சித்தன்ன வாசல் – தெரிந்த இடம், தெரியாத செய்தி.

சித்தன்ன வாசல் என்றவுடன் நம் அனைவருக்கும் நினைவுக்கு வருவது சமணத் துறவிகளால் வரையப்பட்ட 1300 வருடங்களுக்கும் பழைமையான வண்ண ஓவியங்கள், அதே காலத்தில் உருவாக்கப்பட்ட சமணர் குடைவரைக் கோயில் மற்றும் மலையின் மீதுள்ள சமணர் படுகைகள் மற்றும் அவர்களால் பொறிக்கப்பட்ட தமிழிக் கல்வெட்டுகள்.

அங்கு செல்லும் நிறையப் பேர் கண்டு கொள்ளாத ஒரு இடம் மேற்சொன்ன சமணர் குடைவரைக் கோயிலுக்கு எதிர்ப் புறம் உள்ள ஒரு ஐயனார் கோயில். 

ரொம்ப நாள் மண்டையைக் குடைந்து கொண்டிருக்கும் சில கேள்விகளுக்கு, முனைவர். க. நெடுஞ்செழியன் அவர்களின் ஆய்வுக் கட்டுரைகள் மற்றும் அவருடைய காணொளி மூலமாக சில பதில்கள் கிடைத்துள்ளன. அதைப் பகிர்ந்து கொள்ளவே இந்தக் கட்டுரை ( இன்னும் பதில் கிடைக்காத சில கேள்விகளும் உள்ளன).

என் மனதை அரித்துக் கொண்டிருக்கும் கேள்விகளுள் மிக முக்கியமானதும், இன்னும் முழுமையாக விடை கிடைக்காததுமான ஒரு கேள்வி, “இவற்றை சமணர்களின் படைப்பு என்று எங்ஙனம் கணித்தார்கள்?” . இதே கேள்வி நான் தமிழி கல்வெட்டுக்களை ஆராயும்போதும் தொக்கி நிற்கின்றது. 

காலை மடக்கி பத்மாசனம் நிலையில் இருக்கும் அனைத்து சிலைகளுமே சமணர்களுக்குரியது என்ற நிலைப்பாடாக இருக்கலாம். இது தவறான ஒரு நிலைப்பாடு. காரணம் அந்தக் காலத்தில் “ சாவகர், சமணர், ஆசீவகர் மற்றும் பௌத்தர்” அனைவருமே ஏறத்தாழ ஒரே மாதிரித்தான் தவத்தில் ஈடுபட்டிருப்பது தெரிகிறது. 

இந்த நால்வரையுமே அப்போது சமணர்கள் அல்லது அமணர்கள் என்றுதான் அழைத்துள்ளார்கள்.

“சாவகர் அருகர் சமணர் ஆகும்.

ஆசீ வகரும் அத்தவத்தோரே”

  • திவாகர நிகண்டு ( கிபி. எட்டாம் நூற்றாண்டு)
  • நன்றி: விக்கிப்பீடியா 
  •  

இதில் குறிக்கப்படும் சமணர் – ஜைன மதத்தினரைக் குறிக்கும்

சாவகர் : இல்லறத்தில் ஈடுபட்ட ஜைன மதத்தினர்

அருகர் : அருகரை வழிபட்ட ஜைனத்தின் ஒரு பிரிவினர் ( தவறிருந்தால் சுட்டிக் காட்டுங்கள்). 

ஆசீவகர் : தமிழகத்தில் தோன்றிய ஆசீவக மதத்தினர் ( மிகக் கடுமையான துறவறத்தைக் கடைப்பிடித்தவர்கள்). 

இதில் நமது தொல்லியல் கூறும் “சமணர்” என்னும் பிரிவினர் “ஜைன” மதத்தினரைக் குறிக்கும். ஆதாரம்: நான் சொன்ன அனைத்து சமணர் இடங்களிலேயும் தொல்லியல் துறையும், Jain Monument என்னும் புனேயைச் சேர்ந்த ஒரு அமைப்பினரும் வைத்திருக்கும் மஞ்சள் பலகைகள் ( சாம்பிளுக்கு ஒரு படம் இங்கு இணைத்துள்ளேன்).இதிலிருந்து இவர்கள் குறிக்கும் சமணர்கள், ஆசீவகத்தையோ, பௌத்தத்தையோ குறிக்கவில்லை என்பது தெளிவு. 

