உலகிலேயே அன்னைக்கு…அதுவும் சிற்றன்னைக்கு… அதுவும் தந்தையின் முறையான மனைவி கூட இல்லை, வெறும் ஆசை நாயகி மட்டுமே… அவருக்கு ஒரு ஆலயம் கட்டி மரியாதையும், நன்றியும் செலுத்தியிருப்பது நமது தமிழகத்தில் மட்டுமே (குஷ்பூவுக்கும், நமீதாவுக்கும் கூடக் கோவில் கட்டுவது இந்தக் காலம். அப்போது அப்படியெல்லாம் கிடையாது ).
இடம் : பட்டீஸ்வரம் ( கும்பகோணத்திலிருந்து ஆறேழு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது )
அந்த அன்னை : பஞ்சவன் மாதேவி
கோவிலின் உண்மைப் பெயர்: பஞ்சவன்மாதேவி பள்ளிப் படை ( இப்போது அதை ராமலிங்க சுவாமி கோவில் என்றழைக்கிறார்கள் )
கட்டியவன் : முதலாம் ராஜேந்திர சோழன் (ராஜ ராஜ சோழனின் மகன் )
கட்டியது : 11 ம் நூற்றாண்டில்
ராஜேந்திரசோழன் தன் குழந்தைப் பருவத்தில் தன் அத்தை குந்தவையிடமும் , தன் பாட்டி செம்பியன் மாதேவியிடமுமே அதிகம் வளர்ந்தான் என்றே நாம் படித்திருக்கிறோம். ஆனால், அவர்களை விட தன் சிற்றன்னை பஞ்சவன் மாதேவியிடம்தான் அவன் மிக அதிக நாட்கள் செலவழித்திருக்கிறான் என்கிறது உண்மை வரலாறு.
பஞ்சவன் மாதேவி அழகிலும் , அறிவிலும், நாட்டியத்திலும், அரசியல் ஞானத்திலும் , புத்திக் கூர்மையிலும் மிகவும் சிறந்து விளங்கியிருக்கிறார். தேவரடியார் இனத்தைச் சார்ந்தவர் என்னும் ஒரே ஒரு காரணத்துக்காக மட்டுமே அவர் இருட்டடிப்பு செய்யப் பட்டிருக்க வேண்டும்.
ராஜராஜன் என்ற மாபெரும் சக்கரவர்த்தியை , தன் அன்பின் பிடியில் வைத்துக் கொண்டு அவருடைய மாபெரும் வெற்றிக்கு திரை மறைவில் ஒரு தூணாக இருந்து அவர் உழைத்தவை , வரலாறு மறைத்த ஒரு மாபெரும் காவியம்.
தனக்காக ஒரு குழந்தை கூட பெற்றுக் கொள்ளாமல், ராஜேந்திரனையே தன் மகன் போல் பாவித்து வளர்த்திருக்கிறார்.
ராஜேந்திரனும், தான் தஞ்சையின் தளபதியாக இருந்த போதும் , பின் இளவரசனாக மாறிய போதும், பின்னாளில் சக்கரவர்த்தியாக விஸ்வரூபம் எடுத்த பிறகும், தன் சிற்றன்னையைக் கலந்தாலோசித்தே பெரிய பெரிய முடிவுகளை எடுத்திருக்கிறான்.
எனவேதான் அந்த அன்னை மறைந்த பிறகு அவருக்காக இந்த ஆலயம். அவர் காலத்தில் நாலு கால பூஜை நடந்த ஆலயம், இப்போது கேட்பாரற்று கிடக்கிறது – தமிழக முதல்வரின் உத்தரவால் இங்கு ஒரு கால பூஜை மட்டும் நடக்கிறது என்ற ஒரு போர்டுடன் ( இ…..ங்….கே……யு……மா ????? ).
