திருப்பரங்குன்றமும் ஆட்டுக்கறி பிரியாணியும்……

கடந்த சில நாட்களாக நான் மிகவும் வருத்தத்துடன் உற்று நோக்கிக் கொண்டிருக்கும் ஒரு விஷயம்தான் நம்ம திருப்பரங்குன்றத்தில் நடந்து கொண்டிருக்கும்“ பஞ்சாயத்து”.

நான் நினைக்கும் சில விஷயங்களை இங்கு வெளிப்படையாக பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இதன் மூலம் யார் மனமாவது புண்பட்டால் என் வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

1. ஆரம்ப காலம் தொட்டே “தமிழர்களுக்கு” முருகன் வழிபாடு என்றாலே அசைவப் படையல்தான் ( ஆட்டு ரத்தம், கன்றுக்குட்டி ரத்தம் கலந்த தினை என்று நிறைய ). அதை நிரூபிக்க திருமுருகாற்றுப்படை, குறுந்தொகை, பரிபாடல் என்று நிறைய ஆதாரங்கள் சங்க இலக்கியங்களில் இருக்கின்றன. அது பற்றி நிறைய பேர் எழுதிக் கொண்டிருக்கிறார்கள் என்பதால் நானும் அதை ரிப்பீட் பண்ண விரும்பவில்லை.

2. இன்று கலவரத்தை ஏற்படுத்தத் துடிக்கும் “சில” தலைவர்களின் சமூகமும் கி.பி. ஏழாம் நூற்றாண்டு வரை ஆட்டையும், மாட்டையும் வெளுத்து வாங்கியவர்கள்தான். என்னவோ காலா காலத்துக்கும் அவர்கள் சைவ உணவு சாப்பிட்டது போலவும், அசைவம் என்றாலே அபிஷ்டு என்றும் பேசுவது காமெடி. இதற்கான ஆதாரங்கள் வேதங்கள் நிறைய கொட்டிக் கிடக்கின்றன.

3. சிவனை வழிபடும் மக்களும் இதற்கு விதிவிலக்கல்ல. இன்றும் கிராமங்களில் மகா சிவராத்திரி அன்று ஆடு, கோழி, சேவல்களை பலியிடுவது சர்வ சாதாரணம். அங்கு போய் இந்த ராசாக்களை பேசச் சொல்லுங்கள் பார்ப்போம். அடித்தே துரத்தி விடுவார்கள்.

4. முருகன் குடி கொண்டிருக்கும் திருப்பரங்குன்றம், குன்றக்குடி, பழமுதிர் சோலை , யோக நரசிம்மர் கோவில் இருக்கும் யானை மலை என அனைத்து ‘”புனித” மலைகளிலும் வார இறுதி நாட்களில் மக்கள் அனைவரும் அசைவ உணவு எடுத்துப் போய் உண்ணத்தான் செய்கிறார்கள். மலையெங்கும் எலும்புத் துண்டுகள் சிதறிக் கிடப்பதை இன்றும் காணலாம். அது மட்டுமா …..மது, ஆணுறைகள் என்று அனைத்து சமாச்சாரத்தையும் அங்கு நீங்கள் காணலாம். எனது வீடியோக்களில் நான் அவற்றை ஆதாரத்துடன் வெளியிட்டிருக்கிறேன்.

அதிலும் பழமுதிர் சோலை இருக்கும் அழகர் கோவிலில் ரொம்பவே அக்கிரமம். மலையின் அடிவாரத்தில் பெருமாள் கோவில். மலையின் நடுப்பகுதியில் முருகனின் பழமுதிர்ச் சோலை. மலையின் உச்சியில் நூபுரகங்கை இருக்கும் ராக்காயி அம்மன் கோயில்.

இவ்வளவு புனித இடங்கள் இருந்தும் , அங்கு வரும் சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் ( ???? ) பழமுதிர்ச் சோலை கோவிலின் வாசலிலேயே கன்னா பின்னாவென்று ஒன் பாத் ரூம், டூ பாத் ரூம் போய்க் கொண்டுதானிருக்கிறார்கள். நீங்கள் காரை பார்க் செய்து விட்டு எதன் மீதும் மிதித்து விடாமல் கோவிலுக்குள் செல்வது உலக மகாக் கடினம்.

இதற்காக இதுவரை எந்தவொரு இந்து முன்னணி அமைப்புகளும் போராடியது போல் தெரியவில்லை.

இதில் நமது புனிதம் எதுவும் கெடுவதில்லையா ? 

5. திருப்பரங்குன்றம் மலையை ஒன்றுக்கும் மேற்பட்ட சர்வே எண்களால் பிரித்து வைத்திருக்கிறார்கள். அதில் ஒரு சர்வே எண்ணுக்கு சிக்கந்தர் மலை என்றுதான் பெயர். அது பிரிட்டிஷார் காலத்தில் பிரிக்கப்பட்டிருக்கலாம். அது தொடர்பாக நிறைய கோர்ட் கேஸ்களும், தீர்ப்புகளும் உள்ளன.

சரி…இஸ்லாமியர்கள் பக்கம் பார்க்கலாம்.

1. டெல்லி சுல்தான்களின் மதுரை ஆளுனர்தான் இந்த சிக்கந்தர் பாதுஷா ( ஆளுனர் என்றாலே ஏழரைதான் போலிருக்கு). அவர் நமது பிற்கால ( தென்காசிப் ) பாண்டியர்களில் ஒருவரது

( திருப்பாண்டியன் ???) படையினரால் கிபி.14ம் நூற்றாண்டில் கொல்லப்பட, அந்தப் பாண்டிய மன்னனால் எழுப்பப்பட்டதுதான் இந்த தர்ஹா என்று சொல்லப்படுகிறது. ஆனால் இப்போதுள்ள கட்டிடம் நூறு வருடங்களுக்கு முன்னர் கட்டியதுதான்.

