வீட்டில் சாப்பிடும்போது சாப்பாட்டில் கல் வந்து விட்டால், நம்மில் பலருக்கும் நெற்றிக் கண் திறந்து விடும். நிறைய பேர் மனைவி மீது அதை தூக்கி எறிய முடியாத ஆத்திரத்தில் அந்தக் கல்லை தூக்கி தரையில் வீசுவார்கள் ( நான் அப்படி இல்ல. நான் அப்படி இல்ல).
ஆனால், மனித வரலாற்றில் கற்களை அவ்வளவு எளிதாக வீசி எறிந்து விட முடியாது.
காரணம், என்றைக்கு மனிதன் தன் பாதுகாப்பிற்காவும், தன் இரையைத் தேடுவதற்காகவும் கற்களைக் கையில் எடுத்தானோ, அன்றே கற்களும் நம்முடன் இணைந்து தங்கள் பயணத்தைத் தொடங்கி விட்டன ( இதைச் சொல்றதுக்கு ஏண்டா மனைவிமார்களையும் சாப்பாட்டில் இருக்கும் கல்லையும் இழுக்குற ????? ).
முதலில் பாதுகாப்பிற்காக, பின்னர் வேட்டையாட, பின்னர் தீயை உருவாக்க, அதைத் தொடர்ந்து இயற்கை வழிபாட்டிற்காக, பின்னர் முன்னோர்களை புதைத்து அவர்களை நினைவு கூர்ந்து வழிபட, வானியல் மாற்றத்தை கண்காணிக்க, நமக்காக உயிர் துறந்த வீரர்களை நினைவு கூற என்று பயணித்து இன்று அனைத்து கட்டுமானத்திற்கும் என நம் வாழ்வில் கற்களின் பங்கு அலாதியானது.
அதிலும் பெருங்கற்காலப் பண்பாடு என்பது ஒரு அற்புதம் கலந்த அதிசயம்.
பெருங்கற்காலப் பண்பாடு என்பது ஏதோ 6000 அல்லது 7000 ஆண்டுகள் பழைமை என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். அது உண்மையல்ல.
இதுவரை நமக்குக் கிடைத்திருக்கும் பெருங்கற்காலச் சின்னங்களிலேயே மிகப் பழைமையான சின்னத்தின் வயது 75,000 ஆண்டுகள். நம்ப முடியவில்லையா ? ஆனால் அதுதான் உண்மை.
ஆம். தென்னாப்பிரிக்காவில் உள்ள எலன்சேனி மலையில் உள்ள மிகப் பெரிய கல்வட்டம்தான் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டதிலேயே மிகவும் பழைமையான பெருங்கற்கால சின்னம். அதற்கு “ஆதாமின் நாள்காட்டி” ( Adams Calendar) என்று பெயர் வைத்துள்ளனர் ( நாங்க சோறு வைக்காட்டியும் பேரு மட்டும் கரெக்டா வச்சிறுவோம்ல – புயல் சீற்றத்திற்கு வைப்பது போல). இது எப்படி கண்டுபிடிக்கப்பட்டது என்பதே ஒரு சுவையான விஷயம். பிறிதொரு சமயம் எழுதுகிறேன்.
அதென்ன ஆதாமின் நாள்காட்டி ? இந்த கல்வட்ட அமைப்பில் வானியல் கண்காணிப்பிற்கான கூறுகளும் தெரிவதால்,இதுவே மனிதனின் முதல் கண்காணிப்பு மையமாக இருந்திருக்க வாய்ப்புள்ளது என்பதால் எல்லோருக்கும் தெரிந்த ஆதாமின் பெயரை வைத்து விட்டார்கள்.
ஆனால், இந்தக் கல்வட்டத்தின் உண்மையான நோக்கம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இயற்கை வழிபாட்டிற்காக அல்லது வானியல் நோக்கத்திற்காக இருக்கலாம். ஆம். “லாம்” தான்.
இதற்கு அடுத்த பழைமையான பெருகற்கால சின்னம் அன்றைய அனட்டோலியாவில் அதாவது இன்றைய துருக்கியில் உள்ள “கொபெக்லிதெபே”. இதுவும் முன்னோர்களை புதைத்த இடம்போல் தெரியவில்லை. இயற்கையையோ அல்லது வேறெதையோ வழிபட்ட இடமாக இருக்கலாம் என்பதால் இதை வழிபாட்டு தலம் என்னும் அர்த்தத்தில் “ டெம்பிள்” என்றே குறிப்பிடுகின்றனர். இதன் வயது 11,500 ஆண்டுகள்.
