்கும் ஓலை மூலம் நட்புத் தூது அனுப்பிய முதல் சக்கரவர்த்தி கிருஷ்ணதேவராயர்தான் (ரெண்டு மூன்று ஏழரைகள் அவரை நம்பாமல் கடைசி வரை வம்பு பண்ணிக் கொண்டிருந்தது வேறு விஷயம் ).

கலை, இலக்கியம், அட்டகாசமான ஆட்சி முறை, குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள், ஒழுங்கு முறையான வரி வசூலிக்கும் முறை, விவசாயிகளுக்கு சலுகைகள் , எதிரிகளை அண்ட விடாமல் செய்தது என்று ஒரு பிரமிப்பான சக்கரவர்த்தியாக இருந்திருக்கின்றார் கிருஷ்ணதேவராயர். 

அந்த சமயத்தில் விஜயநகரத்திற்கு வருகை தந்த போர்த்துகீசிய பயணிகள் டோமிங்கோ பயஸ் மற்றும் பெர்னாவோ நூனிஸ் , கிருஷ்ணதேவராயரைப் பற்றி, தாங்கள் இது போல மிகவும் திறமை வாய்ந்த ஒரு மாபெரும் சக்கரவர்த்தியை இது வரை கண்டதில்லை என்று மிகவும் உயர்வாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள் . அதே போல், விஜய நகரத்தையும், இதுதான் உலகிலேயே இரண்டாவது மிகப்பெரிய நகரம் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள் ( முதல் நகரம் எது என்று குறிப்பிடவில்லை ). ஆனால், விஜயநகரம் பாரிஸை விட இரண்டு மடங்கு பெரிதாக இருக்கிறது என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். 

அவர் அது போல தென்னிந்தியாவில் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கும் நேரத்தில் தான், உஸ்பெக்கிஸ்தானில் உள்ள சாமர்கண்டிலிருந்து வந்த நம்ம பாப்ஸ் ( அதாங்க பாபர் ) முதலாம் பானிப்பட்டு யுத்தத்தில் ( 1526 இல் ) இப்ராஹிம் லோடியைத் தோற்கடித்து டில்லியைக் கைப்பற்றினார். அப்போது இந்தியாவில் உள்ள அனைத்து மன்னர்களும் கதி கலங்கிப் போயிருந்த நேரத்தில், நம்ம கிருஷ்ணதேவராயர் துணிச்சலாக ஒரு கடிதம் எழுதினார். ” மேன்மை தாங்கிய மொகலாய மன்னர் பாபர் அவர்களுக்கு, விஜயநகர சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தி கிருஷ்ணதேவராயர் எழுதிக் கொண்டது. எங்கள் வட இந்தியாவில் உள்ள மன்னர்களுக்கிடையில் நிலவும் ஒற்றுமையின்மையைப் பயன்படுத்தி தாங்கள் டில்லியைக் கைப்பற்றியதாக யாம் அறிந்தோம். மகிழ்ச்சி. நீங்களாவது டில்லியில் ஒரு நிலையான ஆட்சியைத் தருவீர்கள் என்று நம்புகிறோம். வாழ்த்துக்கள். அதேசமயத்தில், தென்னிந்தியாவில் மிகவும் ஒற்றுமையாக இருக்கும் எங்களிடம் வந்து மோதி வீணே உங்கள் அழிவையும் தேடிக் கொள்ள மாட்டீர்கள் என்று உறுதியாக நம்புகிறோம்”. ரொம்ப சிம்பிள் லெட்டர். 

கடிதம் கிடைத்த உடனேயே பாப்ஸ் , தன் முக்கிய அதிகாரிகள் அனைவரையும் அழைத்து ” யாரைய்யா இந்த கிருஷ்ணதேவராயர் ?” என்று விசாரித்ததாகத் தெரிகிறது. அதற்கு அவர்கள் என்ன பதில் சொன்னார்கள் என்று தெரியவில்லை. ஆனால், எதற்கு தேவையில்லாமல் இந்த ஆளோட வம்பு என்று அவர் நினைத்திருக்க வேண்டும். அவர், உயிரோடு இருக்கும் வரை தென்னிந்தியா பக்கம் எட்டிப் பார்க்கவேயில்லை. 

