டேனியல் அராப் மோய்

உயர்திரு. டேனியல் அராப் மோய், கென்யா நாட்டின் பழைய அதிபர் சமீபத்தில் ( 2020 இன் தொடக்கத்தில்) தனது 94 வது வயதில் இயற்கை எய்து விட்டார் என்று கேள்விப்பட்டேன். 

கிட்டத்தட்ட 28 வருட காலம் பதவியில் உட்கார்ந்து கொள்ளையோ கொள்ளை என்று அடித்து நாட்டை ஒரு வழி பண்ணி விட்டார். இவர் காலத்தில் நாட்டில் நல்லதாக ஒரு ரோடு கூட கிடையாது. வழிப்பறிச் சம்பவங்கள் ஏராளம் . அதிபரே கன்னா பின்னாவென்று அடித்துக் கொண்டிருக்கும்போது, சாதாரணத் திருடர்களைக் கேள்வி கேட்பது யார். 

சில பல கொலைச் சம்பவங்களும் தலைவர் ஆணையில் நடந்தேறின. பல வெளிப்படையாக, சில திரை மறைவில். 

தான் ஆட்சியை விட்டு வெளியேற வேண்டுமானால், தன் மேல் எந்த ஒரு வழக்கையும் போடக் கூடாது என்று சத்தியம் வாங்கி விட்டே, ஆட்சிக் கட்டிலை விட்டு இறங்கினார். சனியன் ஏதோ போனால் சரி என்று ஒட்டு மொத்த நாடே அந்த டீலை ஒத்துக் கொண்டது. 

ஆனால், அவர் ஆட்சியில் இல்லாவிட்டாலும் கூட, ஏராளமான அரசியல் விளையாட்டுக்கள் இவருடைய அனுமதியில்லாமல் நடந்ததில்லை – ஓரிரு வருடங்களுக்கு முன்பு வரை. அந்த அளவிற்கு தலைவர் பவர்ஃபுல்.

நான் இங்கு வந்த புதிதில் அவர்தான் அதிபர். ஒரு முறை அவர் வருகிறார் என்று தெரியாமல், காரை நிப்பாட்டாமல் சென்றதால், அவருடைய செக்யூரிட்டி அதிகாரிகள் என்னை வழி மறித்து காய்ச்சு காய்ச்சு என்று காய்ச்சி விட்டார்கள். நான் நாட்டிற்குப் புதிது என்று நிரூபித்த பிறகே என்னை விட்டார்கள். 

அவரே, அதிபர் பதவியை விட்டு இறங்கிய சில வருடங்களுக்குப் பிறகு , ஒரு நல்ல ட்ராஃபிக்கில் எனக்கு நேர் பின்னால் ஒரு 45 நிமிடங்கள் வசமாக மாட்டிக் கொண்டார். அந்தப் பக்கம் இந்தப் பக்கம் நகல முடியவில்லை. எனக்கு அதில் ஒரு பயங்கர (அல்ப) சந்தோஷம். ( வாழ்க்கை ஒரு வட்டம்டா ). 

இவர் ஹிட்லர், போல்பாட், நீரோ, ஸ்டாலின் போன்றோருடன் ஒப்பிடக் கூடிய அளவிற்கு மோசம் இல்லை என்றாலும் கூட, இவரும் பதவி வெறியில் கன்னா பின்னாவென்று ஆடிய ஒரு தலைவரே. இவரும் அவர்களைப் போலவே ரொம்பக் கஷ்டப் படாமல் பொட்டென்று போனது “ சரித்திரத்தில் இதெல்லாம் சகஜமப்பா” என்பதை நிரூபித்து விட்டது. 

ஆம்….தப்பு செஞ்சா சாமி கண்ணைக் குத்தி விடும் என்று சொல்வது சரித்திரத்தில் நிறைய சமயங்களில் நடப்பதில்லை. 

நம்ம சுஜாதா ஸ்டைலில் “ ஏன் ? எதற்கு ? எப்படி ? “ என்று கேள்விகள் கேட்டால், ஏனோ எதற்கும் பதில்கள் கிடைப்பதில்லை. 

வெ.பாலமுரளி