2. இஸ்லாமியர் வழக்கப்படி இறந்தவர்களை வழிபடுவது அவர்களுக்கு அனுமதியில்லை ( அல்லா ஒருவரே கடவுள் என்னும்போது மற்றவர்களை அவர்கள் வழிபடுவது சாத்தியமில்லை).

3. அப்படியென்றால் “தர்ஹா” என்பது ??? நமது தமிழர் பண்பாடுதான் அது. ஆம். இதுவும் ஒரு முன்னோர் வழிபாடுதான். இன்றும் அங்கு நம் இந்துக்கள் சென்று ஒரு கும்பிடு போட்டு செல்வதை நானே பல முறை பார்த்திருக்கிறேன் ( நானும் அதைச் செய்திருக்கிறேன்).

4. அவர்கள் சொல்லும் இந்த “ கந்தூரி” விழா பற்றி எனக்கு அவ்வளவாகத் தெரியாது. நாங்கள் ரொம்ப வருடங்களாக ஆடு பலி கொடுத்துக் கொண்டுதானிருக்கிறோம் என்றும் சொல்கிறார்கள். அது பற்றியும் எனக்கு சரியாகத் தெரியவில்லை. எனவே நோ காமெண்ட்ஸ். ஆனால் திருப்பரங்குன்றத்தில் வசிக்கும் மக்கள் இதைப் பற்றி பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை.

எப்படிப் பார்த்தாலும், இது எங்கள் மதுரை மக்களின் பிரச்சினை. எங்கள் யாருக்கும் இது ஒரு பெரிய விஷயமாகவே தெரியவில்லை.

அப்படி இருக்கும்போது, எச். ராஜா, நவாஸ் கனி, இந்து முன்னணி போன்ற மக்களுக்கு இங்கு என்ன வேலை என்று தெரியவில்லை.

அதிலும் திமுக எம்பி நவாஸ் கனி வந்து, ஒரு பஞ்சாயத்து ஓடிக் கொண்டிருக்கிறது என்பது தெரிந்தும் கறி பிரியாணி சாப்பிட்டது கண்டிக்கத்தக்கது. அதை முதல்வர் வெளிப்படையாகக் கண்டிக்காதது மிகவும் தவறான செயல்.

மதுரையைச் சுற்றி இருக்கும் எண் குன்றங்களில் இதுவே பெரிய குன்று என்னும் அர்த்தத்தில் “ திருப் பெரும் குன்றம் “ என்றழைக்கப்பட்ட இந்த மலையில் ஏறத்தாழ 2200 ஆண்டுகளுக்கு முன்னர் அறிவர்கள் ( ஆசீவகர்கள்) வாழ்ந்த குகையை பச்சை பெயிண்ட் அடித்தது ஏன் என்று புரியவில்லை. ? இதன் மூலம் என்ன சாதித்து விட்டார்கள் என்றும் தெரியவில்லை. அதை எந்தவொரு இஸ்லாமிய அமைப்பும் கண்டித்தது போல் தெரியவில்லை. அவர்களும் அதை உள்ளூர ரசிக்கிறார்களா இல்லை அவர்களும் பிள்ளையை கிள்ளி விட்டு தொட்டிலை ஆட்டுகிறார்களா என்று சந்தேகம் வருவதைத் தவிர்க்க முடியவில்லை.

இந்தச் செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

அந்த அறிவர்களும் ( ஆசீவகர்களும்), அவர்களுக்குப் பின்னர் இங்கு வாழ்ந்த ஜெயினர்களும் “உண்மையான” உயிர் கொல்லாமையை மக்களுக்கு போதித்தவர்கள்.

நம் “இந்துக்கள்” 1250 ஆண்டுகளுக்கு முன்னர் அங்கு குடைவரைக் கோயிலைக் குடைந்து சிவனையும், கொற்றவையையும்வழிபடுவதற்கு முன்னர் இந்த மலையில் வசித்தவர்கள் அந்த ஆசீவகர்களும், அவர்களைத் தொடர்ந்து வந்த ஜெயினர்களும்தான் . (ஆம். திருப்பரங்குன்றத்துக் கோயிலில் பிரதான தெய்வங்கள் சிவனும், கொற்றவையும் தான்).

எனவே அந்த அறிவர்களுக்கும் ( ஆசீவகர்களுக்கும்), ஜெயினர்களுக்கும் மதிப்பு கொடுத்து அந்த மலையை “அனைவரும்” “சுத்தமாக” வைத்திருப்பது நாம் அவர்களுக்கு செய்யும் மிகப் பெரிய மரியாதையாகும்.

கடைசியாக, எச்.ராஜாக்களுக்கும், நவாஸ் கனிகளுக்கும், பச்சை பெயிண்ட் அடித்த மதத் தீவிர வாதிகளுக்கும் ஒரு பணிவான வேண்டுகோள்.

தயவுசெய்து எங்கள் மதுரையை விட்டு விடுங்கள். எங்கள் நிம்மதியைக் கெடுக்காதீர்கள்.

உங்கள் மதப் பிரச்சினையை வடக்கோடு நிறுத்திக் கொள்ளுங்கள்.

வெ.பாலமுரளி.