அறிவில் சிறந்த மேன்மக்களை, கல்வி கற்றவர்களை, வானியல் அறிந்தவர்களை , மருத்துவம் அறிந்தவர்களை, முக்காலம் தெரிந்தவர்களை, கடலாடிகளுக்கு உறுதுணையாக இருந்தவர்களை சுமேரிய இலக்கியங்களும், கிரேக்க இலக்கியங்களும் கடவுளர்கள், முனிவர்கள் என்னும் அர்த்தங்களில் போற்றுகின்றன..
சுமேரியர்களுக்கும், தமிழர்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்ததை சமீப ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன.
“ நன் நலம். நிங்ங நலம ? அப்ப நலம ? அம்ம நலம ?” என்று “முந்து சுமேரிய” மொழியில் யாரோ யாருக்கோ எழுதிய கடிதம் ஒன்று களிமண் பலகையில் கிடைத்திருப்பது மேல் சொன்ன கூற்றை ஐயமின்றி நிரூபிக்கிறது.
அந்த வகையில் பார்க்கும்போது சுமேரிய மற்றும் கிரேக்க இலக்கியங்கள் சொல்லும் கடவுளர்களும், முனிவர்களும், நம் நிலத்தில் வாழ்ந்திருக்கவில்லையா ? வாழ்ந்திருந்தார்கள் என்றால் அவர்கள் யார் போன்ற வினாக்கள் இயற்கையாகவே எழும்.
அந்த ஐயங்களை ஐயன் தொல்காப்பியர் தெளிவுபடுத்துகிறார்.
“கழிவினும் வரவினும் நிகழ்வினும் வழிகொள
நல்லவை யுரைத்தலும் மல்லவை கடிதலும்
செவிலிக்குரிய வாகுமென்ப
சொல்லிய கிளவி யறிவர்க்கு முரிய..”
(தொல். பொருளதிகாரம். கற்பியல் 153, 154)
ஆம். சுமேரியர்களும் , கிரேக்கர்களும் சொல்லும் கடவுளர்களும், முனிவர்களும் நம்முடன் வசித்த “தமிழ் அறிவர்கள்” என்னும் “ஐயன்” கள்தாம். இவர்கள் நிறையப் பேர். அவர்கள் இறந்ததும் அவர்கள் “ஐயனார்” என்று போற்றப்பட்டிருக்க வேண்டும் ( இது என் தனிப்பட்ட கருத்து). ஆம், என் கருத்துப் படி, பேராசிரியர் க.நெடுஞ்செழியன் சொல்வது போல் ஆசீவகத்தின் “ பரம சுக்க “ நிலையை அடைந்த அறப்பெயர் சாத்தன், பூரண காயபர் மற்றும் கணி நந்தன் மட்டுமே ஐயனார்கள் இல்லை. அவர்க”ளும்” ஐயனார்கள். அவ்வளவுதான்.
சரி…மேட்டருக்கு வருவோம். தமிழ் நாட்டிற்கு பெருங்கற்காலப் பண்பாடு வந்தது கி.மு. 1500 க்கும் கி.மு.1000 க்கும் இடைப்பட்ட காலமாக இருக்கலாம். அப்போதே இங்கு தமிழ் அறிவர்கள் இருந்திருக்கலாம் அல்லது நம் நிலத்துடன் நெருங்கிய தொடர்பில் இருந்த சுமேரிய வணிக அரசுகளில் இருந்த முனிவர்கள் இங்கு வந்திருக்கலாம். ஆம், எல்லாமே “ லாம்” தான்.
அப்படிப்பட்ட தமிழ் அறிவர்கள் லண்டனில் உள்ள ஸ்டோன்ஹெஞ்ச் போல சில வானியல் கண்காணிப்பு மையங்களை இங்கும் உருவாக்கியிருக்கிறார்கள். நாள் காட்டிக்காவும், துல்லியமாக பருவ நிலை மாற்றங்களை அறிந்து கொள்ளவும் வானியல் ஆய்வுக்கான தேவை நமக்கும் இருந்துள்ளது. அதிலும் தமிழர்கள் ரொம்பக் காலமாகவே கடலாடிகள். எனவே, மேம்பட்ட வானியல் ஆய்வுகள் நமக்கும் பேருதவியாக இருந்திருக்க வேண்டும். அது தவிர விவசாயத்திற்கு வானியல் ஆய்வின் உதவி பற்றி சொல்லவே வேண்டாம்.
