தமிழிக் கல்வெட்டுக்களும் சில அவதானங்களும்…

இரண்டு நாட்களுக்கு முன் சென்று வந்த (அம்பாசமுத்திரத்திற்கு அருகில் உள்ள ) ஐயனார் குளத்துடன் தொல்லியல் துறை சொல்லும் அனைத்து தமிழிக் கல்வெட்டு இடங்களையும் பார்த்து விட்டேன். 

செல்வதற்கு கடினம் என்று சொல்லப்படும் திருச்சி மலைக்கோட்டை, ஐவர் மலை மற்றும் எடக்கல் மட்டும் இதில் அடங்கா. 

அதேபோல், இலங்கையில் இருக்கும் தமிழிக் கல்வெட்டுக்களுக்கு தனியே ஒரு பயணம் திட்டமிட்டுள்ளேன். எனவே, இலங்கைக் கல்வெட்டுக்களும் இதில் அடங்கா.

நான் சென்ற 28 இடங்களிலும் வித விதமான அனுபவங்கள். எல்லா இடங்களிலும் சில பொதுவான கூறுகளைக் காண முடிகிறது.

இவையெல்லாவற்றையும் ஒப்பிட்டு ஒரு புத்தகம் எழுதும் முயற்சியில் இறங்கியுள்ளேன். உயர்திரு ஐராவதம் மகாதேவன் அவர்கள் மற்றும் நாகசாமி போன்றோர் கட்டமைத்த சில தவறான கருத்துக்களை ஆதாரங்களுடன் மாற்றும் ஒரு முயற்சியாகவும் என் புத்தகம் இருக்கும்.

சரி விஷயத்திற்கு வருவோம். ரொம்பவும் பெரிய ஆராய்ச்சி எதுவும் செய்யாமல், மேலோட்டமாகப் பார்த்தாலே தெரியும் சில பொதுவான கூறுகள்:

