வரலாற்றில் ஆர்வம் உள்ள பெரும்பாலான மக்களுக்கு, மாமண்டூர் என்றவுடன் மகேந்திரவர்ம பல்லவன் செய்வித்த குடைவரைக் கோயில்கள் தான் ஞாபகத்திற்கு வருமே தவிர, அங்குள்ள தமிழி கல்வெட்டு பற்றி தெரிந்திருக்க வாய்ப்புகள் குறைவு.
காஞ்சி புரத்திலிருந்து வந்தவாசி செல்லும் சாலையில் காஞ்சியிலிருந்து 12 கி.மீ. தொலைவில் இருக்கும் சிறு கிராமம்தான் மாமண்டூர். இந்தப் பெயரில் வேறு சில கிராமங்களும் இருப்பதால், இதற்கு அருகில் உள்ள “தூசி” என்னும் ஊரின் பெயரையும் சேர்த்து இந்த ஊரை “ தூசி மாமண்டூர்” என்றழைக்கிறார்கள்.
ஊரில் குடைவரைக் கோயிலுக்குச் செல்லும் வழி என்றால் உடனே காண்பித்து விடுகிறார்கள். ஊரிலிருந்து ஒரு அரை கிலோமீட்டர் தொலைவில்தான் இருக்கிறது. குடைவரைக் கோயில்கள் இருக்கும் அதே வளாகத்தில், அதே குன்றில்தான் தமிழிக் கல்வெட்டும் உள்ளது.
அது தெரியாமல், அந்த ஊரில் போய் தமிழிக் கல்வெட்டு, பிராமிக் கல்வெட்டு என்றெல்லாம் கேட்டு அவர்களையும் குழப்பி, நானும் குழம்பி விட்டேன்.
அங்கே சிறிதும் பெரிதுமாக மூன்று குன்றுகள் உள்ளன. மொத்தம் நான்கு குடைவரைக் கோயில்கள் அடுத்தடுத்து உள்ளன. இவை யாவும் கி.பி.ஏழாம் நூற்றாண்டில் முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் செய்வித்தவை.
முதல் குன்றில் ஒரு கோயிலும், இரண்டாவது குன்றில் ஒரு கோயிலும், மூன்றாவது குன்றின் அடிவாரத்தில் கடைசி இரண்டு கோயில்களும் உள்ளன.
முதல் இரண்டு கோயில்களுக்கும் செல்ல அழகாக படிக்கட்டுகள் போட்டிருக்கிறார்கள். சிறிய குன்றுகள்தான். இரண்டு நிமிடங்களில் ஏறி விடலாம்.
முதல் குன்றில் உள்ள கோயில் ஏதோ ஒரு காரணத்தினால், (அனேகமாக பாறையின் தன்மை சரியில்லாத காரணத்தினால்), பாதியிலேயே கைவிடப்பட்டு அடுத்த குன்றிற்கு சென்றிருக்க வேண்டும்.காரணம் முதல் கோயிலின் தொடர்ச்சியை அடுத்த கோயிலில் காண முடிகிறது.
அதே காரணத்தினாலேயே இரண்டாவதிலிருந்து மூன்றாவதிற்கும், மூன்றாவதிலிருந்து நான்காவதிற்கும் சென்றிருக்கிறார்கள்.
காரணம் ஒவ்வொரு கோயிலிலும் முதல் கோயிலோடு ஒப்பிடுகையில் ஒரு படி அதிகமான வேலைப்பாடு காண முடிகிறது.
நான்காவது கோயில் மட்டுமே அனைத்து வேலைப்பாடுகளும் அழகுற முடித்து வைக்கப்பட்டுள்ளன. இதில் மட்டுமே சிவனின் சிலையைப் பார்த்த ஞாபகம்.
இவற்றில் முதல் கோயிலில் மட்டும் அந்தக் காலத்தில் தீட்டிய வண்ண ஓவியங்களின் மீதங்களை இன்றும் காண முடிவது சிறப்பு.
இந்த நான்கு கோயில்களையும் ஒன்றன்பின் ஒன்றாக அடுத்தடுத்து பார்க்கும்போது, குடை வரைக் கோயில்களை ஒரு நிலையிலிருந்து அடுத்த நிலைக்கு எவ்வாறு கொண்டு சென்றிருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. அற்புதம்.
நமது தொல்லியல் துறை இந்தக் குன்றுகளைச் சுற்றி இரும்பினால் க்ரில் செய்து பாதுகாத்து வைத்திருப்பது ஒரு ஆறுதலான விஷயம்.
