திருப்பரங்குன்றம், வரலாறு இறைந்து கிடக்கும் இன்னொரு அற்புதமான இடம்.
மதுரையின் தென்மேற்கில் அமைந்துள்ள சிறு கிராமம்தான் திருப்பரங்குன்றம். இது இன்று மதுரையின் ஒரு பகுதியாகி விட்டது.
இங்குள்ள மலை (குன்று) , முருகன் குன்றம் என்று சங்க கால இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த குன்றில் வைத்துத்தான் சங்க காலப் புலவர் நக்கீரன் தன்னுடைய “ திருமுருகாற்றுப் படை”யை இயற்றினார் என்றும் சொல்லப்படுகிறது.
18 சித்தர்களில் ஒருவரான மச்ச முனி சித்தர் இந்த குன்றில்தான் ஜீவ சமாதி அடைந்தார் என்றும், இன்றும் குன்றின் உச்சியில் உள்ள சுனையில் நீந்திக் கொண்டிருக்கும் மீன் அவர்தான் என்றும் உள்ளூர் மக்கள் நம்புகின்றனர். அவர் ஜீவ சமாதி அடைந்தது திருப்பரங்குன்றம் இல்லை. திருவானைக்காவலில்தான் என்றும் சிலர் சொல்கின்றனர். உண்மை தெரியவில்லை.
அந்த சுனையில் நம்ம “கிண்ணிமங்கலம்” பாணியில், சில ஆண்டுகளுக்கு முன்னர் “புதிதாக” ஒரு தமிழிக் கல்வெட்டு “கண்டெடுக்கப்பட்டது”. நல்லகாலமாக உயர்திரு.சாந்தலிங்கம் போன்ற ஆய்வாளார்கள் இது டுபாக்கூர் கல்வெட்டுதான் என்று கண்டுபிடித்து, தீ வேகத்தில் கிளம்பிய பர பரப்பை உடனே அடக்கி விட்டனர்.
குன்றின் இன்னொரு பக்கத்தில், கி.பி.17ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஒரு இஸ்லாமிய தர்காவும் உள்ளது. முருகனை வழிபட வருபவர்கள், இந்த தர்காவுக்கும் சென்று ஒரு கும்பிடு போட்டு விட்டு வருவதை இன்றும் காண முடிகிறது ( தமிழ்நாடுடா….).
முருகனின் அறுபடை வீடுகளில் முதல் வீடு இந்தக் குன்றில்தான் உள்ளது. தெய்வானையுடன் திருமணக் கோலத்தில் உள்ள இந்தக் கோயில் ஒரு குடைவரைக் கோயில். இங்கு சிவன், பிள்ளையார் மற்றும் பெருமாளுக்கும் சிலைகள் உள்ளன.
இதில் முருகன் , தெய்வானை புடைப்புச் சிற்பங்களே. பொதுவாக புடைப்புச் சிற்பங்களுக்கு அபிஷேகம், அலங்காரங்கள் செய்வதில்லை.
ஆனால், இங்கு நிலவரம் தலைகீழ். அனைத்தும் செய்யப் படுகிறது. ஆனால், அபிஷேகம் முருகனின் வேலுக்குதான்.
முருகன் சன்னிதிக்கு, சற்று கீழே “அன்னபூரணி” என்ற பெயர்ப் பலகையுடன் ஒரு அறைக்குள், அன்னபூரணியுடன் நிறைய முனிவர்களின்/சித்தர்களின் புடைப்புச் சிற்பங்கள் உள்ளன. இவை அனைத்தும் நேர்த்தியின் உச்சங்கள்.
தமிழ்நாட்டில் உள்ள அதிஅற்புதமான சிற்பங்கள் என்று 10 சிற்பங்களைத் தேர்வு செய்தால், அதில் கண்டிப்பாக இந்த அன்னபூரணி சிற்பங்களும் இடம்பெறும். அந்த அளவிற்கு அழகு. இவை எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது என்று தெரியவில்லை.
ஆனால், இன்று வணங்கப்படும் முருகன் கோயில் கி.பி.எட்டாம் நூற்றாண்டில் பராந்தக நெடுஞ்சடையன் என்னும் பாண்டிய மன்னன் காலத்தில் அவனுடைய படைத்தளபதி சாத்தன் கணபதி என்பவரால் செய்விக்கப்பட்டது.
மலையில், முருகன் கோயிலுக்கு மறு பக்கத்தில் ஒரு குடைவரைக் கோயில் உள்ளது. இது தொடக்கத்தில் சமணர் கோயிலாக இருந்து அதை கி.பி. 13ம் நூற்றாண்டில் முதலாம் மாறவர்ம சுந்தர பாண்டியன் (மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்) பிரசன்ன தேவர் என்பவரின் வேண்டுகோளுக்கிணங்க “சுந்தரபாண்டிய ஈஸ்வரம்” என்று சிவன் கோயிலாக மாற்றியதை இங்குள்ள கல்வெட்டு கூறுகிறது. இன்று இதன் பெயர் “ உமையாண்டார் கோயில்”.
