திருவண்ணாமலை மாவட்டத்தில் செஞ்சியிலிருந்து 6 கிமீ தூரத்தில் உள்ள ஒரு சிறிய ஊர்தான் நெகனூர்பட்டி.
இந்த ஊரின் ஒதுக்குப் புறத்தில் ஒரு பெரிய பாறையில் பெரிய பெரிய கற்களை அடுக்கி வைத்தது போல் ஒரு குன்று உள்ளது. அதன் பெயர் “ அடுக்கன் கல்”.
இதன் அடிப்புறத்தில் ஒரு குகைத்தளமும் அதன் அருகில் ஒரு சுனையும் உள்ளது. தமிழ் அறிவர்கள் வசிக்கும் டிப்பிக்கல் குகைத்தளம்.
இந்த குகைத்தளத்தின் வெளிப்புறத்தில் கி.பி. நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு தமிழிக் கல்வெட்டும், குகையின் உட்புறத்தில் வெண்சாந்து பாறை ஓவியங்கள் சிலவும் உள்ளன.
மற்ற தமிழிக் கல்வெட்டுக்களோடு ஒப்பிடுகையில், இங்கு இரண்டு வித்தியாசமான விஷயங்களைப் பார்க்க முடிகிறது.
ஒன்று. இங்குள்ள கல்வெட்டைச் சுற்றி மிகவும் அழகாக ஒரு பார்டரைப் போட்டு அதற்குள் அந்தக் கல்வெட்டைச் செதுக்கியிருக்கிறார்கள்.
இரண்டு. அனைத்து மெய்யெழுத்துக்களிலும் மேலே புள்ளி வைத்திருக்கின்றனர். அதேபோல், மற்ற இடங்கள் போலல்லாமல் இங்கே நெடிலையும் வித்தியாசப்படுத்திக் காண்பித்திருக்கின்றனர்.
இங்குள்ள வெண்சாந்து ஓவியங்கள், வானிலை ஆய்வு தொடர்பானது போல் தெரிகின்றன. அதில் ஒன்று பறவை முகத்துடன் கூடியது போல் உள்ளது. அந்த மாதிரி ஓவியங்கள் தமிழ்நாட்டில் பெரும்பாலும் செஞ்சாந்தில்தான் கிடைக்கின்றன. வித்தியாசமாக இங்கே வெண்சாந்தில் கிடைக்கின்றன.
சரி, கல்வெட்டிற்கு வருவோம்.
“பெரும் பொகழ்
சேக்கந்தி தாயியரு
சேக்கந்தண்ணி செ
யி வித்த பள்ளி”
என்பது கல்வெட்டு வாசகம்.
பெரும்பொகழ் என்னும் ஊரைச் சேர்ந்த சேக்கந்தி என்பவரின் தாயார் சேக்கந்தண்ணி என்பவர் செய்து கொடுத்த பள்ளி என்பதன் இதன் அர்த்தம்.
இன்றும் நெகனூர்பட்டிக்கு அருகில் பெரும்புகை என்னும் ஊர் இருக்கிறது. அனேகமாக இந்தப் பெரும்புகைதான் அந்தக் காலத்தில் பெரும் பொகழ் என்று குறிப்பிடப்பட்டிருக்கலாம் என்பது அறிஞர்களின் கருத்து.
ஆனால், “அறிஞர்கள்” அத்தோடு நிறுத்திக் கொள்ளாமல், சேக்கந்தண்ணி என்பது ஒரு பெண் சமணத் துறவி என்றும்,தாயியரு என்னும் சொல் கன்னடத்தில் தாயார் என்று அர்த்தம் என்றும் இரண்டு பிட்டுகளை சேர்த்து ஆவணப்படுத்தி விட்டனர்.
அதாவது தமிழி எழுத்து வடிவமும், கல்வி, மருத்துவம், வானியல் போன்ற விஷயங்களும் கர்நாடகாவிலிருந்து வந்த ஜெயினர்கள் என்னும் சமணர்கள் கொடுத்த கொடைதான், தமிழர்களுக்கு அந்த அளவுக்கு அறிவில்லை என்பதை திரும்பத் திரும்பச் சொல்லி ஆவணப்படுத்தும் கீழ்நிலை மனோபாவம்.
எப்போதாவது நமது இந்திய தொல்லியல் துறை தமிழிக் கல்வெட்டுக்களை மறு ஆய்வுக்கு உட்படுத்தினால், நிறைய வரலாறு மாற்றி எழுதப்படும்.
அப்படி ஒரு நிலை விரைவில் வரும் என்று நம்புவோமாக.
நம்பிக்கைதானே எல்லாம்.
வெ.பாலமுரளி
பி.கு: விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஏராளமான கிராமங்களில் ஆசீவகத்தின் சின்னமாகக் கருதப்படும் ( பின்னாளில் வஜ்ராயுதமாக புனையப்பட்ட ) இருபுற முத்தலைக்கோல் நிறைய வீடுகளின் வாசலில் வரையப்படுவது இன்றும் வழக்கமாக உள்ளது. ஆனால், அது என்ன, அதன் அர்த்தம் என்ன என்பது யாருக்கும் தெரியவில்லை. “ அது என்னங்க ? “ என்று கேட்டால், “ தெரியாதுங்க” என்ற பதிலோ “ அதிர்ஷ்டத்திற்காக வரைந்து வைக்கிறோம்” என்ற பதிலோதான் கிடைக்கிறது.
நன்றிகள்:
நான் பார்க்க வேண்டும் என்பதற்காக, தான் முன்பே பார்த்திருந்தும், திரும்ப ஒருமுறை எனக்காக நேரத்தையும்,பணத்தையும் செலவழித்து என்னுடன் வந்த நண்பர் பாலா பாரதிக்கு நன்றி சொல்ல வார்த்தை இல்லை.
எங்களுடன் ஒரு நாள் முழுவதும் செலவழித்த பாலாபாரதியின் நண்பர் உயர்திரு. திருநாவுக்கரசர் அவர்கள்.
தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியிட்ட “ தமிழ் பிராமி கல்வெட்டுக்கள் “ நூல்.