பிறகு, 6000 அல்லது 7000 வருடங்களுக்கு முன்னால் வடக்கு சுடான், எகிப்து, மொரோக்கொ போன்ற வட ஆப்பிரிக்கப் பகுதிகளில் ஆதாம் நாள்காட்டி போல, பெரிய பெரிய கற்களை இறந்தவர்களின் புதைவிடத்தைச் சுற்றி வைக்கும் பண்பாடு தோன்றி மள மளவென்று மத்திய தரைக்கடல் பிரதேசங்கள், சுமேரியா , இந்தியா என்று மற்றைய இடங்களுக்கும் தீயாய் பரவியது.
இது தொடங்கி சில காலங்களிலேயே அதே மக்களிடம் இன்னொரு வித்தியாசமான பண்பாடும் தொடங்கிற்று. மண்பானை செய்து , அதன் உள்ளே புகையைப் போட்டு காற்று புகாவண்ணம் செய்து வெளிப்புறத்தை மட்டும் சுட்டு,உள்ளே கருப்பு நிற வண்னமும் வெளியில் சிவப்பு நிற வண்ணமுமாக வரச் செய்யும் கருப்பு சிவப்பு மண்பானை பண்பாடுதான் அது ( ஆனால், அந்த மக்கள்தான் பின்னாளில் திமுகவினராக பரிணமித்தனரா என்பது பற்றி ஆராய்ச்சியாளர்களிடம் இன்னும் ஒருமித்த கருத்து உருவாகவில்லை. ஹிஹிஹிஹி ).
நிறைய இடங்களில் பெருங்கற்காலப் பண்பாடும், கருப்பு சிவப்பு மண்பானை கலாச்சாரமும் இணைந்தே பயணித்திருக்கின்றன – நமது தமிழ் நாட்டிற்கும் வந்தது போல. நம் ஊரில் அகழ்வாராய்வு செய்த பெரும்பாலான பெருங்கற்கால நினைவிடங்களில் கருப்பு, சிவப்பு மண்பானைகள் கிடைத்துள்ளன. சில மண்பானைகளில் இரும்புப் பொருட்களும் கிடைத்துள்ளன என்பது ஒரு கொசுறுத் தகவல்
அதேபோல், நிறைய பெருங்கற்கால சின்னங்களில் வானிலை ஆய்வும் (அ) வானிலை கண்காணிப்பும் இருந்தது இன்னொரு ஆச்சரியம். பெரும்பாலான பெருங்கற்கால (நீத்தார்) நினைவுச் சின்னங்கள் மேடான பகுதிகளிலும் இருந்ததும் ஒரு காரணமாக இருந்திருக்க வேண்டும்.
அந்த நீத்தார் நினைவுச் சின்னங்களில் நான் சமீபத்தில் சென்று வந்த மூன்று இடங்களைப் பற்றி விளக்கவே இந்தக் கட்டுரை.
ஒன்று. இங்கிலாந்தில் உள்ள ஸ்டோன்ஹெஞ்ச். இது ஆம்ஸ்பர்ரி என்னும் ஊருக்கு மிக அருகில் சாலிஸ்பர்ரி ப்ளெய்ன்ஸ் என்னும் இடத்தில் உள்ளது.
ஏறத்தாழ 5000 ஆண்டுகளுக்கு முன்னரே “ஐபீரியா” என்னும் பகுதிகளிலிருந்து “ஒரு குறிப்பிட்ட” இன மக்கள் இங்கு வந்து வசித்ததாகவும் அவர்கள் தொடங்கியதே இந்த பெருங்கற்காலப் பண்பாடு என்கிறது அந்நாட்டு தொல்லியல்துறை. இன்றிருக்கும் ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகல் இணைந்த பகுதிதான் இந்த ஐபீரியா பிரதேசம்.
அந்த மக்கள் கருப்பு கலந்த பழுப்பு நிறத்தவராகவும் , சுருட்டை முடி கொண்டவராகவும், நீல நிற கண்கள் உடையவராகவும் இருந்திருந்திருக்கின்றனர் என்று டிஎன் ஏ ஆய்வுகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை மிகவும் விரிவாக விளக்கினார் அங்கிருந்த கண்காணிப்பாளர் ஒருவர். இந்த அடையாளங்கள் வட ஆப்பிரிக்க மக்களுக்கு பொருந்துவதாக உள்ளன ( இதில் தவறு இருந்தால் சுட்டிக் காட்டவும்).
இந்த இடத்தின் வெளிச்சுற்றில் கிட்டத்தட்ட 110 மீட்டர் விட்டத்தில் 56 புதை குழிகள் இருந்திருக்கின்றன ( ஆனால் 100க்கும் மேற்பட்டவர்கள் புதைக்கப்படிருக்கலாம்). உள்புறத்தில் 4 மீட்டர் உயரத்தில் கிட்டத்தட்ட 7மீட்டர் அகலத்திற்கு நம் சுமை தாங்கி கற்கள் ஷேப்பில் பெரிய பெரிய கற்கள். ஒவ்வொன்றும் 25 டன் அதாவது 25,000 கிலோ வெயிட் வரை இருக்கக்கூடும் என்கின்றனர். லேசாக தலை சுற்றியது.