ஆரம்பத்தில் இருந்த சமணர் கோயிலின் வரலாறு தெரியவில்லை.
தொடக்கத்தில் இதுவே முருகன் கோயிலாக இருந்தது என்றும் சொல்லப்படுகிறது.
அங்கு ஏதோ ஒரு காரணத்தினால் அரசப் படைகளை ஒருங்கிணைத்து ஏதோ போர்ப் பயிற்சி அல்லது போர் ஆயத்தம் நடத்தப்பட்டிருக்கிறது என்றும் உயர்திரு.சாந்தலிங்கம் சொல்லியிருக்கிறார்.
அங்கே வள்ளி, தெய்வானையுடன் முருகன் சிற்பங்கள், நடனமாடும் நடராஜர் சிற்பம், நவ (ஒன்பது) விநாயகர் என்று நிறைய புடைப்புச் சிற்பங்கள் அழகுற செதுக்கப்பட்டுள்ளன.
குடைவரையின் ஒரு பகுதியில் உள்ள கருவறையில் அர்த்தனாரீஸ்வரர் ஜம்மென்று நின்று கொண்டிருக்கிறார்.
மண்டபத்தின் உள்ளே தேர் போன்ற ஒரு கோட்டோவியம் பாறைக் கீறலாக உள்ளது. இதன் காலம் தெரியவில்லை.
இந்தக் குடைவரையின் வெளிப்புறத்தில் கால பைரவர் (இது ஆரம்ப காலத்தில் பாகுபலியின் சிற்பமாக இருந்திருக்கலாம்), அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் மற்றும் திருஞானசம்பந்தரின் புடைப்புச் சிற்பங்களும் உள்ளன.
இவை தவிர ஒரு பிள்ளையார் சிற்பத்துடன், அமர்ந்த நிலையில் மாணிக்கவாசகரின் சிற்பமும், இந்தக் கோயிலை உருவாக்கக் காரணமாக இருந்த பிரசன்ன தேவரின் சிற்பமும் உள்ளன.
தற்சமயம் இந்தக் குடைவரைக் கோயில் தமிழ்நாடு தொல்லியல் துறை வசம் உள்ளது. மிகவும் தூய்மையாக வைத்திருக்கின்றனர்.
குன்றின் பின்புறம் உள்ள இந்தக் குடைவரைக் கோயிலிருந்து ஒரு அரை கிலோமீட்டர் தூரம் குன்றைச் சுற்றியே பயணித்தால், க்ரில் கம்பிகள் போட்டு இந்தியத் தொல்லியல் துறையின் போர்டும், புனே ஜெயின் சங்கத்தின் மஞ்சள் போர்டும் போட்டு சமணப் படுக்கைகளும், தமிழ் பிராமி கல்வெட்டுக்களும் தங்களை வரவேற்கும்.
அந்த இடத்தில் உள்ள இரும்புக் கதவு பூட்டப்பட்டிருந்தால், அருகில் உள்ள ஒரு பாதை வழியே உள்ளே செல்ல வசதி செய்யப்பட்டிருக்கும்.
நமது அரசாங்கம், மேலே உள்ள குகை வரை செல்வதற்கு முறையான படிக்கட்டுகளையும், இரும்புக் கைப்பிடிகளையும் அமைத்திருக்கிறது.
பத்து அல்லது பதினைந்து நிமிடங்களில், மலையின் மேலே உள்ள “முதல்” குகைத் தளத்திற்கு சென்று விடலாம். அங்கே சில கற்படுக்கைகள் மட்டும் உள்ளன. கல்வெட்டுக்கள் ஏதும் கிடையாது.
அங்கிருந்து இரண்டு நிமிடங்கள் ஏறினால் ஒரு பெரிய குகைத் தளமும், நிறைய கற்படுக்கைகளும், ஒரு தண்ணீர்த் தேக்கமும் வரும்.
இங்குதான் கி.மு. முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த மூன்று தமிழிக் கல்வெட்டுக்கள் உள்ளன. கி.மு.முதலாம் நூற்றாண்டு என்பது நமது தொல்லியல் துறை சொல்லும் காலக் கணிப்பு. இதை”யும்” மறு ஆய்வு செய்ய வேண்டியது கண்டிப்பாக அவசியம்.
- முதல் கல்வெட்டு:
குகையின் கடைசிப் பகுதியில் ஒரு கற்படுக்கையின் பக்கவாட்டில்தான் முதல் கல்வெட்டு உள்ளது. முதலில் பார்ப்பதற்கு கீழவளவு கல்வெட்டு போல வலமிருந்து இடமாகவும், தலைகீழாகவும் தெரிந்தாலும் கூட, கற்படுக்கையின் மறு புறம் உட்கார்ந்து பார்த்தால் அந்தக் கல்வெட்டு நேராகவும், இடமிருந்து வலமாகவும் செதுக்கப்பட்டிருப்பது புரியும். அமர்ந்து, செதுக்குவதற்குத் தோதாக அவ்வாறு செய்திருக்க வேண்டும்.