இது தவிர, சங்க காலப் பாடல்களில் இரண்டு பாடல்களும் மேற்கோள் காட்டப்படுகின்றன.

ஒன்று, நற்றிணை ( பாடல் எண் : 141) 

“ நீடியசடையோடு ஆடாமேனிக்

குன்றுறை தவசியர் “

இதில் வரும் “ஆடாமேனி” – நீராடாமல் இருப்பதைச் சுட்டிக் காட்டுவதால், அது சமணர் (ஜைனர்)கள் தான் என்பது ஒரு வாதம். “ஆடாமேனி” கரெக்ட். ஆனால், “ நீடிய சடையோடு” ???????? சமணர்கள் முடியை தங்கள் கைகளாலேயே பிடுங்கி தலையை மொத்தமாக மழித்துக் கொள்ளும் பரபினர். இதற்கு “கேசலோச்சனம்” என்று பெயர். இதிலிருந்து சமணர்களுக்குத் தலைமுடி கிடையாது என்பது புரிகிறது. அப்படியென்றால் இவர்கள் யார் ?

இரண்டாவது பாடல்: 

“ உண்ணாமையின் உயங்கிய மருங்கின்

ஆடா படிவத்து ஆன்றோர் போல

வரைசெறி சிறுநெறி நிரையுடன் செல்லும்

கானயானை கவினழி குன்றம் “ 

என்னும் அகநானூற்றுப் பாடலில் ( எண்: 132) ,சிறிய பாதையில் கூட்டமாகச் செல்லும் யானைக் கூட்டத்தை, பட்டினியால் வாடி வதங்கிய தேகத்துடனும், நீராடாமலும் உள்ள துறவிகள் கூட்டத்துடன் ஒப்பிடப்படுகிறது. 

ஒரு சில ஜைனத் துறவியினரைப் பார்த்து விட்டு குன்றின் மீது தவமிருக்கும் அனைவருமே “ (நீர்) ஆடா படிவத்தினர்” என்னும் தவறான முடிவுக்கு வந்திருக்கலாம்.

சரி….சித்தன்ன வாசலுக்கு வருவோம்…..

அங்குள்ள ஓவியத்தில், மூன்று துறவியர்கள் “கருகருவென்ற முடியுடன்”, இடுப்பில் “கோவணத்துடன்” நீராடுவது போல வரையப்பட்டுள்ளது ( கூகுளிலிருந்து சுட்ட படங்களை இங்கே இணைத்துள்ளேன்). “கருகருவென்ற முடி & கோவணம்”……Something does not seem to be right என்று உங்களுக்குத் தோன்றுகிறதா ? கரெக்ட்….எனக்கும் தோன்றியது. 

ஐயா நெடுஞ்செழியன் அவர்கள் இதையே முக்கியமான ஆதாரமாக எடுத்துக் கொண்டு, இந்த ஓவியத்தை வரைந்தவர்கள் கண்டிப்பாக ஆசீவகர்ள்தான் என்கிறார்.

அதுமட்டுமல்ல….குடைவரையின் உள்ளே மூன்று துறவியர்களின் சிலைகள் உள்ளன ( அங்கு நான் எடுத்த படத்தை இத்துடன் இணைத்துள்ளேன்). இங்கேயும் அதே பிரச்சினைதான். மூன்று துறவியருமே, தலைமுடியை நன்கு வாரி, மேலே குடிமி போல் சுற்றி வைத்துள்ளதைத் தெளிவாகப் பார்க்க முடியும். இந்த மூவர்தான் ஆசீவகத்தைத் தோற்றுவித்த மற்கலி கோசாலர், பூரண காசியபர் மற்றும் பகுத கச்சானர் என்கிறார் முனைவர் நெடுஞ்செழியன் அவர்கள். 

மலை மீது ஏறினால், நிறைய கற்படுகைகளும் , தமிழிக் கல்வெட்டுக்களும், ஒரே ஒரு பிற்காலத் தமிழ்க் கல்வெட்டும் உள்ளன. நாங்கள் அங்கு சென்றிருந்த போது, அந்த இடம் பூட்டி வைக்கப் பட்டிருந்ததால், எங்களால் உள்ளே சென்று படம் எடுக்க இயலவில்லை. க்ரில்லுக்கு வெளியில் நின்றே படம் எடுத்து விட்டு இறங்கி விட்டோம். அங்கும் சமணர்களுக்குரிய எச்சங்களை விட ஆசீவகர்களின் தொன்மையையே அதிகம் காண முடிகிறது ( “தமிழிக் கல்வெட்டுக்களில் தெரிவது சமணமா ஆசீவகமா “ என்னும் தலைப்பில் இன்னொரு விரிவான கட்டுரை விரைவில்).

