சித்திரமேழி பெரிய நாட்டார்

சித்திரமேழி பெரிய நாடு

எனக்குத் தெரிந்து தமிழகத்தில் இதுவே முறையான முதல் புரட்சிக் குழு. 

கி.பி. ஏழாம் நூற்றாண்டில் வைதீக / வேத மதம் தமிழகத்தில்  காலூன்றத் தொடங்கியது முதலே, “ பிரம்மதேயங்களும்,சதுர்வேதி மங்கலங்களும் ” தொடங்கி விட்டன.

அப்போதிருந்த மன்னர்களுக்கு நீண்ட ஆயுள் வேண்டி, பகைவனை ஜெயிக்க வேண்டி, ஆட்சி நீடிக்க வேண்டி என்று கூறி அன்றைய பிராமண சமூகம் விசேஷ பூஜை, யாகம், வேள்வி பொன்ற விஷயங்களைச் செய்ய, மன்னர்களும் மனம் குளிர்ந்து அவர்கள் கட்டுப்பாட்டிலிருந்த கிராமங்களில் உள்ள நல்ல விளை நிலங்களை “ பிரம்மதேயம்” என்ற பெயரிலும் கிராமங்களை “ சதுர்வேதி மங்கலம்” என்று பெயரிட்டும் பிராமணர்களுக்கு எழுதிக் கொடுக்கும் நடை முறை அப்போது இருந்திருப்பது, இன்று கிடைக்கும் ஏராளமான கல்வெட்டுக்கள் மூலம் நமக்குத் தெரிய வருகிறது. 

இது கண்டிப்பாக கிராமத்திலிருக்கும் வேளாண் மக்களுக்கு கடும் எரிச்சலையும், கோபத்தையும் ஏற்படுத்தி இருக்க வேண்டும். 

ஆனால், செய்வது சகல அதிகாரமும் படைத்த மன்னர்கள். எனவே சொல்லவும் முடியாமல், மெல்லவும் முடியாமல் அவர்கள் வெகுகாலம் அவதிப்பட்டிருக்கிறார்கள். 

ஒரு டயத்தில் பொறுக்க முடியாமல், மன்னர்களுக்கு அடுத்த நிலையில் உள்ள அதிகார வர்க்கமான வணிகர்களை நாடியிருக்கிறார்கள். குறிப்பாக ஐநூற்றுவர், திசையாய பதினெண் விசையத்தார் மற்றும் திசையாய ஐநூற்றுவர் போன்ற வணிகக் குழுக்கள்.  

அந்தக் காலத்தில் வணிகர்களும் மிகுந்த செல்வாக்குடன் இருந்திருக்கிறார்கள். தாங்கள் வெகுதூரம் பயணப்படும்போது சந்திக்கும் திருடர்கள் பிரச்சினையைச் சமாளிக்க, அவர்களும் கூட்டம் கூட்டமாக தனித் தனிப் படைகளை வைத்திருந்திருக்கிறார்கள். 

நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வணிகர்களும் இந்த “பிரம்மதேய” பிஸினஸில் பாதிக்கப்பட்டிருக்க வேண்டும்.

எனவே, வேளாண் மக்கள் தங்களை அணுகியவுடன் அவர்களும் ஒத்துக்கொண்டு, கூட்டாக (வணிகர்களும்,விவசாயிகளும் சில கைத் தொழில் கலைஞர்களும்) இணைந்து தொடங்கிய அமைப்பே “ சித்திர மேழி பெரிய நாடு”. இது தொடங்கியது 11ம் நூற்றாண்டு. குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால், கி.பி. 1057 ( ஆதாரம் தாமரைப்பாக்கம் கல்வெட்டு).

மேழி என்றால் கலப்பை. சித்திரம் என்றால் அழகிய. அதாவது 

“அழகிய கலப்பை” என்னும் பெயரில் அதர்மத்தை எதிர்த்துப் போராடும் குழு.

இந்தக் குழு தொடங்கிய இடம் தற்போதிருக்கும் வட ஆற்காட்டில் உள்ள தாமரைப் பாக்கம் என்று அங்குள்ள கோயில் கல்வெட்டு கூறுகிறது.

