தமிழியைத் தேடி – 13 – அம்மன் கோயில்பட்டி 

நான் 2022 இல் ஏழு சுற்றுக் கோட்டை, அரச்சலூர் இசைக் கல்வெட்டு, அம்மன் கோயில்பட்டி , சேலம் என்று ஒரு சூறாவளிச் சுற்றுலா சென்றேன்.

அதில் அம்மன் கோயில்பட்டியில் உள்ள தமிழிக் கல்வெட்டு பற்றிய கட்டுரைதான் இது. 

சேலம் மாவட்டத்தில் ஓமலூர் – தாரமங்கலம் சாலையில் உள்ள ஒரு சிறிய  கிராமம்தான் அம்மன் கோயில்பட்டி. 

நான் சென்றபோது அந்த இடத்தின் பாதுகாவலர் திரு.நாகராஜனும் அங்கிருந்தார். சூப்பர் மேன். பொறுமையாக அந்த இடத்தைப் பற்றி விளக்கினார்.

இந்த இடத்தில் ஒரு பெரிய சைஸ் பாறையும், அதன் நடுவில் ஒரு பெரிய அழகான சுனையும் உள்ளன.

அந்த சுனையின் ஒரு விளிம்பில், நாம் நிற்கக் கூடிய இடத்தில்தான் அந்தத் தமிழிக் கல்வெட்டு உள்ளது. 

அதன் வாசகம் :

“பரம்பன் கோகூர் கிழார் மகன் வியக்கன்

கோபன் கணதேவன் தொட சுனை”

இதில் கணதேவன் என்னும் சொல்லில் “ண்” என்ற மெய்யெழுத்து விடுபட்டுள்ளது என்று அனைவரும் கருதுகின்றனர். எனவே அது கண்ணதேவனாக இருக்கலாம்.

அதேபோல் தொட சுனை என்பது “ தொட்ட” சுனை என்றிருக்க வேண்டும். சங்க காலத்தில் தொட்ட என்ற சொல்லுக்கு “ செய்து கொடுத்த” என்ற அர்த்தமும் உணடு.

அதன்படி பார்த்தால், இந்தக் கல்வெட்டின் அர்த்தம்:

“ பரம்பன் கோகூர் ( அல்லது கோவூர்) என்ற ஊரைச் சேர்ந்த கிழார் மகன் வியக்கன் கோபன் கண்ணதேவன் செய்து கொடுத்த சுனை “

இதன் எழுத்துக்கள் அமைப்பை வைத்து இதன் காலகட்டத்தை கி.பி.4 ம் நூற்றாண்டு என்று வரையறுத்திருக்கிறது நம்தொல்லியல் துறை.

ஆம். இங்குள்ள கல்வெட்டு தமிழி பயன்பாட்டின் கடைசி காலகட்டம் என்று கருதப்படுகிறது. அதாவது அரச்சலூர்,பிள்ளையார்பட்டி, பூலான்குறிச்சி வரிசையில் வருகிறது அம்மன் கோயில்பட்டி கல்வெட்டு. அல்லது கொஞ்சம் முன்னால். 

அதேபோல், மற்ற இடங்கள் போல், இந்தச் சுனை ஆசீவகர்களுக்கோ , அறிவர்களுக்கோ அல்லது வழக்கமாக ஐராவதம் சொல்லும் சமணர்களுக்கோ வெட்டியது போல் தெரியவில்லை. இது பொதுவாக ஊருக்காக வெட்டியது போல் தெரிகிறது. 

இந்த இடத்திலிருந்து கண்ணுக்கெட்டும் தூரம் வரை அறிவர்கள் வசிக்கும் குன்றுகளோ அல்லது  குகைகளோ கிடையாது என்பது ஒரு முக்கியமான தகவல்.

இங்குள்ள பாறையின் ஒரு மூலையில் கற்களை அடுக்கி வைத்து ஒரு அறை போல் உருவாக்கியிருக்கிறார்கள். அதற்குள் ஒரு நாக சிலையும் , ஒரு சிறிய அம்மன் சிலையையும் வைத்து வழிபடுகிறார்கள் இந்த ஊர் மக்கள். இதன் காலகட்டம் தெரியவில்லை. 100 அல்லது 200 வருடங்கள் இருக்கலாம் என்று தோன்றுகிறது. 

அங்குள்ள மற்ற இடங்களை ஆய்வு செய்கையில், தற்சமயம் கல்வெட்டு இருக்கும் இடத்தைத் தேர்வு செய்வதற்கு முன்னால் வேறு சில இடங்களில் முதலில் எழுத்துக்களை வெட்டி கல்லின் தரத்தைச் சோதித்தது போல் ஆங்காங்கே சில தமிழி எழுத்துக்களைக் காண முடிகிறது. இது போன்ற சோதனை முயற்சிகளை அய்யனார் குளம், சமணர் மலை, சித்தர் மலை போன்ற வேறு சில இடங்களிலும் காண முடிகிறது. 

மொத்தத்தில் அம்மன் கோயில்பட்டி ஒரு அற்புதமான இடம் என்பதில் சந்தேகமில்லை. 

வெ.பாலமுரளி

நன்றிகள் : 

திரு. நாகராஜன், அம்மன் கோயில்பட்டி

தமிழ் – பிராமி கல்வெட்டுக்கள், தமிழ் நாடு தொல்லியல் துறை