சுஜாதாவின் ” ஏன் ? எதற்கு ? எப்படி ? ” என்ற கேள்விகளுக்கு, சரித்திரத்தில் பல சமயங்களில் பதில் கிடைப்பதில்லை.
அப்படிப்பட்ட ஒரு கேள்விக்குறி கேரக்டர்தான், கம்போடியாவின் சர்வாதிகாரியாக இருந்து 1998 – இல் இறந்து போன ” சலோத் சார்” என்ற உண்மையான பெயர் கொண்ட ” போல் பாட்” .
முறையாக ஆட்சி பீடத்தில் அமர்ந்து ஆட்சி செய்தது என்னவோ வெறும் நாலே நாலு ஆண்டுகள்தான். ஆனால், அந்த நாலு ஆண்டுகளுக்குள் நாட்டின் 25% மக்கள்தொகையை மிகவும் கொடூரமான முறையில் கொன்று அழித்திருக்கிறான். இப்போது, இந்தக் கட்டுரையின் முதல் பத்தியைப் படிக்கவும்.
தலைவன், தன்னுடைய இள வயதில் , ஃபிரான்சுக்கு ‘ ரேடியோ எலெக்ட்ரானிக்ஸ்’ படிக்கச் சென்றான். “தூறல் நின்னு போச்சு ” படத்தில் வரும் நம்ம பாக்கியராஜ் போல, எல்லாப் பாடத்திலும் பெயிலாகி பெயிலாகி பாஸாக , அவன் படித்த கல்லூரி வெறுத்துப் போய், போயிட்டு வா ராசா என்று அவனைத் திருப்பி அனுப்பி விட்டது.
திரும்பி வந்த ராசாவுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. ” An Idle Mind is devil’s workshop” என்ற பழமொழிக்கேற்ப, அவன் மூளை குறுக்கு வழியில் மிகவும் விபரீதமாக யோசிக்க ஆரம்பித்தது. நாடு எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை, தான் பெரிய ஆளாக வர வேண்டும் என்று (நம் இந்திய அரசியல்வாதிகள் போல ) யோசித்தன் பலன், அரசியலில் குதிப்பது என்று முடிவு செய்தான்.
அப்போது அங்கே நடந்து கோண்டிருந்த வியட்நாம் யுத்தம் நம்மாளுக்கு ரொம்பவே வசதியாகப் போய் விட்டது. கம்யூனிஸ்ட் பார்ட்டியில் சேர்ந்து வேவு பார்ப்பது, புள்ளி விபரம் சேர்ப்பது என்று முதலில் வெறும் எடுபடி வேலை செய்து கொண்டு , நம்ம ஹிட்லர் மாதிரி ஒரு பொன்னான தருணத்திற்காகக் காத்துக் கொண்டிருந்தான் ( By the way, வியட்நாம் யுத்தம், வியட்நாமில் மட்டும் நடக்கவில்லை. வியட்நாம், கம்போடியா, லாவோஸ் என்ற மூன்று நாடுகளையும் உலுக்கோ உலுக்கு என்று உலுக்கி எடுத்து விட்டது. அது பற்றி இன்னொரு கட்டுரையில் மிகவும் விரிவாக ).
நீங்கள் நல்லவரோ கெட்டவரோ, விடா முயற்சியும், கடுமையான உழைப்பும் இருந்தால் மட்டும் போதும் . நீங்கள் அடைய விரும்பும் உயரத்தை எட்டுவது சர்வ நிச்சயம் என்பது போல்பாட் விஷயத்திலும் நிரூபணமாகியது.
1963 இல் அவனைப் பார்த்து அதிர்ஷ்ட தேவதைக் கண்ணைச் சிமிட்டினாள். போல்பாட்டும் கொஞ்சம் கூடத் தாமதிக்காமல் லபக்கென்று பிடித்துக் கொண்டான். ஆம், வெறும் பதினெட்டே பதினெட்டு பேர் கொண்ட கம்யூனிஸ்ட் பார்ட்டியின் பொதுக் கூட்டத்தில் அவன் பொது காரியதரிசியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டான். நமக்கெல்லாம் ஆச்சரியமாக இருக்கலாம், வெறும் பதினெட்டு பேர் கொண்ட பார்ட்டிக்குத் தலைவனாகி என்ன செய்வது என்று. ஆனால், அவன் அதைப் பற்றியெல்லாம் கவலைப் படவில்லை. அவனுக்குத் தேவையெல்லாம், ஒரு பார்ட்டி, ஒரு தலைவன் போஸ்ட். அவ்வளவேதான்.