இந்தக் கூட்டமைப்பு, பிரம்மதேயங்களையும், சதுர்வேதி மங்கலங்களையும் போராடித் திரும்பப் பெற்றது மட்டுமல்லாது, நிறைய கோயில்களையும் கைப்பற்றி தங்கள் வசம் கொண்டு வந்து தூய தமிழ்ப் பெயர்களையும் சூட்டி பராமரித்திருக்கிறார்கள் ( உதாரணத்திற்கு, கரியமாணிக்கப் பெருமாள் என்ற பெயரை “  சித்திரமேழி விண்ணகர எம்பெருமான்” என்று மாற்றியிருக்கிறார்கள்). அதிலும் முக்கியமாக பெருமாள் கோயில்களையே அதிகம் கைப்பற்றியிருக்கிறார்கள். பெருமாள் கோயில்களோடு ஒப்பிடும்போது, இவர்களால் கைப்பற்றப் பட்ட சிவன் கோயில்களின் எண்ணிக்கை குறைவே.

“ஏன் கோயில்கள்?” என்று பார்த்தால் அதிலும் “ அடிபட்ட ஒரு வலி” இருந்திருக்கிறது. தங்களை பூமித்தாயின் புதல்வர்கள் ( மண்ணின் மைந்தர்கள்) என்று கூறிக்கொள்ளும் இந்தக் குழுவினர் தாங்கள் வணங்கும் பெண் தெய்வங்கள், குறிப்பாக பெருமாளின் மனைவியான பூமா தேவி (அன்றைக்கு) கோயில்களில் எந்தவித முக்கியத்துவமும் இல்லாமல் இருந்திருப்பது வருத்தத்தையும், கோபத்தையும் உண்டு பண்ணியிருக்கிறது.

எனவே, கோயில்களைக் கைப்பற்றி, பெண்தெய்வங்களையும் ஆண் தெய்வங்களுக்குச் சரிக்குச் சமமாக தனி சன்னிதி கொடுத்து கொடுத்து வணங்கத் தொடங்கியிருக்கிறார்கள். 

சித்திர மேழி குழுவினரை சாந்தப் படுத்தும் விதமாக இதற்குப்பிறகுதான், குறிப்பாக கி.பி. 12 அல்லது 13ம் நூற்றாண்டுக்குப் பிறகுதான் கிட்டத்தட்ட எல்லா கோயில்களிலும்,  தமிழர்கள் தொன்று தொட்டு வணங்கி வந்த பெண் தெய்வங்கள் ஆண் தெய்வங்களுக்குச் சமமாக வலம் வரத் தொடங்கியிருக்கின்றன. மதுரை சொக்கநாதர் கோயில், மீனாட்சி அம்மன் கோயிலாக வடிவெடுத்ததும் அப்படித்தான்.

இந்த “ சித்திர மேழி” வேளாண் குழு, பல்லவ நாடு, பாண்டிய நாடு, தொண்டை நாடு, கொங்கு நாடு என்று தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் 14ம் நூற்றாண்டின் தொடக்கம் வரை மிகப்ப் பெரிய அளவில் இயங்கியிருக்கிறார்கள்.

இழந்து போன விளை நிலங்கள் மற்றும் கிராமங்களை மீட்டது, கோயில்களை தங்கள் வசப் படுத்தியது மட்டுமல்லாது,தாங்கள் அரசாங்கத்துக்கு எவ்வளவு வரி கொடுக்க வேண்டும் என்று அரசாங்க அதிகாரிகளைக் கலந்தாலோசிக்காமலேயே முடிவெடுத்து அதைக் கடைப்பிடித்திருக்கிறார்கள் ( ஆதாரம். பிரான்மலை மற்றும் திருமலை கல்வெட்டுகள்).

அத்துடன், பொருட்களின் பொது விலைகளையும் ( MRP) அவர்களே நிர்ணயித்திருக்கிறார்கள் ( ஆதாரம்: திருமலை கல்வெட்டு).

இந்தக் குழுவின் பிரமாண்டத்தைப் பார்த்து, மன்னர்களும் ஓரளவு பயந்து போன மாதிரிதான் தெரிகிறது. இவர்களது கோரிக்கைகள் அனைத்தும்  நியாயமானதாக இருந்ததும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.

14ம் நூற்றாண்டுக்குப் பிறகு இந்த “ பிரம்மதேயம் & சதுர்வேதி மங்கலங்கள்” குறையத் தொடங்க “ சித்திர மேழி” குழுவும் மெதுவாக மறைந்து போயிருக்கிறது. 

இந்தக் கட்டுரைக்கும், தற்சமயம் டெல்லியில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்திற்கும் எந்த சம்பந்தமுமில்லை. 

வெ.பாலமுரளி. 

ஆதாரங்கள் : 

மேற்சொன்ன கல்வெட்டுக்கள். குறிப்பாக திருமலை கல்வெட்டு மற்றும் முனைவர் சாந்தலிங்கம் அவர்களின் காணொளி.