  1. எல்லா கல்வெட்டு இடங்களுமே இன்றைக்கும் புழக்கத்தில் இருக்கும் பெருவழிப் பாதைகளில் இருக்கின்றன
  2. எல்லா இடங்களிலும் நிலாப் பாறைகள் என்னும் வானியலை ஆய்வு செய்ய உதவும் உயரம் அதிகம் உள்ள திறந்த வெளிப் பாறைகள் உள்ளன. சில இடங்களில் அவற்றில் கற்படுக்கைகளும் உள்ளன.
  3. இவற்றில் நிறைய இடங்களில் வெண் சாந்து பாறை ஓவியங்களும், சில இடங்களில் செஞ்சாந்து ஓவியங்களையும் காண முடிகிறது. இதிலிருந்து இந்த இடங்கள் தொடர்ந்து மக்கள் வாழும் அல்லது மக்கள் வந்து செல்லும் அல்லது மக்கள் பயன்பாட்டில் இருந்த இடங்களாக இருந்துள்ளது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. 
  4. சில பாறை ஓவியங்களில் வானிலை சார்ந்த ஓவியங்களையும் காண முடிகிறது. அவற்றில் சில இடங்களில் தமிழி கல்வெட்டுக்கள் இல்லாவிட்டாலும் கூட பாறைக் கீறல்களும், வெண் சாந்து ஓவியங்களும் வானியல் ஆராய்ச்சியை மையப் படுத்தியே உள்ளன ( புலிப் பொடவு மற்றும் பெருமுக்கல் ஒரு சிறந்த உதாரணம்). இது போன்ற ஓவியங்களை இங்கு வாழ்ந்த அறிவர்களே வரைந்திருக்க வாய்ப்புகள் உள்ளன. 
  5. தமிழிக் கல்வெட்டு இருக்கும் எல்லா இடங்களில் மருந்து அரைக்கும் குழிகளைக் காண முடிகிறது. 
  6. இந்த நிலாப் பாறைகள், மருந்துக் குழிகள் மற்றும் வானியல் தொடர்பான வெண் சாந்து ஓவியங்களை வைத்து இவ்விடங்களில் வாழ்ந்தவர்கள் “ தமிழ் அறிவர்கள்” தான் என்பதை ஆணித்தரமாகச் சொல்ல முடியும்
  7. சித்தன்ன வாசலில் ஓவியங்கள் இருக்கும் குடைவரைக்கு இன்றும் “அறிவர் பள்ளி” என்றுதான் பெயர். ஆசீவகர்களின் பள்ளிக்கு அறிவர் பள்ளி என்றுதான் பெயர் என்பதை இங்கு நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
  8. ஜெயினர்களின் தொடக்க காலத்தில் மருத்துவமும் , வானிலை ஆய்வும் பெருங்குற்றமாகக் கருதப்பட்டு வந்திருக்கிறது. கி.பி. ஒன்றாம் நூற்றாண்டிற்குப் பிறகே ஜெயினர்களும் இந்த இரண்டு களங்களிலும் இறங்கியுள்ளதாகத் தெரிகிறது ( ஆதாரம் : முனைவர் சோ. ந. கந்தசாமி எழுதிய இந்தியத் தத்துவக் களஞ்சியம்). ஆனால், நமது தொல்லியல் சொல்லும் தமிழிக் கல்வெட்டின் காலங்களையே உண்மை என்று எடுத்துக் கொண்டாலும் கூட, பெரும்பாலான கல்வெட்டு இடங்கள் கி.மு. 3, 2 மற்றும் ஒன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்பது என் வாதத்திற்கு இன்னும் வலு சேர்க்கும். 
  9. வானியல் ஆய்வில் அறிவர்களின் பங்கைப் பற்றி தொல்காப்பியர் சொல்வதே என் தேடலின் அடிப்படை. ஜெயினர்களின் தொடக்க கால நூல்கள் கூட ஜெயினர்களின் வானியல் மற்றும் மருத்துவ அறிவைப் பற்றி சொல்லவில்லை ( நானறிந்தவரை).
  10. ஐராவதமும், நாகசாமியும் திரும்பத் திரும்பச் சொல்லும் “ சமணர்” என்ற வார்த்தை எந்தக் கல்வெட்டிலும் இல்லை.
  11. ஆனால் “அறிவர்களை”க் குறிக்கும் “அமணர்” என்ற சொல் மேட்டுப்பட்டி மற்றும் புகளூர் கல்வெட்டுக்களில் நேரிடையாகவே குறிப்பிடப்பட்டுள்ளன. திருநாவுக்கரசர் தேவாரத்தில், சமணர் (ஜெயினர்) களையும் அவர்கள் வாழ்ந்த “பள்ளி”களைத் தனியாகவும், அமணர்கள் (அறிவர்கள் / ஆசீவகர்கள்) களையும் அவர்கள் வாழ்ந்த “பாளி”களைத் தனியாகவும் குறிப்பிட்டிருப்பதை இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். ஆம். சமணர் வேறு. அமணர் வேறு.
  12. பெரும்பான்மையான கல்வெட்டுக்களில் “பாளி” என்ற சொல்லே இடம் பெற்றுள்ளது. ஓரிரண்டு இடங்களில் மட்டுமே பள்ளி என்ற சொல்லைக் காண முடிகிறது. அது கூட குழப்பத்தினால் வந்த பிழையாகக் கூட இருக்கலாம். 
  13. நிறைய கல்வெட்டுக்களில் எழுத்துப் பிழைகளையும், குறில் நெடில் குழப்பங்களையும் காண முடிகிறது.
  14. தொண்டூர், அரிட்டாபட்டி, திருப்பரங்குன்றம் (புதிய கல்வெட்டு) கல்வெட்டுக்களில் கற்படுக்கைகளின் எண்ணிக்கையைக் குறிக்க ||| மற்றும் ||||| என்று செங்குத்துக் கோடுகள் செதுக்கப்பட்டுள்ளன. அப்போதே எண்களை பதிவு செய்யும் தேவை வந்து விட்டது என்பதையே இது காண்பிக்கிறது. வரிச்சியூர் கல்வெட்டில் “ நூறு” என்ற வார்த்தையும் வருகிறது.
  15. அதிலும் திருப்பரங்குன்றத்தில் நான் கண்டுபிடித்த புதிய கல்வெட்டில் ஐந்து செங்குத்துக் கோடுகள் செதுக்கப்பட்டுள்ளன. ஆனால், தமிழ் பிராமியில் (???) ஆங்கில எழுத்து “ r “ போன்று இருப்பதுதான் ஐந்து என்று சொல்லப்படுகிறது. அப்படியென்றால் “r” நடைமுறைக்கு வருவதற்கு முன்னரே (புதிதாய் கண்டுபிடித்த) திருப்பரங்குன்றத்து  கல்வெட்டு செதுக்கப்பட்டிருக்க வேண்டும். 
  16. நிறைய கல்வெட்டுக்களில் பிராகிருதச் சொற்களைக் காண முடிகிறது. ஆனால், எந்தக் கல்வெட்டிலும் சமஸ்கிருதச் சொற்களைக் காண முடியவில்லை. 
  17. தமிழிக் கல்வெட்டுக்களின் காலத்தை நமது தொல்லியல் துறை கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து கி.பி. நான்காம் நூற்றாண்டு வரை வரையறைத்துள்ளது. அப்படிப் பார்க்கையில் கி.பி. நான்காம் நூற்றாண்டு வரை சமஸ்கிருதம் நமது தமிழகத்தில் பேச்சு வழக்கில் கூட பெரிய செல்வாக்கு அடையவில்லை என்பது தெளிவு. 
  18. கர்நாடகத்தைக் குறிப்பதாகச் சொல்லப்படும் சித்தன்ன வாசல் கல்வெட்டைத் தவிர வேறெந்த கல்வெட்டும் முறையாகப் பாதுகாக்கப்படவில்லை. 
  19. சித்தன்ன வாசல் போல ஓரிரண்டு இடங்களைத் தவிர மற்ற எல்லா இடங்களிலும் மதுபான பாட்டில்களையும், சிகரெட் பாக்கெட்டுகளையும், இறைச்சியின் எச்சங்களையும், சில இடங்களில் ஆணுறைகளையும் காண முடிகிறது. தமிழி பற்றி மக்களுக்கு எந்தவொரு விழ்ப்புணர்வும் இல்லை என்பதையே இது காட்டுகிறது. வேதனையான விஷயம்.
  20. தமிழி ஆய்வின் தொடக்கத்தில் ஐராவதம் போன்றோர், அசோகப் பிராமியிலிருந்துதான் “தமிழ் பிராமி “ ( தமிழி) தோன்றியது என்ற கதையை திரும்பத் திரும்பச் சொல்லி, நமது தமிழியின் காலத்தை கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலிருந்தே தொடங்கினர். ஆனால், இப்போது கீழடி, ஆதிச்ச நல்லூர், கொடுமணல், பொருந்தல் போன்ற இடங்களில் கிடைத்த தமிழி பொறித்த பானை ஓடுகளை வைத்து நமது தமிழியின் காலத்தை கி.மு. 8 அல்லது கி.மு. 9ம் நூற்றாண்டிற்குக் கொண்டு செல்ல முடியும் ( ஆதிச்ச நல்லூர் ஆய்வின் முழு அறிக்கை வெளியானதும் இது மீண்டும் உறுதி செய்யப்படும்). 

