தொல்லியல் துறையும், தமிழ்நாடு பாடத்துறையும் சொல்லும் “மாங்குளம் கல்வெட்டுக்களைக்” காண நானும், தம்பி ஆனந்தகுமரனும் ( படத்தில் என்னருகில் இருப்பவர்) செல்லும்வரை, அங்கு எங்களுக்கு நிறைய ஆச்சரியங்கள் காத்துக் கொண்டிருக்கின்றன என்பது எங்கள் இருவருக்குமே தெரியாது.
முதல் ஆச்சரியம். கல்வெட்டுக்கள் இருக்கும் ஊரின் பெயர் “மீனாட்சி புரம்”. மாங்குளம் கிடையாது. 1906 -இல் இங்கு சில “ கிறுக்கல்கள்” இருப்பதாக ஆடு மேய்க்கும் சிறுவர்கள் சொல்லக் கேட்டு இங்கு வந்த தொல்லியலில் ஆர்வம் உள்ள ஆங்கிலேயர் சிலர், மீனாட்சிபுரத்திற்கு, முறையான சாலை வசதி இல்லாதலால், அருகில் உள்ள மாங்குளம் வழியாக இந்த ஊரை வந்தடைந்துள்ளனர். எனவே, அவர்கள் வைத்த பெயர்தான் “ மாங்குளம் கல்வெட்டுக்கள்”. இன்று,மீனாட்சிபுரம் அனைத்து வசதிகளும் கொண்ட, அருமையான தார் ரோடு கொண்ட அழகிய சிறு கிராமம். ஆனாலும், “ மாங்குளம் கல்வெட்டுக்கள்” என்ற பெயரை மட்டும் இன்னும் யாரும் மாற்றவில்லை.
நல்லவேளை, அன்று மாங்குளத்திலாவது ரோடு இருந்திருக்கிறது. இல்லாவிட்டால், அதை “ மேலூர் கல்வெட்டுக்கள்” என்றோ “ திருப்பத்தூர் கல்வெட்டுக்கள்” என்றோ அழைத்திருப்பர் ( இவையிரண்டும் மதுரையைத் தாண்டியுள்ள பெரிய ஊர்கள்).
நாங்கள் மீனாட்சிபுரத்தை அடைந்து, அங்கிருந்த ஒரு பெண்மணியிடம் கல்வெட்டுக்கள் பற்றி விசாரித்தோம். அந்தப் பெண்ணுக்கு “ கல் குவாரி” என்று காதில் கேட்டிருக்கிறது. அவர் ப்ராப்பராக அருகில் உள்ள கல்குவாரிக்கு செல்லும் வழியைச் சொன்னார். ஒரு கிராமத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது, “ சுத்திச் சுத்தி வந்தீக” பாட்டை மௌத் ஆர்கனில் வாசித்துக் கொண்டே எண்ட்ரி கொடுப்பாரே சூப்பர் ஸ்டார், அது போல மெதுவாக எண்ட்ரி கொடுத்தார் நண்பர் பாண்டித்துரை ( படத்தில் ஆனந்துக்கு அருகில் காவி வேட்டி கட்டிக் கொண்டிருப்பவர்).
“அக்கா, அவங்க கல்வெட்டுக்குப் போற வழியைக் கேட்டா, நீ கல்குவாரிக்கு போற வழியைச் சொல்ற என்று சொல்லிக் கொண்டே, வாங்க சார் நான் கூட்டிப் போகிறேன்” என்றார். “எதுக்குங்க உங்களுக்கு சிரமம் ? வழியைச் சொல்லுங்க , நாங்களே போய்க் கொள்கிறோம்” என்றேன். அவர் மட்டும் “சரிங்க” என்று சொல்லி விட்டு எங்களுடன் வராமலிருந்தால் எங்கள் பாடு படு திண்டாட்டமாகப் போயிருந்திருக்கும்.
காரணம், மீனாட்சிபுரத்தில் உள்ள தமிழிக் கல்வெட்டுக்கள் இருக்கும் “ஒவ்வாமலை”யில் உள்ள புல் பூண்டுக்குக் கூட பாண்டியைத் தெரிந்திருக்கிறது. “பாண்டி அண்ணே சௌக்கியமா” என்ற விசாரிப்பை அடிக்கடி அவைகளிடமிருந்து கேட்க முடிந்தது.