அதில் ஒரு இடம்தான், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார் கோயில். இது பற்றி “ காளையார்கோயிலில் தமிழ் அறிவர்கள்” என்று ஒரு கட்டுரை முன்பே எழுதியுள்ளேன். அந்தக் கட்டுரை தினகரன் செய்தித்தாளிலும் வெளியாகியுள்ளது.
லண்டனில் உள்ள ஸ்டோஹெஞ்சைப் பார்த்தபோது காளையார்கோயில் சைட்டை ஒப்பிட்டு பெருமூச்சு விடுவதை என்னால் தவிர்க்க முடியவில்லை.
லண்டனில் அந்த (ஸ்டோன்ஹெஞ்ச்) தூண்கள் இருக்கும் நாலைந்து ஏக்கர் இடத்தை வளைத்துப் போட்டு , வேலிகள் போட்டு, அழகாக புல்வெளி அமைத்து அட்டகாசம் பண்ணி வைத்திருக்கிறார்கள். எந்த இடத்தில் இருந்து பார்த்தால் கோடை கால Longest Day அன்று சூரிய உதயத்தைக் காணமுடியும் , எந்த இடத்தில் இருந்து பார்த்தால் குளிர் கால Shortest Day அன்று சூரிய மறைவைப் பார்க்க முடியும் என்று கணித்து அந்த இடங்களில் பெரிய பெரிய பித்தளைத் தகடுகளை தரையில் பதித்து வைத்து நம்மை ஆச்சரியப்படுத்துகிறார்கள். அங்கே, பெருங்கற்கால மக்கள் இப்படிப்பட்ட குடிசைகளில்தான் வாழ்ந்திருக்க வேண்டும் என சில மாடல் குடிசைகளையும் போட்டு நம்மை ஒரு டைம் மெஷினில் வைத்து 4500 ஆண்டுகள் பின்னுக்கு கொண்டு போய் விடுகிறார்கள்.
பற்றாக்குறைக்கு ஸ்டேட் ஆஃப் தி ஆர்ட் மியூசியம் ஒன்றையும் நிறுவி பெருங்கற்காலப் பண்பாட்டைப் பற்றி தகவல்களை வாரி இறைக்கிறார்கள். இதற்கு ஒரு ஒட்டு மொத்த அரசாங்கமே உழைக்கிறது.
இங்கே காளையார்கோயிலில், நண்பர் ரமேஷை விட்டால் யாருமே இல்லை. அவரும் விலகி விட்டால் காளையார் கோயில் பெருங்கற்கால வானியல் மையம் யாருமற்ற அனாதையாகிவிடும்.
ஓவென்று கிடக்கிறது அந்த சுடுகாடு. சுடுகாட்டில் இருக்கும் கற்களை வீட்டிற்கு கொண்டு வந்தால் கெட்ட ( ???????) ஆவிகளும் சேர்ந்தே வரும் என்று மக்கள் நம்புவதால், பெரும்பாலான கற்கள் அப்படியே இருக்கின்றன ( சில சமயங்களில் மூட நம்பிக்கைகளும்கூட நல்லதுதான் போலிருக்கு).
ஆனால், கால மாற்றங்களாலும், இயற்கை சீற்றங்களாலும், நிறைய பாறைக் கற்கள் சிதைந்த நிலையில் உள்ளன.
காட்டுச் செடிகளும், முள் மரங்களும் மண்டிப் போய் மிகவும் பரிதாபமாய் காட்சியளிக்கிறது நம் காளையார்கோயில் வானியல் கண்காணிப்பு மையம்.
