சித்தர்மலை எனப்படும் மகாலிங்க மலைக்கு மதுரையிலிருந்து இரண்டு வழியாகப் போகலாம்.
ஒன்று: வாடிப்பட்டி வழியாக. மற்றொன்று : சோழவந்தான் வழியாக.
தூரம்: 45 முதல் 50 கிமீ வரை.
மலையின் உச்சிக்கும் இரண்டு வழியாகப் போகலாம். முதல் வழி அணப்பட்டி ஆஞ்சனேயர் கோயிலுக்கு அருகில் உள்ள மேட்டுப்பட்டி வழியாக. வாடிப்பட்டி ரூட் நேரே இங்கேதான் வரும்.
இங்கு மலையின் உச்சிக்கு செல்வதற்கு முறையான படிக்கட்டுகள் போடப்பட்டுள்ளன. ஆனால், 1000 படிக்கட்டுகள். தாவு தீர்ந்து விடுகிறது. உட்கார்ந்து உட்கார்ந்து சென்றால் மலையின் உச்சியை அடைய ஒரு மணி நேரம் ஆகிறது.
இந்த உச்சியில் 11 அல்லது 12ம் நூற்றாண்டைச் சேர்ந்த பிற்காலப் பாண்டியர்கள் கட்டிய ஶ்ரீ மகாலிங்க சுவாமி ஆலயம் என்ற பெயரில் ஒரு சிறிய சிவன் கோயில் ஒன்று உள்ளது. அங்கிருந்து பார்க்கையில் வைகை நதியும் அருகில் உள்ள கிராமங்களும் அழகு.
இங்கிருந்து மலையின் மறு பக்கத்தில் சரிவான வழுக்குப் பாறையில் இறங்கி நடந்தால் ஒரு பத்து நிமிடத்தில் பஞ்ச பாண்டவர் குகையை அடைந்து விடலாம். இங்குதான் கி.மு.இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த 10 தமிழிக் கல்வெட்டுகள் உள்ளன.
இன்னொரு வழி கல்யாணிப்பட்டி என்னும் கிராமத்திலிருந்து. இது மலையின் மறுபக்கம். சோழவந்தான் ரூட் இந்த ஊருக்குத்தான் உங்களைக் கொண்டு வந்து சேர்க்கும்.
இங்கு முறையான படிக்கெட்டெல்லாம் கிடையாது. கரடு முரடான மலைப் பகுதியில்தான் ஏற வேண்டும். நமது தொல்லியல் துறை ஆங்காங்கே அம்புக் குறிகளைப் போட்டு வைத்துள்ளது. ஆனால், 1000 படிக்கட்டுகளை ஒப்பிடும்போது, இந்த வழி கொஞ்சம் எளிது. இந்த வழி நேரே பஞ்ச பாண்டவர் குகைக்குத்தான் உங்களை இட்டுச் செல்லும். அங்கிருந்து சரிவான பாதையில் மேலே ஏறினால் ஒரு 10 நிமிடத்தில் மலை உச்சியிலிருக்கும் மகாலிங்கர் சிவன் கோயிலை அடைந்து விடலாம்.
நாம் தமிழிக் கல்வெட்டுக்களைக் காண்பதற்கு முன்னால் இங்கிருக்கும் பாறை ஓவியங்களைப் பார்த்து விடலாம்.
நான் மேலே சொன்ன கல்யாணிப்பட்டியிலிருந்து சித்தர் மலையைச் சுற்றி ஒரு பாதை மேட்டுப் பட்டிக்கும் அணப்பட்டி ஆஞ்சனேயர் கோயிலுக்கும் செல்கிறது. அந்தப் பாதையில் கல்யாணிப்பட்டியிலிருந்து ஒரு இரண்டு அல்லது மூன்று கி.மீ. தூரத்தில் கீழ்ச் சுனைப் பாறை என்று ஒரு பாறை ரோட்டின் மேலேயே இருக்கிறது. அங்கிருக்கும் கருவேல மரங்களை ஒதுக்கி விட்டு ஒரு ஐம்பதடி தூரம் உள்ளே சென்றால் ஒரு பெரிய பாறையில் நிறைய வெண்சாந்து ஓவியங்களையும், அழிந்த நிலையில் நிறைய செஞ்சாந்து ஓவியங்களையும் காண முடிகிறது.