ஆச்சரியம் அதுவல்ல. மனுஷனுக்கு, கல்வெட்டு, வரலாறு, வானியல் ஆராய்ச்சி, சாஃப்ட்வேர், ஹார்ட்வேர், அரசியல்,ஆசீவகம், DJI Drone என்று சகலமும் அத்துப்படியாய் இருக்கிறது. எல்லாவற்றைப் பற்றியும் In Depth ஆகப் பேசுகிறார்.
நான் அங்கு செல்வதற்கு முதல் நாள், அங்கு முன்பே சென்றிருந்த நண்பர் ராஜகுருவிடம் ஃபோன் பண்ணி அங்கு செல்லும் வழி பற்றி கேட்கும்போது, அங்கே மலை மேல் ஒரு சங்க காலக் கட்டிடத்தின் எச்சமும் உள்ளது. மறக்காமல்,அதையும் பார்த்து விட்டு வாருங்கள் என்றார். வேறு விஷயம் ஒன்றும் கேட்காமல் சரி என்று ஃபோனை வைத்து விட்டேன்.
மலையின் அடிவாரம் வரை கார் செல்கிறது. காரை பார்க் பண்ணி விட்டு நண்பர் பாண்டியை பின் தொடர்ந்து மலை ஏறினோம். வழக்கமான “தமிழி உள்ள குன்றுகள்” போலவே, சில இடங்களில் முறையான படிகளும், சில இடங்களில் பாதை கரடு முரடாகவும் இருந்தது.
நான் கேட்பதற்கு முன்னரே, பாண்டியே, கல்வெட்டு இருக்கும் இடத்திற்குச் செல்வதற்கு முன்னால், மேலே உள்ள சங்க காலக் கட்டிடத்தின் எச்சங்களைப் பார்த்து விட்டு மேலே செல்வோம் சார் என்றார்.
(“கண்ணா லட்டு திங்க ஆசையா ? “).
சொல்லி விட்டு அவரே, ஒரு கட்டிடம் இல்லை. இரண்டு கட்டிடம் என்றார் ( கண்ணா இன்னொரு லட்டு திங்க ஆசையா ?).
நமது தமிழ்நாடு தொல்லியல் துறை 2006ம் ஆண்டில், சில பானை ஓடுகள், பெரிய சைஸ் செங்கற்கள் இருப்பதைக் கேள்விப்பட்டு, மூன்று நான்கு இடங்களில் அகழாய்வு செய்ததில், தமிழ்க் கல்வெட்டுக்கள் இருக்கும் குகைகளுக்குச்செல்லும் வெளியில் திறந்த வெளியில் இரண்டு சங்ககாலக் கட்டிடங்களைக் கண்டு பிடித்துள்ளனர்.
இங்குள்ள தமிழிக் கல்வெட்டுக்களை 100 வருடங்களுக்கு முன்னரே கண்டு பிடித்து விட்டதாலும், 1970 களில் அதை மறு ஆய்வு செய்து, அங்கிருந்தவர்கள் சமணர்கள்தான் என்று ஆவணப்படுத்திவிட்டதாலும், இந்த கட்டிடங்களில் ஒன்று சமணர்கள் கல்வி கற்றுக் கொடுத்த பள்ளியென்றும், மற்றொன்று சமையல்கூடமாக இருக்கலாம் என்று அறிக்கை தாக்கல் செய்து விட்டு ஃபைலையும், தோண்டிய குழிகளையும் மூடி விட்டது போல் தெரிகிறது.
ஆனால், இங்கு வாழ்ந்த துறவியர்களில் முதன்மைத் துறவியின் அல்லது தலைமைத் துறவியின் பெயர் “கணி நந்தஶ்ரீ குவன்” என்பது இங்குள்ள கல்வெட்டுக்களிலிருந்து புலனாகிறது.
இந்த “ கணி” என்ற வார்த்தை, வானிலை ஆராய்ச்சி செய்தவரையே குறிக்கும் என்பது பெரும்பாலான அறிஞர்களின் கூற்று – கணியன் பூங்குன்றனார் போல.
அப்படிப் பார்த்தால், இந்த கணி நந்தனும் இங்கு தங்கி வானிலை சம்பந்தமான ஏதோவொரு ஆராய்ச்சியில்தான் ஈடுபட்டிருக்க வேண்டும் என்கிறார் ஆசீவகம் பற்றி ஆராய்ந்து, கட்டுரைகள் வெளியிட்டு வரும் முனைவர். க. நெடுஞ்செழியன் அவர்கள். அதை நிரூபிப்பது போல், நானும் என் ட்ரோனும் பட்ட அவஸ்தைகளை தொடரின் அடுத்த பகுதியில் விவரிக்கிறேன்.