இந்தக் கடிதம் எழுதியது மிகப் பெரிய துணிச்சலான ராஜதந்திரிகமாக அனைத்து வரலாற்று ஆசிரியர்களுமே கூறுகின்றனர். அந்தக் கடிதம் இன்னும் லண்டன் ம்யூசியத்தில் இருப்பதாக எங்கோ படித்தேன். உண்மை தெரியவில்லை.

கிட்டத்தட்ட அதே நேரத்தில், தமிழகத்தில் வழக்கம்போல் நாம் நமக்குள்ளே அடித்துக் கொண்டிருந்தோம். வீரசேகர சோழன் , கொஞ்சம் வீக்காக இருந்த சந்திரசேகரப் பாண்டியனைத் தோற்கடித்து மதுரையைப் பிடுங்கிக் கொண்டான். சந்திரசேகர பாண்டியன் நேரே கிருஷ்ணதேவராயரிடம் சென்று முறையிட, அவர் தலையில் அடித்துக் கொண்டு தன்னுடைய பிரதம தளபதியான நாகம நாயக்கரை அனுப்பி மதுரையை மீட்டு சந்திரசேகரப் பாண்டியனிடம் கொடுத்து விட்டு விஜயநகரம் திரும்புமாறு கட்டளையிட்டார். அதுதான் கிருஷ்ண தேவராயர். 

நம்ம அமெரிக்கன் படையைப் பார்த்தவுடன் ஒதுங்கி வழி விட்ட ஈராக் படையைப் போல, வீரசேகர சோழன், விஜயநகரப் படையைக் கண்டவுடன் ரொம்ப வம்பு பண்ணாமல் ஒப்புக் கொஞ்சூண்டு மட்டும் சண்டை போட்டு விட்டு , மதுரையை நாகம நாயக்கரிடம் கொடுத்து விட்டு ஒதுங்கி விட்டான். நாகம நாயக்கருக்கு , அது சரியான வாய்ப்பாக இருந்ததால், மதுரை இருக்கும் நிலை சரியில்லை , என்று ஒப்புக்கு ஒரு காரணம் சொல்லி விட்டு, பாண்டியரை ஒரு பொம்மை போல ஆக்கி விட்டு, அவரே நம்ம மதுரையை ஆள ஆரம்பித்து விட்டார். 

ஆரம்பத்தில், சந்திர சேகர பாண்டியரும், கிருஷ்ண தேவராயரும் அவர் சொல்வது சரிதானே என்று நம்பினார்கள். நாகம நாயக்கர் இதுதான் சான்ஸ் என்று ஸ்ட்ராங்காக உட்கார்ந்து விட்டார். அனைத்து முடிவுகளையும் பாண்டியரைக் கலக்காமல் தானே எடுத்தார். 

கிருஷ்ணதேவராயருக்கோ வயதாகி விட்டது. அவரால் நம்மை ஒன்றும் பண்ண முடியாது. இங்கே தமிழர்களுக்குள் பெரிய ஒற்றுமை ஒன்றும் கிடையாது. எனவே, நாமே ஆண்டால் என்ன ? நாமும் நம்முடைய ஒரே பையனான விஸ்வநாதனுக்கு ஒரு ராஜ்ஜியத்தை அளித்தது போலாகும்” என்று அவருடைய கணக்கு வேறாக இருந்தது – அதற்கு விஸ்வநாதன் ஒரு நாளும் ஒத்துக் கொள்ளப் போவதில்லை என்பது அறியாமலேயே.

