தனுஷ்கோடியின் க(த)ண்ணீர்க் கதை….

தனுஷ்கோடியின் க(த)ண்ணீர்க் கதை….

“சாவே உனக்கொரு நாள் சாவு வந்து சேராதா 

தீயே உனக்கொரு நாள் தீ மூட்டிப் பாரோமா …..”

இது 1964 மே மாதம் நேரு மறைந்தபோது கண்ணதாசன் எழுதிய பாடல். இதை எழுதி சில மாதங்களில் அதாவது டிசம்பர் மாதம் 22ம் தேதி இரவில் / 23 ம் தேதி அதிகாலையில் ராமேஸ்வரம் மற்றும் தனுஷ்கோடியை அந்த அதிபயங்கர சூறாவளிப் புயல் தாக்கியது. 

அலைகளின் உயரம் 7 மீட்டரைத் தாண்டியது. கிட்டத்தட்ட சுனாமி போலத்தான்.

தனுஷ்கோடி கிராமமே ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போது அப்படியே அந்த ஊரை கபளீகரம் செய்து விட்டது அந்தக் கொடூர சூறாவளி.

தூங்கிக் கொண்டிருந்த மக்கள் என்ன நடக்கிறது என்று சுதாரிப்பதற்குள் கடலுக்குள் மூழ்கி மூச்சுத் திணறி உயிரை விட்டனர்.

பற்றாக்குறைக்கு பாம்பன் ரயில்வே நிலையத்திலிருந்து தனுஷ்கோடிக்கு வந்து கொண்டிருந்த “போட் மெயில்” என்னும் பேசெஞ்சர் ரயில் தனுஷ்கோடியை அடைவதற்கு சில நூறு மீட்டர் தொலைவு இருக்கும்போது அப்படியே கடலால் மூழ்கடிக்கப்பட்டது. கிட்டத்தட்ட 200 மக்கள் இருந்திருக்கலாம் .

மொத்தத்தில் 1500 முதல் 2000 மக்கள் இறந்தனர். அன்று முதல் தனுஷ்கோடி “பேய் நகரம்” (Ghost Town) என்றே அழைக்கப்பட்டது – சமீபகாலம் வரை.

அந்த அழிவின் நினைவாக இன்று ஒரு சர்ச்சின் சுற்றுப் புற சுவர்கள், இடிந்த நிலையில் ஒரு தபால் நிலையம்,குற்றுயிரும் குலை உயிருமாய் ஒரு சிவன் கோவில், ஒரு பள்ளிக் கூடத்தின் இடிந்த சுவர்கள் மற்றும் ரயில்வே நிலையத்தின் பிளாட்ஃபார்மும் ரயில்வே நிலையத்தின் மூன்று பெரிய சுவர்களும் தங்கள் கண்ணீர்க் கதையை நம்மிடம் பகிர்ந்து கொண்டு சோகத்துடன் நிற்கின்றன. 

இதில் கூனி மாரியம்மன் என்ற சிறிய கோவில் மட்டும் மிகக் குறைந்த சேதாரத்துடன், பாதியளவு மண்ணில் புதைந்து இன்றும் வழிபாட்டில் உள்ளது. கோவிலுக்குள் அன்று வாரித் தெளித்த கடல் மண்ணை இன்றும் காணலாம்.

இந்த சூறாவளிக்குப் பிறகு நம் அரசாங்கம் தனுஷ்கோடியை “ மக்கள் வசிக்கத் தகுதியற்ற இடமாக” அறிவித்துள்ளது. ஒரு மூன்று வருடங்களுக்கு முன்பு வரை கடல் சங்கு, பாசிகள் விற்கும் ஓரிரு கடைகள் தவிர ஒன்றுமில்லை.

ஆனால், இப்போது நிறைய குடிசைக் கடைகளையும், குடிசை உணவகங்களையும், தள்ளு வண்டி ஐஸ் கடைகளையும் பார்க்க  முடிகிறது. 

முன்பெல்லாம் தனுஷ்கோடிக்கு சென்று வந்தாலே இரண்டு மூன்று நாட்களுக்கு மனசு என்னவோ செய்யும். நம்முடைய இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவது மிகவும் கடினமாக இருக்கும். 

ஆனால், இப்போது அது மிகவும் கூட்டம் மிகுந்த டூரிஸ்ட் ஸ்பாட்டாக ஆகி விட்டது. வருபவர்களில் பெரும்பாலானோர் வட நாட்டு ஆன்மீக யாத்திரிகர்களே. அவர்களுக்கு தனுஷ்கோடியின் கண்ணீர்க் கதை தெரிவதில்லை. அதை விளக்கும் மியூசியமோ, பதாகைகளோ இல்லை. அவர்களைப் பொறுத்த வரையில் செல்ஃபி எடுக்க இன்னொரு ஸ்பாட். 

ஆனால், என்னைப் போன்ற மிகச் சிலரே கடலை சோகத்துடன் உற்று நோக்குகின்றனர்.

அலைச் சத்தத்துடன் , அங்கு மரணித்த அத்தனை உயிர்களின் மரண ஓலங்களும் சேர்ந்தே கேட்கின்றன. 

சென்று வந்து ஒரு வாரம் ஆகியும் இன்னும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியவில்லை

வெ.பாலமுரளி 

பி.கு : இந்த சம்பவம் நடந்த போது ராமேஸ்வரம் போஸ்ட் ஆஃபிஸின் போஸ்ட் மாஸ்டர் எங்கள் பெரியப்பா. அப்போது டெலிகிராம் கொடுக்கவும், டெலிஃபோன் பேசவும் அங்கு அலைமோதிய கூட்டத்தையும், அவர்களின் பதை பதைப்பையும் கதை கதையாக சொல்வார். அந்தக் கூட்டத்தில் நடிகர்கள் ஜெமினி கனேசனும், சாவித்திரியும் இருந்துள்ளனர்.