சந்தோஷமாகக் காய் நகர்த்த ஆரம்பித்தான். திரும்பவும் ஆடுகளம் வியட்நாம் யுத்தம்தான். அவனுக்கு அமெரிக்காவும் பிடிக்கவில்லை. வியட்நாமின் ஹீரோ ‘ஹோ சி மின்’ னை ஆதரித்த ரஷ்யாவையும் பிடிக்கவில்லை ( ஹோ சி மின் என்ற மாபெரும் வீரனைப் பற்றி பிறகு விரிவாக இன்னொரு பதிவில் ). போல்பாட் , தேர்ந்தெடுத்த ஸ்ட்ராட்டஜிக் பார்ட்னர் ” சைனா” .
சைனாவும் அவனைப் போல ஒரு உத்தம புருஷனைத் (???!!! ) தான் தேடிக்கொண்டிருந்தது.
அவர்கள் பார்ட்னர்ஷிப் நன்றாகவே வேலை செய்தது. அவர்கள் நாசவேலை எட்டுக்கால் பாய்ச்சல் பாய்ந்தது. வியட்நாம் யுத்தத்தை , அமெரிக்கா, ரஷ்யா, சைனா, ஃபிரான்ஸ், வியட்நாம், கம்போடியா என்று யாருக்குமே எப்படி முடிப்பது என்று தெரியவில்லை ( கிட்டத்தட்ட இரண்டாம் உலகப் போரின் முடிவு போலவே ). ஹோ சி மின் என்ற ஒரு அதி அற்புத மாவீரனால் கூட ஈட்ட முடியாத வெற்றியை ஒரு புகைப்படம் ஈட்டித் தந்தது. அது, ஒன்பதே வயதான ஒரு சிறுமி தன் உடம்பில் பொட்டுத் துணி கூட இல்லாமல், ஒரு யுத்த பூமியில் கதறிக் கொண்டே உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓடி வரும் ஒரு புகைப்படம். அமெரிக்க மக்கள் உட்பட உலகமே அதிர்ந்தது. வியட்நாமில் நடக்கும் யுத்ததின் தீவிரம் அப்போதுதான் எல்லோருக்குமே உறைத்தது ( அந்தப் புகைப்படம் புலிட்சர் விருது பெற்றது ). அதற்குள் ஹோ சி மின் இறந்திருந்தார்.
இது நடந்தது 1972- இல். அமெரிக்காவிற்கு வேறு வழியே இல்லாமல், தங்களுடைய படையைக் கொஞ்சம் கொஞ்சமாகத் திரும்பப் பெற ஆரம்பித்து. அந்தா இந்தா என்று 1975 -இல் வியட்நாம் யுத்தம் ஒரு முடிவுக்கு வர, கம்போடியாவின் அழிவு ஆரம்பித்தது.
கமெர் ரூஜ் என்று பெயரிடப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சி, போல் பாட் தலைமையில் , கம்போடியாவின் தலை நகர் ஃப்னோம்பென்னைப் புரட்சி மூலம் கைப்பற்றியது.
தான் ரஷ்யாவின் தலைவர் ஸ்டாலின் போலத் தொழிற்புரட்சி செய்து கம்போடியாவை எங்கோ (????) கொண்டு செல்லப் போகிறேன் என்று சொல்லிக் கொண்டு , நம்ம ஊர் முகம்மது பின் துக்ளக் போல, தலைநகரில் உள்ள மக்கள் அனைவரையும் ஊரைக் காலி பண்ணி விட்டு கிராமப்புறங்களுக்குச் செல்ல உத்தரவிட்டான்.
