தமிழியைத் தேடி: 6 – மசிலீச்சுரம்

மசிலீச்சுரம் என்றால் யாருக்கும் புரியாது. 

குன்றக்குடி என்றால் நிமிர்ந்து உட்காருவீர்கள்.

சிவகங்கை மாவட்டத்தில், காரைக்குடியிலிருந்து ஆறு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஒரு சிறிய கிராமம்தான், பழைய காலத்தில் மசிலீச்சுரம் என்றழைக்கப்பட்ட இன்றைய குன்றக்குடி.

கி.பி. 18ம் நூற்றாண்டில், “அகில இந்தியாவிலும்” ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடிய முதல் வீரப் பெண்மணியான இராணி வேலு நாச்சியார் குன்றக்குடி மலை மீது ஒரு குடிசை வேய்ந்து அதில் ஒரு முருகன் சிலையை வைத்து வழிபட்டது முதல் இந்த ஊர் பிரபலமாகி விட்டது ( வேலு நாச்சியாருக்குப் பிறகு கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளுக்குப் பின்னர் வந்த ஜான்சி ராணிதான் ஆங்கிலேயரை எதிர்த்த முதல் பெண்மணி என்கிறது வட இந்தியர்களால் சூழப்பட்டுள்ள இந்திய அரசு. வேதனை ).

ஏதோ ஒரு காரணத்தினால் வேலு நாச்சியார் இந்தக் கோயிலை தனது படைத் தளபதிகளான மருது சகோதர்களிடம் ஒப்படைக்க, அவர்கள் கட்டியதுதான் மலை மேல் இன்று நாம் காணும் முருகன் கோயில்.

இந்த வரலாறு நம்மில் பலருக்குத் தெரியும். நம்மில் நிறைய பேருக்குத் தெரியாத விஷயம், இங்குள்ள குடைவரைக் கோயில்.

இந்தக் கோயிலின் படிகளில் ஏறுவதற்கு முன்னால், இன்னும் சில அடிகள் நேராக நடந்தால் இரண்டு பிரமாண்டமான கதவுகள் எப்போதும் சாத்தியே இருப்பதைக் காண முடியும். ஆனால், பூட்டியிருக்காது.

அதைத் தள்ளிக் கொண்டு உள்ளே சென்றால், ஒரு அற்புதமான குடைவரைக் கோயிலைக் காண முடியும்.

கி.பி.ஏழாம் நூற்றாண்டில் செய்விக்கப்பட்ட இந்தக் குடைவரைக் கோயிலில் மூன்று கருவறைகள் உள்ளன. அதன் வெளியில் நாயக்கர் காலத்தில், வெங்கள நாயக்கர் என்பவரால் எழுப்பப்பட்ட அழகிய மண்டபம் உள்ளது. இவற்றில் மொத்தமாக மலைக் கொழுந்தீஸ்வரர், அண்ணாமலையார், சண்டேஸ்வரர், சுந்தரேஸ்வரர் என்று  நான்கு சிவன் கருவறைகள் உள்ளன.  அவை தவிர முருகன், பிள்ளையார், பெருமாள், சண்டிகேஸ்வரர் பொன்றோரின் நிறைய புடைப்புச் சிற்பங்கள் என்று ஒரு சிறிய கலைக்கூடத்தை இந்தக் குடைவரைக் கோயிலில் காண முடிகிறது. அனைத்தும் அற்புதமான சிற்பங்கள்.

சிற்பங்கள் தவிர, ஏராளமான கல்வெட்டுக்கள் இந்தக் கோயிலின் வரலாற்றை நமக்குச் சொல்கின்றன. இதில்தான் “ மசிலீச்சுரம்” என்ற ஒரு வட்டெழுத்துக் கல்வெட்டு உள்ளது. அதிலிருந்துதான் பண்டைய காலத்தில் குன்றக்குடியின் பெயர் மசிலீச்சுரம் என்பது வெளி உலகிற்கு தெரிந்தது. 