இலை மறை காய் மறையாக முதலில் சொல்லிப் பார்த்த ச.சே. பாண்டியன் ஒரு டயத்தில் பொறுமை இழந்து போய், மறுபடியும் கிருஷ்ணதேவராயர் காலில் தஞ்சம் புகுந்தார். கிருஷ்ணதேவராயருக்கு, நாகமநாயக்கர் பாண்டிய மன்னனை முதுகில் குத்தியதை கொஞ்சம் கூட ஒத்துக் கொள்ள முடியவில்ல. அது மட்டுமல்லாமல், ராயர் அனுப்பிய எந்த எச்சரிக்கையையும் அவர் சட்டை செய்யாதது இன்னும் கோபத்தை வரவழைத்தது. கொஞ்சம் கூட யோசிக்காமல் தன்னுடைய அனைத்து தளபதிகளையும் வரவழைத்து, யார் மதுரைக்குச் சென்று நாகமநாயக்கரை சிறைப்பிடித்து வரப் போகிறீர்கள் என்று பாண்டிய மன்னனை வைத்தே கேட்க, பாண்டியன் உட்பட அனைவரும் அதிர்ந்தே போய் விட்டார்கள். காரணம் , நாகம நாயக்கர் , சக்கரவர்த்தியின் வலது கை மட்டுமல்ல, மிகப் பெரிய வீரரும் கூட. அவரை எதிர்ப்பதை யாராலும் கனவிலும் கூட நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. எனவே எல்லோரும் மிகவும் ஜென்டிலாக சாரி என்று சொல்லி விட்டார்கள். 

“இந்த விஜயநகரத்தில் நாகம நாயக்கருடன் போரிட யாருக்கும் துணிவில்லையா? வெட்ட்ட்ட்கம் வெட்ட்ட்ட்ட்கம்” என்று ராயர் நம்ம சிம்மக் குரலோன் ஸ்டைலில் கர்ஜிக்க,” தாங்கள் அனுமதித்தால் நான் போகிறேன்” என்று மெதுவாக ஒரு குரல் ஒலித்தது. திரும்பிப் பார்த்த அனைவருக்கும் ஒரே ஆச்சரியம். குரல் வந்தது விஸ்வநாதனிடமிருந்து. விஸ்வநாத நாயக்கர், நாகம நாயக்கரின் ஒரே புதல்வன். 

இந்த இடத்தில் விஸ்வநாதனைப் பற்றி சொல்லியே ஆக வேண்டும். இளைஞன். நாகம நாயக்கருக்கு நீண்ட நாள் புத்திர பாக்கியமே இல்லாமல் இருந்து பிறந்த ஒரே செல்ல புத்திரன்.

வீரத்தில் தந்தைக்கு கொஞ்சமும் சளைக்காத சிங்கம் – II . தன் தேசத்தின் மீது அபரிமிதமான பக்தியும், சக்கரவர்த்தியின் மீது அளவிட முடியாத மரியாதையும், தன் தந்தையின் மீது அளவற்ற பாசமும் கொண்ட ஒரு கேரக்டர். அவன் குணங்களைக் கண்டு மிகவும் பிரியம் கொண்டு, அவனை தன் பிள்ளையைப் போலவே வளர்த்தார் சக்கரவர்த்தி. அவன் தன்னை விட்டு எங்கும் போய் விடக் கூடாதென்ற பாசத்தில் , அவனுக்கு ” தாம்பூலம் மடித்துத் தரும் ” பணியை சக்கரவர்த்தி கொடுத்திருந்தார். அது அவர் காலத்தில் ஒரு மிகப் பெரிய பதவியாக இருந்திருக்கிறது. சக்கரவர்த்தியின் அந்தப்புரத்து அலுவல்கள் தவிர மற்ற எல்லா நேரத்திலும் அவர் அருகிலேயே இருக்கக் கூடிய ஒரு வேலை. கிட்டத்தட்ட அங்கிருந்த அனைத்து அல்லக் கைகளும் அதை மிகவும் ரசிக்கவில்லை என்று தெரிகிறது. 

எனவே, தன் தந்தையைச் சிறை பிடிக்க நான் போகிறேன் என்று சொன்னதும் , எல்லோரும் கொஞ்சம் சத்தமாகவே முணு முணுக்க ஆரம்பித்து விட்டார்கள், இவன் போய் இவன் அப்பாவுடன் கூட்டு சேரப் போகிறான் என்று. விஸ்வநாதன், கண்கள் குளமாக, ” சக்கரவர்த்தி என்னை நம்ப வேண்டும். என் தந்தை செய்த தவறுக்கு நான் பிராயச்சித்தம் செய்கிறேன். அவசியம் ஏற்பட்டால், அவரைக் கொன்று வரவும் நான் சித்தமாக இருக்கிறேன்”. 