இங்குள்ள கற்கள் மணற்கற்கள் என்னும் சார்சென் ஸ்டோன் மற்றும் ப்ளூஸ்டோன் வகைக் கற்களைச் சார்ந்தவை.
இதில் சில கற்களை அருகில் கல் குவாரியில் வெட்டி எடுத்து வரப்பட்டிருப்பதும் நிறைய பெரிய சைஸ் கற்கள் கிட்டத்தட்ட 250 மைல் தொலைவிலிருந்து கொண்டு வரப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. அவ்வளவு ஹெவியான கற்களை எப்படி எடுத்து வந்தார்கள், எத்தனை பேர் சுமந்து வந்திருப்பார்கள், எதற்கு இவ்வளவு பெரிய கட்டுமானம் போன்ற விடை தெரியாத கேள்விகள் நிறைய. ஈஸ்டர் தீவுகளில் எழுப்பப்பட்ட அதே கேள்விகள் இங்கும். அங்கு போலவே இங்கும் விடைகள் இல்லை. கேள்விகள் மட்டுமே தொக்கி நிற்கின்றன.
இந்த ஸ்டோன்ஹெஞ்ச் முழுமை பெற ஏறத்தாழ 1500 வருடங்கள் ஆகியிருக்கலாம் என்பது தொல்லியல் அறிஞர்களின் கருத்து. அதாவது கி.மு.3100 இல் தொடங்கி கி.மு.1600 வாக்கில் நிறைவு பெற்றிருக்க வேண்டும். ஒரேமரபினர், ஆனால் வெவ்வேறு குழுக்கள். ஆச்சரியம்.
அந்த மக்கள் ஒரு காலகட்டத்தில் இந்த ஸ்டோன்ஹெஞ்சை வானியல் மாற்றங்களை கண்காணிக்க பயன்படுத்தத் தொடங்கி விட்டனர்.
நாம் இங்கே சொல்லும் வட செலவு, தென்செலவு, ( உத்தராயணம், தட்சனாயணம்) போன்றவற்றை கண்காணிக்க கிழக்கு திசையில் மூன்று கற்களும், மெற்கு திசையில் மூன்று கற்களையும் ஸ்டோஹெஞ்சின் வெளிச்சுற்றில் நட்டு வைத்துள்ளனர்.
அவற்றில், கோடையில் ஒரு நாள் ( ஜூன்21) வரும் நீண்ட பகல் பொழுதையும் ( Summer Solstice ) , குளிர்காலத்தில் ஒரு நாள் ( டிசம்பர் 21 ) வரும் குறைவான பகல் பொழுதையும் (Winter Solstice ) கண்காணிக்க கிழக்கிலும் , மேற்கிலும் இரண்டு பெரிய கற்களை நட்டு வைத்துள்ளனர். அதன் கீழே இன்றைய சுற்றுலாத் துறையினர் பித்தளைத் தகட்டில் Mid Summer Sunrise, Mid Winter Sunset என்று பொறித்து தரையில் பதித்து இங்கு வரும் சுற்றுலாவாசிகளை கவர்கின்றனர். ( இந்த விஷயத்தில் நாம் 100 ஆண்டுகளுக்கும் மேலாக பின் தங்கியிருக்கிறோம்).
சரி, அது என்ன Summer Solstice, Winter Solstice என்கிறீர்களா ?
சிம்பிளாக சொல்கிறேன். பூமி சூரியனைச் சுற்றி வரும்போது வருடத்தில் இரண்டு நாட்கள் (ஜூன்21, டிசம்பர் 21) தன்னுடைய நீள்வட்டப் பாதையில் சூரியனை விட்டு வெகு தொலைவில் இருக்கும். அதனால் ஏற்படும் மாற்றம்தான் நீண்ட பகல்பொழுதும், மிகக் குறைவான பகல் பொழுதும்.
அன்றைய மக்களுக்கு இதைக் கண்காணிக்க வேண்டிய அவசியம் இருந்திருக்கிறது. எனவேதான் இது போன்ற மேடான புதைவிடங்களை வானியல் ஆய்வுக்கும் பயன்படுத்தியிருக்கின்றனர்.
அது மட்டுமல்ல. இந்த ஸ்டோன்ஹெஞ்சைச் சுற்றி ஏராளமான புதை மேடுகளை இன்றும் காண முடிகிறது. அவை எதிலும் இன்னும் அகழ்வாராய்வு எதுவும் செய்திராவிடினும், அவற்றை முள்வேலி கொண்டு இன்றும் மிக அருமையாகப் பாதுகாத்து வருகின்றனர்.