அதுமட்டுமல்லாது ஶ்ரீமாற ஶ்ரீவல்லபன், விக்கிரமபாண்டியன், மாறவர்ம சுந்தர பாண்டியன், சடையவர்ம சுந்தரபாண்டியன் போன்ற பாண்டிய மன்னர்களின் கல்வெட்டுக்களும், முதலாம் ராஜராஜன், முதலாம் ராஜேந்திரன் மற்றும் முதலாம் குலோத்துங்க போன்ற சோழ மன்னர்களின் கல்வெட்டுக்களும் இந்தக் கோயிலுக்கு செய்த திருப்பணிகள் பற்றி விரிவாகப் பேசுகின்றன. 

இதிலிருந்து, பாண்டிய நாடு சோழர்களின் கைகளுக்குச் சென்ற பிறகும் இங்குள்ள கோயில்கள் முறையாகப் பராமரிக்கப்பட்டன என்பது தெளிவாகிறது. 

சரவணப் பொய்கை என்ற கோயிலின் தெப்பக்குளம் கோயில் வளாகத்துக்கு வெளியில் உள்ளது. அந்த இடத்திற்குச் சென்று ஞானியர் மடம் அல்லது சாமியார் மடம் எங்கே என்று கேட்டால் இரண்டு வீடுகளுக்கு நடுவில் செல்லும் ஒரு ஒத்தையடிப் பாதையைக் காண்பிப்பார்கள். அதில் சென்று ஒரு பாறையின் மீது ஏறினால், ஒரு அற்புதமான சுனை ஒன்று வரும் (அதன் படத்தை இங்கு இணைத்துள்ளேன்).

அந்தச் சுனையைத் தாண்டி நேரே சென்றால் ஒரு ஐம்பதடித் தூரத்தில் இன்னொரு பாறையையும் அதன் வெளியில் ஒரு தகர கொட்டகையையும் பார்க்க முடியும். அதற்குள் ஒரு விநாயகர் சிலையும், அதன் இரு பக்கத்திலும் இரண்டு நாகநாதர் சிலைகளும் உள்ளன. அதற்கு மேலேதான் இரண்டு தமிழிக் கல்வெட்டுக்கள் அருகருகில் உள்ளன. இவற்றின் காலம் கி.பி.மூன்றாம் நூற்றாண்டு என்கிறது நமது இந்தியத் தொல்லியல் துறை. 

முதல் கல்வெட்டு : “ காபி ஊர் ஆதன் சாத்தன்”. இதில் சில எழுத்துக்கள் வழக்கமான முறையில் நேராகவும், சில எழுத்துக்கள் தலைகீழாகவும், வலதிலிருந்து இடதாக எழுதியது  போன்று பிரண்டும் உள்ளன. அது ஏன் என்பது புரியவில்லை. ஊரில் வரும்”ர்” என்ற எழுத்திலும், “சாத்தன் “ என்ற சொல்லில் வரும் “த்” என்ற எழுத்தும் புள்ளி வைத்து எழுதப்பட்டுள்ளன. இது போன்று புள்ளி வைத்து எழுதும் வழக்கத்தை எல்லா கல்வெட்டுக்களிலும் காண  முடிவதில்லை. சில கல்வெட்டுக்களில் மட்டுமே காண முடிகிறது. அதில் குன்றக்குடி கல்வெட்டுக்களும் ஒன்று.

இதில் வரும் “காபி ஊர்” காப்பியூராக இருக்கலாம். ஒரு வேளை இன்றைக்கு இருக்கும் காரைக்குடியின் அன்றைய பெயராக இருப்பதற்கும் வாய்ப்புகள் உள்ளன.

இரண்டாவது கல்வெட்டு : “ ஊ று து “ என்றிருக்கிறது. நடுவில் “ ற்” என்ற எழுத்து விடுபட்டுள்ளது. அனேகமாக “ ஊற்றிது” என்று சொல்ல வந்திருக்க வேண்டும். 

இரண்டையும் சேர்த்து வாசித்தால், “ காப்பியூரைச் சேர்ந்த ஆதன் சாத்தன் என்பவர் செய்து கொடுத்த ஊற்றிது “ என்று அர்த்தம் கொள்ளலாம்.