கல்வெட்டு வாசகம்: “ அந்துவன் கொடுபிதவன்”
கல்வெட்டு சொல்லும் செய்தி : அந்துவன் என்பவன் இந்தக் கற்படுக்கைகளைச் செய்து கொடுத்தான்.
“ஆதன்” போலவே “அந்துவன்” என்ற பெயரும் சங்க காலத்தில் பரவலாக இருந்திருக்கிறது.
- இரண்டாம் கல்வெட்டு
குகையின் இரண்டாம் கட்ட இடத்தில் ஒரு படுக்கையின் தலைமாட்டில் “ மாரயது” என்று தலைகீழாகவும், வலதிலிருந்து இடதாகவும் செதுக்கப்பட்டுள்ளது. இதுவும் முதல் கல்வெட்டு போலவே வசதி கருதி மேலிருந்து அமர்ந்து செதுக்கப்பட்டிருக்க வேண்டும்.
அதன் இடது கைப்பக்கம் “கய” என்று சாதாரணமாக வெட்டப்பட்டுள்ளது.
சேர்த்து வாசித்தால் “ மாரயது கய” என்று வருகிறது.
இந்தக் கல்வெட்டை வாசித்த ஐராவதம் மகாதேவன், நாகசாமி போன்றோர், “மாராயம்” என்பது அரசனால் வழங்கப்படும் ஒரு பட்டம். அதே போல், ‘கய’ என்பது “கயம்’ என்று சொல்ல வந்த ஒரு சொல்லாக இருக்கலாம். கயம் என்றால் குளம் அல்லது நீர் நிலை என்று பொருள் என்று அர்த்தம் சொல்லியிருக்கிறார்கள்.
அதாவது மாராயம் என்ற பட்டம் பெற்றவர் இந்த நீர் நிலையை செய்து கொடுத்திருக்கிறார் என்பது பொருள்.
- மூன்றாவது கல்வெட்டு
குகையில் நுழையும் இடத்தில் இடது புறத்தில் உள்ள நாலைந்து கற்படுக்கைகளின் தலைப் புறத்தில் ஒரு நீண்ட கல்வெட்டு உள்ளது.
கல்வெட்டு வாசகம் : “ எருகாடுர் இழகுடும்பிகன் போலாலயன் செய்தா ஆய்சயன் நெடுசாதன் “
கல்வெட்டு பொருள்: எருகாட்டூரைச் சேர்ந்த இழகுடும்பிகன் போலாலயன் பெயரால் ஆய்சயன் நெடுசாதன் செய்த கற்படுக்கைகள்.
அது என்ன இழ குடும்பிகன் ?
இழ அல்லது ஈழ என்றால் கள்/பதனி இறக்குபவர்களைக் குறிக்கும் சொல். குடும்பத்தின் தலைவன் என்பதைக் குறிக்கும் “ கிரஹபதி” என்ற வடமொழிச் சொல்லின் தமிழ்ச் சொல்லே “குடும்பிகன்” என்ற சொல் என்கிறார் ஐராவதம் மகாதேவன். குடும்பிகன் என்றால் குடும்பத் தலைவன் என்றால் முடிந்து போயிற்று. எதற்கு “கிரஹபதி” யின் மொழிபெயர்ப்புதான் “குடும்பிகன்” என்ற உள்குத்து என்பது புரியவில்லை. இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் இந்தக் கதை ஓடுமோ….. தமிழகத்தில் உள்ள அனைத்துத் தமிழிக் கல்வெட்டுக்களும் மறு ஆய்வு செய்யப்பட வேண்டும் என்பதற்கான அவசியம் இந்த மொழிபெயர்ப்பு என்ற வட மொழித் திணிப்பு ( சித்தன்னவாசல் கல்வெட்டிலும் இந்த உள்குத்து உண்டு).
எருகாட்டூர் என்ற பெயர் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருமலை மற்றும் பிள்ளையார்பட்டி கல்வெட்டுக்களிலும் உள்ளன.
இந்தக் கல்வெட்டுக்கள் தவிர, மற்ற இடங்களில் உள்ளது போலவே மருந்து அரைக்கும் குழிகள், நீர் வடிகால், ஆடு புலி ஆட்டம் மற்றும் தாயம் போன்ற பாறைக் கீறல்களை இங்கும் காண முடிகிறது.
எது எப்படியோ, இந்த மலையில் ஆய்வு செய்ய இன்னும் நிறைய விஷயங்கள் இருப்பதென்னவோ உறுதி.
வெ.பாலமுரளி
ஆதாரம் : தமிழ் நாடு தொல்லியல் துறையின் “தமிழ் – பிராமி கல்வெட்டுக்கள்” . நன்றிகள்.


