அவன் குரலில் இருந்த உண்மையும் நேர்மையும் சக்கரவர்த்திக்கு மட்டும் தெளிவாகத் தெரிய, ரொம்ப யோசிக்காமல், சரி விஸ்வநாதா , நீயே போய் வா. ஆனால் ஒரு நிபந்தனை, எனக்கு அவர் உயிருடன் வேண்டும், என்றார். 

விஸ்வநாதன் கொஞ்சம் கூடத் தாமதிக்காமல், உடனே பெரும் படையுடன் மதுரை வந்தடைந்து உடனே தன் தந்தையைப் போய் பார்த்திருக்கிறான். பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ என்று நம்ம கம்ப நாட்டான் சொன்னது போல இருவருமே உணர்ச்சி வசப்பட்டு கட்டிப் பிடித்து கண்ணீர் வடித்திருக்கிறார்கள். நம்ம விச்சு மிகவும் மெதுவாக தன் தந்தை செய்த, செய்யும் தவறைச் சுட்டிக் காட்டி , வேண்டாம் அப்பா , வாருங்கள், வந்து சக்கரவர்த்தியுடம் மன்னிப்பு கேளுங்கள், அவர் கண்டிப்பாக உங்களை மன்னித்து விடுவார் என்று மன்றாடியிருக்கிறான். 

அவர் சாரி விச்சு. இனிமேல் இதுதான் நம்ம ஊர், நீயும் என்னோடு வந்து விடு, இருவரும் சேர்ந்து மதுரையை ஆள்வோம். சக்கரவர்த்தி, அணையப் போகும் தீபம் போல் சுடர் விட்டு எரிந்து கொண்டிருக்கிறார். அவருக்குப் பிறகு விஜய நகரம் என்னவாகும் என்று சொல்ல முடியாது என்று அவர் தரப்பை எடுத்துரைக்க, இனி சமாதாம் வேஸ்ட் போர் ஒன்றுதான் வழி என்று விச்சுவிற்குத் தெள்ளந் தெளிவாகத் தெரிந்து விட்டது. சரி, நம் இரு படைகளுமே ஒன்றுதான். எனவே அவர்கள் எல்லோரையுமே கஷ்டப் படுத்துவதை விட, நாம் இருவரும் மட்டும் போரிடுவோம். நம் இருவரில் யார் ஜெயிக்கிறார்களோ , அவர்கள் சொற்படி மற்றவர்கள் கேட்க வேண்டும், சரியா ? என்றான். 

நம்ம நாகம்ஸூக்கு இந்த டீல் பிடித்திருந்தது. அவருக்கு கொஞ்சம் ஓவர் கான்ஃபிடன்ஸ் வேற – இவன் பொடியன் தானே என்று. ஆண்ட்டி கிளைமாக்ஸாக விச்சு ஜெயிக்க, நாகம நாயக்கர் தற்கொலைக்கு ட்ரை பண்ண அவரைச் சிறை பிடித்து சக்கரவர்த்தியிடம் நிறுத்தியிருக்கிறான்.

சக்கரவர்த்திக்கு விஸ்வநாதன் தன் வளர்ப்புப் பிள்ளை என்று பெருமை பிடிபடவில்லை. மகனே கேள் , உனக்கு என்ன வேண்டும் என்று வினவ, அவர் எதிர்பார்த்தது போலவே , தன் தந்தையை விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்க, அது உடனே நிறைவேறியிருக்கிறது.