ஆனால், தமிழிக் கல்வெட்டுகளின் காலத்தை மட்டும் இன்னும் யாரும் மறு ஆய்வு செய்யவில்லை. விரைவில் அதுவும் நடக்கும் என்று உறுதியாக நம்புவோம். 

அதற்கு “எல்லா” மக்களும் தொல்லியல் துறையில் துறையில் நுழைந்து பெரிய பதவிகளை அடைய வேண்டும். அது ஒன்றே வழி.

இளைஞர்களே விழித்துக் கொள்ளுங்கள்.

நான் இந்த “தமிழி” ப்ராஜக்ட்டை வெற்றிகரமாக முடிக்க உதவிய எனது தமிழி ஆசான் வே.இராஜகுரு, நண்பர்கள் திருச்சி பாலா பாரதி, திருச்சி பார்த்தி,  தென்கொங்கு சதாசிவம், ஐயா வெள் உவன், காவல்துறை அதிகாரி கண்ணன், யானைமலை இரவிச்சந்திரன், அரிட்டாபட்டி இரவிச்சந்திரன், புகளூர் சந்திரன், தம்பி ஆனந்த குமரன், மீனாட்சிபுரம் பாண்டி துரை என் கல்லூரித் தோழர்கள் வெற்றிவேல், குமார் , காரைக்குடி முத்துச் செல்வம், அரச்சலூர் தம்பி லெட்சுமி நாராயணன் மற்றும் அவருடைய இரண்டு நண்பர்கள், அம்மன் கோவில்பட்டி நாகராஜன், தொண்டூர் மற்றும் நெகனூர்பட்டி கல்வெட்டுகளைக் காண்பித்த உயர்திரு திருநாவுக்கரசு அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

நமது தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியிட்டுள்ள “ தமிழ் பிராமி கல்வெட்டுக்கள், பேராசிரியர் க. நெடுஞ்செழியன் எழுதிய ஆசீவகமும் அய்யனார் வரலாறும், முனைவர் சோ. ந. கந்தசாமி எழுதிய இந்தியத் தத்துவக் களஞ்சியம் போன்ற நூல்கள் பெருந்துணை புரிந்தன. 

சமீபத்தில் நான் கண்டறிந்த திருப்பரங்குன்றம் கல்வெட்டைப் படியெடுத்து உதவிய நண்பர் வே.இராஜகுரு அவர்களுக்கும், தம்பி உதயகுமார் அவர்களுக்கும், அதை ஆராய்ந்து உதவிய நமது மூத்த தொல்லியல் அறிஞர் முனைவர் சாந்தலிங்கம் அவர்களுக்கும் நன்றி சொல்ல வார்த்தைகளில்லை.

விரைவில் என்னுடைய “தமிழி” புத்தகம் உங்கள் கைகளில் தவழும்.

வெ.பாலமுரளி