அரச்சலூர் இசைக் கல்வெட்டு
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குடுமியான் மலையில் கிரந்த எழுத்துக்களில் ஒரு இசைக் கல்வெட்டு உள்ளது. இது மகேந்திரவர்ம பல்லவன் காலத்தில் செதுக்கிய கல்வெட்டு என்று சொல்லப்பட்டாலும், இது பொ.யு (கி.பி) 8 அல்லது 9 ஆம் நூற்றாண்டில் பிற்காலப் பாண்டியர்களால் செதுக்கப்பட்டது.
இந்த குடுமியான் மலைக் கல்வெட்டு புகழ்பெற்ற அளவுக்கு, அதற்கும் 500 வருடங்கள் பழைமையான அரச்சலூர்இசைக் கல்வெட்டு புகழ்பெறாதது மிகவும் வேதனையான விடயம்.
அரச்சலூர் என்னும் சிறிய ஊர் ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு – காங்கேயம் சாலையில் உள்ளது.
நான் ஈரோடு, சேலம் பகுதிகளில் அதிகம் பயணித்ததில்லை என்பதால் எப்படி கல்வெட்டு இருக்கும் இடத்தை கண்டுபிடிக்கப் போகிறேன் என்று ஒரு குழப்பம் இருந்தது. அப்போதுதான் அந்த ஊரைச் சேர்ந்த லட்சுமி நாராயணன் என்னும் இளைஞரின் நட்பு கிடைக்க அரச்சலூர் பயணம் மிகவும் சிறப்பாக அமைந்து விட்டது.
அம்மன் கோயில்பட்டியிலிருந்து கூகுள் ஆண்டவனின் உதவியுடன் அரச்சலூர் போய் சேர்ந்து விட்டேன். மற்ற தமிழி இடங்கள் போலல்லாமல், அரச்சலூரின் மையப் பகுதியில் தமிழி இசைக்கல்வெட்டு என்று மிகப் பெரிய நினைவுச் சின்னம் ஒன்றை எழுப்பியிருக்கின்றனர். மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
அரச்சலூரை அடைந்து சில நிமிடங்களிலேயே லட்சுமி நாராயணனும் , அவருடைய இரண்டு நண்பர்களும் வந்து விட்டனர். ஒரு டீ மட்டும் குடித்து விட்டு கிளம்பி விட்டோம்.
ஊரின் வெளிச் சுற்றில்தான் உள்ளது ஆண்டிப் பாறை என்னும் அந்தக் குன்று. ஊரின் மையப் பகுதியிலிருந்து 10 அல்லது 15 நிமிடங்களில் அந்த இடத்தைச் சென்றடைந்து விட்டோம்.
மற்ற தமிழி இடங்கள் போலவே இங்கும் ஒரு பெரிய குகைத் தளமும், நிறைய கற்படுக்கைகளும், மிகப் பெரிய ஒரு நிலாப் பாறையும், இருபதடி தூரத்தில் ஒரு சுனையும், இங்கிருந்தவர்கள் தமிழ் அறிவர்கள்தான் (நம் “ அறிஞர்கள்” சொல்லும் ஜெயினர்கள் கிடையாது) என்பதை மீண்டும் உறுதிப் படுத்துகின்றன.
ஒரே ஒரு வித்தியாசம் இங்கு இருப்பவை இரண்டு இசைக் குறிப்புகளும், அவற்றை செதுக்கியவர் யார் என்ற பெயர் கொண்ட ஒரு கல்வெட்டும். மற்ற தமிழிக் கல்வெட்டுக்களில் இது போன்ற இசைக் கல்வெட்டுக்கள் வேறெங்கும் கிடையாது என்பது இதன் தனிச் சிறப்பு.
இரண்டு இசைக் கல்வெட்டுக்களில் ஒன்று மிகவும் சிதைந்த நிலையில் உள்ளது. உத்தேசமாகத்தான் படிக்கும்படி உள்ளது. ஆனால், மற்ற இரண்டும் தெளிவாகவே உள்ளன.
இங்குள்ள எழுத்துக்களின் அமைப்பை வைத்து இந்தக் கல்வெட்டுக்களின் காலத்தை பொ.யு (கி.பி.) நான்காம் நூற்றாண்டு என்று வரையரைத்துள்ளது நமது இந்திய தொல்லியல் துறை.
அதாவது, தமிழி பயன்பாட்டின் இறுதிக் காலம் (கிட்டத்தட்ட அம்மன் கோயில்பட்டி, ஐயனார்குளம், பிள்ளையார்பட்டி , பூலாங்குறிச்சி கல்வெட்டுக்களின் அதே காலகட்டம்).