அவற்றில் நிறைய குறியீடுகளும் உள்ளன. கீழ்வாலையில் உள்ள உடுக்கை போன்ற குறியீடு, முக்கொம்பு குறியீடு, இருபுற முத்தலைக்கோல் குறியீடு, நங்கூரம் போன்ற குறியீடு என்று கலந்து கட்டி இருக்கின்றன.
அவற்றில் சில, சிந்துவெளியில் கிடைத்த குறியீடுகளை ஒத்திருப்பது ஆச்சரியம்.
மனிதனின் எக்ஸ்ரே ஓவியம், ஏணி போன்ற ஓவியம், ஒரு விலங்கின் மீது அமர்ந்து ஒரு மனிதன், தரையில் வேல் ஏந்தி நிற்கும் மற்றொருவனுடன் சண்டையிடும் காட்சி, இரண்டு பெண்களுடன் சேர்ந்து நாலைந்து பேர் நடனமிடுவது போன்ற ஒரு ஓவியம் , தேர் போன்ற ஓவியம் என்று அனைத்து ஓவியங்களும் மிகச் சிறப்பாக உள்ளன.
என்னுடைய “ஆதி மனிதனைத் தேடி” தொடரில் பாறை ஓவியங்கள் பற்றி மிகவும் விரிவாக பார்க்கவிருப்பதால், இங்கு சில ஓவியங்களை மட்டுமே பதிவிடுகிறேன். கோபித்துக் கொள்ளாதீர்கள்.
நான் கல்யாணிப்பட்டி வழியாகத்தான் மலைக்கு மேல் சென்றேன். ரொம்பவெல்லாம் கஷ்டப்படவில்லை. ஆனால், பஞ்சபாண்டவர் குகைக்குச் செல்வதற்கு 30 நிமிடங்கள் ஆகி விட்டன.
நான் பார்த்த குகைகளில் மிகவும் அற்புதமான குகையும் ரொம்பப் பிரமாண்டமான குகையும் இதுதான். இது இரண்டு அடுக்குகளாகப் பிரிகிறது.
முதல் பாதியில் ஏராளமான கற்படுக்கைகளும், பத்து தமிழிக் கல்வெட்டுக்களும், இரண்டு பெரிய நீர் வடிகால்களும், சில மருந்து அரைக்கும் குழிகளும் உள்ளன. இதன் நுழைவாயிலில் ஒரு குட்டியூண்டு சிவன் சிலையை சமீபத்தில் நிறுவி வைத்துள்ளனர். அதற்கு நேர் மேலே குகையின் முகப்பில், ஒரு ஐயனாரின் பாறைக் கீறல் உள்ளது. இதன் காலம் தெரியவில்லை.
குகையின் இரண்டாம் பாதி கருங்கும்மென்று இருட்டில் நீண்டு செல்கிறது. மிகவும் அமானுஷ்யமாக இருக்கிறது. இங்கு எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை “சித்தர் மலை அனுபவங்கள்” என்று தனியே எழுதியிருக்கிறேன். சில்லிட வைக்கும் அனுபவம்.
இந்த இரண்டாம் பாதியில் உள்ளூர் மக்கள் வீடு கட்ட வேண்டும் என்று நேர்ந்து கொண்டு கற்களை அடுக்கி வைத்துள்ளனர். அந்தக் கற்களை எல்லாம் எடுத்துச் சென்றால் அதிலேயே ஒரு வீடு கட்டி விடலாம் போலிருக்கு. அவ்வளவு கற்கள்.