அது மட்டுமல்லாமல், பாண்டியனை அழைத்து மதுரை நிலவரம் எப்படி இருக்கிறது என்று கேட்க, அவர், நாகம நாயக்கர் சொன்னது உண்மைதான், என்று தன் இயலாமையை வெளிப்படையாக ஒத்துக் கொண்டிருக்கிறார். அப்படியென்றால், உங்களுக்கு உதவ நான் விஸ்வநாதனை அனுப்பி வைக்கட்டுமா என்று கேட்க , அவர் சந்தோஷமாக ஓ.கே என்று சொல்லி விட்டார் ( அதைத்தானய்யா நானும் சொன்னேன் என்று நாகம நாயக்கர் தலையில் அடித்துக் கொண்டிருக்க வேண்டும் ). 

நம்ம விச்சுவும் மதுரைக்கு வந்து ஆயிரம் கால் மண்டபம் கட்டியது, மதுரை மீனாட்சி அம்மன் தெப்பக் குளத்தை தூர் வார்த்து அதை இன்னும் அழகுறச் செய்தது, கள்வர்கள் கொட்டத்தை அடக்கியது, கிருஷ்ணதேவராயர் போல ஒரு அட்டகாசமான ஆட்சியை செயல் படுத்தியது என்று பட்டையைக் கிளப்பினான் நம்ம விச்சு . ஆயிரம் கால் மண்டபத்தில் அவன் திருவுருவச் சிலையை இன்றும் காணலாம். அவன் செய்த அருஞ்செயல்களை மனதில் கொண்டு, அவனை நம் மக்கள் அனைவரும் விஸ்வநாத பாண்டியர் என்றே அழைத்திருக்கிறார்கள். 

இப்படித்தான் மதுரையில் நாயக்கர் ஆட்சி தொடங்கியது. பின்னால் வந்த திருமலை நாயக்கர், ராணி மங்கம்மாள் போன்றவர்கள் அதை இன்னும் மெருகேற்றினார்கள். 

கிருஷ்ணதேவராயர் முயற்சியால் மதுரை மெருகேறினாலும், விஜயநகரம் என்னவோ சரியத் தொடங்கி விட்டது. கிஷ்ணதேவராயரின் ஒரே மைந்தனான திருமலையை அவருடைய பிரதம மந்திரி திம்மராசு விஷம் வைத்துக் கொல்ல, கிருஷ்ணதேவராயர் மிகவும் உடைந்து போய், அந்த வருத்தத்திலேயே 1530 இல் இறந்தும் போய் விட்டார். அவருக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த அவர் தம்பி அச்சுதராயர் ஓரளவுக்கு அவர் போலவே நல்ல ஆட்சியைத் தந்தாலும் கூட , அவர் அளவிற்கு மற்ற மன்னர்களை அரவணைத்துப் போக முடியவில்லை. அதற்குப் பிறகு வந்தவர்களால் விஜயநகரத்தைக் காப்பாற்ற முடியாமல் அழியத் தொடங்கியது. 

ஆனாலும், அவரால் அரவணைக்கப்பட்ட மதுரையோ , நான்தான் நிஜமான விஜயநகரம் ( வெற்றித் திருநகர் ) என்று இன்றும் தலை நிமிர்ந்து நின்று கொண்டிருக்கிறது.

நாங்கல்லாம் மதுரை தெரியும்ல….?????????

வெ.பாலமுரளி 

பி.கு: நான் இரண்டு வருடங்களுக்கு முன்னால் ஹம்பி சென்றிருந்தேன் – கிருஷ்ணதேவராயர் வாழ்ந்த, ஆட்சி செய்த இடங்களைப் பார்க்க வேண்டும் என்று. நிஜமாகவே கண்ணீர் வந்து விட்டது. சரியாகப் பராமரிக்காமல், யுனெஸ்கோ பலகையைத் தாங்கி. எத்தனையோ பேர்களை வாழவைத்த அந்த மாபெரும் சக்கரவர்த்தி வாழ்ந்த இடத்தை யாரேனும் முறையாக பராமரிக்க வருவார்களா ?

ஆதாரங்கள்: ரா.கி.ரங்கராஜன் எழுதிய ” நான் கிருஷ்ணதேவ ராயன்”. மற்றும் அகிலன் எழுதிய ” வெற்றித் திருநகர் “.