திருத்தலையாலங்காடு …….

இப்படி மொட்டையாகச் சொன்னால் உங்களுக்குப் புரியாது. 

தலையாலங்கானத்துப் போர் நடந்த ஊர் என்றால் டக்கென்று ஞாபகத்திற்கு வரும் ஊர்தான் இன்றைய திருத்தலையாலங்காடு.

திருவாரூரிலிருந்து 11 கி.மீ. தூரத்தில் குடவாயிலுக்கு அருகில் இருக்கும் ஒரு குக்கிராமம்தான் திருத்தலையாலங்காடு.

சங்க காலத்தில் நடந்த உக்கிரமான போர்களில் தலையாலங்கானத்துப் போரும் ஒன்று. 

வயதில் குறைந்த இளைஞனான, உண்மையைச் சொன்னால் சிறுவனான,  நெடுஞ்செழியன் தன்னுடைய பாண்டிய நாட்டைக் காப்பற்ற இரண்டு பேரரசர்கள்,ஐந்து வேளிர்கள் ஆக எழுவரோடு போரிட்டு வென்றதுதான் தலையாலங்கானத்துப் போர்.

சங்க காலத்தில் சிறுவர்களுக்கு “ஐம்படைத் தாலி” என்னும் ஒரு அணிகலனை கழுத்திலோ , காலிலோ பாதுகாப்பிற்காக கட்டும் வழக்கம் இருந்திருக்கிறது. நம்ம மேற்படி நெடுஞ்செழியன், தலையாலங்கானத்துப் போரில் அந்த ஐம்படைத் தாலியை காலில் இருந்து கழட்டாமலே போருக்கு சென்றான் என்கிறது நெடு நல்வாடை. அதிலிருந்து அவன் தன்னுடைய சிறு வயதிலேயே போரில் ஈடுபட்டு வென்றிருப்பது தெரிகிறது ( இது உயர்வு நவிழ்ச்சி அணியாகவும் இருக்கலாம்).

 சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறைசோழன் கிள்ளிவளவன்,வேளிர்களான திதியன்எழினிஎருமையூரன்இளங்கோ வேண்மான்பொருநன் ஆகியோர்தான் நம்மாள் போரிட்டு வென்ற அந்த எழுவர்.

எதிரிகளைக்கண்டு பாண்டியன் கடுஞ்சினம் கொண்டு வஞ்சினம் கூறுகிறான். (இது செய்யாவிட்டால் எனக்கு இன்னது நேரட்டும் என்று பலர் முன் கூறுவதுதான் வஞ்சினம்). 

நாற்படை நலம் உடையவர் என்று தன்னைத் தானே புகழ்ந்துகொண்டு செருக்கோடு என்னைப்பற்றிச் சிறுசொல் கூறி, என்னோடு போரிடுவோர் எல்லாரையும் ஒன்றாகச் சிதைத்து, என் அடிக்கீழ் நான் கொண்டுவராவிட்டால்,

  • என் குடிமக்கள் என்னைக் கொடியன் என்று தூற்றுவார்களாக!
  • மாங்குடி மருதனைத் தலைவனாகக் கொண்ட என் புலவர்-சங்கம் என்னைப் பாடாது போகட்டும்!
  • என்னைப் பாதுகாப்போர் துன்பம் கொள்ள, இரவலர்களுக்கு வழங்கமுடியாத வறுமை என்னை வந்தடையட்டும்!

என்று கூறி போருக்குப் புறப்படுகிறான். 

இப்போரில் எதிரிப்படைகளை சிதறடித்து எழுவர் முரசுகளோடு வெண்குடைகளையும் நெடுஞ்செழியன் கைப்பற்றினான்.

ஆம். இவனுடைய சம காலத்தில்தான் மதுரைக் காஞ்சியை இயற்றிய மாங்குடி மருதனாரும், நெடுநல்வாடையை இயற்றிய நக்கீரனும் வாழ்ந்துள்ளனர்.

இதில் நெடுநல்வாடை, இந்த நெடுஞ்செழியனை பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு நக்கீரர் இயற்றியது. 

மதுரைக் காஞ்சி, நெடுஞ்செழியனுக்கு மாங்குடி மருதனார் உலகவியலைப் பற்றி போதித்தது. இதில், அன்றைய (சங்க கால ) மதுரை எப்படி இருந்தது என விலாவாரியாக விவரித்துள்ளார் ( அது பற்றி தனியே ஒரு கட்டுரை எழுதுகிறேன்).   

சரி… அந்த ஊர் இன்று எப்படியிருக்கிறது என்று பார்ப்பதற்காக சென்ற மாதம் அங்கு சென்றிருந்தேன்.

ஊர் நுழைவாயிலிலேயே, “தலையாலங்கானத்துப் போர் இங்குதான் நடை பெற்றது” என்ற பதாகை நம்மை வரவேற்கிறது. 

ஆனால், இந்த ஊர் மக்களுக்கு அது பற்றிய பெரிய புரிதலோ, ஆர்வமோ இருப்பது போல் தெரியவில்லை. Business was as usual .

மொத்தமே நூறு அல்லது நூற்றி ஐம்பது குடும்பங்களே வசிக்கும் மிகச் சிறிய கிராமம். 

அங்கு மிகப் பழைமையான  சிவாலயம் ஒன்று உள்ளது. அங்குள்ள கல்வெட்டுக்களைத் தேடிப் பார்த்ததில் “ஶ்ரீ ராஜராஜன்” இந்தக் கோவிலுக்குத் திருப்பணி செய்திருப்பது தெரிய வந்தது. அவன் பெயரை கையால் வருடி, அவன் வாழ்ந்த காலத்திற்கு சென்று வந்தது புல்லரிப்பான விஷயம் ( இதுவும் ஒரு வகையில் டைம் மெஷின்தான் ).

அந்தக் கோயிலின் அர்ச்சகர், அந்த ஊரில் பாண்டியன் குளம் என்று ஒரு குளம் இருப்பதாகவும், அங்குதான் “தலையாலங்கானத்துப் போர்” நடை பெற்றிருக்க வேண்டும் என்று தொல்லியல் துறை அதிகாரிகள் சொன்னதாகவும் சொல்லி, மறக்காமல் அதைப் பார்த்து விட்டு செல்லுங்கள் என்றும் அறிவுறுத்தினார்.

ஆனால், அங்கு தொல்லியல் துறையினர் ஏதேனும் தடயங்களைக்  கண்டு பிடித்தார்களா என்ற விபரம் அவருக்குத் தெரியவில்லை.

ஊரே குப்பை மேடாகக் காட்சியளிக்கிறது. 

அந்தக் கோயிலின் தெப்பக்குளம், பாண்டியன் குளம் இரண்டையும் புகைப்படம் எடுத்துக் கொண்டு கிளம்பினேன்.

டைம் மெஷினில் தலையாங்கானத்துப் போர் எப்படி நடந்திருக்கும் என்று சங்ககாலம் வரை சென்று பார்த்து வந்தது சந்தோஷமாயிருந்தது.  

வெ.பாலமுரளி 

தகவல்கள் : விக்கிப் பீடியா. நன்றிகள்