மலையிலிருந்து கீழே இறங்கினால், நாம் ஸ்ட்ரெயிட்டாகப் போய் சேரும் இடம் ஒரு ஐயனார் கோயில். ஆசீவகர்களின் சின்னம் யானை. ஒரு பெரிய யானை சின்னத்துடன், அந்த ஐயனார் கோயில் நம்மை வரவேற்கிறது. 

அவர்கள் சொல்லும் 18 குற்றங்களையும் கடந்தவர்கள் “ஐயனார்கள்’ ஆகிறார்கள். பழைய இலக்கியங்களில் குறிப்பிடப்படும் “அறச் சாத்தன்” ( அறம்= தர்மம். சாத்தன் – சாஸ்தா) என்பது “தர்மசாஸ்தாவாக அறியப்படும் ஐயப்பன்தான். எனவே, ஐயப்பனும் ஒரு ஐயனார்தான் என்கிறார் நெடுஞ்செழியன் அவர்கள்.

அதுமட்டுமல்ல. இந்த மலையின் ஒரு பக்கத்தில் உள்ள ஒரு குகையில் உள்ள கற்படுக்கை போன்ற ஒரு பாறையில் ஒரு துறவியைக் கிடத்தியிருக்கிறார்கள். அது மற்கலி கோசாலர்தான் என்கிறார் அவர். அந்தப் பாறையைச் சுற்றி வட்டமான நாலு கற்கள் உள்ளன. அது அந்தக் காலத்தில் யாரையேனும் புதைத்து விட்டு, அடையாளத்திற்கு வைக்கும் கற்கள் போலவே உள்ளன. எனவே, அது மற்கலி கோசரின் சமாதியாக இருப்பதற்கும் வாய்ப்புகள் உள்ளன என்கிறார் நெடுஞ்செழியன் அவர்கள் ( இது பற்றி அவரிடம் பேசி விளக்கம் அறிந்து கொண்டு,  நானும் ஒரு முறை நேரில் போய் பார்த்து விட்டு படங்களுடன் இன்னும் விரிவாக பின்னர் எழுதுகிறேன்). 

இவை எல்லாவற்றையும் வைத்துப் பார்க்கையில் “சித்தன்ன வாசல்” படைப்புகள் அனைத்தும் ஆசீவகத்துக்குரியவைதான் என்பது தெள்ளத் தெளிவு. ஆசீவகம், அன்றைய காலத்தில் மிகவும் ஆழமாக வளர ஆரம்பித்த வேத ( இன்றைய இந்து) மதத்தையும், அதில் குறிப்பிடப்பட்ட சாத்திரங்கள் மற்றும் பரிகாரங்கள் அனைத்தையும் ஏமாற்று வேலை என்று கடுமையாக எதிர்த்திருக்கிறார்கள் ( பெரியாருக்கெல்லாம் ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப முன்னால்). 

எனவேதான், வேத என்னும் வைதீக என்னும் இந்து மதம், ஓரளவு வளர்ந்த பிறகு ஆசீவகத்தையும், அதன் புகழையும் அடியோடு அழிக்கும் எண்ணத்தில் ஆசீவகர்களின் படைப்புகளை சமணர்களின் படைப்புகள் என்று மடை மாற்றியிருக்க வேண்டும் – “ களப்பிரர்கள் காலத்தை” இருண்ட காலம் என்று சொல்லி இருட்டடிப்பு செய்ததைப் போல. 

வெ.பாலமுரளி

ஆதாரங்கள் : முனைவர்.க.நெடுஞ்செழியனின் “ ஆசீவகமும் ஐயனார் வரலாறு” என்ற புத்தகமும் அதைப் பற்றிய அவரின் காணொளியும்.

தமிழ் விக்கிபீடியா

நிறைய நண்பர்களுடன் விவாதித்தது. அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள். 

சில படங்கள்: கூகுள். நன்றி.