நான் மனதில் பெரிய பி.சி.ஶ்ரீராம் என்று நினைத்துக் கொண்டு, ட்ரை பாடெல்லாம் வைத்து குகையின் உள்புறத்தை சில படங்கள் எடுக்க முயற்சிக்க ஒரு தேனீ கூட்டம் என்னை விரட்டோ விரட்டு என்று விரட்டியது தனிக்கதை. ஆனால், ஒரு தேனீ கூட என்னைக் கொட்டவில்லை. என்னை அந்த இடத்தை விட்டு விரட்ட வேண்டும் என்பது மட்டுமே அவற்றின் நோக்கம் என்பது புரிந்து ஆச்சரியமாயிருந்தது.
(இது போன்ற இடங்களில் மது அருந்தி, மாமிசம் சாப்பிட்டு பெண்களுடன் பலான காரியங்கள் செய்பவர்களை இது போல விரட்டினால் ஒரு அர்த்தம் இருக்கிறது. அவர்களை விட்டு விட்டு, ட்ரைபாட் போட்டு ஃபோட்டோ எடுத்தான் என்ற ஒரே ஒரு குற்றத்திற்காக பால் வடியும் இந்த பச்சை பாலகனை விரட்டியது எந்த வகையில் நியாயம் சித்தர்களே ? ஒரு வேளை நான் எடுக்கும் படங்களெல்லாம் அவ்வளவு மோசமோ ? ) .
இனி கல்வெட்டுக்களைப் பார்க்கலாம்.
கல்வெட்டு எண் : 1
கீழே இருந்து செல்லும்போது குகையின் நுழைவாயிலின் முகப்பில் முதல் கல்வெட்டு உள்ளது.
கல்வெட்டின் வாசகம் :
“ அமணன் மதிரை அத்திரன் உறை உதயனஸ “
மதுரையைச் சேர்ந்த அத்திரன் என்ற அமண முனிவரின் உறைவிடம். இதை உதயன் என்பவன் செய்து கொடுத்தான் என்பது பொருள்.
அழகர் கோயில் கல்வெட்டு போலவே இங்கும் மதுரையின் பெயர் மதிரை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
புகளூர் கல்வெட்டு போலவே இங்கும், “ அமணன்” என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. “அமணன் என்ற சொல் கண்டிப்பாக ஆசீவகச் சித்தர்களை நேரடியாக குறிக்கும் சொல். எனவே இங்கு வாழ்ந்த சித்தர்கள் அனைவரும் ஆசீவகச் சித்தர்களே” என்கிறார் பேராசிரியர் நெடுஞ்செழியன் அவர்கள். யோசிக்க வேண்டிய விஷயம். இது பற்றி விரிவாக என்னுடைய “ அமணமும் சமணமும்” என்ற கட்டுரைத் தொடரில் எழுதியுள்ளேன்.
இந்த முதல் கல்வெட்டைத் தவிர மற்ற ஒன்பது கல்வெட்டுக்களும், வெவ்வெறு கற்படுக்கைகளின் தலைமாட்டில் பொறிக்கப்பட்டுள்ளன.
கல்வெட்டு எண் : 2
வாசகம் : “ அந்தை அரிய்தி “
அர்த்தம் “ அந்தை அரிதி (என்பவர் செய்து கொடுத்த படுக்கை) என்று பொருள்
கல்வெட்டு எண் : 3
வாசகம் : “ அந்தை இராவதன் “
அர்த்தம் : ஆந்தை இராவதன் (செய்து கொடுத்த படுக்கை) என்று பொருள் ( “ர” கரத்தில் பெயர்ச்சொல் தொடங்கா. அப்போது “இ”கரத்தில் தொடங்க வேண்டும் என்பது தொல்காப்பியரின் இலக்கணம் என்பது கவனிக்கத்தக்கது. உ-ம் : இராஜா, இராஜேந்திரன் …..).
கல்வெட்டு எண்: 4
வாசகம் : “ மதிர அந்தை விஸூவன்”
அர்த்தம் : மதுரையைச் சேர்ந்த அந்தை விஸுவன் (என்பவன் செய்து கொடுத்த படுக்கை). இதில் “மதிர” என்ற முதல் வார்த்தை ரொம்பவே அழிந்த நிலையில் உள்ளது.
