ஔவையார் பற்றி சில தகவல்கள்….
எழுதியவர் : கோராவில் V .E. குகநாதன் …. நன்றிகள்.
ஔவையார் என்பவர் ஒருவரல்ல பலர்.
*👉 2nd CE சங்க கால ஒளவை = அதியமான் நண்பர் ((அதியமானுடன் கள்ளும் குடித்தவர்)
👉👉 * அங்கவை – சங்கவைக்குத் திருமணம் செய்து வைத்த ஒளவை = இது கதை! அப்படியொரு ஒளவையே இல்லை! கபிலரே அந்தப் பாடுபட்டவர்
👉👉👉* 9th CE = விநாயகர் அகவல் பாடிய ஒளவை (சுந்தரர் – சேரமான் காலத்து ஒளவை)
👉👉👉👉* 12th CE = ஆத்தி சூடி, கொன்றை வேந்தன் எழுதிய ஒளவை
👉👉👉👉👉* 17th CE = பேய் விரட்டிப் பாடிய ஒளவை
👉👉👉👉👉👉 * 18th CE = பந்தன் அந்தாதி பாடிய ஒளவை.
ஓளவை (அவ்வை,ஔவை இரண்டும் சரியே) பற்றித் தெரிந்துகொள்ள வேண்டுமாயின் முதலில் புராணங்கள், ஔவையார் என்ற கறுப்பு-வெள்ளைத் திரைப்படம் ( KP சுந்தராம்பாள் உருவம்) போன்றவற்றை முதலில் மறந்துவிடுங்கள். இதில் முதலாவதாகக் காணப்படும் சங்ககால ஔவை அதியமான் காலத்தில் வாழ்ந்தவர். (அதியமானின் கல்வெட்டினைப் படத்தில் காண்க).
இந்த ஔவையே சங்ககாலப் பெண் புலவர்களில் கூடுதலான பாடல்களைப் பாடிய பெண் புலவர்களில் ஒருவர். இவரே மன்னன் அதியமானின் தோழி. இருவரும் இணைந்து நெல்லிக்கனி மட்டுமல்லாமல் கள்ளும் உண்டவர். இவரினை விறலி என்றே சங்ககாலக் குறிப்புக்கள் குறிப்பிடுகின்றன. {விறலி என்றால் பாடலிற்கேற்ப (பண்ணிற்கேற்ப) நடனம் ஆடும் பெண்}. “ஔவை பாடலை இயற்றுவதுடன் விறலியான இளம்பெண்” என்றே சங்கப்பாடல்கள் குறிப்பிடுகின்றன. இவ்வாறான இளம்பெண்ணை மூதாட்டியாக்கியதற்கான பின்னனியும், பல ஔவைகளை ஒன்றாக்கிய பின்னனியும் ஒன்றே.
சங்ககாலத்தில் இன்றைய இந்துமதக்கடவுள்கள் யாருமே பரவலடைந்திருக்கவில்லை. சங்ககாலத்தமிழரிடம், வழிபாடுகள் (நடுகல்,கொற்றவை,குறி்ஞ்சித் தலைவனான சேயோன், முல்லை மால்) இருந்தனவே தவிர, மதங்கள் இருக்கவில்லை. சங்ககால இறுதிப்பகுதியில் ஆசீவகம்,பவுத்தம்,சமணம் (இவையாவுமே வேத-இறைமறுப்பு மதங்கள்) ஆகிய மதங்கள் ஒரு குறிப்பிடத்தக்களவு தாக்கத்தினையும், வைதீகம் (ஆரியர்களின் மதம்) மிகச் சிறியளவு தாக்கத்தினையும் தமிழரிடையே ஏற்படுத்தியிருந்தன. இதனை நாம் இலக்கியச் சான்றுகள் மட்டுமன்றி, தொல்லியல் சான்றுகள் மூலமாகவும் உறுதிப்படுத்திக்கொள்ளலாம். இப்போது இந்துமதத்தின் தொன்மத்தை செயற்கையாக முன்கொண்டுசெல்வதாயின் பல புனைவுகள் தேவை. இதன் ஒரு வடிவே ஔவை பற்றிய புனைவுக ளாகும்.
எடுத்துக்காட்டாக விநாயகர் வழிபாட்டினைப் பார்ப்போம். கி.பி.இரண்டாம் நூற்றாண்டு வரை வந்த சங்ககால தமிழ் இலக்கியம் , அகழ்வாராய்ச்சி ,கல்வெட்டு இவைகள் எவற்றிலும் இந்த கணபதி தமிழகத்தில் வழிபாட்டில் இருந்ததாக குறிப்பிடப்படவில்லை. கி.பி 500 இற்கு பின்னரே சிறுத்தொண்டர் என்னும் பரஞ்சோதியார் நரசிம்மவர்மப் பல்லவனின் படைத்தலைவராகப் படையுடன் சென்று சாளுக்கிய மன்னனின் வாதாபி என்னும் தொன்னகரைத் துகளாக்கி, அங்கிருந்த கணபதியைக் கொண்டு வந்து தாம் வழிபட்ட திருச்செங்காட்டங்குடியில் நிறுவினார். இதற்குப் பின்னரே விநாயகர் வழிபாடு தமிழ்நாட்டில் தோன்றியது.