காளையார்கோயில் பற்றி அனைத்துப் பத்திரிக்கைகளிலும், டிவி சானலிலும் செய்திகள் வெளி வந்துள்ளன. நமது தமிழ் நாடு தொல்லியல் துறையும் வந்து பார்த்து சென்றுள்ளது. ஆனால், விடிவு காலம்தான் இன்னும் பிறக்கவில்லை. நண்பர் ரமேஷ் மட்டும் இன்னும் நம்பிக்கையை இழக்காமல் தினமும் அந்த இடத்திற்குச் சென்று “காலம் ஒரு நாள் மாறும்” என்று பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கிறார்,
ஆச்சரியமாக தாய்ப் பாறை என்று லண்டன் ஸ்டோன்ஹெஞ்சிலும், லேக் மாவட்டத்தில் உள்ள ஸ்டோன் சர்க்கிளிலும் அழைக்கப்படும் ஓரிரு பாறைகளின் வடிவத்தை காளையார்கோயிலிலும், மல்லசந்திரத்திலும் பார்க்கமுடிவது, வெவ்வேறு தேசங்களில் நிலவிய பெருங்கற்காலப் பண்பாட்டின் தொடர்ச்சியை இங்கும் உணர முடிகிறது. (இது தற்செயலாக அமைந்ததாகவும் இருக்கலாம்).
மிகப் பெரிய வித்தியாசங்களும் உண்டு. லண்டனில் உள்ள ஸ்டோன்ஹெஞ்சும், ஸ்டோன் சர்க்கிளும் சூரிய நகர்வை மட்டும் கண்காணிக்கும் கண்காணிப்பு மையங்களாக இருந்துள்ளன. கண்காணிப்புப் பாறைகள் நாலைந்துதான் உள்ளன.
ஆனால், நண்பர் ரமேஷின் ஆய்வின் படி காளையார்கோயிலில் சூரியன், சந்திரன், நட்சந்திரங்கள் என்று நிறைய விஷயங்களை கண்காணித்து ஆய்வு செய்திருக்கின்றனர் நம் தமிழ் அறிவர்கள்.
அதை நிரூபிக்கும் வகையில் ஒரு சீரான ஒழுங்கு முறையில் ஏராளமான கற்களை இன்றும் காண முடிகிறது. ரமேஷ், அந்த ஒழுங்கமைதியை கம்ப்யூட்டரில் கொடுத்து அழகாக ஒரு படமாக வரைந்து வைத்துள்ளார். என்னிடமும் அதன் காப்பி ஒன்று உள்ளது. அதை இங்கு பொதுவெளியில் பயன்படுத்திக் கொள்ள அவரிடம் அனுமதி பெறாதலால், அதனை இங்கு பதியவில்லை. ஆனால், உறுதியாக காளையார்கோயிலில் ஒரு மிகப் பெரிய வானிலை ஆய்வு மையம் இருந்துள்ளதை யாரும் மறுக்க முடியாது.
“அழகன்” என்னும் படத்தில் குழந்தைகள் பேசுவது போல ஒரு வசனம் வரும், “ பேசாம நாம வேற வீட்டுல பொறந்த்திருக்கலாம்டா” என்று. அதேபோல கற்களும் பேச ஆரம்பித்தால், காளையார்கோயில் கற்கள் “ இந்தத் தமிழ் அறிவர்கள் பேசாம நம்மை யூரோப்பில் அமைத்திருக்கலாம்டா” என்று புலம்பக் கூடும்.
வெ.பாலமுரளி
ஆதாரங்களும் நன்றிகளும் :
- நண்பர் எலந்தக்கரை ரமேஷ் அவர்கள்
- உயர்திரு. தங்கவேலு எழுதிய தமிழரைத் தேடி என்னும் நூல்
- உயர்திரு. பிரபாகரன் எழுதிய சுமேரியமா குமரிக்கண்டமா என்னும் நூல்
- பேராசிரியர் க. நெடுஞ்செழியன் அவர்கள் எழுதிய ஆசீவகமும் ஐயனார் வரலாறும்.
- மறைந்த மலேஷிய தமிழ் அறிஞர் லோக நாதனின் காணொளிகள் ( சுமேரியர்களும் தமிழர்கள்தான்)
- என்னுடைய லண்டன் நண்பன் கோபிநாத் கிருஷ்ணமூர்த்தி