- முதல் கல்வெட்டு :
“ எழுத்தும் புணருத்தான் மலைய் வண்ணக்கன் தேவன் சாத்தன் “
இங்குள்ள இசைக் குறிப்புக்களை சேர்த்தமைத்தது (இயற்றியது) மலை வண்ணக்கனான தேவன் சாத்தன் என்பவனாவான் என்பது இதன் அர்த்தம்.
இதில் வரும் வண்ணக்கன் என்னும் சொல் ஒரு குடியைக் குறிப்பது என்கிறது நமது தொல்லியல் துறை. இந்தக் குடியின் பிரதான தொழில் காசுகளின் தரத்தை சோதிப்பது என்ற குறிப்பையும் சேர்த்திருக்கிறார்கள்.
அதேபோல் இதில் வரும் சாத்தன் என்ற சொல், வணிகர்களும், ஆசீவகர்களும் உபயோகப்படுத்தும் பொதுவான குடும்பப் பெயர். இதிலிருந்து வந்ததுதான் “ சாஸ்தா” என்ற பெயர் ( யெஸ்ஸ்ஸ்…ஐயப்பன் தான்).
- இரண்டாவது கல்வெட்டு
த தை தா தை த
தை தா தே தா தை
தா தே தை தே தா
தை தா தே தா தை
த தை தா தை த
இது மிகவும் தெளிவாகவும், படிக்கும் நிலையிலும் உள்ளது.
- மூன்றாவது கல்வெட்டு
இந்தக் கல்வெட்டு இரண்டாவது கல்வெட்டு போன்றே ஐந்து வரிகளில் வெட்டப்பட்டுள்ளது.
இதில்:
“கை த தை த கை”
என்ற முதல் வரி மட்டுமே “ஓரளவிற்கு” கஷ்டப்பட்டு படிக்கும்படி உள்ளது. மற்ற நான்கு வரிகளில் ஆங்காங்கே கை, த, தை என்று சில எழுத்துக்கள் மட்டுமே மிகவும் சிதைந்த நிலையில் தெரிகிறது. அவையும் இன்னும் சில வருடங்களில் முற்றிலுமாக அழிந்து விடுமென நினைக்கிறேன்.
இந்த இசைக் கல்வெட்டுக்களின் அர்த்தம் புரியவில்லை. ஏதோவொரு ஸ்வரமாக இருக்கலாம். இசை பற்றி தெரிந்தவர்களுக்கு இவை புரியலாம்.
“இந்தக் குகைக்கு இருபதடி தூரத்தில் பாறையின் இன்னொரு பகுதியில் சம தளமாக இருக்கும் ஒரு இடத்தில் நிறைய எழுத்துக்கள் இருந்ததாக எங்கள் அப்பா, தாத்தா போன்றோர் சொல்லக் கேட்டிருக்கிறோம். நாங்கள் சிறு வயதில் இங்கு வந்து விளையாடும்போது கூட பார்த்திருக்கிறோம். ஆனால், ஒரு இருபது வருடத்திற்கு முன்பு அவை முற்றிலுமாக அழிந்து விட்டன “ என்று லட்சுமி நாராயணனும், அவர் நண்பர்களும் ஒரு இடத்திற்கு என்னை அழைத்துச் சென்று காண்பித்தனர்.
அவர்கள் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை. சில எழுத்துக்கள் இருந்ததற்கான அடையாளத்தை இன்றும் காண முடிகிறது. ஆனால், அவை கால ஓட்டத்தால் நன்றாகவே தேய்ந்து விட்டன.
இங்குள்ள இசைக்கல்வெட்டுக்களை புலவர் இராசு அவர்கள் 1960 இல் கண்டுபிடித்திருக்கிறார்.
அவர் கண்ணிலும், பின்னர் வந்த ஏனைய தொல்லியல் அறிஞர்கள் கண்ணிலும் இந்த இன்னொரு இடம் எப்படி படாமல் போனது என்பது மிகப் பெரிய ஆச்சரியம்.
அதேபோல், இதுவரை யாரும் இந்த இசைக் குறிப்புகளை பெரிய ஆய்வுக்கு உட்படுத்தியது போலவும் தெரியவில்லை. இது இன்னொரு ஆச்சரியம்.
ஒருவேளை இவை குடுமியான் மலை கல்வெட்டு போல கிரந்த எழுத்துக்களில் எழுதப்பட்டிருந்தால் நிலைமை வேறாக இருந்திருக்கலாம்.
வெ.பாலமுரளி
நன்றிகள் : அரச்சலூர் தம்பிகள் லட்சுமி நாராயணன் மற்றும் அவரது இரண்டு நண்பர்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகளில்லை. அவ்வளவு உதவி செய்தார்கள். நன்றிகள் கோடி.
வழக்கம்போல், தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியிட்டுள்ள “தமிழ் – பிராமி கல்வெட்டுக்கள்” நூல் பெருந்துணை புரிந்தது.