இதே வளாகத்தில் நான்காவது குடைவரைக் கோயிலைத் தாண்டி ஒரு ஐம்பது அல்லது நூறு மீட்டர் குன்றைச் சுற்றி நடந்தால், உங்கள் இடது கைப் பக்கத்தில் ஒரு இடத்தில் சிவப்பு பெயிண்ட்டில் மேலே செல்வதற்கு அம்புக் குறி போட்டு வைத்திருப்பார்கள்.
அதைத் தொடர்ந்து மேலே ஏறினால், நீர் வடி விளிம்பு வெட்டப்பட்ட ஒரு பெரிய பாறையையும் அதில் சிவப்பு பெயிண்ட்டில் வரையப்பட்ட ஸ்வஸ்திக் சின்னத்தையும் காணலாம்.
இதற்குச் செல்ல முறையான படிக்கட்டுகள் கிடையாது. கரடு முரடான கற்களில் ஏறித்தான் செல்ல வேண்டும். ஆனால் அதிக உயரம் கிடையாது. ஒரு ஐந்து நிமிடத்தில் அந்தப் பாறையை அடைந்து விடலாம்.
அந்தப் பாறையின் முகப்பில்தான் ஒரு தமிழி கல்வெட்டு இரண்டு வரிகளில் வெட்டப்பட்டுள்ளது. இதில் உள்ள “அ” எழுத்தின் அமைப்பை வைத்து இதன் காலத்தை கி.பி. மூன்றாம் நூற்றாண்டு என வரையறுத்துள்ளது நமது தொல்லியல் துறை. ஒரு நூறு ஆண்டுகள் முன்னரும் இருக்கலாம்.
கல்வெட்டின் வாசகம் : “ கணிமான் தேனூர் தந்த கோன் குன்று ஆசி செயிதான் தசன் சிறுவன்”
கல்வெட்டின் அர்த்தம் : தேனூரை வென்ற கணிமான் என்ற சிறு மன்னனின் அல்லது தலைவனின் குன்று இது. இதில் (ஆசி என்றழைக்கப்பட்ட) பந்தல் தாங்கும் வசதியை சிறுவன் என்னும் தச்சன் செய்து கொடுத்தான்.
வானிலை ஆய்வு செய்தவர்களைக் குறிப்பிடும் “கணியன்” அல்லது “கணி” என்ற வார்த்தையை மற்ற இடங்களில் உள்ள கல்வெட்டுக்களில் காண முடிகிறது. இங்கு இந்தத் தலைவனின் பெயரே “கணிமான்”. ஒரு வேளை இவனும் கணியத்தில் தேர்ச்சி பெற்று “கணிமான்” என்ற அடைப் பெயரைப் பெற்றவனாக இருந்திருக்கலாம்.
அதேபோல், “தசன்” என்ற சொல்லில் “ச்” என்ற மெய்யெழுத்து விடுபட்டுள்ளது. தச்சன் என்ற சொல் வரும் ஒரே கல்வெட்டு இதுதான்.
தலைவன் அல்லது சிற்றரசன் என்ற அர்த்தத்தில் வரும் கோன் என்ற சொல் வரும் ஒரே கல்வெட்டும் இதேதான்.
பாறையின் அடிப்புறத்தில் உள்ள சிறு குகையில் இரண்டு கல் திண்டுகள் உள்ளன. அதில் ஒன்றில் ஒருவர் படுப்பதற்கேற்ப ஒரு கற்படுக்கையும், உயரம் குறைந்த மற்றொரு திண்டில் மருந்து அரைக்கும் இரு குழிகளும் உள்ளன.
மக்கள் அசிங்கப்படுத்தக் கூடாது என்ற நல்லெண்ணத்தில் யாரோ ஒரு நல்ல மனிதர் “ இது முனிவர்கள் வாழ்ந்த இடம்” என்று சிவப்பு பெயிண்டில் எழுதி வைத்திருக்கிறார்.
“ஸோ வாட் ?” என்று அந்த வாக்கியத்திற்குக் கீழேயே யாரோ சில மதுப் பிரியர்கள் உட்கார்ந்து சோம பானம் அருந்தி, புகை பிடித்து, புலால் சமைத்து உண்டிருப்பதைக் காண முடிந்தது.
தமிழண்டா 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥💪💪💪💪💪💪💪💪💪💪
வெ.பாலமுரளி.
நன்றி : தமிழ் நாடு தொல்லியல் துறையின் “ தமிழ் – பிராமி கல்வெட்டுக்கள்”.