நான் பட்டீஸ்வரம் போய்ச் சேரும்போது மாலை 6.30 மணியாகி விட்டது. வெளிச்சம் இப்பவோ அப்பவோ போய் விடும் போல் இருந்தது. பட்டீஸ்வரத்தில் துர்க்கை அம்மன் கோவிலும், தேனுபுரீஸ்வரர் ஆலயமுமே மிகவும் பிரசித்தம். உள்ளூர்க்காரர்கள் யாருக்கும் ” பஞ்சவன் மாதேவி பள்ளிப் படை” என்றால் தெரியவில்லை. ஒரே ஒரு பெரிய மனிதர் மட்டும் ” அவரு ராமலிங்க சுவாமி காட்டுக் கோவிலைச் சொல்றாருப்பா ” என்று சொல்லி அங்கிருந்த ஒருத்தரை என்னுடன் வழி சொல்ல அனுப்பி வைத்தார்.
பஞ்சவன் மாதேவி பள்ளிப் படை ஒரு வயற்காட்டின் நடுவில் அனாதையாக, எந்த ஒரு பராமரிப்பும் இல்லாமல் நின்று கொண்டிருக்கிறது. நான் அங்கு போய்ச் சேரும்போது மணி மாலை 7 ஆகி விட்டது. வெளிச்சம் பொயே போயிந்தி . இட்ஸ் கான். ஒரு கால பூஜை மட்டும் என்பதால், அந்தக் கோவில் குருக்கள், ஒரு விளக்கை மட்டும் ஏற்றி வைத்து விட்டு, கோவிலைப் பூட்டி விட்டு போய் விட்டார்.
நானும், தேவர் மகன் வடிவேலு மாதிரி, கோவிலுக்கு வெளியில் இருந்து, தாயே பஞ்சவன் மாதேவி எல்லாரையும் காப்பாத்தும்மா என்று சொல்லி ஒரு கும்பிடு போட்டு விட்டு கிளம்ப எத்தனித்தேன். கூட வந்தவர் என்னை விடுவதாக இல்லை. என்னிடம் இருந்த கேமராவைப் பார்த்து நான் பெரிய ஃபோட்டோகிராஃபர் போலிருக்கு என்று நினைத்து விட்டார் ( நாங்க இப்படித்தான் பிலிம் காமிப்போம் ).
பத்திரிக்கையில் இருந்து ஆளு வந்திருக்காக என்று சொல்லி கோபுரத்தின் மெயின் வாசலின் சாவியை மட்டும் வாங்கி வந்து , ” வாங்க சார் உள்ளே போவோம்” என்றார்.
பிரகாரத்தின் உள்ளே ஒரே முள்ளும் , புதருமாக மண்டிக் கிடந்தன. காலில் செருப்பும் இல்லாமல் அந்தப் பிரகாரத்தை சுற்றி வந்தது மெய் சிலிர்க்கும் ஒரு அனுபவம். எல்லாம் நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது – அவர் ” அப்பப்ப இங்கே பாம்பு வந்து போகும்” என்று சொல்லும் வரை.
உடனே கொஞ்சமும் தாமதிக்காமல், கேமராவை எடுத்து ISO -வை 12,600 இல் செட் பண்ணி ஒரு சில படங்கள்மட்டும் எடுத்து விட்டு , உடனே அந்த இடத்தைக் காலி பண்ணினோம் ( மெயின் கோவில் பூட்டியிருந்ததால், கோவில் உள்ளே சென்று அந்த அன்னையைத் தரிசிக்க முடியவில்லை என்று வருத்தமாக இருந்தது ).
பாம்பை நினைத்து எனக்கு பயமெல்லாம் கிடையாது. அர்ச்சனாவும், நிவியும் தேனுபுரீஸ்வரர் கோவிலில் காத்துக் கொண்டிருந்தார்கள், அதான்.
ஹி…ஹி…ஹி….
வெ.பாலமுரளி
நன்றி : நான் இந்தக் கோவில் சென்று வரக் காரணமாயிருந்த எழுத்தாளர் பாலகுமாரன் அவர்கள், மற்றும் நண்பர் சசிதரன், மற்றும் நான் இந்தக் கோவிலைத்தான் பார்க்கக் கூட்டிச் செல்கிறேன் என்று தெரியாமல் ஏமார்ந்து என்னுடன் வந்த என் மனைவி அர்ச்சனா மற்றும் மகள் நிவிக்கு