சமணர் மலை மதுரைக்குத் தென்மேற்கில் தேனி செல்லும் வழியில் உள்ள கீழக்குயில்குடி என்னும் ஊரில் அமைந்துள்ளது.
இந்த மலையின் அடிவாரத்தில், நீங்கள் பார்க்கும் ஐயனார் கோயிலுக்கு நேர் பின்னால், பொ.ஆ. 9-10 ம் நூற்றாண்டைச் சேர்ந்த அச்சணந்தி முனிவர் என்பவர் உருவாக்கிய தீர்த்தங்கரரின் ஒரு புடைப்புச் சிற்பமும், அங்குள்ள குகையின் உள்ளே சமண தெய்வங்களின் சிறு சிறு சிற்பங்களும் உள்ளன. இந்த இடத்தை உள்ளூர் மக்கள் செட்டிப் பொடவு என்றே அழைக்கின்றனர்.
இந்த மலையில் இயற்கையாக அமைந்த ஒரு சுனை உள்ளது.இந்த சுனையே பேச்சிப்பள்ளம் என்று அழைக்கப்படுகிறது. பேச்சிப்பள்ளத்தில் எட்டு தீர்த்தங்கரர் சிற்பங்களும், வட்டெழுத்துக் கல்வெட்டுக்களாக செதுக்கியவர் பெயர்களும் உள்ளன. இங்கு பாகுபலி (கோமதேஸ்வரர்), பார்சுவநாதர், முக்குடைநாதர் சிற்பங்கள் உள்ளன.அச்சணந்தி முனிவரின் தாயார், இங்கு செயல்பட்ட பள்ளியின் தலைவர் குணசேனதேவர், குறண்டி திருக்காட்டாம் பள்ளியைச் சேர்ந்தோர் முதலியோர் இச்சிற்பங்களைச் செய்துள்ளதை இங்குள்ள கல்வெட்டுகளிலிருந்து அறிந்து கொள்ளலாம். இதன் காலம் பொ.ஆ. 9-10ம் நூற்றாண்டாகும்.
இந்த பேச்சிப் பள்ளத்திற்குச் சற்றே மேலே, குன்றில் பொ.ஆ.9ம் நூற்றாண்டின் இறுதியில் அல்லது 10ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இயங்கிய ஒரு சமணப் பள்ளியின் அடித்தளத்தின் சிதைந்த பகுதிகளையும், அதில் உள்ள வட்டெழுத்துக் கல்வெட்டுக்களையும் இன்றும் காண முடிகிறது. இந்த வட்டெழுத்துக் கல்வெட்டு மூலம் பராந்தக வீரநாராயணன் (கி.பி.860-905) என்னும் பாண்டிய மன்னன் தன் மனைவி வானவன் மாதேவியின் பெயரால் “ மாதேவிப் பெரும்பள்ளி” என்று பெயரிட்டு இப்பள்ளியைக் கட்டியுள்ளது புலனாகிறது.
“ஸ்வஸ்திஸ்ரீ கோமாறஞ்சடையற்கு யாண்டு இருபத்தேழிதனெதிராண்டி னெ திரான் டு மாடக்குளக் கீழ் திருவுருவகத்து மாதேவிப் பெரும்பள்ளிச் சந்தம் நாட்டாற்றுப் புறத்து புளிங்குன்றூர் நீர்நில மிருவே லியாலும் கீழ்மாந்தரனமான் வயும் அதன்துடவரும் மேற்றி நில மிரண்டு மாவும் திருவுருவகத்து மலைக்கீழ் (போய்) யின வடகீழ் சிறபால வயக்கலு மிதன் தென்வய” என்பது மேலே படத்தில் உள்ள கல்வெட்டின் வாசகம்.
இக்கல்வெட்டு வீரநாராயணனின் 29 ஆம் ஆட்சியாண்டான கி.பி.889ல் வெட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் இம்மலைக்கு “திருவுருவகம்” என்ற பெயர் இருந்ததும், இப்பள்ளியின் பராமரிப்புக்காக “மாடக்குளக்கீழ்” என்னும் நாட்டுப்பிரிவில் அமைந்திருந்த புளிங்குன்றூரில் இரு வேலி நிலம் கொடையளிக்கப்பட்டுள்ளது என்ற செய்தியையும் அறிய முடிகிறது. புளிங்குன்றூர் என்னும் ஊரே இன்று சமணப்படுகைகள் அமைந்துள்ள கொங்கர் புளியங்குளம் என்ற ஊராகலாம்.
இந்த சமணப்பள்ளி இடிந்தபின் இங்கிருந்த இயக்கியர் உருவங்களை கீழே உள்ள அய்யனார் கோயிலில் வைத்து மக்கள் வழிபட்டு வருகின்றனர்.
இந்தக் குன்றின் உச்சியில் ஒரு விளக்குத் தூணும், அதன் அடியில் பாறையில் ஒரு கன்னடக் கல்வெட்டும் உள்ளன. இது பொ.ஆ.பத்தாம் நூற்றாண்டில் சரவணபெலகுலாவிலிருந்து வந்த சமணர்களால் செதுக்கப் பட்டிருக்கலாம் என்று கருதுகின்றனர்.
பேச்சிப் பள்ளத்திற்கு சற்று மேலே குன்றின் மீது ஏறி சம தளத்தில் ஒரு அரை கிலோமீட்டர் தூரம் நடந்தால் கீழே படத்தில் உள்ள இடம் வருகிறது. இந்தப் பாறைக்கு “ ஆடுரிச்சான் பாறை” என்று பெயர். இதில் ஒரு நீர் வடி விளிம்பும் அதன் கீழ் 13 எழுத்துக்கள் கொண்ட ஒரு தமிழிக் கல்வெட்டும் உள்ளன
இதில் உள்ள எழுத்துக்கள் சற்றே சிதிலமடைந்துள்ளன. இதில்
“பெருதேரூர் குழித்தை அயஅம்” என்று எழுதப்பட்டுள்ளது. பெருந்தேரூரார் செய்த கற்படுக்கை என்பது இதன் பொருளாகும். இதன் காலம் பொ.ஆ.மு.இரண்டாம் நூற்றாண்டு என்று கருதப்படுகிறது.
அடிவாரத்தில் உள்ள கருப்பசாமி கோயில் பற்றியும், அங்குள்ள இயக்கிகள் சிலைகள் பற்றியும்,
ஆசீவகத்தின் எச்சங்கள் பற்றியும் இன்னொரு விரிவான கட்டுரை விரைவில்
வெ.பாலமுரளி