நாம் இந்த இடத்திற்கு வரும் முன்னர் பார்த்த ஊற்றை(சுனையை)ச் செய்து கொடுத்தது நம்ம காரைக்குடிக்காரர் மிஸ்டர் ஆதன் சாத்தன்தான் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

இங்குள்ள பிள்ளையார் சிலைக்குப் பின்னால், பாறையின் அடிப்புறத்தில் சில கற்படுக்கைகளும், ஆடுபுலி ஆட்டம், தாயம் போன்ற சில பாறைக் கீறல்களும் உள்ளன. டிப்பிக்கல் ஸ்டைல்.

இந்த இடத்தில் நாம் ஒரு விஷயத்தை உற்று நோக்க வேண்டும். இங்குள்ள சுனையின் சைஸைப் பார்த்தால் ஒரு பெரிய நீச்சல் குளம் அளவில் உள்ளது. இவ்வளவு பெரிய சுனையை கண்டிப்பாக நீர் அருந்துவதற்கு மட்டும் செய்து கொடுத்திருப்பதற்கு வாய்ப்பில்லை.

இங்குள்ள துறவியர்கள், குளித்து தங்களை சுத்தப்படுத்திக் கொள்வதற்கே இந்தச் சுனையை ஏற்படுத்திக் கொடுத்திருக்க வேண்டும்.

சமணர்கள் என்று நாம் அழைக்கும் ஜெயினர்கள் குளிக்கும் வழக்கம் இல்லாதவர்கள். பல் கூட விளக்குவதில்லை என்று அப்பர் என்று நாம் அழைக்கும் திருநாவுக்கரசர் மிகவும் அருவருப்புடன் பாடி வைத்திருக்கிறார்.

அதை வைத்துப் பார்க்கையில் இங்கிருந்த துறவியர்கள் கண்டிப்பாக ஜெயினர்களாக இருந்திருக்க வாய்ப்பில்லை. ஆசீவகர்களாக இருந்திருக்கவே வாய்ப்புகள் அதிகம். 

எது எப்படியோ…இங்கு ஏதோ சில துறவியர்கள் வாழ்ந்திருப்பது உறுதி. அப்படிப்பட்ட சித்தர்கள் வாழ்ந்த சுனை இன்று எப்படி இருக்கிறது என்று பார்த்தால், கண்ணில் ரத்தம் வருகிறது.

கிழிந்து போன செருப்பு, சில ஆணுறைகள், தண்ணீர் பாட்டில்கள் என்று இந்தச் சுனையை மிகவும் கேவலமான நிலையில்  வைத்திருக்கின்றனர் இவ்வூர் மக்கள்.

இதில் ஒரு ஆச்சரியமான செய்தி என்னவென்றால், குன்றக்குடி அடிகளார் உயிருடன் இருக்கும்போது, அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி கையால் “ The Best Model Village in India ”  என்ற award ஐ வாங்கியிருக்கிறது குன்றக்குடி. 

சில ஆண்டுகளுக்கு முன்னால் கென்யாவில் வைத்து ஒரு அமெரிக்கரைச் சந்தித்தேன். ஏதோ ஒரு ஆராய்ச்சிக்காக இந்தியா வந்தவர் கேரளாவையும், தமிழ் நாட்டையும் கன்னாபின்னாவென்று சுற்றியிருக்கிறார். 

ஏங்க உங்க மாநிலத்தை இவ்வளவு அசுத்தமாய் வைத்திருக்கிறீர்கள் ? மக்கள்  தெருவிலேயே ஒன் பாத் ரூம், டூ பாத்ரூமெல்லாம் போகிறார்களே, மிகவும் பழைமையான கலாச்சாரத்தைக் கொண்ட தமிழ்நாட்டில் ஏன் இப்படி என்றார் வேதனையுடன்.

எனக்குக் காரணம் புரியவில்லை. உங்களுக்கு ?

வெ.பாலமுரளி