(இதனையே “வாதாபி கணபதிம் பஜே” என இன்றும் கர்நாடக சங்கீதக் கச்சேரிகளில் பாடுகிறார்கள்). இப்போது இந்த பிற்கால விநாயகர் வழிபாட்டினை சங்ககாலத்திலும் இருந்ததாகக் காட்ட வேண்டுமாயின்; சங்ககால ஔவையினையும், 14-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து விநாயகர் அகவல் பாடிய ஔவையையும் ஒன்றாக்குவதன் மூலம் செய்யலாம். இவ்வாறு ஒன்றாக்கும் போது, அவர் நீண்டகாலம் வாழ்ந்தவராகக் காட்டவே முதியவராக உருவகப்படுத்தப்படுகிறார் (அப்படியே புராணத்தை நம்பினாலும், 800 ஆண்டுகளிற்கு மேல் ஒருவர் வாழ்வாரா? என்று எல்லாம் கேள்விகேட்க பக்தி புத்தியை மறைக்கும் என்ற நம்பிக்கையே புராணம்). இவ்வாறு பல மதப்புனைவுகளை உண்மைபோலக் காட்டவே இந்த ஏற்பாடு.
ஔவையார் பற்றிய தவறான புரிதல்கள்:::
1. ஔவை ஒருவரல்ல, பலர்
2.சங்ககால ஔவை மூதாட்டியல்ல, இளம்பெண். (பிராட்டி என்ற சொல் முதியவரைக் குறிக்கும் சொல் அன்று. அது “அம்மணி” = madam என்பது போன்ற மரியாதைக்குரிய சொல். அதற்கும் அகவைக்கும் (age)தொடர்பில்லை).
3. சங்ககால ஔவை தெய்வப்பிறவியல்ல, அவர் ஒரு முதன்மைச் சங்கப்புலவர். (அத்துடன் பெண் விடுதலையின் அடையாளம்).
4.. பாரியின் புதல்விகளிற்குத் திருமணம் செய்துவைத்தவர் ஔவையல்ல. அது கபிலரே. மூவேந்தர்கள் பாரியின் கொடைப் புகழினால் பொறாமையுற்று (பெண் கேட்டு அல்ல) பாரியினைப் போரில் கொன்ற பின் கபிலர் எனும் பாரியின் நண்பரான சங்ககாலப் புலவர், பாரியின் இரு புதல்விகளையும் மலையமான் எனும் மன்னரின் இரு புதல்வர்களிற்கு மணம் முடித்துவைத்தார். அதன்பின் நண்பன் பாரியின் இழப்பின் துயரத்தால் இறந்தார். இதனையே “கனல்புகு கபிலக்கல்” என்ற பாடல் குறிக்கும். இந்த இடத்தை (கபிலக்குன்று) இன்றும் கல்வெட்டுச்சான்றுடன் காணலாம் (படம்).
இது தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டத்தில் திருக்கோவிலூர் பேரூராட்சி அருகே அமைந்துள்ளது.
இத் திருமணத்திற்கும் ஔவைக்கும் யாதொரு தொடர்புமில்லை. அது 10ம் நூற்றாண்டளவில் இட்டுக்கட்டிய கற்பனை ஔவைக்கதை.
5. வள்ளுவன் ஔவை ,கபிலர், பாரி ஆகியோர் உடன்பிறப்புக்கள் என்பது வெறும் கற்பனையே. (இவர்கள் வாழ்ந்த காலமே வெவ்வேறு, கபிலரும் பாரியும் மட்டுமே நண்பர்கள்). இந்து மதம் எப்போதுமே குடும்பக்கதை கட்டுவதில் கைதேர்ந்தது.
இறுதியாக தமிழ்நாட்டுப் பாடத்திட்டத்தில் 2013 இல் ஔவை ஒன்றல்ல எனச் சரியாகத் திருத்தியபோது (அவர்களே இருவர் என மட்டுமே திருத்தினர்), வைதீக மதவாதிகள் வானிற்கும் பூமிக்கும் துள்ளிக்குதித்தனர். பி.ஜே.பி யின் ஊதுகுழலான தினமலர் செய்தித்தாள் “இப்போது ஔவை இருவர் என்றால் இவளவு நாளும் படித்த மாணவர்கள் என்ன முட்டாள்களா?” எனக் கேள்வி எழுப்பியது. இத்தகைய மதவாதிகளின் எதிர்ப்புக்களையடுத்து, இச் செய்தி அடக்கியே வைக்கப்பட்டுள்ளது.
“கெட்டிக்காரன் புழுகு எட்டு நாளைக்கு”.