ஒட்டு மொத்தமாக இந்த இடத்தை உலகத் தரத்திற்கு பாதுகாத்து, அவற்றை சுற்றுலா வாசிகள் கண்டுகளிக்கவும், பண்டைய மாந்தர்களின் அறிவை பறைசாற்றவும் மிக அருமையாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். அது மட்டுமல்ல, மிக பிரமாண்டமான டிஜிட்டல் ஸ்க்ரீனுடன் கூடிய ஒரு அற்புதமான அருங்காட்சியகத்தையும் அங்கு அமைத்திருக்கின்றனர் ( இதெல்லாம் நம் ஊரில் சாத்தியமா என்று பெருமூச்சு விடுவதை என்னால் தவிர்க்க முடியவில்லை).
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21 அன்று இங்கிலாந்து மக்கள் மட்டுமல்லாது ஃபிரான்ஸ், ஜெர்மனி போன்ற அண்டை நாடுகளிலிருந்தும் ஏராளமான மக்கள் இங்கு குவிந்து அந்த “ நீண்ட பகல் பொழுது நாளை “ மிகவும் விமர்சையாக கொண்டாடுகின்றனர்.
இங்கிலாந்தில் லண்டனுக்கு வட மேற்கில் லேக் மாவட்டத்தில் உள்ள ஸ்டோன் சர்க்கிள் என்று ஒரு புதை மேடு இருக்கும் இடத்திற்கும் சென்றேன். நம் பூமியில் சொர்க்க்த்தை பார்க்க வேண்டும் என்றால், இந்த இடத்திற்கு சென்றால் பார்த்து விடலாம். அந்த அளவுக்கு இயற்கை அழகு கொட்டிக் கிடக்கிறது இந்த இடத்தில். அங்கு ஸ்டோன் ஹெஞ்ச் போன்ற பிரமாண்டமான கல் அமைப்புகள் கிடையாது. நம் ஊரில் இருப்பது போன்ற ஆனால் அவற்றை விட மிகப் பெரிய விட்டத்தில் கல்வட்டம் உள்ளது. கிட்டத்தட்ட 100 மீட்டர் விட்டத்தில் ஒரு கல் வட்டம். இந்தக் கல்வட்டத்தோடு தொடர்பேயில்லாமல் சில கற்கள் எங்கள் வழி தனி வழி என்று நின்று கொண்டிருக்கின்றன. அவை வானியல் ஆய்வு தொடர்பானவை.
அதில் தனித்து நிற்கும் ஒரு தாய்ப்பாறை அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் உள்ளது. அதன் அச்சு அசல் வடிவத்தை நம் ஊரிலும் காணலாம்.
அது சரி….இது போன்ற வானியல் கண்காணிப்பு மையத்தைக் கொண்ட பெருங்கற்கால நினைவிடங்கள் நம் ஊரில் ஏதும் இல்லையா என்ற கேள்வி உங்களுக்கு இயற்கையாகவே எழும்.
அதற்கான பரிதாபமான பதிலை இந்தத் தொடரின் அடுத்த பகுதியில் எழுதுகிறேன்.
காத்திருங்கள். அப்புறம், மறக்காமல் இத்துடன் இணைத்திருக்கும் அனைத்துப் படங்களையும் பாருங்கள். அப்போதுதான் இந்தக் கட்டுரையை Co relate பண்ண முடியும்.
வெ.பாலமுரளி
ஆதாரங்களும் நன்றிகளும் :
- உயர்திரு தங்கவேலு அவர்கள் எழுதிய தமிழரைத் தேடியும் அவருடன் தொலைபேசியில் கலந்துரையாடியதும் எனக்குப் பெருந்துணை புரிந்தன.
- நண்பர் பாலா பாரதியுடன் கொண்ட ஏராளமான கலந்துரையாடல்கள். வானியல் குறித்து அவர் எனக்கு எடுத்த பாடங்கள். (நன்றி சொல்ல உங்களுக்கு வார்த்தையில்லை எனக்கு)
- www.thearchaeologist.org , www.nationalgeographic.com மற்றும் விக்கிப்பீடியா இணையதளங்கள்
- தனக்கிருந்த ஏராளமான வேலைப்பளுக்கிடையிலும் பொறுமையாக என்னை ஸ்டோன்ஹெஞ்சுக்கு அழைத்துச் சென்ற நண்பன் கோபிநாத் கிருஷ்ணமூர்த்திக்கும் அவர் மனைவி ஹரிப்ரியாவிற்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் கோடி
- A year at Stonehenge by James O. Davies
- திரு.பிரபாகரன் எழுதிய சுமேரியமும் குமரிக்கண்டமும்
- “சில” படங்கள் உதவி: கூகுள் ( ஆதாமின் நாள்காட்டி மற்றும் கோபெக்லிதெபே படங்கள் மட்டும்)