கல்வெட்டு எண்: 5
வாசகம் : “ அந்தை சேந்தன் அதன் “
அர்த்தம் : அந்தை சேந்தன் அதன் அல்லது அந்தை சேந்தன் ஆதன் (செய்து கொடுத்த கற்படுக்கை)
கல்வெட்டு எண் : 6
வாசகம் : “சந்தந்தை சந்தன்”
அர்த்தம் : சந்தந்தை சந்தன் (என்பவன் செய்து கொடுத்த படுக்கை)
கல்வெட்டு எண்: 7
வாசகம் : “பதின் ஊர் அதை”
அர்த்தம் : பதினூர் என்னும் ஊரைச் சேர்ந்த அந்தை (என்பவன் செய்து கொடுத்த படுக்கை).
கல்வெட்டு எண் : 8
வாசகம்: “ குவிர அந்தை சேய் அதன்”
அர்த்தம் : குவிரந்தை சேய் அதன் அல்லது குவிரந்தையின் மகன் ஆதன் (செய்த படுக்கை) என்பது பொருள்
கல்வெட்டு எண் : 9
வாசகம் : “ குவிர அந்தை வேள் அதன் “
அர்த்தம் : குவிரந்தை வேளாதன் (செய்து கொடுத்த படுக்கை).
கல்வெட்டு எண் : 10
வாசகம் : “ திடி இல் அதன்”
அர்த்தம் : திடில் என்ற ஊரைச் சேர்ந்த ஆதன் ( என்பவன் செய்து கொடுத்த படுக்கை)
இங்குள்ள கல்வெட்டுக்களில் பெரும்பான்மையானவை வெறும் பெயர்களை மட்டுமே சுமந்து நிற்கின்றன. இவர்கள் ஒவ்வொருவரும் ஒரு கற்படுக்கையை செய்து கொடுத்துள்ளனர் என்று நாமே ஊகித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.
ஆதன், ஆந்தை, குவிரன் போன்ற பெயர்கள் திரும்பத் திரும்ப வருகின்றன.
கி.மு.இரண்டாம் நூற்றாண்டிலேயே உதயனஸ, விஸூவன் போன்ற வட நாட்டு ( பிராகிருத)ப் பெயர்கள் நம்மிடையே ஊடுருவி விட்டன என்பதற்கு இங்குள்ள கல்வெட்டுக்களே சிறந்த ஆதாரம்.
அதில் ஆந்தை என்ற பெயரை “ ஆதன் + தந்தை” என்று பிரிக்கலாம். அப்படிப் பார்த்தால், இந்தப் பகுதியில் செழிப்பாக இருந்த ஏதோ ஒரு ஆதன் குடும்பம் இங்கு வாழ்ந்த சித்தர்களுக்கு இந்தக் கற்படுக்கைகளையும், நீர் வடிம்பு விளிம்புகளையும், நீர் வடிகால்களையும் அமைத்துத் தந்து உதவியிருக்க வேண்டும்.
இந்த சித்தர்கள் ஆசீவகர்களா இல்லையா என்ற ஆராய்ச்சியை ஒதுக்கி விட்டாலும் கூட இவர்கள் அனைவரும் தமிழ்ச் சித்தர்கள் என்பதும், இவர்கள் மருத்துவ, கல்வி சேவைகளை மக்களுக்கு அளித்தார்கள் என்பதும் மறுக்க முடியாத உண்மை.
இல்லை…இவர்கள் சமணர்கள் எனப்படும் ஜெயினர்கள்தான் என்று வாதிடும் மக்கள், அவர்களின் பூர்வீகமாக சொல்லப்படும் கர்நாடகா பகுதியிலும் இது போன்ற கற்படுக்கைகளும், தமிழ் அல்லது பிராமி கல்வெட்டுக்களும் இருந்தால் அவற்றை இங்கு பதிவிட்டு, அவற்றை ஒப்பிட்டு வாதிட்டால் வரவேற்கிறேன்.
வெ.பாலமுரளி
நன்றி : தமிழ் நாடு தொல்லியல் துறை வெளியிட்ட “ தமிழ் பிராமி கல்வெட்டுகள்”


