அதற்கு அவன் சொன்ன காரணம், “அமெரிக்கா நம்ம ஊரின் மீது குண்டுகள் போடப் போகிறது . உங்களுக்கு உயிர் மீது ஆசை இருந்தால் உடனே காலி பண்ணுங்கள்”. அப்படிச் சொன்னதற்குப் பிறகும் அங்கேயே இருப்பதற்கு மக்களுக்கு என்ன கிறுக்கா பிடிச்சிருக்கு.
உடனே உள்ளதை உள்ளபடியே போட்டு விட்டு நடக்க ஆரம்பித்தார்கள். வரலாறு அதற்கு வைத்த பெயர் ” Death March” . பசி , தள்ளாமை காரணமாக ஏறத்தாழ 45,000 பேர் இறந்தார்கள். ஏனோ ‘போனா பானா’ வுக்குத் திருப்தி வரவில்லை.
தலைநகரில் இருந்து இடம் பெயர்ந்தவர்களில் நிறையப் பேர் படித்தவர்கள். அனைவரையும் துப்பாக்கி முனையில் விவசாயம் பார்க்க வைத்தான். சத்தம் போடாமல் லேசாக முணு முணுப்பவர்களைக் கூட விட்டு வைக்கவில்லை. சுட்டுக் கொன்றான்.
கூட இருக்கும் ஜால்ராக்களுக்கு அவன் செய்வது கொஞ்சம் கூடப் பிடிக்கவில்லை. “நாம் தேவையில்லாமல் துப்பாக்கிக் குண்டுகளை வேஸ்ட் பண்ணுகிறோம். வேறு வழியில் இவர்களைக் கொன்றால் என்ன ” என்று ஓப்பனாகவே கம்ப்ளெய்ன் பண்ண, போல்பாட் தன்னுடைய ஸ்ட்ராட்டஜியை மாற்றினான். படித்த மக்களை நீண்ட குழிகளை வெட்ட வைத்து அவர்களை அதில் உயிரோடு தள்ளி மூட வைத்தான். மக்களை கொன்றது மாதிரியும் ஆகி விட்டது, ‘காஸ்ட் கட்டிங்’ பண்ணிய மாதிரியும் ஆகி விட்டது.
இது மாதிரி அவன் கொன்று குவித்த மக்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 30 லட்சம். அந்த நாட்டின் மொத்த மக்கள் தொகையே வெறும் 1.2 கோடிதான். ஏன் இந்தக் கொலைவெறி என்பது இதுவரை யாருக்குமே புரிந்ததில்லை.
ஹிட்லர் கூட, ஏன் அப்படி ஒரு வெறித் தாண்டவம் ஆடினான் என்று அவன் பக்கம் ஏதோ ஒரு நியாயம் இருப்பது போல ஒரு கும்பல் கூறிக் கொண்டிருக்கிறது. ஆனால், அது போல போல்பாட்டை யாரும் இதுவரை சொல்ல முடிந்ததில்லை. அவனுடைய அரக்கத்தனம் அந்த மாதிரி.
வியட்நாம் யுத்தம் முடிந்து கிட்டத்தட்ட எல்லா பெரிய நாடுகளுமே ஒரு சோர்வு நிலையில் இருந்ததால், போனா பானாவின் அட்டூழியத்தை யாருமே ஒரு பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளவில்லை. சோகத்திலும் பெரிய சோகம் அதுதான். நாளுக்கு நாள் மக்கள் இறந்த வண்ணமாக இருந்தார்கள்.
இதற்கிடையில் பக்கத்து பகை நாடான வியட்நாமுடன் வேறு செம தகறாறு. அவர்கள்தான் முதலில் ஆக்ஷனில் இறங்கியது. 1979 -இல் அவர்கள் படை உள்ளே நுழைந்து கமெர் ரூஜின் படையைத் துவசம் பண்ணியது. போல்பாட்டின் அராஜகம் ஒரு வழியாக முடிவுக்கு வந்தது. அவன் தாய்லாந்தின் ஒரு காட்டுப்பகுதியில் போய் ஓடி ஒளிந்து கொண்டான்.
