கண்ணகிக் கோட்டம்……
பாலபாரதி சாருடன் பயணிப்பது எப்போதுமே ஒரு சுகானுபவம். அவர் ஒரு தகவல் களஞ்சியம். இதில் சிறப்பு என்னவென்றால், தனக்குத் தெரிந்தவற்றை, தான் கற்றுக் கொண்டவற்றை, தான் கண்டுபிடித்தவற்றை, தான் படித்து அறிந்து கொண்டவற்றை எந்தவொரு தயக்கமுமில்லாமல் மற்றவர்களுக்கும் எந்தவொரு ஒளிவு மறைவுமில்லாமல் சொல்லிக் கொடுக்கும் பண்பாளர்.
அதுவும் அவர் சொல்லிக் கொடுக்கும் விஷயம் ( என்னைப் போன்ற) கடைசி பெஞ்ச் மாணவர்களுக்கும் கூட மிகவும் எளிதாகப் புரிந்து விடும். நல்லவேளை நான் கார் ஓட்டிக் கொண்டே அவர் கூறிய விஷயங்களை உள்வாங்கிக் கொண்டிருந்தேன். அவர் மட்டும் டெஸ்ட் ஏதும் வைத்திருந்தால், டப்பா டான்ஸ் ஆடியிருப்பது உறுதி.
அவருடைய உந்துதலின் பேரிலேயே முதலில் சிறுமலையும், பிறகு குடியமும் , இப்போது கண்ணகிக் கோட்டமும் செல்வது சாத்தியமாயிற்று. நன்றிகள் ஐயா.
கண்ணகிக் கோட்டம்……
கோவலனைப் பறி கொடுத்த பிறகு, தலை விரிகோவலமாக கண்ணீரும் கம்பலையுமாக மதுரையை விட்டு வெளியேறுகிறாள் கண்ணகி.
கிட்டத்தட்ட 14 நாட்கள் நடந்து, மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள “ நெடுவேள் குன்றம்” என்ற ஒரு மலையின் உச்சிக்குச் செல்கிறாள். அங்கு கோவலன் ஆகாயத் தேரில் வந்து அழைத்துச் செல்கிறான் என்கிறார் இளங்கோவடிகள் ( சிலப்பதிகாரம் உண்மைச் சம்பவமாக இருக்கும் பட்சத்தில், அவள் அங்கு சென்று குதித்துத் தற்கொலை செய்திருக்க வேண்டும் என்பது என் தனிப்பட்ட கருத்து).
அதே காலகட்டத்திலோ, அல்லது சில பல வருடங்கள் கழித்தோ அந்தப் பகுதிக்குச் சென்ற சேரன் செங்குட்டுவனும், அவன் பிரதம அமைச்சராகவோ அல்லது அரசுப் புலவராகவோ இருந்த சீத்தலைச் சாத்தனாரும் ஒரு பாணன் வழியாக கண்ணகி கதையைக் கேட்கிறார்கள்.
ஆகா….அப்பேற்பட்ட ஒரு காவியப் பெண்மணிக்கு நாம் ஏன் ஒரு இந்த மலை மீது ஒரு கோவில் கட்டக் கூடாது என்று நினைத்து அதற்கான வேலையைத் தொடங்குகிறார்கள். அங்கு வைத்துத்தான் சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலையை எழுதும் ஐடியாவும் வந்திருக்க வேண்டும்.
பின்னர் இளங்கோவடிகளின் சகோதரன் சேரன் செங்குட்டுவன், இமயமலைக்குச் சென்று விஜயன், கனகன் என்ற இரு மன்னர்களைத் தோற்கடித்து, அங்குள்ள ஒரு பெருங்கல்லை அவர்கள் தலையிலேயே சுமக்க வைத்து, அதிலே கண்ணகிக்குச் சிலை வைத்து ஒரு கருங்கல் கோயில் கட்டியுள்ளான் செங்குட்டுவன்.
