குண்டாங்குழி மகாதேவர் ஆலயம்…

புதுச்சேரி – விழுப்புரம் சாலையில் இருக்கும் மதகடிப்பட்டு என்னும் கிராமத்தில் உள்ளது இந்த ஆலயம்.

ராஜராஜசோழனும் , பூரி பட்டனும் சேர்ந்து இந்தக் கற்றளியைக் கட்டினார்கள் ( கி.பி.985 – 1016 ) என்ற தகவலை இங்கிருக்கும் ஒரு கல்வெட்டு சொல்கிறது ( அது யார் அந்தப் பூரி பட்டன் என்று தெரியவில்லை ). அதே கல்வெட்டிலிருந்து இந்த ஊரின் உண்மையான பெயர் “திருபுவனை மகாதேவி சதுர்வேதி மங்கலம்” என்றும் தெரிகிறது. காலப் போக்கில் மருவி மதகடிப்பட்டியாயிருக்க வேண்டும் 

இந்தக் கோவிலுக்கு ராஜராஜசோழன், ராஜேந்திர சோழன், முதலாம் ராஜாதி ராஜன், குலோத்துங்கச் சோழன் முதலானோர் வந்து வழிபட்டதாக ஒரு குறிப்பு சொல்கிறது. 

அதை வைத்துப் பார்க்கையில், இந்தக் கோவில் சிறிதாக இருந்தாலும், ஏதோ ஒரு வரலாற்றுச் சிறப்பால் அந்தக் காலத்தில் மிகவும் புகழ் பெற்றதாயிருந்திருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது . .

நம் தமிழகத்தில் இருக்கும் பெரும்பாலான கோவில்களில் கல்வெட்டுக்கள் இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். ஆனால், இந்தக் கோவிலில்தான், கோவிலின் எல்லா இடத்திலும் கல்வெட்டுக்கள் இருக்கின்றன. அனைத்துக் கல்வெட்டுக்களும், தமிழ் பிராமி வட்டெழுத்தில் உள்ளதால், படிப்பதும், புரிந்து கொள்வதும் மிகவும் கடினமாக உள்ளது ( அது சரி, எதற்காக கிட்டத்தட்ட எல்லாக் கல்வெட்டுக்களையுமே அந்தக் காலத்தில் வட்டெழுத்தில் மட்டுமே எழுதியிருக்கிறார்கள் ? யாருக்கேனும் தெரிந்தால் சொல்லுங்கள். ப்ளீஸ் ).

கோவிலின் எல்லா சுவர்களிலும் அவர்கள் பொறித்திருப்பதைப் பார்த்தால், இந்தக் கோவிலைச் சுற்றி ஏதேதோ நடந்திருக்க வேண்டும் என்பது மட்டும் புரிகிறது.ஆனால், என்ன என்றுதான் புரிய மாட்டேனென்கிறது. 

வெறும் 100 வருடம் பழமையான பொருட்களையும் இடங்களையுமே பெரிய பொக்கிஷமாகக் கருதும் மேலை நாட்டினர் , சர்வசாதாரணமாக 1000, 2000 வருடம் பழமையான இதுபோன்ற கோவில்களையும், கோட்டைகளையும் காண நேர்ந்தால் ரொம்பவே ரசிப்பார்கள். 

அகழ்வாராய்ச்சித் துறையின் உதவியோடு நம் தமிழக அராசாங்கம் இது போன்ற சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த கோவில்கள் இருக்கும் இடங்களை மார்க்கெட்டிங் பண்ணினால், உலகச் சுற்றுலா பயணிகளை நம் நாட்டிற்கு இழுத்து வருவதும், அதன் மூலம் நம் நாட்டின் பொருளாதரத்தை மேம்படுத்துவது மிகவும் எளிதாக இருக்கும். 

நடக்குமா ? செய்வார்களா ?

வெ.பாலமுரளி