பிறகு 1997 -இல் மறுபடியும் நாட்டுக்குள் வந்து கமெர் ரூஜை மறுபடியும் தொடங்க முயற்சி செய்ய, அவன் அரெஸ்ட் செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு, 1998 -இல் இறந்து விட்டான். அவன் நெப்போலியன் போல், ஸ்லோ பாய்சன் வைத்தே கொல்லப்பட்டான் என்பது பரவலான ஒரு கருத்து. எது எப்படியோ, ஒரு மனிதன் எப்படி வாழக் கூடாது என்பதற்கு ஒரு இலக்கணமாக இருந்து இறந்து போனான் ஒரு அரக்கன் ( அவனை மிருகம் என்றெல்லாம் சொல்லி மிருகத்தைக் கேவலப் படுத்த மாட்டேன்).
நான் ரஷ்யாவில் படிக்கும்போது என்னுடைய நெருங்கிய சில நண்பர்கள் கம்போடியர்கள். அவர்கள் எல்லோருமே தங்கள் பெற்றோர்களை போல்பாட்டிடம் பறி கொடுத்திருந்தனர். அவர்களுடைய கலங்கிய முகங்களை என்னால் வாழ்க்கையில் மறக்கவே முடியாது.
அந்த ஒரு அற்புதமான நாட்டில், நடந்த ஏகப்பட்ட யுத்தங்களில் ஆயிரக்கணக்கான கண்ணி வெடிகள் புதைக்கப்பட்டு இன்று வரை வெடித்துக் கொண்டிருப்பது இன்னும் ஒரு பெரிய சோகம் . 2015 இல் மட்டும் 140 பேர் இறந்திருக்கின்றனர். 2016 இல் இன்று வரை நூறு பேருக்கு மேல் இறந்து விட்டனர், இறந்து கொண்டிருக்கின்றனர். கண்ணி வெடி வைத்தவர்களில் பெரும்பாலானோர் இன்று உயிருடன் இல்லை. இருப்பவர்களுக்கும் எங்கே வைத்தோம் என்று நினைவில்லை. கிட்டத்தட்ட இன்னும் 40,000 கன்னி வெடிகள் இருக்கலாம் என்று ஐ.நா. சபையின் புள்ளி விபரம் ஒன்று சொல்கிறது .
நாங்கள் கம்போடியா சென்றிருந்தபோது, நினைத்த இடங்களில் எல்லாம் இறங்கிப் புகைப்படம் எடுக்க முடியவில்லை. கண்ணி வெடிகள் எங்கேயிருக்கும் என்று யாருக்கும் தெரியாதலால் நிறைய கெடு பிடிகள். அங்கங்கே, கண்ணி வெடிகளினால் கை கால்கள் போனவர்கள், தெருவில் உட்கார்ந்து, நம்மூர் கொட்டாங்குச்சி வயலின் போல் உள்ள தங்கள் நாட்டு வாத்தியங்களை சோகத்துடன் வாசித்து தங்கள் வாழ்வாதாரத்திற்கு பணம் சேகரிக்கும் விதம் நெஞ்சைக் கசக்கிப் பிழிவதாக உள்ளது. ஒரு 10 டாலர் கொடுத்து அவர்கள் விற்கும் சி.டி. ஒன்றை வாங்கினேன். இன்று வரை அதை முழுதாகக் கேட்கும் தைரியம் ஏனோ எனக்கு வரவில்லை.
அங்கே அவலம் இன்னும் தொடர்கிறது.
வெ.பாலமுரளி.
பி.கு: போல் பாட் மிகவும் மென்மையாகப் பேசக் கூடியவன். தன்னடக்கம் ரொம்ப ரொம்ப ஜாஸ்தி. அவ்வளவு கொடூரங்கள் நடத்தியபோதும், தன்னையோ, தன்னுடைய பெயரையோ அவன் முன்னிலைப் படுத்தியது கிடையாது. அவன் சகாக்கள் அதைப் பயன்படுத்திக் கொண்டு அவனை விட ஒரு பங்கு அதிகமாக ஆடியது இன்னும் ஒரு பெரிய சோகம். வரலாற்றில் இது போன்ற கதைகள் நிறையவே உண்டு