மகாபலிபுரத்திற்கு அருகில் உள்ள சாளுவன் குப்பம் முருகன் கோயில் முழுமையான கட்டிடமாக நமக்கு கிடைக்கவில்லை என்பதால், அதை விட்டு விடலாம்.
தற்போதும் ஜம்மென்று நிற்கும் முருகனின் முதல் கட்டுமானக் கோயில் கண்ணனூரில் இருக்கும் பாலசுப்பிரமணியர் கோயில்தான்.
இது திருப்பத்தூரிலிருந்து 25 கி.மீ. தூரத்தில் திருக்கோளக்குடிக்கு அருகில் உள்ளது.
இது கி.பி. 9ம் நூற்றாண்டில் விசயாலயச் சோழன் மகன் முதலாம் ஆதித்த சோழன் கட்டிய கோயிலென்று சொல்லப்படுகிறது.
பின்னாளில் இந்தக் கோயிலுக்கு பாண்டிய மன்னர்களும் திருப்பணி செய்துள்ளார்கள்.
சரி…இந்தக் கோயிலில் என்ன விசேஷம் ?
இதில் முருகனுக்கு வாகனம் யானை. அய்யனாருக்கு உள்ளது போலவே இவருக்கும் எதிர்த்தாற்போல் யானை வாகனம்தான் உள்ளது.
ஆம், ஆரம்ப காலத்தில் முருகனுக்கு யானைதான் வாகனம். மயிலோ, சேவலோ கிடையாது.
ஆசீவகம் முழுமையாக அழிக்கப்பட்டபோது, பின்னாளில் தேவையில்லாமல் முருகனையும் ஆசீவகத்தோடு இணைத்து யாரும் குழப்பிக் கொள்ளக் கூடாது என்று எண்ணி மாற்றியிருக்கலாம்.
விமானத்தின் நான்கு மூலைகளிலும் இன்றும் யானை சிற்பம்தான் உள்ளன.
எனவே, இந்தக் கோயில் முருகன், “சுப்ர”மணியனாக மாற்றப்பட்டதற்குப் பின்னர், முருகனின் வாகனமான யானையை மாற்றி மயில், சேவலை புகுத்துவதற்கு முன்னால் கட்டப்பட்டிருக்கலாம்.
அது மட்டுமல்ல. முருகனின் பீடம், சிவனுக்குள்ளது போலவே ஆவுடையாராக இருப்பது இங்கு மட்டுமே. அவர் இந்த ஆவுடையாரில்தான் நின்று கொண்டிருக்கிறார்.
விமானத்தின் உட்புறத்தைப் பார்த்தால், கோயிலின் தொன்மையை உணர முடியும். அதன் படத்தையும் இங்கு இணைத்துள்ளேன்.
இந்தக் கோயில் இன்று தமிழ்நாடு தொல்லியல் துறையின் வசம் உள்ளது. சமீபத்தில் அவர்கள் இந்தக் கோயிலை எடுக்கும்வரை,, முருகனின் சிலை கருவறையின் வாசலில்தான் வெகுகாலமாக இருந்திருக்கிறது. அதை இந்த ஊர் மக்கள் யாருமே கண்டு கொள்ளவில்லை – அர்ச்சகர் சமூகத்தையும் சேர்த்து.
தொல்லியல் துறையில் உள்ள சில பேர், சிலையை நகர்த்தி கருவறையில் ஆவுடையாரின் மீது வைத்திருக்கின்றனர். அதற்கு அர்ச்சகர் சமூகம், சூத்திரர்கள் எப்படி முருகன் சிலையை தொட்டு நகர்த்தலாம் என்று தொல்லியல் துறையோடு கடுமையாக சண்டை போட்டிருக்கிறது. அவர்கள் அதை காதிலேயே போட்டுக் கொள்ளாதலால், சில பூஜை, புனஸ்காரங்கள், பரிகாரங்கள் செய்து அந்த “ பாவத்தை” போக்கியிருக்கிறார்கள்.
இந்துக்கள், இந்துக்கள் என்று கூவும் இந்து முன்னணியினரும், பிஜேபி யினரும் அப்போது எங்கு சென்றார்கள் என்று தெரியவில்லை.
இந்த விஷயத்தை அந்தக் கோயிலின் அர்ச்சகர்தான் எனக்குச் சொன்னது.
வெ.பாலமுரளி
நன்றிகள் : இந்த இடத்தைப் பற்றி எனக்கு விளக்கி என்னை அங்கு போகத் தூண்டிய நண்பர் ராஜகுரு அவர்களுக்கும், சோழர்களின் இந்த கட்டுமானத்தை எனக்கு பரிவுடன் விளக்கிய உயர்திரு. ஐயா குடவாயில் பாலசுப்பிரமணியன் அவர்களுக்கும், அவரை தொடர்பு கொள்ள உதவிய தஞ்சாவூர் ஓவியர் நண்பர் மணிவண்ணன் அவர்களுக்கும் நன்றிகள் கோடி.




