காரைக்குடி – தேவகோட்டை நெடுஞ்சாலையில் இருக்கும் இந்தக் கோட்டை பற்றிய முழு விபரம் இன்னும் சரியாகத் தெரியவில்லை.
இந்தப் பகுதியை ஆண்ட சிற்றரசன் பெயர் சங்கரபதி என்றும், அவன், காளையார் கோவில் மருது சகோதரர்களுக்கும், வீரபாண்டிய கட்ட பொம்மனுக்கும் மிகவும் நெருங்கியவனாக இருந்தான் என்றும் இந்தப் பகுதி மக்கள் சொல்கிறார்கள்.
” வீரபாண்டிய கட்ட பொம்மன், புதுக்கோட்டைக்குச் சென்று எட்டப்பனைச் சந்திப்பதற்கு முதல் நாள் இங்குதான் வந்து உண்டு, உறங்கினான். அது பற்றிய முழு விபரமும் நம் தமிழக அகழ்வாராய்ச்சித் துறையிடம் உள்ளது” என்றும் இந்த ஊர் மக்கள் சொல்கிறார்கள். “திருமயத்தில் உள்ள அறநிலையத் துறை மற்றும் அகழ்வாராய்ச்சித் துறை அலுவலகத்தில் கேட்டால் விபரம் தெரியலாம்” என்றும் க்ளூ கொடுத்தார்கள்.
அது மட்டுமல்லாமல், இந்தக் கோட்டைக்குப் பின்புறம் ஒரு வறண்ட குளம் ஒன்றும் , அதில் பெரிய பாறை ஒன்றும் உள்ளது . அது சுரங்கத்தின் வாயில் என்றும், அந்தச் சுரங்கம் காளையார் கோவிலுக்கும், புதுக்கோட்டைக்கும் செல்வதற்காக அமைக்கப்பட்டதென்றும், ஆங்கிலேயர் காலத்தில் மூடப்பட்டிருக்க வேண்டும் என்றும் அந்தக் கிராமத்து மக்கள் சொல்கிறார்கள்.
சென்ற முறை திருமயம் சென்ற போது மேற்சொன்ன அலுவலகத்திற்குச் சென்று விசாரித்தேன். ” சங்கரபதிக் கோட்டையா ? அது எங்கிருக்கு” என்று என்னையே வினவினார்கள். நொந்து போய் திரும்பி விட்டேன்.
எது எப்படியோ, வீரபாண்டிய கட்ட பொம்மன் தன்னுடைய கடைசி நாட்களில், பிரிட்டிஷாருக்கு எதிராகப் போர் புரிய, ஆதரவு தேடி தமிழகத்தின் பெரும்பாலான இடங்களுக்குப் பயணித்திருக்கிறான் என்பது மறுக்க முடியாத வரலாறு. அதில் இந்தக் கோட்டையும் ஒன்றாக இருந்திருக்கலாம். அவனை ஆதரித்தான் என்பதற்காகவே மருது சகோதரர்கள் கொல்லப் பட்டார்கள் என்பதும் அவர்களில் ஒருவரது மகனை நாடு கடத்தி மலேஷியாவில் அடிமையாக நடத்திக் கொன்றார்கள் என்பதும், அவனுடைய கடிதங்கள் கூட அவன் குடும்பத்திற்குக் கிடைக்காமல் ஒரு அனாதையைப் போல் வெளி நாட்டில் இறந்தான் என்பதும் வரலாற்றின் வழக்கமான துயரப் பக்கங்கள். அது பற்றி விரிவாக இன்னொரு கட்டுரையில்.
அது சரி….வீர பாண்டியக் கட்டபொம்மன்தான் இந்தியாவின் முதல் சுதந்திரப் போராட்ட வீரன் என்று ” சுதந்திரப் போராட்டத்தில் நம் தமிழர்களின் பங்கு” என்று ஒரு ஆய்வு சொல்கிறது. அவன் பற்றி உங்களுக்குத் தெரிந்த வட இந்திய நண்பர்கள் யாருக்கேனும் தெரியுமா என்று கேட்டுப் பாருங்களேன், ப்ளீஸ்
வெ.பாலமுரளி
பி.கு: வீரபாண்டிய கட்ட பொம்மன் விடுதலைப் போராளியே கிடையாது. அவன் ஒரு பாளையக் கொள்ளைக்காரன் மட்டுமே, நடிகர் திலகம் சிவாஜியால் அவன் பெரிய ஹீரோவாகி விட்டான் என்று சொல்பவர்களும் உண்டு. அது சும்மா உடான்ஸ் என்றும் நம்மால் ஒதுக்கி விட முடியாது. இன்னும் கொஞ்சம் நம்பத் தகுந்த விபரங்கள் சேகரித்து விட்டு திரும்ப எழுதுகிறேன்.