கணி நந்தன் வானிலை சம்பந்தமான ஆராய்ச்சிதான் செய்தார் என்பது உண்மையானால், இந்தக் கட்டிடம் கூட அது சம்பந்தமான ஒரு கட்டிடமாகத்தான் இருந்திருக்க வேண்டும் என்பது என் கணிப்பு.
காரணம், இங்குள்ள கல்வெட்டுக்களைப் பொறித்தது “ கணி நத்தி” என்று ஒரு கல்வெட்டு கூறுகிறது. அதாவது, இன்னொரு “ கணி” – இன்னொரு வானிலை ஆராய்ச்சியாளர்.
எனவே, இங்கு தங்கியவர்கள் வானிலை ஆராய்ச்சியேதும் மேற்கொண்டிருக்கலாம். அல்லது, “ கணி நந்தன்” வானிலை ஆராய்ச்சி பற்றி மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுத்திருக்கலாம்.
இதே இடத்தில், சங்க காலத்தைய நிறைய மண் பானைகளும், மண் பாத்திரங்களும் கிடைத்திருப்பதால், இங்குள்ள இரண்டாவது கட்டிடம் சமையற்கூடமாக இருந்திருக்கவே வாய்ப்புகள் உள்ளது என்ற தொல்லியல் துறையின் கூற்றை ஒத்துக் கொள்ள வேண்டியுள்ளது.
இன்றும், இந்த மலையின் மீது நிறைய செங்கற்கள், பானை ஓடுகள், கூரை ஓடுகள் கொட்டிக் கிடக்கின்றன.
செங்கற்கள் ஒவ்வொன்றும் மிகப் பெரிதாக உள்ளன ( 35x18x7 செ.மீ). கிட்டத்தட்ட இன்றைய செங்கற்களை விட இரண்டு மடங்கு பெரிது ( நான் எடுத்த படத்தை இங்கு பதிவிட்டுள்ளேன்).
இதே போன்ற செங்கல்லை, பூம்புகாரில் உள்ள கண்காட்சியகத்திலும் காணலாம் ( அங்கும் நான் எடுத்த படத்தை இங்கு பதிவிட்டுள்ளேன்).
ஓடு….ஏதோ ஒரு ஸ்பெஷல் மண்ணை உபயோகப்படுத்தியது போல் தெரிகிறது. கையில் தூக்கிப் பார்த்தால் காற்று போல் உள்ளது. அவ்வளவு லேசாக உள்ள ஓடு காற்றில் பறந்து விடக்கூடாது என்பதற்காக சுண்டு விரலால் ஒரு பக்கமும், மோதிர விரலால் மறு பக்கமும் ஓட்டை போட்டு, இன்று நாம் செய்யும் Countersunk Hole போல உருவாக்கியுள்ள அதிசயத்தை என்னவென்று சொல்வது ( நான் எடுத்த அந்த ஓட்டின் படத்தையும், இன்று நாம் செய்யும் Countersunk Hole இன் படத்தையும் இணைத்துள்ளேன்). அந்த ஓட்டையில் ஆணியை உபயோக்கித்து அடியில் உள்ள மரச் சட்டத்தில் அந்த ஓட்டை இணைத்திருக்க வேண்டும். 2500 வருடத்திற்கு முன்னாலேயே Simple & Amazing Technology.
அதே போல், கீழடியில் கண்டெடுக்கப்பட்டது போல கருப்பு சிவப்பு பானை ஓடுகள், பானைகளின் விளிப்புகளில் கைகளினாலேயே செய்த டிசைன்கள் என்று ஒவ்வா மலை முழுவதும் அதிசயங்கள் கொட்டிக் கிடக்கின்றன.
மலையின் மேலேயே இரண்டு இயற்கைச் சுனைகள் வருடம் முழுவதும் அந்த விஞ்ஞானிகளுக்கு தண்ணீரை வழங்கியுள்ளன. அதில் ஒரு சுனை அந்த சமையற்கூடத்திற்கு மிகவும் அருகிலேயே இருப்பது – அவர்கள் இந்த இடத்தை தேர்ந்தெடுத்ததற்கு ஒரு காரணமாய் இருந்திருக்க வேண்டும் ( ஒரு சுனையின் படம் இங்கு இணைத்துள்ளேன்).
கல்வெட்டு கல்வெட்டு என்று சொல்கிறாயே, அது எங்க ராசான்றீங்களா ?
தொடரின் அடுத்த (இறுதிப்) பகுதியில்.
வெ.பாலமுரளி.