அது கால ஓட்டத்தில் சிதைந்து விட்டதால், ராஜ ராஜ சோழனையும் சேர்த்து பின்னால் வந்த சில மன்னர்கள் சிதைந்த இடத்திலேயே ஒரு கோயிலைக் கட்டி நிறைய திருப்பணிகள் செய்தார்கள் என்பது வரலாறு. இது சம்பந்தமான சில கல்வெட்டுக்களை இன்றும் காண முடிகிறது.
தற்சமயம் இந்த இடம் தமிழ்நாடு – கேரளா எல்லையில் இருக்கிறது. இந்த இடத்தையும் சேர்த்து இன்னும் 600 கிமீ எல்லையை இன்னும் சர்வே செய்யாமல் வைத்திருக்கிறது இந்த இரண்டு அரசுகளும். முக்கியமாக கேரள அரசு இதில் எந்தவொரு ஆர்வமும் காட்டாமல் இருக்கிறது. ஆனால், அவர்கள் மட்டுமே இந்தக் கோயிலுக்கு செல்வதற்கு பாதை அமைத்திருக்கிறார்கள்.
அதனாலேயே, இந்தியத் தொல்லியல் துறை, இந்தக் கோயிலை கேரள அரசிடம் ஒப்படைத்திருக்கிறது. இதிலும் வழக்கம் போல் சில அசிங்க அரசியல்களும் உண்டு.
சமீபத்தில் ஒரு தனி அமைப்பு இந்த விவகாரத்தை முன்னெடுத்து, கோர்ட்டில் கேஸ் போட, கேரள அரசு கொஞ்சம் கடுப்பாகி இருக்கிறார்கள். அதனால்தானோ என்னவோ, கோயிலில் நிறைய சேதங்களைக் காணமுடிகிறது. சில கல்வெட்டு உள்ள கற்கள் மாயமாக மறைந்தும், மண்ணுக்குள் புதைந்தும் போய்க் கொண்டிருப்பது மிகுந்த வேதனையான விஷயம்.
கொடுமையிலும் கொடுமையாக, கண்ணகி சிலை உடைந்து போய் இருக்கிறது. சிலையில், முழங்காலுக்கு மேற்புறம் இல்லை. ஆமாம், இன்றுள்ள சிலையில் கீழே உள்ல மாதி உருவம்தான் இருக்கிறது. அதை இந்த ஏரியாவில் உள்ள யானைகள் உடைத்து விட்டதாகவும், சிலையின் அந்த பாகத்தை கலைஞர் முதல்வராக இருக்கும் போது அவரிடம் கொடுத்ததாகவும் சொல்லப்படுகிறது. ஆனால், தமிழகத்தில் அது எங்கு வைக்கப்படுகிறது என்ற விபரம் தெரியவில்லை.
இப்போது இந்தக் கோயிலுக்கு சென்று வர வருடத்தில் ஒரு நாள், சித்ரா பௌர்ணமி தினத்தில் மட்டுமே அனுமதி. அதிலும், நம் (தமிழக) மக்களை திசை திருப்ப, கேரள மக்களால் துர்க்கை பூஜை, சிவ பூஜை மற்றும் வினாயக பூஜை என்று அதே வளாகத்தில் இருக்கும் வெவ்வேறு மண்டபங்களில் நடத்தப்படுகிறது. அங்கு செல்லும் மக்களுக்கு எது கண்ணகி சிலை என்றே தெரிவதில்லை. கேட்டாலும் யாரும் பதிலும் சொல்வதில்லை.
அந்த ஒரே நாளில் மட்டுமே 20,000 முதல் 30,000 மக்கள் வரை சென்று வருகிறார்கள்.
வழக்கம்போல், கேரள போலீசார் தமிழக பக்தர்களை முறையாகவும், மரியாதையாகவும் நடத்துவதில்லை.
கீழே தமிழக எல்லையில் என் கேமராவைப் பரிசோதித்து மேலே கொண்டு செல்ல அனுமதித்தனர் தமிழகப் போலீசார். ஆனால், பாதித் தூரம் கடந்த பிறகு வரும் கேரள எல்லையில் கேமராவைப் பிடுங்கி வைத்து விட்டனர்.
நான் புகைப்படம் எடுக்க மட்டுமே இங்கு வந்திருக்கிறேன் என்று எவ்வளவோ மன்றாடியும், அங்குள்ள கேரள உயர் அதிகாரி “ That is NOT our problem” என்று விட்டேத்தியாக சொல்லி விட்டார்.
ஃபோனில் உள்ள கேமராவில் பேட்டரி தீர்ந்து விட்டதால், கொஞ்சம் படங்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. வேதனை.
ம்ம்ம்….அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம். அந்தக் கோயிலுக்கு செல்வது கடினமா, மலையேறுவதற்கு எவ்வளவு நேரம் பிடிக்கிறது என்று எல்லோரிடமும் கேட்காதீர்கள்.
ரொம்ப ரொம்ப ஈசி. ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரத்தில் போய் விடலாம்னு சொல்லுவாய்ங்கெ. நம்பிராதீகப்பு. அடிச்சுச் சொன்னாலும் நம்பிராதீக.
எங்களுக்கு அந்தா இந்தா என்று ஆறு மணி நேரம் பிடித்தது. ஆனால், நாங்கள் படம் பிடிக்கவும், ஓய்வு எடுக்கவும் நிறைய இடங்களில் நின்று நின்று சென்றோம். இல்லாவிட்டால், ஒரு நாலு அல்லது ஐந்து மணி நேரம் ஆகும் போல் தெரிகிறது.
மொத்தம் ஏழு மலைகளைக் கடக்க வேண்டும்.
பழைய காமிக்ஸில் சொல்லுவாய்ங்கெளே, அரக்கனின் உயிர் ஏழு மலை, ஏழு கடலைத் தாண்டி ஒரு ஆல மரப் பொந்தில் இருக்குன்னு, அந்த ஏழு மலை இதுதான்னு நினைக்கிறேன்.
ஒவ்வொரு மலையும் எவரெஸ்ட் ரேஞ்சுக்கு இருக்குப்பு. கீழே ஏறும்போதே எல்லோருக்கும் ஒரு அஞ்சு லிட்டர் தண்ணீர் கேன் கொடுத்து விடுகிறார்கள். ஒரு லிட்டர் , இரண்டு லிட்டர் பாட்டில்களை அனுமதிப்பதில்லை – சுற்றுப்புறச் சூழல் கருதி. ரொம்ப நல்ல விஷயம்.
அதை வைத்துக் கொண்டு ஏழு மலைகளையும் கடக்க வேண்டியது – மகனே உன் சமர்த்துதான்.
மலையின் அடிவாரத்தில் ஏறுவதற்கு முன்னால், தக்காளி சாதமும், கோயிலை சென்றடைந்ததும் அங்கு ஒரு தடவை அதே சாதமும் கொடுத்தார்கள்.
நம் மக்கள் அதை சாப்பிட்டு விட்டு அந்த இடத்தை நம்ம கார்ப்பரேஷன் குப்பைத் தொட்டி போல் ஆக்குகிறார்கள். நல்லவேளை கண்ணகி இதையெல்லாம் பார்க்கவில்லை.
ஒரு அபலைப் பெண் எந்தவொரு வசதியும் இல்லாத காலகட்டத்தில், 14 நாட்கள் நடந்து சென்று இப்படி ஒரு கடினமான மலையில் ஏறி உயிரை விட வேண்டுமென்றால், அவள் மனம் எவ்வளவு தூரம் நொந்து போயிருக்க வேண்டும்.
ஆனால், இன்றும் அவள் போன்ற ஏராளமான கண்ணகிகள் நம்மிடையே வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
தீராத சாபக் கேடு.
வெ.பாலமுரளி.











